மாறாதய்யா மாறாது
ராகவன் அதிர்ந்துபோனான். சின்ன கரப்புகள். மூடப்பட்ட தட்டின் வழியே உள்ள இடைவெளியில் உள்ளே போயிருக்கின்றன.
வயிற்று மைதானத்தில் பசிக்குதிரை வேகமாக ஓட ஆரம்பித்து
இருந்தது. அதன் குளம்படி சத்தங்கள் கேட்டன.
திரும்பி அம்மாவைப் பார்த்தான். நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். இது தெரிந்தால் கொட்டிவிட்டு சட்டென்று வேறு உலை வைத்துவிடுவாள். தவறில்லைதான் ஆனால் நாளைக்கு சாப்பாடு ஒருவேளை குறைந்துவிடும்.
மெல்லக் கரண்டியால் கரப்புகளைச் சோற்றோடு அள்ளி
வெளியில் போட்டான். திரும்பவும் கொஞசம் சாதத்தை மேலாக எடுத்து வழித்ததுபோல போட்டான்.
விறுவிறுவென்று சாதத்தைத் தட்டில் போட்டு ரசத்தை ஊற்றி அவசரமாய் வாயில் ஒரு உருண்டை வைத்து கொத்தர (கொத்தவரங்காய்) வத்தலை எடுத்துக் கடித்ததும் தேவாமிர்தமாக இருந்தது.
எல்லாச் சோறும் காலியானபிற்பாடுதான் பசியடங்கயிது. குளம்படி சத்தங்கள் ஓய்ந்துபோயிருந்தன.
அப்படியே எழுந்து வந்து கைகழுவிவிட்டு அம்மாவின் அருகில் படுத்தான். அக்காக்கள் குறட்டை வேகமாக ஒலியெழுப்பியடி
இருந்தது.
எப்படியாயினும் இவர்களுக்கான வாழ்கையைத் தேடிவிட்டுத்தான் ஓய்வேன் அப்பா.. என்று மானசிகமாக அப்பாவிடம் பேசிக்
கொண்டான்.
கௌளி அடித்தது. அப்பாதான் சரியென்கிறார்.
அம்மாவின் அருகில் படுத்தான்.
அதிகாலை 4 மணிக்கு அடிவயிற்றில் எழுந்தது ஒரு வலி. குறைந்துவிடும் என்று எண்ணி எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்தான். படுக்கமுடியவில்லை. வலி அதிகமானது. விடவேயில்லை. தாங்க முடியாமல் போனபோது அம்மா என்று அலறினான்.
அலறியடித்து எழுந்தது அம்மாவோடு வீடும்.
என்னப்பா என்னாச்சு?
வயித்து வலி தாங்க முடியலம்மா. நெஞ்ச வேற அடைக்குது. உடம்பெல்லாம் நடுக்குதும்மா.
அய்யோ மகமாயி என்புள்ளக்கி என்னாச்சு தெரியலியே
அம்மா ஒப்பாரி வைத்ததில் அக்கம் பக்கமிருந்து சிலர் ஓடிவந்தார்கள்.
நாலைந்துவீடுகள் தள்ளியிருந்த ராமு ஓடிவந்தான். அவன் ஆட்டோ ஓட்டுபவன். வரும்போது ஆட்டோவோடு வந்தான்.
ஏற்றிக்கொண்டு ஓடினார்கள் அரசு மருத்துவமனைக்கு.
ராகவன் துடித்துக்கொண்டிருந்தான்.
மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நாலைந்து டாக்டர்கள் அரைதுர்க்கத்தில் இருந்தார்கள். நைட் டூட்டி பார்த்திருப்பார்கள்.
ஆனாலும் ராகவனை அவசரமாகப் பரிசோதித்தார்கள்.
உடனே சேர்க்கவேண்டும் அட்மிஷ்ன் போட்டார்கள்.
சிகிச்சையும் ஆரம்பமானது.
ராகவன் அதற்குள் நாலைந்துமுறை வாந்தியெடுத்தான். இருமுறை வயிற்றுப்போக்கும் அப்படியே போனான்.
ஏதோ சாப்பிட்டது விஷமாயிடிச்சி. கவலைப்பட வேண்டாம். சரியான நேரத்துக்குக் கொண்டு வந்திட்டீங்க.. என்றார்.
ட்ரிப் போட்டார்கள்.
ட்ரிப்பிலேயே நாலைந்து ஊசிகளை உடைத்துப் போட்டார்கள்.
ராகவன் மயக்கமாகியிருந்தான்.
பக்கத்தில் உட்கார்ந்து ராகவன் அம்மா அழுதுகொண்டிருநதாள்.
அதற்குள் ராகவனின் அக்காக்கள் அக்கம்பக்கம் ஏதோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிகொண்டு மருத்துமனைக்கு வந்திருந்தார்கள்.
நீங்க பாத்துக்கங்க.. நான் வீட்டுக்குப் போயி தம்பிக்கு சட்டை கைலி எடுத்துட்டு பாத்திரம் டம்ளர் எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்.
என்னம்மா சொன்னாங்க?
சாப்பிட்ட சாப்பாடு விஷமாயிடிச்சாம்..
ரசம்தானே சாப்பிட்டான். நடுராத்திரி சாப்பிட்டிருப்பாம்மா. ரசம் கெட்டுபோயிருக்குமோ.
இருக்கும். அது நேத்து ரசம். அப்படியும் சுடவச்சிதானே வச்சேன்.
மகமாயி என் புள்ளய காப்பாத்து.. இவன வுட்டா எனக்கு வேற கதி கிடையாதும்மா. என்றபடி மறுபடியும் அழுதாள் ராகவனின் அம்மா.
அம்மா.. அழாதம்மா. தம்பிக்கு ஒண்ணும் ஆகாது.
என்ன இது ஒப்பாரி வக்கறிங்க? அவருக்கு ஒண்ணும் இல்லே. புட் பாய்சன். சரியாயிடும். வயிறு வேற புண்ணாயிருக்கு. கண்டதயும் சாப்புடுவாரா? நர்சு கேட்டாள்.
நர்சை ராகவன் அம்மாவும் அக்காவும் வேதனையோடு
பார்த்தார்கள். கண்டதையும் சாப்புடுவானா? அதுக்கு ஏதும்மா எங்களுக்கு வழி? என்று நர்சிடம் சொல்லவேண்டும் என்று துடித்தது.
ராகவன் அம்மா கிளம்பிப் போனாள் வீட்டிற்கு.
அவள் போனதும் ராகவனின் அக்காக்கள் ராகவன்
கிடப்பதைப் பார்த்துக் கண் கலங்கினார்கள்.
அவரவர் சாமியை வேண்டினார்கள்.
கருப்பையா.. எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து எங்க த்ம்பிதான்.. அவன்தான் எங்களுக்கு எல்லாமும். சோதிக்காதய்யா.. காப்பாத்து..
குலதெய்வம் கருப்பையாவைக் கூப்பிட்டதும் சொல்லி
வைத்ததுபோல ராகவன் லேசாகக் கண்விழித்தான்.
தம்பி என்றார்கள். ராகவன் உடனே அம்மா எங்கே?
என்றான்.
(தொடரும்)
பி.குறிப்பு
அன்புள்ள நட்பு உள்ளங்களுக்கு
கதையை இன்றுடன் முடிக்க முடியவில்லை. கதை நீள்கிறது.
எனவே பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.