Thursday, July 7, 2016

கதை 9

                சதிகார நரியும் அதிகார ஓநாயும்…



           அசத்தியன் என்கிற நரிக்கு திடீரென ஆம்லெட் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.
           நல்ல கோடைகாலம் அது. வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது அந்தக் காட்டில்.
           அசத்தியன் தேடித்தேடி கடைசியில் ஒரு வெகுளியான் என்கிற காகத்தின் கூட்டைக் கண்டது. அதில் நிறைய முட்டைகள் இருப்பதைக் கண்டதும் அதனைச் சாப்பிட்டுவிடலாம் என்று முடிவெடுத்தது.

           வெகுளியான் கையாலே இந்தக் காரியத்தைச் செய்துவிடவேண்டும் என்று அசத்தியன் சூழ்ச்சி செய்தது.
            அது மெல்ல காகத்திடம் வந்து வெகுளியாரே வணக்கம் என்றது.
         


        வெகுளியான் என்ன இது நரி வந்து வணக்கம் சொல்கிறதே என்ற ஐயம் வந்தாலும்.. உடனே வணக்கம் அசத்தியரே என்றது பதிலுக்கு.
            நான் எப்போதும் உண்மையையே பேசுபவன்.. என்னை எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் ஒரு குயில்தான் என்னை நம்பவில்லை.
            சரி அதனால் என்ன? என்றது வெகுளியான்.
            அது தவறல்லவா? ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கத்தானே வேண்டும் என்றது அசத்தியன்.
           எதற்கு இந்தப் பேச்சு என்று  வெகுளியானுக்குப் புரியவில்லை.
           எனக்குப் புரியவில்லை என்றது வெகுளியான்.
           உனக்குப் புரியாது வெகுளியாரே? நீர் ஒரு அப்பாவி. இல்லை என்றால் உன்னை எல்லாரும் ஏமாற்றுவார்களா? உனக்கு அதனால்தான் வெகுளியான் என்கிற பெயரும் வைத்துவிட்டார்கள்.
           வெகுளியானுக்கு சிறிது கோபம் வந்துவிட்டது.
           என்னை யாரும் ஏமாற்ற முடியாது? நானும் ஏமாறமாட்டேன்
           உடனே அசத்தியன் சிரிப்பை அடக்கமுடியால் ஊளையிட்டுச் சிரித்தது.
           எதற்கு சிரிக்கிறே?
           பின்னே.. உனக்கு உன் முட்டைகளும் தெரியலே.. குயில் முட்டைகளும் தெரியல.. அதனாலதான குயில்கள் உங்களோட கூட்டுல வந்து முட்டைபோட்டுட்டுப்போயிடுது.. நீயும் .ஏமாந்து அடைகாத்துக் குஞ்சு பொரிச்சு.. வளர்த்துக் குடுத்துடறே..

           வெகுளியானுக்குப் புரிந்தது. அவமானத்தால் அது தலைகுனிந்து பேசாமல் நின்றது.
              நான் சொன்னது உண்மைதானே வெகுளியாரே? என்றது.
             சரி.. நான் எப்படி ஏமாறாமல் இருக்கறது?
             அப்படிக் கேளு.. நீ ஒவ்வொரு முட்டையா கீழே தள்ளிவிடு.. நான் பார்த்துட்டு குயிலு முட்டையை எடுத்துக்கிட்டு உன்னோட முட்டையை உனக்குக் கொடுத்துடறேன்..
              அதை நம்பிய வெகுளியான் முட்டைகளைத் தள்ள ஆரம்பித்தது. மரத்திலிருந்து கீழே விழுந்த முட்டைகள் உடைந்து சிதற.. அசத்தியன் நக்கிச் சாப்பிட்டது.
               வெகுளியானுக்கு இது புரியவில்லை.
               அப்போது அந்தப் பக்கம் ஒரு ஓநாய் வந்தது. அது ஓநாய்க் கூட்டத்தின் அதிகார ஓநாய்.


                இங்கு என்ன நடக்கிறது? என்றது சத்தமாய்.
                உடனே அசத்தியன் ஒன்றுமில்லை அதிகாரியே.. நான் பரிசோதித்துக்கொண்டிருக்கிறேன்.. என்று கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு மெல்லிய குரலில் நீயும் ஆம்லெட் சாப்பிடலாம்.. என்றது.
                என்ன கண்டுபிடித்துவிட்டாயா? என்றது அசத்தியனிடம் வெகுளியான்.
            அடக்கடவுளே இப்படியா அப்பாவியாக இருப்பாய்?
           ஏன்?
            இதுவரை நீ தள்ளியது குயில் முட்டைகளை அல்ல.. உன் முட்டைகளை..
           இல்லையே என்றது வெகுளியான்.
           வேண்டுமானால் இந்த அதிகாரியைக் கேட்டுப்பார்.
           ஆமாம்..ஆமாம்.. அசத்தியன் சொல்வது உண்மைதான். குயில் முட்டைகளுக்குப் பதிலாக உன் முட்டைகளைத் தள்ளியிருக்கிறாய்.
           அப்படியா.. இப்போ என்ன செய்வது?
           மீதியுள்ள முட்டைகளையும் கீழே தள்ளு.. அவைதான் குயிலின் முட்டைகள்..
           அவ்வாறே தள்ளியது வெகுளியான்..
           அதிகார ஓநாயும் நாக்கை நீட்டிச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.
           எல்லா முட்டைகளையும் தின்றுவிட்டு இரண்டும் ஓடிவிட்டன.
           வெகுளியான் கீழே பறந்துவந்து தன்முட்டைகள் எதுவென்று தேடத் தொடங்கியது அப்பாவியாய்.


