Sunday, May 29, 2011

வாசிக்க (சு) வாசிக்க


சமீபத்தில் படித்த புத்தகம் இது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் இது.

நல்ல பேச்சாளராகவும் நல்ல வாசிப்பாளராகவும் அவர் இருக்கிறார்
என்பதற்கு இந்தப் புத்தகப் பரிந்துரை சாட்சி.

புத்தகத்தின் பெயர் சாணக்ய நீதி ஸமுச்சயம். தஞ்சை சரசுவதி மஉறால்
நுர்லக வெளியீடு. சமஸ்கிருதத்தில் அமைந்த காகிதச்சுவடி. இதிலுள்ள
சுலோகங்களைத் தமிழ் வரிவடிவத்தில் அமைத்து பொழிப்புரை எழுதப்
பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர் மேற்படி நுர்லகத்தில் சமஸ்கிருதப்
பண்டிட்டாகப் பணிபுரியும் புலமையாளர் முனைவர் ஆ.வீரராகவன் அவர்கள்.

ஸமுச்சயம் என்பதற்கு தொகுப்பு என்பது பொருளாகும். சாணக்கியரால்
கூறப்பெற்ற நீதிகள் இதில் சுலோகங்களாக உள்ளன. அத்தனையும் வாழ்ககை
நீதிகள். அத்தனையும் அற்புதப் பயன் விளைவிப்பவை. அரசனுடைய கடமை
தீயோர்களை ஒடுக்கி நல்லோர்களாகிய மக்களைக் காக்கவேண்டும். அதற்காக
இதற்கு ராஜநீதி என்றும் அழைப்பார்கள்.

இதன் விலை முப்பது ரூபாய். அவசியம் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய
புத்தகம்.

இதிலிருந்து சில நீதிகள் / நெல்லிக்கனி சுவைபோல...


ஃ பணிவற்ற வேலையாள்.கொடைத்திறனற்ற அரசன்.கெட்ட நண்பர்கள்.
பணிவில்லாத மனைவி. நாலவரின் செய்கையும் தலையைத்துளைக்கும்
கொடிய வியாதிகள்.

ஃ மதிப்பும்,வேலையும்,சுற்றமும்,கல்வியும் எங்கு கிடைப்பதில்லையோ
அங்கு ஒருக்காலும் வசிக்கக்கூடாது.

ஃ சிறந்த அறிஞர்களாக இருந்தாலும் ஒரு பாமரச்சிறுவனின் நற்கருத்துக்களை
ஏற்கலாம். அது வயதான அனுபவம் வாய்ந்தவரிடமும்கூட கிடைக்காது.

ஃ முறையாக இருந்தால் பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃ செல்வச்சிதைவு,மனவருத்தம்,மனையில் நிகழும் தகாச்செயல்கள்,
வெகுமானம், அவமானம் ஆகியவற்றை அறிவாளி வெளிப்படுத்தமாட்டான்.

ஃ உணவு செரிக்காதபோது தண்ணீர் அருமருந்து. செரித்தபின் அது உடலுக்கு
வலிமை. உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.

ஃ பிறர் பொருளைக் காணும்போது குருடானாகவும், பிற பெண்டிருடன் பழகும்
போது அலியாகவும், பிறர்மீது குற்றம் சுமத்துகையில் ஊமையாகவும்
இருப்பவன் துர்ய்மையானவன்.

ஃ மிக அதிகமான புண்ணியங்கள்- மிக அதிகமான பாவங்கள் எதற்கும் பலன்
இப்பிறவியிலேயே கிடைத்துவிடும். 3 நாட்கள் அல்லது 45 நாட்கள் அல்லது
3 மாதங்கள் அல்லது 3 வருடங்கள் அதற்கான காலம். எனவே எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

ஃ வண்டிக்கு ஐந்து கை தொலைவும், குதிரைக்குப் பத்துகை தொலைவும்,
யானைக்கு ஆயிரம்கை தொலைவும், தீயவனுக்கு வெகுதொலைவும் என
விலகிச்செல்லவேண்டும்.

