Monday, November 30, 2015

யார் 2

யார்  2

         
                  ஒரு மன்னனின் சகோதரர்கள் அவர்கள்.  நான்கு பேர்கள்.  மன்னனின் மாற்றாந்தாய்க்குப்  பிறந்தவர்கள்.எனவே மன்னனால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள். விரட்டப்பட்ட அவர்கள் நால்வரும் ஆளுக்கொரு கலையைக் கற்றார்கள்.

                       ஒருவன் கற்றது மந்திர வித்தை 

                     ஒருவன் கற்றது தந்திர வித்தை 

                    ஒருவன் கற்றது வாட்போர் 

                   நான்காமவன் கற்றது  நன்றாக  செய்யுள் பாடும் திறன் மட்டும் இல்லாமல் அதில் அறம் வைத்து பாடும் ஆற்றல்.

               இவர்கள் நால்வரும் முயன்றும் போரிட்டும் அவர்களின் சகோதரனை வெல்ல முடியவில்லை. 
                 இதில் நான்காமவன்  ஒரு நூலை எழுதினான். பின்னர் அவன் உலகியலை உணர்ந்தான். வாழ்வின் நிலையாமையை யும் உணர்ந்தான்.
                 துறவு  மேற்கொண்டான். வீடு வீடாகப் பிச்சை எடுத்து காலம்  கழித்தான். அவ்வாறு பிச்சை எடுக்கும்போது ஒருநாள் ஒரு விலைமாது வீட்டின் முன் பிச்சை கேட்டுப பாடும்போது தான் எழுதிய நூலின் சில பாடல்களைப் பாட அதைக் கேட்டு அந்த விலைமாது அந்தப் பாட்டில் மயங்கி அதனை சுவைத்து அவரை மீண்டும் மீண்டும் பாடச்  சொல்லி எழுதிகொண்டாள். அடிக்கடி  அவரை வீட்டிற்கு வரசொல்லி வேண்டி நின்றாள் .அவரு அடிக்கை வந்து பாடிச் சென்றார்.

                  அந்தக விலைமாது ஒவ்வொரு நாள் இரவிலும் தன மாளிகையின் மேன் மாடத்தில் இப்பாடல்களை யாழ் மீட்டிப் பாடிவர அதனை ஒரு நாள் ஊர்க்காவலர் கேட்டு மயங்கி  சுவைத்தனர். அதில் வரும் ஒரு பாடலில் மன்னன் இறந்து போனாதாகப்  பாடுவதைக் கேட்டு அவர்கள்அதிர்ந்துபோய்  தங்கள் தலைவனிடம் அறிவிக்க அத்தலைவனும்வந்து அப்பாடலைக் கேட்டு அதிர்ந்துபோய்   கேட்டு அவன் அரசனிடம் அறிவிக்க. அரசன் அந்த விலைமாதுவை அழைத்துவந்து விளக்கம் கேட்க அவள் துறவி பற்றி  சொன்னாள் .

                  அரசன் உடனே அந்த துறவியை அழைத்துவர . ஆணையிட்டான். ஆனால் அந்த துறவி உடனே வரவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து  வந்தார். அரசன் அவரை வினவ துறவி தான் அரசனுடைய சகோதரன் என்பதை உணர்த்தினார். 
                    
                      அரசன் அந்த பாடலைப் பாடகச்  சொல்ல துறவி  மறுத்தார்.

                    அரசன் வற்புறுத்த துறவி சொன்னார் நான் பாடி முடித்ததும் நீ இறந்துவிடுவாய  என்று..

                  அரசன் கவலைப்படவில்லை. பாடுங்கள். உங்கள் பாடல் தமிழ்ப்  பாடல் சுவைக்காக  நான் உயிரைவிடச்  சம்மதம்  என்றான்.

                 அதன்படி பச்சை ஓலைகளால் 100 பந்தல்களை அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் அரசன் உட்கார்ந்து கேட்கவேண்டும் . ஒருபாடல் பாடி  முடிந்ததும் ஒரு பந்தல் எரிந்துவிடும். இப்படியாக 100 வது பாடல் பாடும்போது அரசன் பிணச் சடங்குகள் யாவும் செய்து பிணம் போல் படுத்துக்கொண்டு கேட்கவேண்டும் என்றார்.
அரசனும் அவ்வாறு உடன்பட்டான். 

                 துறவியும் 100 வது பாடலைப் பாடி முடித்ததும்  ஈம விறகுகள் எரிந்து அதன் மேல் படுத்துக் கேட்டிருந்த  அரசன் மேல் தீ பற்றி அவன் உயிர்  பிரிந்தது.(எரிந்தது).