நீதி… -  திருடனின் நீதி திருடனுக்கே பொருந்தும்.

Monday, July 4, 2016

கதை 8

                     செயலே செயல்


           பொறுமைநேசன் என்பது அந்தத் தாய்க்கழுதையின் பெயர். தன் குழந்தைகளைக் காணாமல் தவித்துக்கிடந்தது.
           நல்லவேளை இருள் வரத்தொடங்கியவுடன் வந்து சேர்ந்தன.
           தன் இரு குழந்தைகளும் அழுதுகொண்டே வருவதைக் கண்டதும் தாய்க்கழுதை லேசாக கவலை கொண்டது.

           என்னடா செல்லங்களா? அழுதுகிட்டே வர்றீங்க?
           அம்மா..அம்மா.. என்றபடி அழுதன.
           சரி அழுகையை நிறுத்திவிட்டு சொல்லுங்க..
           எங்களை குதிரைக் குட்டிங்க ரொம்ப மோசமா பேசிடிச்சும்மா என்றன.

           என்ன பேசிச்சுங்க?
           சின்ன வயசுலே நீங்க எங்கள மாதிரி இருப்பீங்க.. ஆனா வளர்ந்தா தெரிஞ்சுடும்.. நீங்க கழுதான்னு நாங்க குதிரதான்னு..
           அதனால என்ன? உண்மையதானே அது சொன்னிச்சி?
           என்னம்மா எனக்கு இந்த கழுதைங்கற பெயரே பிடிக்கலே.
           ஆமாமா.. எங்களுக்கு பேர மாத்தி வையுங்க.,.
           இங்க வாங்கடா செல்லம்.. என்னோட பக்கத்துல வந்து உக்காருங்க..
           இரண்டும் கால்களை மடக்கி அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டன.
           தாய்க்கழுதை பேச ஆரம்பித்தது.
           நாம இருக்கற இந்தக் காட்டைப் பாருங்க.. எத்தனை மரங்க இருக்‘கு.. எத்தனை செடிங்க இருக்கு.. எத்தனை பூக்கள் இருக்கு.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவம்.. வகை.. பேரு.,.
           ஆமாம்மா
           இயற்கையோட படைப்பு அப்படித்தான்.. கழுதைங்கறது நம்மோட இனத்தோட பெயரு.. பெயர்ல என்ன இருக்கு?
            கழுதங்கற பெயரு எங்களுக்குப் பிடிக்கலே.

            ஏன் பிடிக்கலே?
            எல்லாரும் பிடிக்கலேன்னு சொல்றாங்க.. அதான் எங்களுக்கும் பிடிக்கலே..
           சரி.. நீங்க காலையிலேர்ந்து என்ன பண்ணிங்க சொல்லுங்க..

           இரண்டு கழுதைக் குட்டிகளும் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்துவிட்டன.
           ஒரு மான் அக்கா கொம்போட மரத்துக்கிடையில மாட்டிக்கிச்சு..  நாங்கதான் அதை விடுவிச்சோம்.. இல்லாட்டி புலிக்கிட்ட மாட்டி செத்துப் போயிருக்குமாம்..
             ஆமாமா.. அப்புறம் பறவைக் குஞ்சு மரத்து கூட்டுலேர்ந்து கீழே விழுந்துடிச்சி.. அவங்க அம்மா வர்றவரைக்கு பக்கத்திலேயே இருந்தோம்.. அவங்க அம்மா வந்ததும் ஒப்படைச்சிட்டோம்.. நல்லவேளை இல்லாட்சி ஏதாச்சும் பாம்பு புடிச்சிட்டுப்போயிருக்கும்மா..
                நான் ஒரு எறும்பக் காப்பாத்துனேன்.
                நான் ஒரு வெட்டுக்கிளியக் காப்பாத்துனேன்.
               இப்படி பலவற்றைப் பேசின.
               இப்போது தாய்க்கழுதை சொன்னது.

               நீங்க காப்பாத்துன அத்தனை பேரும்.. தங்கள காப்பாத்துனது கழுதான்னு உங்களையே பேசிக்கிட்டிருக்கும்.. அதுக்கு உங்களோட பேரு பிடிக்கும்தானே?
                ஆமாம்மா..
                இதான். பேருல ஒண்ணும் இல்ல.. நாம செய்யற செயல்கள்தான் நம்மோட பேருக்கு பெருமை.. அதனால எப்பவும் நல்ல செயல்கள் செய்தா போதும்..
                 ஓகே அம்மா என்றன இரண்டு கழுதைக் குட்டிகளும்.
               
        நீதி-   பெயரில் இல்லை செயலில்தான்

           

Sunday, July 3, 2016

கதை 7


                        குளத்து மீன்..