ஃ திரும்பப் பயிற்சி புரியாமல் கல்வியும், செரிக்காத நிலையில் உண்ணும்
உணவும், வறியவன் பலருடன் சேர்ந்து பொழுதுபோக்கலும், வயது முதிர்ந்த
வனுக்கு பருவ மங்கையும் விஷத்திற்கொப்பாகும்.


இவை சில சான்றுகள். 79 பக்கங்கள். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்துவிடலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அதற்குரிய சுலோகங்களுடன் அனுபவித்துப் படிக்கலாம்.>

Monday, May 23, 2011

சேமிப்பு முத்துக்கள்...


1. இலக்கியங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் மூன்று வகைகள் உண்டு.
அ) கூந்தல் பனை ஆ)நாட்டுப்பனை இ)லோண்டர் பனை
இலக்கியங்கள் பெரும்பான்மையும் கூந்தல் பனையில் எழுதப்பட்டன.
இவற்றில் ஒரு ஓலையில் அதிகபட்சம் 25 வரிகள் எழுதலாம். 70 ஆண்டுகள்
ஆயுள் உண்டு. நாட்டுப்பனை சாதாரணமானது. கூந்தல் பனையும் நாட்டுப்
பனையும் கலந்தது லோண்டர் பனை. தடிமனானது இது.

2. ஓலைச்சுவடியைக் கட்டியபின் அதனைத் தடுக்கும் பகுதியில் (பிரிந்துவிடாமல்)
உள்ள சிறு ஓலைக்கு கிளிமூக்கு என்று பெயர். இவற்றை சிவப்புத் துணியால்
(பூச்சிகளைப் பயங்கொள்ள வைக்க நெருங்காது) அல்லது மஞ்சள் துணியால்
(கிருமி நாசினியாகப் பயன்பட) மூடி வைப்பார்கள்.

3. முக்கியமான சுவடிகளை கோபுரத்தின் இரண்டாம் நிலையிலும் கலசத்திலும்
வைத்துப் பராமரிப்பது வழக்கம். கோயிலில் அமைந்துள்ள நுர்லகத்திற்கு
திருக்கோட்டிகை என்பது பெயர்.

4. சுவடியை துணிபோட்டுப் பாதுகாப்பதைப்போலவே சுவடிபடித்த சான்றோர்களையும்
பாதுகாக்கவேண்டும் என்றுதான் சால்வை அணியும் வழக்கம் வந்ததாம். அதுவே
இப்போது பலவற்றுக்கும் மாறிவிட்டது.

5. காஞ்சிபுரத்தில் ஏராளமான குடைவரை கோயில்கள் உள்ளன. இருப்பினும் அவை
யாவும் முழுமையாக முடிக்கப்பெறாதது.

6. வழங்கப்பட்ட தானங்களில் பாரதம் படிப்பதற்கும் இராமாயணம் படிப்பதற்கும் பாரதப்
பங்கு இராமாயணப்பங்கு என அறிவுசார்தானம் வழங்கப்பட்டமையை ஒரு
செப்பேடு குறிக்கிறது.

வரலாற்றை மறுமுறையாக வாசிக்கும்போது சுவை கூடுகிறது. அதன்விளைவாகவே இந்த பதிவு. தொடர்ந்து வாய்ப்பமைவில் எழுதுவேன் இன்னும்.

Sunday, May 22, 2011

நிகழ்வுகள்....



ஃ சிலவற்றிற்கு காரணங்கள் விளங்குவதில்லை. என்னுடைய மகனின் பள்ளித்தோழன் கோவையில் பொறியியல் படித்துவந்தான். மூன்றாமாண்டு மாணவன். விளையாட்டு, படிப்பு, மற்றும் இதர நடவடிக்கைகளில் படு வித்தகன். நிறைய சான்றிதழ்கள். நிறைய பரிசுகள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் காண்பித்துவிட்டு வரலாம் என்று தஞ்சைக்குப் புறப்பட்டவன் ரயிலில் பயணம் செய்கையில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு வந்திருக்கிறான். அப்போது அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான். இளம் வயது. தவிரவும் அவன் பெற்றோர்களுக்கு ஒரே மகன். அவர்களின் துயரத்தை எதைக்கொண்டு அடைப்பது?

