திருவையாறு.
என் வாழ்வின் முக்கியமான இரு கூறுகளைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ஊர் திருவையாறு.
காவிரி கரைபுரண்டோட செழித்துக் கிடந்த ஊர். தற்போது அந்த செழிப்பின் விளைவிலேயே தன்னுடைய இருப்பைத் தக்க வைத்திருக்கும் ஊரும் திருவையாறாகும்.
எத்தனையோ நாட்கள் காவிரியின் கரையில் கழித்த தருணங்கள் உண்டு. தியாகய்யர் இசைகேட்டு மெய்மறந்த காலங்களும் உண்டு.
இரு கூறுகளுள் முதல் கூறு. என்னை ஈன்று புறந்தந்த என் தாயின் பிறந்த ஊர் திருவையாறு.
என் நிழலாய் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் பிறந்த ஊரும் திருவையாறு.
கூடுதலாய் என் இரண்டாவது சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்த ஊரும் திருவையாறு.
அக்காவின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் காவிரியில் குளித்த அனுபவம் அற்புதமானது. காவிரியின் வடகரையில் அம்மாவின் கிராமம். மனைவியின் வீடு. தென்கரையில் அக்காவின் வீடு. அக்கா வீட்டிலிருந்து காவிரியில் குதித்து ஆற்றின் ஓட்டத்தோடே நீந்தி தியாகய்யர் சமாதியில் கரைஏறுவோம். பின் அங்கிருந்து திருவையாறு சாலையில் சிறிது நடந்து காருகுடி அருகே காவிரியில் குதித்து பின் அக்கா வீட்டுக் கரைக்கு வந்து சேருவோம். இன்றைக்கு நினைத்தாலும் அது அற்புதமான அனுபவம்.
அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றுதான் அழைப்போம். அம்மாவின் அம்மா பெயர் அமிர்தத்தம்மாள். பார்ப்பதற்கு பிராமணப் பெண்ணைப்போலிருப்பார் என்று அத்தனை உறவுகளும் சொல்லுவார்கள். மெலிதாகவும் நல்ல சிகப்பாகவும் இருப்பார்கள். அந்த அம்மாயியோடு கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மூவரும் தென்கரையிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு விடுமுறைக்கும் வடகரைக்கும் தென்கரைக்கும் எங்களின் பயணம் காவிரி ஆற்றைக் கடந்து நிகழும். தண்ணீர் நிறைந்து போகும்போது பரிசிலில் வருவோம். அதுபற்றி ஒரு சுவையான நாவலே எழுதலாம். தண்ணீர் இல்லாத சமயம் மணலில் நடந்து வருவோம்.
தென்கரையில் உள்ள அம்மாயிகள் ஒவ்வொருவரும் நல்ல வசதியானவர்கள். தோப்பும் துரவுமாக இருப்பவர்கள். தவிரவும் அனைவருக்கும் கொல்லைகள் உண்டு. அதில் கீரைகள். அவரை, மொச்சை, அகத்தி, கத்தரிக்காய், முள்ளங்கி, வாழைமரங்கள் என்று பலவும் பயிரிட்டு இருப்பார்கள்.
காலையில் ஐந்து மணிக்கே அம்மாயி எங்களை அழைத்துக்கொண்டு முள்ளங்கி கொல்லைக்குப் போவார். பாத்தி பாத்தியாக ஒவ்வொன்றையும் பசுமையாகப் பார்க்கையில் ஆசையாக இருக்கும். கத்தரிக் கொல்லையில் ஒவ்வொரு செடியிலும் கொத்து கொத்தாக கத்தரிக்காய் தொங்கும் அழகு, முள்ளங்கி கொல்லையில் மண்ணுக்குள் புதைந்திருக்க மேலே அதன் இலைகள் அத்தனை வளமாக இருக்கும். பக்கத்தல் நீண்ட வாய்க்கால் காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கியோடும்.
கொல்லையெல்லாம் சுற்றிவிட்டு அம்மாயி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளைப் பறித்துகொண்டு வருவார். முள்ளங்கி கொல்லையில் நாலைந்து முள்ளங்கிகளை அப்படியே இலைகளோடு பிடுங்கியெடுப்பார். ட்யூப் லைட்டை மண்ணில் புதைத்து வெளியே எடுத்தது போன்று வெள்ளைவெளேரென்று இருக்கும். இலைகளோடு அதனைப் பிடித்து எடுத்துவருகையில் காதைப்பிடித்து வெள்ளை முயல்களைத் தூக்கி வருவதுபோலிருக்கும்.