                    தமிழுக்காக ...தமிழ் சுவைக்காக  சகோதரன் பாட அரசன் உயிரை விட்டான். 

                    யாரும் ஆற்றமுடியாத செயலை செய்து புகழ் பெற்றவன் அந்த அரசன்.,

                 அவன்தான் நந்திவர்மன்.

               அவனுக்காக ப் படப்பட்டதுதான் நந்திகலம்பகம்.

             

Wednesday, November 18, 2015

சின்னதாய்... ரொம்ப சின்னதாய்... ஒளிவிளக்கு...




                   மாண்பமை பேராசிரியர் அவர்.

                   நேர்மை, ஒழுக்கம், சத்தியம் இவற்றோடு எப்போதும் எழுதிக் கொண்டேயிருப்பவர்.

                     70 நூல்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு வைரம்.  சிந்தனையும் புதுமையும் செழிப்பும் தரமும்  ஒன்றையொன்று விஞ்சும் எழுத்துக்கள்.

                      அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

                       அது காலைப்பொழுது.. சிற்றுண்டி நேரம்.  சென்றதும் அமரச் சொல்லிவிட்டுக் கேட்டார் சாப்பிட்டீர்களா?

                         சாப்பிட்டேன் ஐயா என்றேன்.

                          இருங்கள் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் நான் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்று உள்ளே போனார். அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டார்.

                          சாப்பிட்டீர்களா ஐயா என்றேன்.

                          ஆமாம். இட்லி சூடாக இருந்தது. நான்கு இட்லிகள் சாப்பிட்டேன் என்றார்.

                          போதுமா ஐயா என்றேன்.

                          போதும். நான் அதிகம் சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுபவன் என்றார்.

                           24 மணிநேரமும் தின்பதற்கு இருந்தும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. பணி ஓய்வும்.. நிறைய பணமும்.. நல்ல பிள்ளைகளும் இருந்தும் அவர் தன் தமிழ்த் தொண்டை நிறுத்தவில்லை.

                            என் தந்தை அடிக்கடி சொல்வார்.

                            பசிக்குத்தான் சாப்பிடவேண்டும்.  பசித்தவன்தான் விழித்திருப்பான். குறைவான உணவு உண்பவன்தான் நிறைய சாதிப்பான். உணவின் மீது அதிகக் கவனம் வைப்பவன் ஒருபோதும் சாதிப்பதில்லை.

                            எனக்குத் தெரிந்து ஒரு பெண் தன் தாய் அவளுக்கு விதவிதமாக சாப்பாடு கட்டித்தருவதைப் பெருமையாகச் சொல்வாள்.

                             எப்போதும் வகைவகையாக உணவு உண்பதைத்தான் பேசுவாள். உணவு உண்ணும்போது அதிக நேரம் எடுத்துக்கொள்வாள்.

                              ஒருசிலர் சாப்பிடுகிற நேரத்தை வீணடிக்கும் வகையில் அடுத்தவர் சாப்பாட்டின் குறைகளைப் பட்டியலிட்டு ஆலோசனைகள் நல்குவார்கள்.

                             பசி என்பது வயிற்றை நிரப்புவது. இன்னொரு பசி என்பது முழுமையாக அறிவை நிரப்புவது.

                                 பசித்திரு... தனித்திரு.. விழித்திரு.. என விவேகானந்தர்
சொன்னார்..

                                 உணவு மட்டுமே வாழ்க்கையல்ல.. அறிவின் உணர்வு அதைவிடமுக்கியமானது.

                                  குப்பைக்கூடையாய் வயிற்றை உணவு கொண்டு நிரப்புவதைவிட.. அறிவின் கூடையில் முத்துக்களைச் சேகரிப்பது நன்று.

                                 பேராசிரியரிடம் விடைபெற்றுத் திரும்பும்போது அவர் நூலில் எழுதிய வாசகம் எனக்கு நினைவுக்கு வந்தது.

                                   உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை இந்த உலகில் ஏற்ற வேண்டும்.

                            

Tuesday, November 17, 2015

மழையின் கோபம்...





                       மழையின் பெருஞ்சினத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

                      கட்டுக்கடங்காத கோபமாய் அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
       
                       அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம்.

                       அதன் நெற்றிக்கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறோம்.

                        தேள் கொட்டினால் கடுக்கிறது.

                       மழையும் கொட்டுகிறது..

                       யாரும் அடித்தால் வலிக்கிறது.

                       மழை(யும்) அடிக்கிறது.