           மீன் பிடிப்பவன் கூடைக்குள் ஆற்று மீன், குளத்து மீன், ஏரி மீன் எனப் பிடித்து வைத்திருந்தான்.
            ஆற்று மீன் சொன்னது.
            நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் எத்தனை பெரிய ஆறு தெரியுமா?
            என்ன பெரிய ஆறு? நான் பிறந்த இடமும் வளர்ந்த இடமும் சின்ன கடல் தெரியுமா? என்றது ஏரி மீன்-
            ஏரியை விடு ஆறுதான் நீளமானது என்றது ஆற்று மீன்.
            ஆனால் ஓடுகிற ஆறை விடு கடல்போல இருக்கும் ஏரிதான் பெரிசு என்றது ஏரி மீன்.
            குளத்து மீன் பிடிபட்ட கவலையில் இருந்தது.
            இரண்டும் குளத்து மீனை கேலி பேசின.
            நம்மைப் போல சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. அது குளத்துல பிறந்ததுதானே?
            ஆமாம் ஆமாம் அதுக்குப் பெருமை பேச என்ன இருக்கிறது?
            அப்பவும் குளத்து மீன் அமைதியாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.
            ஏய்.. என்ன பேசாம இருக்கே? ஏதாவது பேசு.
            என்ன பேச? என்றது குளத்து மீன்.
             அடக்கடவுளே முட்டாளே உனக்கு என்னதான் தெரியும்? என்றன இரண்டும்.
             அப்போது கூடையை எடுத்த மீன்பிடிப்பவன் ஒரு தடவை அந்தக் கூடையை அப்படியே குளத்து நீரில் ஒரு மூழ்கு மூழ்கியெடுக்கக் கூடையயைப் பாதியளவு நீரில் அமுக்கினான்.
              இதுதான் சமயமென்று.. எனக்கு இதுதான் தெரியுமென்று ஒரு துள்ளு துள்ளி கூடையை விட்டுக் குளத்தில் விழுந்தது குளத்து மீன்.
               அப்போதுதான் இரண்டு மீன்களும் தங்களின் ஆபத்தை உணர்ந்தன. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது.


நீதி.  ஆபத்துதான் அறிவாளியை அடையாளம் காட்டும்.

Thursday, June 30, 2016

கதை 6

                சிறுபுத்திக்குக் கிடைத்த நட்பு



 முல்லைப்பூர் என்கிற கிராமத்தில் இருந்தது அந்தப் பெரிய குளம். அந்த கிராமத்து மக்கள் அந்தக் குளத்தைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
           பெரிய குளம் அது. தாமரை இலைகள் கம்பளம் விரித்தது போல் அந்த குளத்தை மூடிக்கிடந்தன. நடுவில் தாமரைப்பூக்கள் கொக்கின் தலைபோல உயர்ந்து நின்றன.
           முல்லைப்பூர் என்கிற கிராமத்துக்கே அது அழகான குளம்.
           அந்த குளத்தில்தான் பேரன்பி என்கிற ஒரு தவளை வசித்து வந்தது. நெடுங்காலமாக அதன் முப்பாட்டனார், தாத்தா, அப்பா, அம்மா என எல்லோருக்கும் அந்தக் குளம்தான் பூர்வீகம்.


           இப்போது அந்த வரிசையில் பேரன்பியும் அதன் குழந்தைகளும் மட்டுமே வசிக்கிறார்கள்.
           தினமும் கரைக்கு வந்து இரைபிடித்து இளைப்பாறிவிட்டுப் போவது பேரன்பியின் வழக்கம்.
          குளக்கரையின் அருகே சற்று தள்ளியிருந்த ஒரு பொட்டல்வெளியில் ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்தில் சிறுபுத்தி என்கிற எலி வசித்துவந்தது.
           அதுவும் இரைபிடித்து உண்டதும் சற்று இளைப்பாறும்.
ஆனால் இன்று அது ஒரு திட்டத்துடன் வந்து காத்திருந்தது
           குளக்கரையின் அருகே விஷமடக்கி என்கிற ஒரு பாம்பு வசித்து வருகிறது. அதனிடம்  சிறுபுத்தி மாட்டிக்கொண்டது. தான் தப்பிப்பதற்கு வேறு இரை பிடித்துத் தருகிறேன் என்கிற ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது- எனவே அது பேரன்பியை இரையாக மாட்டிவிட்டால் தான் தப்பித்துவிடலாம்.
                இது தெரியாத பேரன்பி குளத்தை விட்டுக் கரையில் தாவியதும் விஷமடக்கி தலையை சருகுக்குள் இழுத்துக்கொண்டு மறைந்துகொண்டது.
            சிறுபுத்தியும் பேரன்பியும் பேச ஆரம்பித்தன.
            சற்று நேரத்தில் சிறுபுத்தி இரு.. எனக்குத் தாகமாக இருக்கிறது. நீரருந்திவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு குளத்தின் ஓரமாகப் போனது.
           சரி என்று பேரன்பி காத்திருந்தது.
           இதுதான் சமயம் என்று விஷமடக்கி தலையை ஒரே பாய்ச்சலில் நீட்டிப் பேரன்பியைக் கவ்விக்கொண்டது. இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்துபோனது பேரன்பி.
           உடனே.. அது அழ ஆரம்பித்துவிட்டது. என் பிள்ளைகள் நான் இல்லாமல் இறந்துபோய்விடுவார்கள். இப்போது அவர்கள் சிறுபிள்ளைகள். சரியாகக்கூட நீந்தத்தெரியாமல் உள்ளார்கள். அவர்கள் நீந்தக் கற்றுக்கொடுத்ததும் நானே வந்து உனக்கு இரையாகிறேன்.
           என்ன இது? நீயும் அதையே சொல்கிறாய் சிறுபுத்தியும் அதையே சொல்கிறது. இருவரும் சேர்ந்து நாடகமாடுகிறீர்களா? என்றது விஷமடக்கி.
           என்ன சொன்னது சிறுபுத்தி? என்றது பேரன்பி.
           அதுதான் உன்னை எனக்கு இரையாகத் தருகிறேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டது என்றதும் பேரன்பிக்கு இன்னும் அழுகை பொங்கி வந்தது.
           ஒன்று செய்.. எனக்கு வேறு இரை ஏற்பாடு செய்துகொடு நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்றது விஷமடக்கி.
           வேண்டாம்.. என் துன்பம் என்னோடு போகட்டும். ஒருபோதும் அதுபோன்று நான் செய்யமாட்டேன்.. என் பிள்ளைகள் எப்படியும் பிழைத்துக்கொள்வார்கள். நீ என்னை உண்டுவிட்டுப்போ என்றது.
           இதைக் கேட்டதும் சிறுபுத்திக்கு அழுகை வந்து அது ஓடிவந்து நான்தான் நல்ல நட்பைப் புரிந்துகொள்ளவில்லை. அதை விட்டுவிடு.. என்னையே எடுத்துக்கொள் விஷமடக்கியின் வாயருகே வந்து நின்றுவிட்டது.
           சட்டென்று வாயிலிருந்து பேரன்பியை விடுவித்தது விஷமடக்கி.