எங்களை வாய்க்கால் கரையில் அம்மாயி உட்கார வைத்துவிட்டு. அந்த முள்ளங்கிகளை அப்படியே வாய்க்கால் நீரில் மண்போக அலசுவார்கள். பின் அந்த முள்ளங்கிகளை வாய்க்கால் கரையில் போடப்பட்டுள்ள உருக்காங்கல்லில் (அது துணி துவைப்பதற்கு.. வயல் வேலைக்குப் போய் வருபவர்கள் மண்வெட்டிகளை கழுவுவதற்கு இப்படி பல பயன்கள்) வைத்து இன்னொரு கல்லெடுத்து முள்ளங்கி உடம்பில் தலையிலிருந்து வால்வரை நசுக்குவார்கள். அப்படியே முள்ளங்கி புதுவீட்டின் சுவரில் விழுந்த வெடிப்பைப்போலப் பிளந்து நிற்கும். உடனே மடியிலிருந்து சுருக்குப் பையை அம்மாயி எடுப்பார்கள் அதில் பொட்டலம் ஒன்று இருக்கும். அதில் சிவப்பு மிளகாயையும் உப்பையும் வைத்து அரைத்த பொடி இருக்கும். அதனை எடுத்து ஒவ்வொரு முள்ளங்கியின் பிளந்த பிளவுகளில் வரிசையாக தூவுவார்கள். அப்படியே ஒவ்வொருவரிடம் கொடுப்பார்கள். அப்படியே கடித்து தின்னச் சொல்லுவார்கள். காரமாக இருந்தாலும் இளம் முள்ளங்கி பசுமையானது மிகச் சுவையாக இருக்கும். பொறையேறும். என்றாலும் தின்று முடித்ததும் அம்மாயி தன் இருகைகளால் வாய்க்கால் நீரை அள்ளிக் குடிக்கக் கொடுப்பார்கள். குடிப்போம். வயிறு நிரம்பியிருக்கும்.
உடம்புக்கு பச்ச முள்ளங்கி ரொம்ப நல்லது. ஒரு நோவு நொடி வராது என்பார்கள்.
அப்புறம் அம்மாயி முள்ளங்கி சாப்பிட்டதும் கிளம்பி மறுபடியும் கொல்லைக்குள் போவோம்.
வெண்டைக்காய் தின்ன... பிஞ்சு கத்தரிக்காய் தின்ன கற்றுக் கொடுத்தார்கள்.
இப்படி எல்லாவற்றையும் இயற்கையாகவே பச்சையாகவே தின்னக் கற்றுக்கொடுத்தார்கள். இன்றுவரை தொடர்கிறது.
அம்மாயிகள் எல்லோரும் விடைபெற்றுக்கொண்டு வெறுமையான கிராமத்தில் நுழையும்போது இன்னும் அவர்களின் பிள்ளைகள் கொல்லைகளைப் பராமரிக்கிறார்கள். அப்படியே வாய்க்கால் ஓடுகிறது. உருக்காங்கற்களும் கிடக்கின்றன.
ஆனாலும் அம்மாயி கொடுத்த முள்ளங்கியின் சுவை கிடைக்கவேயில்லை.
என்றாலும் இன்றைக்கும் சாம்பார் சாதத்தில் முள்ளங்கியைத் தேங்காய் துறுவலாக செய்து தூவி கலந்து சாப்பிடும் பழக்கம் தொடர்கிறது.
இன்றைக்கு முள்ளங்கிக்கு பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் சொல்கிறது.
சரி முள்ளங்கிக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம்?
அம்மாயிடம் அன்று கேட்டபோது சொன்னார்கள்.
பகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.
இரவில் ஒரு யானையையே கொடுத்தாலும் முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது.
0000
நினைவுகள் மட்டும்
ReplyDeleteநம்மிடமிருந்து யாரும்
திருட முடியாதது....
உங்கள் நினைவுகளை
பதிவாக தந்தீர்கள்...
அருமையான பதிவு....
அழகான நினைவுகள்...
நினைவுகள் சுகமானவை
ReplyDeleteமுள்ளங்கியும் யானையும் இல்லைதான்!..