                      எல்லோரையும் பாரபட்சமில்லாமல் நனைக்கிறது.

                      எங்கும் ஈரமாயிருக்கிறது. மனது தவிர.

                      உள்ளே மனது ஈரமாவதற்குத்தான் வெளியே பெய்யெனப் பெய்கிறது மழை. பெருகி வெள்ளமாகிறது.

                      அடித்துக்கொண்டுபோகிறது உயிர்களை.

                      மழையின் வாழிடத்தை அதன் கூடுகளை... குளங்களை... ஏரிகளை...நீர்த்தேக்கங்களை.. கிணறுகளை... குட்டைகளை.. என எல்லாவற்றையும் அடைத்து... தூர்த்து... மனைகள் போட்டுவிட்டோம். நாம் வாழ.

                      இயற்கையின் இடத்தைப் பிடுங்கி நாம் செயற்கையாய் கட்டிக்கொண்டோம்.

                      அல்லிகளும்.. தாமரைகளும்.. பறவைகளும் களித்து மகிழ்ந்த எத்தனையோ நீர்நிலைகளை அழித்துவிட்டோம்.. மனதில் ஈரமில்லாமல்.

                         வனவிலங்குகளின் காடுகளை அழிக்க அவை நகரங்களை நோக்கி வந்தன.
                         ஆபத்து என்று அலறினோம்.

                         அவற்றின் வாழிடத்தில் நாம் இருந்துகொண்டு அவற்றை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

                          ஆகவேதான் மழை தன் இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடியது. கேட்கவில்லை. அழுது பார்த்தது.  கண்டுகொள்ளவில்லை.
                   
                           நனைத்து பார்த்தது. நனையவில்லை மனம்.

                          இனி போராட்டத்தின் உச்சமாய் கொட்டியும்..அடித்தும்.. வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளில் புகும்போது கதறுகிறோம்..

                           இது மழை தரும் பாடம் நமக்கு.

                           இது சிறுகோபம்தான்.

                           விழித்துக்கொள்ளவேண்டும்.

                           அவரவர் ஊரில் இருந்த குளங்களையும் ஏரிகளையும் நீர்த் தேக்கங்களையும் மழையின் வீடுகளாக அவற்றைத் திருப்பி அளிப்போம். இயற்கையோடு ஒத்துப்போவதுதான் இயல்பானது.

                          இயற்கைதான் மனிதனை வாழவைக்கிறது.

                         இயற்கையாய் வாழ்வதுதான் வாழ்க்கை.

                         அடுத்த மழைக்காலத்தில் மழையின் கோபத்திற்கு ஆளாகாமல் அவற்றின் வீடுகளை அவற்றிற்குத் திருப்பித் தருவோம்.

                          தமிழகமெங்கும் பச்சை வளம்பெறட்டும்.

                          பசுமை மலரட்டும். நம் வாழ்க்கையும் வளம் பெறட்டும்.

                         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

                         இளங்கோவடிகள் போற்றிய மாமழையை நாமும் போற்றி வாழும் வாழ்வை உருவாக்குவோம்..

Monday, November 16, 2015

சில நிகழ்வுகளும்... மன வருத்தங்களும்..

பாரிசில் வன்முறையால் சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுதானா? அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் ஆண்மையற்றவர்களாக திறனற்றவர்களாக கோழைகளாகவே இருக்கிறார்கள். நெஞ்சுரம் என்பது இதுவல்ல. எதுவுமே தெரியாமல் இறந்துபோன உயிர்களுக்காக வருந்துகிறேன்.
< ஆ. மழை கொட்டித் தீர்க்கிறது. எங்கும் இயல்புநிலை பிறழ்ந்து கிடக்கிறது. அரசும் அலுவலர்களும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இன்னல்கள் தீர்க்க. எல்லா சேனல்களும் காட்சிப்படுத்துகின்றன. தவிக்கும் மக்களுக்கு வெள்ளத்தில் உயிருக்குப் போராடும் மக்களுக்கு அவரவர் முடிந்தளவு உதவி செய்வோம். விமர்சனத்தையும் குறைபேசுவதையும் விலக்கி வையுங்கள். உதவும் மனத்தைத் திறந்து வையுங்கள்.

Monday, November 9, 2015

                                                        காலக்கணக்குகள்...
                                                                         ஹரணி

         காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின் அடையாளமல்ல. ஆனாலும் பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் இப்போது. எனவே தவறான ஒரு பாதைக்குச் சமுகம் திருப்பப்பட்டு அதைநோக்கிப் பயணப்படுகிறது என்பதை நினைக்கவே வருத்தமாகத்தான் இருக்கிறது.