           உங்களின் நட்பைப் போற்றுகிறேன். நட்பில் இப்படியே இருங்கள். சிறுபுத்தியே பேரன்பியால் உன்னையும் விட்டுவிடுகிறேன். இனி நான் இங்கிருக்கமாட்டேன். இங்கிருந்தால் ஒருவேளை மனசு மாறி உங்களைத் தின்ன எண்ணம் வரும். உங்களின் நட்பிற்குப் பரிசாக நான் இனி இங்கிருக்கமாட்டேன் என்றபடி சரசரவென்று விரைந்து மறைந்தது விஷமடக்கி.
           என்னை மன்னித்துவிடு பேரன்பி என்றது சிறுபுத்தி.
           விடு நண்பா.. அப்போதே மறந்துவிட்டேன். சரி நாளை சந்திக்கலாம். பிள்ளைகள் காத்திருப்பார்கள் என்றபடி ப்ளக் என்று குளத்தில் பாய்ந்தது பேரன்பி.

           நீதி. மனசிருந்தால் துரோகியும் நண்பராவார்.
           

Wednesday, June 29, 2016

கதை 5

                குறி பிசகாத கொடியான்
                   
 
                அந்த இடத்தில் நாலைந்து செடிகள் மட்டுமே இருந்தன. அடங்காதி என்கிற ஆடு ஒன்று மேய்ந்துகொண்டே வந்தது. பச்சையாய் இருந்த செடிகளைக் கண்டதும் சின்ன வாலை  துறுதுறுவென்று ஆட்டியபடியே மேய ஆரம்பித்துவிட்டது. கடைசியாய் ஒரு செடிதான் இருந்தது. அதை மேய வாயை வைத்தபோது சின்னதாய் ஒரு குரல் கேட்டது.
                சட்டென்று வாயை எடுத்துவிட்டு யாரது? என்றது. உடனே தலையை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்த்தது. யாருமில்லை. அதற்கு லேசாகப் பயம் வந்தது. மறுபடியும் யாரது? என்றது.
                ஆடாரே… கீழே குனிந்து செடிக்கருகில் பாருங்கள் என்று மறுபடியும் அந்தக் குரல் கேட்கக் குனிந்து பார்த்தது.
                 அங்கே பச்சைநிறத்தில் ஒரு புழுவும் அதைச் சுற்றிச் சில குட்டிப் புழுக்களும் நெளிந்துகொண்டிருந்தன.
                என்ன என்றது அலட்சியமாய் அடங்காதி.
                இது கோடைக்காலம். சற்று நேரத்தில் இங்கே வெயில் வந்துவிடும். எங்களால் வெயிலைத் தாங்கமுடியாது. அப்போது இந்த செடிகளின் அடியில்தான் இளைப்பாறுவோம்.. நீங்கள் மேய்ந்துவிட்டால் வெயிலில் நானும் என் பிள்ளைகளும் இறந்துபோய்விடுவோம். ஆகவே இந்த ஒரு செடியை மேயாமல் விட்டுவிடுங்கள் ஆடாரோ.. என்றது.
                முடியாது.. எனக்கு இன்னும் பசி அடங்கவில்லை..மேய்ந்தே தீருவேன் என்றது.
                உங்களால் பசியை அடக்கமுடியும். ஆனால் எங்களால் உயிரை அடக்கமுடியாது. வெயில் எங்களைக் கொன்றுவிடும்.
                முடியவே முடியாது என்றது.
                வாயடக்கி என்கிற அந்தப் புழு தன் பிள்ளைப் புழுக்களைப் பார்த்து.. சீக்கிரம் வேகமாக வாருங்கள்.. வெயில் வருவதற்குள் அந்த காய்ந்த குச்சிகள் இருக்குமிடத்திற்குப் போய்விடலாம்.. என்றபடி வேகவேகமாக நெளிந்து நகர ஆரம்பித்துவிட்டன.
                அந்தச் செடியையும் சுத்தமாக மேய்ந்துவிட்டு நகர்ந்துபோன அடங்காதி.. தூரமாய் வந்த கொடியான் என்கிற புலியைக் கண்டதும் அதிர்ந்துபோய் நின்றுவிட்டது. ஓடவும் முடியாது. புலி அருகில் வந்ததும் அடங்காதி ஆழ ஆரம்பித்துவிட்டது.
                புலியாரே என்னை விட்டுவிடுங்கள்..
                முடியாது. என் பசி இன்னும் தீரவில்லை. உன்னைத் தின்றாலும் பசி அடங்காது. என்றாலும் கொஞ்சம் பசியாவது அடங்கவேண்டும் ஆகவே உன்னைச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்றபடி அடங்காதி மேல் பாய்ந்தது கொடியான் குறி பிசகாமல்.



