Wednesday, May 1, 2013

தமிழின் அணையாவிளக்கு.....பாவேந்தம்...



                      இந்தச் சிறு கட்டுரையை நான் 29.04.2013 அன்று எழுத எண்ணியிருந்தேன். மனதுக்குள் எழுதிவிட்டு பிறகு பதிவிடலாம் என்று இன்று  பதிவிடுகிறேன்.

                       மேற்குறிப்பிட்ட நாளில்தான் 1891 ஏப்ரல் 29 புதன் இரவு 10.15 மணிக்கு புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனார் தமிழுக்குப் புதையலாகக் கிடைத்தார்.

                       தமிழ் படிக்க வருவதற்கு முன்னரே அப்பாவால் திராவிட இயக்கமும் திராவிட இயக்கத் தலைவர்களும் அறிமுகமான சூழலில் பாவேந்தரையும் அவரது கவிதைகளுடன் அறிமுகம் செய்துவைத்தார். 10 வது படிக்கிறபோது பாரதியையும் பாவேந்தரையும் திருக்குறளையும் முதன்முதலாகப் பொருள் புரிந்தும் புரியாமலும் வாசித்து மறந்த காலக்கட்டமது.

                       அப்புறம் பாவேந்தரை ஆழமாக பல சான்றோர்களின் பேச்சைக் கேட்டபிறகு வாசிக்கவேண்டும் என்கிற அவசியத்தையும் கடமையையும் பொறுப்பையும் எனக்கு உணர்த்தியது.

                        அவருடைய பிறந்த நாளில் பாவேந்தர் பாரதிதாசனர் பற்றி இச்சிறு கட்டுரையை என்னுடைய கடமையாக எண்ணி உங்களின் சிலநிமிடச் சிந்தனைகளுக்குப் பரிசாக அளிக்கிறேன்.

                       தமிழ்த்தாயின் இரு கண்களாகப் பாரதியாரும் பாரதிதாசனும்.

                       பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை அவரது புதல்வர் மன்னர்மன்னன்  கறுப்புக்குயிலின் நெருப்புக்குரல் என்ற நுர்லாக எழுதியுள்ளார். பாவேந்தரின் 54 ஆண்டுகால வாழ்வைச் சொல்ல 20 ஆண்டுகள் உழைத்தேன் என்று அந்நுர்லில் குறிப்பிடுகிறார் மன்னர்மன்னன் அவர்கள்.

                     சுப்புரத்தினம்  என்ற  தனது பெயரை பாரதியாரைச் சந்தித்தபின் அவருடைய கவியாளுமையில் தன்னைப் பறிகொடுத்து பாரதிதாசனாக மாற்றிக்கொண்டார். இருவருடைய சந்திப்பு எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து நிறைய ஆய்வு விவாதங்கள் உள்ளன.

              இருப்பினும் பாரதிதாசன் வாழ்வில் நடந்த இருபெரும் முக்கிய நிகழ்வுகளாக அவர் பாரதியாரைச் சந்தித்த நிகழ்வையும் தந்தை பெரியாரைச் சந்தித்ததையும் வரலாற்று நிகழ்வுகளாகக் குறிப்பிடுவார்கள். இந்நிகழ்வுகள் பாவேந்தர் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தியவை எனலாம்.

                    பாரதியைப் பின்பற்றி அரசியல் விடுதலை. சமுக ஏற்றத்தாழ்வு ஒழிதல் வேண்டிப் பின்னர் சமுகச் சீர்திருத்தம் என்பதை முதன்மையாகவும் கொண்டு பாடல்களை இயற்றினார்.அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பால் அவரது படைப்புலகம் அதன் வழியாகவே மையங்கொண்டது. தாய்மொழிக்கல்வி. பெண்ணுரிமை. முடப் பழக்கவழக்கம் ஒழிப்பு அனைவருக்கும் கல்வி அனைவரும் சமம் என அவரது கவிதைகள் அமைந்தன.

                சில முக்கிய நிகழ்வுகள்

                1929 குடிஅரசு ஏட்டில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதற்பாடல் எழுதியது.

                1933  இல் மா.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாட்டில் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திட்டது.

                 1935 ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டல்ம் தொடக்கம்.

                  1937 புரட்சிக்கவி வெளியீடு.

                  1938 பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி வெளியீடு.

                   1942 குடும்ப விளக்கு 1. 1944 குடும்ப விளக்கு 2 1948 குடும்ப விளக்கு 3
                   1950 குடும்ப விளக்கு 4. 5 வெளியிடு.
                    1955 புதுவை சட்டமன்றத்தொகுதியில் வெற்றிபென்று அவைத்தலைமை.
                    1959 பாரதிதாசன் நாடகங்கள்
                     1964 இல் ஏப்ரல் 21 இல் இயற்கை எய்துதல்..

                   எல்லா நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள அவரது கவிதைத் தொகுதி நுர்லில் ஆண்டுவாரியாக அச்சிடப்பெற்றுள்ளது. ஆர்வமும் தேடுதலும் கருதி சிலவற்றை மட்டும் சான்றாகக் கொடுத்துள்ளேன்.