            காலையிலேயே போய் தேங்காய் பறிச்சிட்டு வாங்கன்னு சொல்றேன்.. அசமஞ்சம் மாதிரி உக்காந்திருக்கீங்க.. ஞாயிற்றுக்கிழமைன்னா எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு எழுதியிருக்கா.. என்றாள்.

             இரு ஆள வரச்சொல்லியிருக்கேன்..பத்து மணிக்கு வரேன்னு சொல்லியிருக்கான்.. வந்த்தும் போறேன்.. என்றான் வேலு.

             அப்ப இட்லிக்கு பொடி வச்சு சாப்படுறீங்களா? தேங்காய் சட்னி இல்லாம ஐயாவுக்கு டிபன் இறங்காதே.. என்றாள் கேலியாக.

             அவளைப் பார்த்தான். இந்த வயதிலேயே இத்தனை கோபமும்.. பொறுமையின்மையும்.. பிடிவாதமும்.. மன இறுக்கமும் இருந்தால் வெகு சீக்கிரம் நோய்களுக்கு ஆட்பட்டுவிடுவாள்.. வாழ்நாள் அதிகமென்றால் நெடுங்காலம் படுக்கையில் கிடந்து மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை வந்துவிடும்.. அதை நினைத்து பயந்தான் வேலு.

             சங்கரி.. எதுக்கும் பதட்டப்படாதே.. படபடன்னு வார்த்தைகளைக் கொட்டாதே.. நடக்கறது நடக்கும். எதையும் நிதானமா பேசு.. செய்.. உடம்ப கெடுத்துக்காதே..

             எனக்கு எந்த கேடு வந்தாலும் அது உங்களாலதான்.. எனக்குன்னு தனியா எதுவும் வராது.. ஒவ்வொரு நாளும் உங்க்கிட்டே கத்திகத்தியே என் தொண்ட்டைத்ண்ணி வத்திப்போவுது..

               சரி விடு..

           வேலு குமரன் நகரில் குடியிருக்கிறான். ஏற்கெனவே பாரதி நகரில் ஒருவீடு இருக்கிறது. அதன் கொல்லைப்புறத்தில் இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன. நன்றாக்க் காய்க்கின்றன. மாத்த்திற்கு ஒருமுறை போய் ஆளைவிட்டு மரத்தில் ஏறச்சொல்லி தேங்காய் பறித்துக்கொண்டு வருவான். இது வழக்கமாக நடைபெறுவது. அதைத்தான் தற்போது நினைவுப்படுத்திப் படுத்துகிறாள். சங்கரி சேமிக்கிறேன் என்கிற பெயரில் கருமித்தனம் மிக்கவள். இத்தனைக்கும் மருத்துவமனையில் வேறு வேலை பார்க்கிறாள் நர்சாக. ஆனால் அதற்குரிய பண்புகள், இரக்க்க்குணம் எதுவும் கிடையாது. நோயாளிகளிடம் கடுகடுவென்று பேசுவாள். ஊசி போடும்போது சரக்கென்று அழுத்தமாக்க் குத்துவாள். கேட்டால் வாய மூடிக்கிட்டு கிட.. நீ ஒரு பேஷ்ண்ட்தானா.. எத்தனை வந்து கெடக்கீங்க? என்பாள். சக நர்சுகள் கூட ஏம்பா இப்படி பேசறே அவங்களே நோயாளிங்க.. நம்ப கோபத்தை அவங்க்கிட்ட காமிக்காதே... அந்தப் பாவம் வேறயா நமக்கு என்பார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள்.

            பத்துமணிக்கு ஆள் வர வேலு தேங்காய் பறிப்பவனை தன்னுடைய டூவீலரில் ஏற்றிக்கொண்டு பாரதி நகர் போய் இறஙகினான்.

      இவன் கொல்லைக்குப் பக்கத்து பிளாட்டில் ஒரு குடிசை வீடு இருக்கிறது. அதில் யாரோ வாடகைக்கு இருக்கிறார்கள் அதில் குடியிருக்கும் பெண் வேலுவைப் பார்த்த்தும் அருகில் வந்தாள்.