நீதி..    பேசும் சொற்களிலேயே வாழ்வும் சாவும்.


Tuesday, June 28, 2016

கதை 4

           பட்டத்தை மறுத்த பட்டாம்பூச்சி…



           பறவைகள் ஒவ்வொன்றுக்கும் தாங்கள்தான் அழகு என்கிற எண்ணம் இருந்தது. என்றாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
           துடிப்பி என்கிற சிட்டுக்குருவி ஒருநாள் பறவைகளிடம் இதுபற்றிய பேச்சை தொடங்கியது.
           கருப்புகூட அழகுதான் என்பதை குயில் கூவி சொன்னது.
           மேகமும் நானும் ஓர் வண்ணம் என்றது தவிட்டுக்குருவி.
           ஒவ்வொன்றும் அழகுக்கான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
           சரி யாரிடமாவது இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனைத்தும் ஒருமனதாக முடிவெடுத்தன.
           அந்தக் காட்டில் துள்ளிகுதிப்பான் என்கிற மான் இருந்தது.
           அதனை நடுவராக்கி தங்கள் விவாதங்களை முன் வைத்தன பறவைகள்.
           எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டது.
           சரி இதனை எங்கள் விலங்கு இனத்திடம் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுக்கு வரலாம் என்று துள்ளிக்குதிப்பான் கூற எல்லாமும் சம்மதித்தன.
           அப்படியே வாக்குப் பதிவு நடந்தது.
           கடைசியில் எல்லாமும் மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சிதான் அழகு என்று அதிகமாக வாக்களித்திருந்தன.
           அதை எல்லாமும் ஏற்றுக்கொண்டு அந்தப் பட்டாம்பூச்சிக்கு அழகுடையாள் என்கிற பட்டத்தை அளிக்க முடிவெடுத்து விழா ஏற்பாடு செய்தன.
          முறையான அழைப்பை விடுக்க அந்த மின்னல்ஒளி என்கிற பட்டாம்பூச்சி அங்கே வந்து எனக்கு பட்டம் வேண்டாம் என்றதும் அனைத்துப் பறவைகளும் அதிர்ச்சியடைந்தன.
           ஏன் இது நல்ல விஷயந்தானே?


           இல்லை. இது நல்ல விஷயம் இல்லை. இன்றைக்கிருக்கிற பட்டாம்பூச்சியான என்னைப் பார்க்கிறீர்கள். எனது இளமைப் பருவம் அருவருப்பான புழுப்பருவம். அதனைப் பார்த்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வரமாட்டீர்கள். தவிரவும் உழைப்புதான் நமக்கு எப்பவும் அழகு. இப்படிப் பட்டம் வாங்கிவிட்டால் அப்புறம் உழைப்பு மறந்துவிடும். இந்தப் பட்டத்திலேயே மயங்கிவிடுவோம். நல்ல உள்ளத்தைவிட அழகு எதுவுமில்லை. என்றபடி பட்டாம்பூச்சி பறந்துபோய்விட்டது.

           எல்லாவற்றையும் உள்ளும் புறமுமாய் கலைத்துவிட்டுப் பறவைகளும் பறந்துபோயின.