                       பாரதிதாசனைத் தேடிப் படிக்கவேண்டும்
 
                      ஒருமுறை வாசிக்கவேண்டும்.

                      எனக்கு நிரம்பப் பிடித்தது குடும்ப விளக்கு என்னும் நுர்ல்.

                      என்றைக்கும் அழியாக குடும்பத்தின் நல்ல இல்லறத்தின் மேன்மையை உணர்த்துவது அது. உடலைத் தாண்டி மனதால் வாழ்வது என்கிற உன்னதத்தை வெளிப்படுத்துவது.

                       சுருக்கமாகச் சொன்னால் பாவேந்தர் ஒரு நீண்ட கடல்.

                      அதை நதியளவுகூட சுருக்கமுடியாது.

                       நான் சிறுஓடையாகக் காட்டியிருக்கிறேன் அவ்வளவே.

                       சான்றாகத் தமிழின் இனிமை எனும் அவரது கவிதை


                     கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
                     கழையிடை ஏறிய சாறும்
                     பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சப்
                     பாகிடை ஏறிய சுவையும்
                     நனிபசு பொழிந்திடும் பாலும் - தென்னை
                     நல்கிய குளிரிள நீரும்
                     இனியன என்பேன் எனினும் - தமிழை
                     என்னுயிர் என்பேன் கண்டீர்...

                     பொழியிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
                     புனலிடை வாய்க்கும் கலியும்
                     குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
                     கொட்டிடும் அமுதப் பண்ணும்
                     குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
                     கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
                      விழைகுவ னேனும் தமிழும் - நானும்
                     மெய்யாய் உடலுயிர் கண்டீர்....
   
                      பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
                      பக்கத் துறவின் முறையார்
                      தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
                      சந்ததம் மறவாத தந்தை
                      குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
                      கொட்டி வளர்க்கும் பிள்ளை
                      அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
                      அறிவினில் உரைதல் கண்டீர்...

                      நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
                      நிறையக் குளிர்வெண் ணிலவாம்
                      காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
                      கடல்மேல் எல்லாம் ஒளியாம்
                      மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
                      மலைகளின் இன்பக் காட்சி
                      மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
                      விந்தையை எழுதத் தரமோ?

                      செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
                      தேக்கிய கறியின் வகையும்
                      தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
                      தயிரோடு மிளகின் சாறும்
                      நன்மது ரஞ்செய் கிழங்கு - காணில்
                     நாவிலி னித்திடும் அப்பம்
                     உன்னை வளர்ப்பன தமிழா- உயிரை
                     உணர்வை வளர்ப்பது தமிழே...


                    பாவேந்தம் போற்றுவோம்.
                     



             

             

           

                     

5 comments:

  1. வரலாற்று முக்கிய நிகழ்வுகளை அறிய முடிந்தது...

    கவிதை வரிகள் : என்னே தமிழ்...!

    வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  2. பாவேந்தர் பற்றி பல அறியாத செய்திகளை இன்று அறிந்துகொண்டேன். அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க அவற்றின்மேல் காதலுண்டாகிவிடும். குடும்பவிளக்கின் சில பகுதிகளைப் பள்ளிப் பாடத்தில் படித்தபோதுதான் பாரதிதாசனார் அறிமுகமானார். அற்புதமான கவிஞரைப் பற்றிய அருமையானதொரு நினைவுகூறலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்
    தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    என்று தமிழை உயிராய் போற்றிய பாவேந்தர்
    என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்.
    பாவேந்தர் இல்லையேல் ஏது இன்று இத்துயை கவிஞர்கள்?

    ReplyDelete
  4. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என முழக்கமிட்ட பாவேந்தரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.நல்லதொரு கட்டுரை.

    ReplyDelete

  5. ஐயா வணக்கம். பாரதிதாசன் குறித்த எண்ணங்களை நீண்ட பின்னூட்டமாக எழுதி வரும்போது , இரு முறை மின்வெட்டு வந்து எழுதியவைக் காணாமல் போய்விட்டன. ஒரு வேளை நான் அவரை விமரிசிக்கக் கூடாது என்பதாலோ என்னவோ. ! பாரதிதாசன் கவிதைகள் பல படித்து மகிழ்ந்திருக்கிறேன். சாகித்திய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற தமிழறிஞர் அவர். ஒரு split personality யாக இருந்தாரோ என்னும் ஐயம் எழுகிறது. கடவுள் மறுப்பு சுயமரியாதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட பின் அவரது பாடல்களில் ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ எனும் ஐயமெழுகிறது. அவரது மயில் என்னும் கவிதையில் மயிலின் கழுத்தையும் பெண்லளின் கழுத்தையும் பற்றி அவர் எழுதி இருப்பது நான் வெகுவாக ரசித்தேன். யாத்திரை செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலும் இதழ்களில் குறுநகை தோற்றும். அவரது கிளையினில் பாம்பு தொங்க என்ற கவிதை என் all time favourite. நினைவுகளைத் தூண்டிய பதிவுக்கு நன்றி.

    ReplyDelete