ReplyDeleteஆனாலும் -
வயலும் வழியும் காத்துக் கிடக்கின்றன..
அம்மாயி வருகைக்காக!..
அன்புள்ள அஜய் சுனில்கர் ஜோசப்..
ReplyDeleteவணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பான நன்றிகள்.
அன்புள்ள ஜெயக்குமார்
ReplyDeleteநன்றிகள்.
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅருமையான பதிவு, அன்று நம் முன்னோர் தந்தையே இன்று மருத்துவம் என்று தருகிறார்கள், வெள்ளைமுள்ளங்கியை அப்படியே ஒரு நச்சு நச்சி,, கூட ஒரு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு நச்சி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு, உயர் ரத்த அழத்தம் மட்டுப்படுமாம்,,,
நன்றி ஐயா
பகலில் ஒரு யானையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக ஒரு முள்ளங்கியை வாங்கிச் சாப்பிடலாம்.
ReplyDeleteஇரவில் ஒரு யானையையே கொடுத்தாலும் முள்ளங்கியைச் சாப்பிடக்கூடாது./ இதுநாள்வரை கேள்விப்படாத செய்தி இது நன்றி
எனது 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை' நினைவுபடுத்தி விட்டீர்கள்! யானையை வாங்கவோ விற்கவோ வசதி இல்லாதவன் நான்.முள்ளங்கியை தவறாமல் பகலில் மட்டும் சாப்பிடும் வழக்கம் உண்டு. தாரமங்கலத்தில் விவசாயம் புரிந்து வந்த என் தாத்தா,பாட்டி தான் காரணமாக இருக்க வேண்டும்.- இராய செல்லப்பா
ReplyDeleteஎனது 'தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை' நினைவுபடுத்தி விட்டீர்கள்! யானையை வாங்கவோ விற்கவோ வசதி இல்லாதவன் நான்.முள்ளங்கியை தவறாமல் பகலில் மட்டும் சாப்பிடும் வழக்கம் உண்டு. தாரமங்கலத்தில் விவசாயம் புரிந்து வந்த என் தாத்தா,பாட்டி தான் காரணமாக இருக்க வேண்டும்.- இராய செல்லப்பா
ReplyDeleteஅன்புள்ள துரை செல்வராஜ் ஐயா
ReplyDeleteவணக்கம். உண்மைதான் ஒவ்வொரு அம்மாயிடம் அற்புதமான செய்திகள் உள்ளன. ஒவ்வொன்றாய் எழுதுகிறேன். ஆண்டுகள் பல ஆனாலும் கெட்டுப்போக ஊறுகாய் செய்வார்கள். அதனை எத்தனை முறை கை வைத்து எடுத்தாலும் ஊசிப்போகாது. அவர்கள் செய்கிற கருவடாம் அருமையானது. இப்படி பலவற்றைப் பகிர்ந்துகொள்வேன். நன்றி.
அன்புள்ள மகேஸ்வரி பாலச்சந்திரன்
ReplyDeleteவணக்கம். நம்முடைய நோய்களைக் கட்டுப்படுத்தும் வசியம் நம்மிடமே உள்ளது. நாம் சாப்பிடும் காய்கறிகளிலேயே உள்ளது. தொடர்ந்து எழுதுவேன். வாருங்கள் கருத்துரை தாருங்கள் நன்றிகள்.
அன்புள்ள ஜிஎம்பி ஐயா
ReplyDeleteவணக்கம். நிறைய மாறுபட்ட கேள்விப்படாத பழமொழிகள் அம்மாயிகள் சொல்லக் கேட்டதுண்டு. ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்கிறேன். தங்களின் கருத்துரைக்கு நன்றிகள்.
அன்புள்ள செல்லப்பா ஐயா
ReplyDeleteவணக்கம். தாரமங்கலம் என்றதும் எனக்கு அதன் சிற்பங்கள் நினைவுக்கு வந்துவிட்டன. கல்தாமரை, கற்கிளிகள், ஒரே கல்லினால் ஆன இணைப்புகளற்ற சங்கிலிகள் நிறைய நினைவுக்கு வருகின்றன. யானை வாங்கும் வசதியில்லாதவர்தான். ஆனால் மனத்தில் யானையைவிடக் கம்பிரமான சிந்தனைகளுக்கு உரியவர். நன்றிகள்.
முள்ளங்கியில் இத்தனை விஷயங்களா? அருமை.
ReplyDelete