Monday, June 27, 2016

ஜங்கிள் புக்.. கதை. 3

                     யானையைக் கடித்த பூனை

           சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பூனையின் பெயர் அகங்காரன்.
           அது எப்பவும் ஒரு செயலை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டேயிருக்கும்.
           அதனுடைய வம்சம்தான் என்று புலிகள் என்று கேள்விப்பட்டதில் இருந்து. அதனால் அதற்கு அகந்தை தலைக்கேறிவிட்டது.
           புலிகள் என்னோட வம்சம்.. நான் சின்ன உருவம்னு என்கிட்ட வச்சிக்கிட்டிங்க.. அத்தனைபேரையும் கொன்னுடுவேன்னு.. மிரட்டவும் ஆரம்பித்துவிட்டது.
           எதற்கு வம்பு என்று சின்ன விலங்குகள்  விலகிப்போயின. பெரிய விலங்குகளோ அதை அலட்சியப்படுத்திவிட்டுப்போயின.
           ஆனால் அகங்காரனின் ஆணவம் குறையவேயில்லை.
           ஒரு முறை சாதுவன் என்கிற பெண்யானை இந்த பூனையின் முன் வந்தது. உடனே அகங்காரன் அதனிடம் என்னுடைய வம்சம் புலி என்று சொல்லிப் பெருமைப்பட்டது.
           அதனால் என்ன? என்றது சாதுவன்
           என்ன இப்படிக் கேட்டுவிட்டாய். உனக்கு என்னிடத்தில் பயமே யில்லையா என்றது?
           உடனே சாதுவன் சிரித்துவிட்டது.

           அகங்காரனுக்கு அளவுக்கடந்த கோபம் வந்துவிட்டது. உடனே –ஓடிப்போய் அந்த யானையின் காலைக் கடிக்க ஆரம்பித்தது. உடனே சாதுவன் என்கிற யானை வலிபொறுக்கமுடியாமல் அப்படியே கீழே விழுந்துவிட்டது. அகங்காரனுக்கு நிறைய மகிழ்ச்சி..
           பார்த்தீர்களா என் பலத்தை என்று அந்த யானையின் மேல் நின்று நடனம் ஆட ஆரம்பித்துவிட்டது. அப்படி ஆடும்போது சட்டென்று சறுக்கிவிட கீழே விழுந்தது.
           இப்போது கண் விழிப்பு வந்து இதுவரை கண்டது கனவென்று அதற்கு புரிந்தது. அப்போது பக்கத்தில் சாதுவன் யானை நின்றுகொண்டிருந்தது.
           என்ன அசந்த தூக்கமா? என்றது சாதுவன்.
           ஆமாம் என்றது.

           இனி இப்படித் தூங்காதே.. உன்னை இப்போது ஒரு புலி அடித்து உண்ண வந்தது.. நல்லவேளை நான் இருந்ததால் அதனால் முடியவில்லை. பாவம் அசந்து தூங்குகிறாய் என்று காவலுக்கு நான் இருந்தேன்.. போய் உன் இடத்தில்  தூங்கு என்றபடி சாதுவன் போய்விட்டது.
           அகங்காரன் தாங்கமுடியாத அவமானத்தில் தலைகுனிந்து நின்றது.
          
           நீதி.  அகந்தையின் முடிவு அவமானமே..
           

Sunday, June 26, 2016

ஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.

கதை 1

பேசும் செடி..


          அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது.
           ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும் மிரட்டி விரட்டியது.
           காட்டிலுள்ள மிருகங்கள் அந்த செடி இருந்தபக்கம் செல்ல அஞ்சி ஓடின.
           பேசும் செடி இரண்டு மரங்களுக்கு நடுவில் இருந்தது.
           ஒருநாள் சிறிய மான்குட்டி ஒன்று வழிதவறி பேசும் செடி இருந்த பக்கம் வந்துவிட்டது.
           பேசும் செடி பற்றி அதற்குத் தெரியாது.
           உடனே பேசும் செடி பேச ஆரம்பித்துவிட்டது. இல்லை மிரட்ட ஆரம்பித்துவிட்டது மான்குட்டியை.
           டேய்.. மான்குட்டி.. எங்கே இங்க வந்தே?
           யாரு பேசறது?
           ஹாஹா.. என்னைத் தெரியாதா.. நான்தான் பேசும் செடி.. உன்னை தின்னப்போறேன் என்றது..
           உடனே அய்யோ..அம்மா என்று மான்குட்டி அலறியபடி கீழே விழுந்து மயங்கிவிட்டது.
           கொஞ்ச நேரத்தில் குட்டிமானைத் தேடிக்கொண்டு தாய் மான் வந்தது. உடனே பேசும்செடி.. அந்த தாய் மானையும் மிரட்டியது.

           உன்னையும் தின்னப்போறோம் என்று.
           அதற்குள் மான்குட்டி மயக்கம் தெளிந்து எழுந்து தாய் மான் பின்னே ஒடுங்கிக்கொண்டது.
           அப்போது திடீரென.. எதிரில் உள்ள அரசமரம் பேச ஆரம்பித்துவிட்டது.
           நான்தான் அரச மரம் பேசுகிறேன்.. இப்போது நான் அந்த பேசும்செடியை அழிக்கப்போகிறேன்..


           உடனே தாய்மானும் குட்டிமானும் ஓடிப்போயின.
           அய்யய்யோ எங்களை விட்டுடு என்று பேசும் செடியின் பின்னாலிருந்து இரண்டு கரடிக்குட்டிகள் வெளியே வந்தன.
           ஓ நீங்கள்தான் பேசும் செடியா?
           ஆமா..ஆமா.. எங்களை மன்னிச்சிடு மரமே.. இனிமே இப்படி செய்யமாட்டோம்..
           சரி.. இனி யாரையும் ஏமாற்றக்கூடாது..
           சரி என்றன இரண்டும். அவ்வாறு சொல்லியதும் அரச மரத்தின் பின்னிருந்து கரடி வந்ததும் இரண்டும் அம்மா நீங்களா என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டன.