ஃ வதந்திகள் என்பது கேவலமான ஒரு செய்கை. மொட்டைக் கடிதம் போடுவது என்பது அதைவிட படு கேவலமான செயல். இதுபோன்ற செயல்களை படிக்காதவர்கள் செய்வதேயில்லை. படித்தவர்கள்தான் அதிலும் கற்பித்தலில் உள்ளவர்கள் நிறைய செய்கிறார்கள். இதனால் எதிர்முனையில் ஏற்படும் விளைவுகளையும் துயரங்களையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் (ஓய்வு பெற்றுவிட்டார் பல ஆண்டுகளுக்கு முன்பே) மருமகன் மருமகளைக் கண்டவர். இதில் தேர்ந்தவர். வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.

ஃ திருச்சி மலைக்கோட்டையில் உச்சியின் இடையில் ஒரு குடைவரை கோயில் உள்ளது. இதில் மகேந்திரவர்ம பல்லவனின் சரிதை கிரந்தத்தில் உள்ளது. இது 8 சுவையான கவிதைகளாக உள்ளது. இது கற்பந்தல் எனும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. கற்பந்தல் எனும் சொல்லாட்சி அக்காலத்திலேயே பயின்றுள்ளமை சிறப்பு. இக்கவிதைகளின் பொருண்மை சிறப்புப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.

ஃ சமஸ்கிருத நாடக வரலாற்றைப் பற்றி படிக்கிற வாய்ப்பும் அதைப் பற்றிய சொற்பொழிவைக் கேட்கிற வாய்ப்பும் சமீபத்தில் நேர்ந்தது. அவற்றின் நாடக விதிகளைப் பற்றிக் கேட்கும்போது வியப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழுமையாக அவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உந்தியிருக்கிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் நாடக விதிகள், ஆங்கீகம். வாஜ்ஜியம். ஆகாமியம். சாத்வீகம் எனும் 4 வகை அபிநயம் ( அதாவது மன எழுச்சியால் ஏற்படும் உடல் அசைவு, வாக்கால் ஏற்படும் உடல் அசைவு, மனசால் நினைப்பதை வெளிப்படுத்துவது, மனக்கூற்றால் பொறுமையுடன் வெளிப்படுத்துவது) அதேபோன்று நாட்டிய தர்மி, லோக தர்மி எனும் இருவகை நாடகத் தர்மங்கள் எனப் படிக்கப்படிக்க சுவையாக இருக்கிறது. அதேபோன்று மனதைப் பாதிக்கும் எதனையும் சிறுதுளிகூட மேடையில் காண்பிக்கக்கூடாது எனும் சமஸ்கிருத நாடக விதியை இன்றைய நாடகங்களோடு பொருத்திப் பார்த்து வருத்தம் வந்தது. ரஸம், அலங்காரம், சந்திகள் என விரிந்துபோகிறது. முழுமையாகக் கற்றபின் விரிவாக எழுதகிறேன்.


ஃ ஒரு சின்ன கவிதை


எல்லாத் தருணங்களிலும்
எல்லாவற்றையும் மனது
நினைக்கிறது
எல்லாவற்றையும் மறந்தும்
போகிறது..
வெளிப்படுத்த விரும்புகையில்
மறுபடியும் யோசிக்கவைக்கிறது
வெளிப்படுகையில்
நினைத்ததும்
மறந்ததும்
விரும்பியதும்
என எவற்றின் சாயலும்
கடுகளவுமில்லாது
நிகழ்ந்துவிடுகிறது...