           நீதி.. யாரையும் ஏமாற்றக்கூடாது


  
கதை.2

                  தாகம் தணித்த காகம்…


           நல்ல வெயில் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை.
மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக் கிடந்தன.
           பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம்.
           தண்ணீர் தேடி அலைந்தது.
           கடைசியாக ஒரு இடத்தில் சிறு ஜாடி கிடந்தது.
           அதில் கால் பங்கு நீர் கிடந்தது.
           நிச்சயம் காகம் தன் அலகால் நுழைத்தாலும் தண்ணீரைக் குடிக்கமுடியாது.
           தலையையும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
           காகத்திற்கோ தாகம் அதிகரித்துக்கொண்டேபோனது.
           பக்கத்தில் பார்த்தது எதாவது கிடைக்குமா என்று.
           சுற்றிலும் சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன.
           அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
           கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது காகம்.
           அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக்
கிடந்தது. நாலைந்து இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால்  அச்செடி
வாடிக்கிடந்தது.
           காகம் பார்த்தது.
           மெல்ல தண்ணீர் உள்ள ஜாடியை நகர்த்திப்போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது.


           ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம் தண்ணீர் மெல்ல தரையில் பரவி அந்த செடியின் வேருக்குள் இறங்கியது.
           செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
           காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்தது ஆகாயம் பார்த்து.

            நீதி.  நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.


Tuesday, April 12, 2016






                                        உங்களின் சொற்களை
                                        சேகரித்துக்கொள்ளுங்கள்
                                        அதிகம் செலவழிக்காதீர்கள்
                                        வழியில் எங்கும் தவறவிடாதீர்கள்
                                        முடிந்தால் எங்குவேண்டுமானாலும்
                                         எதில் வேண்டுமானாலும்
                                         பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்...
                                         எல்லாவற்றுக்கும் சொற்களைக்
                                         கேட்டுக் கொடுங்கள்
                                          யாரிடமும் சொற்களைக் கடன்
                                          வாங்காதீர்கள்
                                          உங்களின் சொற்களை யாரிடமும்
                                          காட்டவும் வேண்டாம்
                                          குப்பைகளை அள்ளிக்கொண்டு
                                          வருகிறார்கள்...
                                          

Sunday, April 10, 2016

யானையும் முள்ளங்கியும்...




                     திருவையாறு.

                     என் வாழ்வின் முக்கியமான இரு கூறுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஊர் திருவையாறு.
                      காவிரி கரைபுரண்டோட செழித்துக் கிடந்த ஊர். தற்போது அந்த செழிப்பின் விளைவிலேயே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்திருக்கும் ஊரும் திருவையாறாகும்.
                        எத்தனையோ நாட்கள் காவிரியின் கரையில் கழித்த தருணங்கள் உண்டு. தியாகய்யர் இசைகேட்டு மெய்மறந்த காலங்களும் உண்டு.
                         இரு கூறுகளுள் முதல் கூறு. என்னை ஈன்று புறந்தந்த என் தாயின் பிறந்த ஊர் திருவையாறு.
                         என் நிழலாய் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் பிறந்த ஊரும் திருவையாறு.
                        கூடுதலாய் என் இரண்டாவது சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்த ஊரும் திருவையாறு.
                        அக்காவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காவிரியில் குளித்த அனுபவம் அற்புதமானது. காவிரியின் வடகரையில் அம்மாவின் கிராமம். மனைவியின் வீடு. தென்கரையில் அக்காவின் வீடு. அக்கா வீட்டிலிருந்து காவிரியில் குதித்து ஆற்றின் ஓட்டத்தோடே நீந்தி தியாகய்யர் சமாதியில் கரைஏறுவோம். பின் அங்கிருந்து திருவையாறு சாலையில் சிறிது நடந்து காருகுடி அருகே காவிரியில் குதித்து பின் அக்கா வீட்டுக் கரைக்கு வந்து சேருவோம். இன்றைக்கு நினைத்தாலும் அது அற்புதமான அனுபவம்.
               
        அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றுதான் அழைப்போம். அம்மாவின் அம்மா பெயர் அமிர்தத்தம்மாள். பார்ப்பதற்கு பிராமணப் பெண்ணைப்போலிருப்பார் என்று அத்தனை உறவுகளும் சொல்லுவார்கள். மெலிதாகவும் நல்ல சிகப்பாகவும் இருப்பார்கள். அந்த அம்மாயியோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மூவரும் தென்கரையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
                            ஒவ்வொரு விடுமுறைக்கும் வடகரைக்கும் தென்கரைக்கும் எங்களின் பயணம் காவிரி ஆற்றைக் கடந்து நிகழும். தண்ணீர் நிறைந்து போகும்போது பரிசிலில் வருவோம். அதுபற்றி ஒரு சுவையான நாவலே எழுதலாம். தண்ணீர் இல்லாத சமயம் மணலில் நடந்து வருவோம்.
                                தென்கரையில் உள்ள அம்மாயிகள் ஒவ்வொருவரும் நல்ல வசதியானவர்கள். தோப்பும் துரவுமாக இருப்பவர்கள். தவிரவும் அனைவருக்கும் கொல்லைகள் உண்டு. அதில் கீரைகள். அவரை, மொச்சை, அகத்தி, கத்தரிக்காய், முள்ளங்கி, வாழைமரங்கள் என்று பலவும் பயிரிட்டு இருப்பார்கள்.
                                 காலையில் ஐந்து மணிக்கே அம்மாயி எங்களை அழைத்துக்கொண்டு முள்ளங்கி கொல்லைக்குப் போவார். பாத்தி பாத்தியாக ஒவ்வொன்றையும் பசுமையாகப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். கத்தரிக் கொல்லையில் ஒவ்வொரு செடியிலும் கொத்து கொத்தாக கத்தரிக்காய் தொங்கும் அழகு, முள்ளங்கி கொல்லையில் மண்ணுக்குள் புதைந்திருக்க மேலே அதன் இலைகள் அத்தனை வளமாக இருக்கும். பக்கத்தல் நீண்ட வாய்க்கால் காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கியோடும்.

                                கொல்லையெல்லாம் சுற்றிவிட்டு அம்மாயி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளைப் பறித்துகொண்டு வருவார். முள்ளங்கி கொல்லையில் நாலைந்து முள்ளங்கிகளை அப்படியே இலைகளோடு பிடுங்கியெடுப்பார். ட்யூப் லைட்டை மண்ணில் புதைத்து வெளியே எடுத்தது போன்று வெள்ளைவெளேரென்று இருக்கும். இலைகளோடு அதனைப் பிடித்து எடுத்துவருகையில் காதைப்பிடித்து வெள்ளை முயல்களைத் தூக்கி வருவதுபோலிருக்கும்.
                           எங்களை வாய்க்கால் கரையில் அம்மாயி உட்கார வைத்துவிட்டு. அந்த முள்ளங்கிகளை அப்படியே வாய்க்கால் நீரில் மண்போக அலசுவார்கள். பின் அந்த முள்ளங்கிகளை வாய்க்கால் கரையில் போடப்பட்டுள்ள உருக்காங்கல்லில் (அது துணி துவைப்பதற்கு.. வயல் வேலைக்குப் போய் வருபவர்கள் மண்வெட்டிகளை கழுவுவதற்கு இப்படி பல பயன்கள்) வைத்து இன்னொரு கல்லெடுத்து முள்ளங்கி உடம்பில் தலையிலிருந்து வால்வரை நசுக்குவார்கள். அப்படியே முள்ளங்கி புதுவீட்டின் சுவரில் விழுந்த வெடிப்பைப்போலப் பிளந்து நிற்கும். உடனே மடியிலிருந்து சுருக்குப் பையை அம்மாயி எடுப்பார்கள் அதில் பொட்டலம் ஒன்று இருக்கும். அதில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் வைத்து அரைத்த பொடி இருக்கும். அதனை எடுத்து ஒவ்வொரு முள்ளங்கியின் பிளந்த பிளவுகளில் வரிசையாக தூவுவார்கள். அப்படியே ஒவ்வொருவரிடம் கொடுப்பார்கள். அப்படியே கடித்து தின்னச் சொல்லுவார்கள். காரமாக இருந்தாலும் இளம் முள்ளங்கி பசுமையானது மிகச் சுவையாக இருக்கும். பொறையேறும். என்றாலும் தின்று முடித்ததும் அம்மாயி தன் இருகைகளால் வாய்க்கால் நீரை அள்ளிக் குடிக்கக் கொடுப்பார்கள். குடிப்போம். வயிறு நிரம்பியிருக்கும்.

                         உடம்புக்கு பச்ச முள்ளங்கி ரொம்ப நல்லது. ஒரு நோவு நொடி வராது என்பார்கள்.
                          அப்புறம் அம்மாயி முள்ளங்கி சாப்பிட்டதும் கிளம்பி மறுபடியும் கொல்லைக்குள் போவோம்.
                          வெண்டைக்காய் தின்ன... பிஞ்சு கத்தரிக்காய் தின்ன கற்றுக் கொடுத்தார்கள்.
                          இப்படி எல்லாவற்றையும் இயற்கையாகவே பச்சையாகவே தின்னக் கற்றுக்கொடுத்தார்கள். இன்றுவரை தொடர்கிறது.
                         அம்மாயிகள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு வெறுமையான கிராமத்தில் நுழையும்போது இன்னும் அவர்களின் பிள்ளைகள் கொல்லைகளைப் பராமரிக்கிறார்கள். அப்படியே வாய்க்கால் ஓடுகிறது. உருக்காங்கற்களும் கிடக்கின்றன.
                           ஆனாலும் அம்மாயி கொடுத்த முள்ளங்கியின் சுவை கிடைக்கவேயில்லை.
                            என்றாலும் இன்றைக்கும் சாம்பார் சாதத்தில் முள்ளங்கியைத் தேங்காய் துறுவலாக செய்து தூவி கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.

                            இன்றைக்கு முள்ளங்கிக்கு பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது.

                              சரி முள்ளங்கிக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்?

                             அம்மாயிடம் அன்று கேட்டபோது சொன்னார்கள்.

                              பகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.
                              இரவில் ஒரு யானையையே கொடுத்தாலும்  முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது.
                                                    0000