Wednesday, May 18, 2011

செம்மொழி விருது

செம்மொழிக்கான இளம் தமிழ் அறிஞர் விருதுகள் 06.05.2011 அன்று குடியரசு தலைவர் அவர்களால் புதுதில்லியில் வழங்கப்பட்டன. தொடர்பணிகளால் அது பற்றிய குறிப்புக்களை இன்றுதான் எழுத நேர்ந்தது. தமிழ்மொழியில் குறிப்பிடத்தக்க பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வழங்கப்படும் விருது. இவ்விருது பெற்றவர்கள்ல் பலர் எனது நண்பர்கள் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பதிவு. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. நண்பர் ய.மணிகண்டன். எனது நீண்ட நாள் நண்பர். தஞ்சாவூர் சரசுவதி மஉறாலில் பணிபுரிந்தவர்.அவருடன் பல கவியரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவருடைய தலைமையில் கவிதை வாசித்து இருக்கிறேன். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மிகவும் தகுதியானவர். சுறுசுறுப்பானவர். சரசுவதி மஉறாலில் பணிபுரியும்போது பல குறிப்பிடத்க்கப் பணிகளை சுவடியியல் பதிப்பிலும், இலக்கண இலக்கியங்களிலும் மேற்கொண்டவர். குறிப்பாக யாப்பியலில் தேர்ந்தவர் மணிகண்டன். கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர். மிகவும் அன்பானவர் மனிதர்களை நேசிப்பதில். வாழ்த்துகிறோம் அவரை இவ்விருது பெற்றமைக்காக.

2. நண்பர் அறவேந்தன் என்கிற இரா.தாமோதரன் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது அங்கு நான் பணியாற்றிய துறையில் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது அறிமுகம். ஆய்வாளராக அறிமுகம் தொடங்கிய கால்த்திலிருந்து இன்று பேராசிரியராகப் பணியாற்றும் நிமிடம் வரையிலும் காலத்தின் அருமை கருதியவர். சொற்களை அளந்து பேசுபவர். நல்ல நண்பர். நல்ல ஆய்வாளர். நல்ல ஆசிரியர். சிங்கள இலக்கணத்தையும் வீரசோழியத்தையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக சிஙக்ளம் கற்று இலங்கைப் பயணம் மேற்கொண்டு ஆய்வை நிறைவு செய்தவர். தொடர்ந்து பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு அவற்றை உடனுக்குடன் புத்தகவடிவில் வெளியிட்டு வருபவர். பல பரிசுகளைப் பெற்றவர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பேராசியர். இவ்விருதுக்காக அவரை வாழ்த்துகிறோம்.

3. நண்பர் அரங்க.பாரி என்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபாற்றுபவர். பல ஆய்வுப் புத்தகங்களை வழங்கியவர். பல கருத்தரங்குகளைத் திறம்பட நடத்தி அதன் தொடர்ச்சியாக ஆய்வுக்கோவைகளைத் தந்தவர். இனிமையாக பழகுபவர். எப்போதும் எளிமையாக இயங்குபவர். தொடர்ந்து இயங்கிவருபவர். சக தோழரை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம்.

4. நண்பர் மு.இளங்கோவன் அண்ணாமலை தொலைதுர்ரக் கல்வி இயக்கக வழி தொடர்பு வகுப்பில் அறிமுகம். அன்பிற்குரிய இளவல். இனிய புன்னகையுடன் உறவுகளைப் பேணுபவர். பல்வகைப்பட்ட பொருண்மைத் தளங்களில் பல புத்தகங்களைத் தந்தவர். தொடர்ந்து அவரது இணையத் தளத்தின் வழியாக செய்துவரும் தமிழ்த்தொடர்பான பணிகள் ஒவ்வொன்றும் சிறப்புக்குரியவை. வரலாறு, மானிடவியல், இலக்கணம், இலக்கியம், இணையம் என முனைப்புடன் இயங்குபவர். இளவலை இவ்விருதுக்காக வாழ்த்துகிறோம். அவரது இணையத்தளத்தின் வழியாகப் பெற்ற புகைப்படத்திற்கு நன்றி.


சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. என்னுடைய நண்பர் அ.சிவபெருமானின் தந்தையார் மதிப்பிற்குரிய பேராசிரியர் அடிகளாசிரியர் ஐயா அவர்கள் தொல்காப்பிய விருது பெற்றிருக்கிறார். அவரை வாழ்த்தும் தகுதியும் வயது இல்லையென்தால் அவரை வணங்குகிறேன் பணிந்து. அடிகளாசிரியர் தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் முதல்வராக இருந்தவர். அவருடைய தமிழ்ப் பணிகள் அளவிடற்கரியன. முற்றிலும் இவ்விருதிற்குத் தகுதியானவர். அவருடைய தகுதிக்கு இன்னொரு சான்று நண்பர் அ.சிவபெருமான். இவருடைய தமிழ்ப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

இவ்விருது பெற்ற மற்ற முகமறியாதவர்களையும் வாழ்த்துகிறோம்.

இளம் தமிழ் அறிஞர் விருதுபெற்றோரிடம் வேண்டுகோள்


மேன்மேலும் உங்களின் தமிழ்ப்பணிகள் செழிப்புறட்டும். தமிழின் மேன்மை உலகெங்கும் இன்னும் தனித்துவமிக்க தரமான இடத்தை அடைய உங்களின் பணிகளும் தனித்துவம் மிக்கதாக அமையவேண்டும். தொடருங்கள் என வேண்டுகிறோம்.



புதிய அரசு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
இதன் நன்மை தீமைகளை ஆராய்வதை விட்டு மாற்றம் என்பது தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு அது நடந்திருப்பதை வரவேற்கலாம்.
அதிமுக எதிர்பாரா மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதால் சில நன்மைகள் நடந்திருக்கின்றன.

1. பணபலத்தால் மட்டும் எதையும் சாதிக்கலாம் என்பது
சரிந்திருக்கிறது.

2. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆடும் ஆட்டம்
நிலையல்ல அது நிலைகுலையச் செய்துவிடும் இருக்கும்
இருப்பையும் இழக்கவைத்து.

3. சாதிவெறிபிடித்து சாதிகளால் கட்சி அமைத்துக்கொண்டு
சாதிக்கலாம் எனபதும் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்ந்து நிலைநிறுத்தப்படவேண்டும்.

வேண்டுகோள்கள்

1. புதிய அரசு போன அரசின் குறைகளையும் குற்றங்களையும்
பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்வதே குறிக்கோள்
என்பதைக் கவனத்தில் கொண்டால் மக்கள் நன்மை பெறுவார்
கள்.

2. புதிய அரசின் முதல்வர் குறிப்பிட்டதுபோல் சட்டம் ஒழுங்கு,
மின்வெட்டு, கல்விச்சூழல் இவற்றோடு சாலைகளைப்
பராமரித்தல், வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்களை
கட்டுப்படுத்தல், கைபேசிகளை ஒழுங்குபடுத்துதல், அரசியல்
வாதிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்த்தல்
இவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

3. குறிப்பாக பள்ளிக் கல்வி நிலை ஒழுங்குபடுத்தப்படல் மற்றும்
பணியமைப்புக்களில் தகுதியானவர்கள் அடையாளப்படுத்தப்
பட்டு அவர்களுக்குரிய பணிவாய்ப்பு பணம், சிபாரிசு, சாதிய
ஒதுக்கீடு இவற்றைத் தாண்டி வழங்கப்படல் அமைந்தால்
நல்லதொரு சமுக முன்னேற்றம் அமையும்.

4. நல்ல மருத்துவ வசதி ஏழைமக்களுக்குப் பாரபட்சமில்லாமல்
கிடைத்தல் அவசியம்.

5. மக்கள் நிறைய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மிகப்
பெரும் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தச்
சூழலிலும் ஏமாந்துவிடக்கூடாது.