          வேலு அண்ணே... உங்ககிட்ட வருஷக்கணக்கா சொல்றோம் கேட்க மாட்டேங்குறீங்க... தேங்காய் பறிக்கும்போதெல்லாம் காயும் மட்டையும் கூரைமேல விழுந்து பொத்து கிடக்கு.. மழை பெஞ்சா.. டிவி, தையல்மிஷின் எல்லாம் நனைஞ்சு வீணாப்போவுது.. உங்க மரத்து மட்டை உரசியே கீத்து எல்லாம் வீணாப் போயிடிச்சு.. சங்கரி அக்காக் கிட்டேயும் பலதடவை சொல்லிட்டேன் கேக்க மாட்டேங்குறீங்க.. கீத்தயாவது மாத்திக்கொடுங்கண்ணே.. இந்தப் பக்கம் வர்ற மட்டைகளை கழிச்சாவது விடுங்க..

            வேலு அவளை முறைத்துப் பார்த்துப் பேசினான்.. அதெல்லாம் முடியாது.. மரத்தை எதுவும் செய்யமுடியாது.. கீத்து மாத்தறதா எவ்வளவு செலவு ஆவும் தெரியுமா?

            எங்கப் பக்கம் வருதே மரம்? என்றாள்.

            உங்க வீட்டு ஓனர்கிட்டே சொல்லுங்க.. அப்பவே சொன்னோம்.. வீட்டைத் தள்ளிக் கட்டுங்கன்னு..கேக்கலே..

            இது என்னண்ணே நியாயம் பேசறீங்க? மனசாட்சி இல்லாம.. அவங்க அவங்க பிளாட்டுலே அவங்க இஷ்டப்படித்தான் வீடு கட்டுவாங்க.. உங்க மரத்தை அடுத்த பிளாட்டுலே இடைஞ்சல் பண்ணுதுன்னு சொன்ன கேக்கமாட்டேங்குறீங்க..

            உங்க கீத்து கொட்டகைக்காக மரத்த வெட்டமுடியுமா? நீ ஏறி பறிய்யா தேங்காயை... கயிறு கட்டி இறக்கு கொலையா இருந்தா.. என்றான்.

            அப்படியும் நாலைந்து தேங்காய்கள் கீற்றின் மேல் விழுந்தன. அந்தப் பெண் ஓடிவந்து சத்தம்போட்டாள்.

             மனுஷ ஜென்மமா நீங்க.. புள்ள குட்டியள வச்சிக்கிட்டிருக்கோம்.. இப்படி அநியாயம் பண்ணறீங்களே.. மாடிவீட்டுல இருக்கோம் எதுவும் ஆவாதுன்னு நினைக்கறிங்களா.. ஆண்டவன் பாத்துக்கிட்டிருக்கான். உங்க தலையில விழும்..

             மரியாதையா போயிடு.. என்று பதிலுக்கு கத்தினான் வேலு.

             அந்தப் பெண் போய்விட்டாள்.

             எத்தனை காய் இருக்கு? என்றாள் தேங்காய் பறித்தவனிடம்.

             நாப்பது காய் இருக்கும்மா...

             சரி.. அவருக்குக் பறிகூலிய கொடுத்து அனுப்புங்க.. என்றாள்.

             அவன் போனதும் உடனே பத்து தேங்காய்களை எடுத்து வைத்துக்கொண்டாள். இது போதும் வீட்டுக்கு. மற்றவைகளை மட்டையோடு தேங்காய் 12 ரூபாய் என்று சொல்லி கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துக்கொண்டுபோய் அக்கம்பக்கம் வீடுகளில் கொடுத்துவிட்டு கையோடு பணத்தை வாங்கிக்கொண்டு வந்தாள். 360 ரூபாய் லாபம் தேங்காயால் என்றாள் சங்கரி.

              அந்த பக்கத்து பிளாட் கண்டபடி பேசறா.. என்றான் வேலு.

              மரத்தை எல்லாம் வெட்டமுடியாது. அது செண்டிமெண்டா வச்சிருக்கோம். அப்பவேதான் சொன்னோம்ல தள்ளி கட்டிக்கங்க வீட்டைன்னு கேக்கலே...அதுக்கு நாம என்ன பண்ணமுடியும்? இது ஒரு பிரச்சினையா...? தேங்கா பறிக்கறப்ப பேசுவாங்க.. அப்ப வாயை மூடிக்கிட்டு வந்துடுங்க.. மறந்துடுவாங்க..

               அன்று மாலை கூட்டமாய் வந்தார்கள் தெருப்பசங்க. எல்லாரும் சங்கரியின் மகன் மகேசின் தோழர்கள்.

                மகேசைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

                அய்யய்யோ என்னடா ஆச்சு? என்று பதறியபடி வாசலுக்கு ஓடினாள். வேலுவும்.

                ஒண்ணுமில்லே.. ஆண்டி.. சைக்கிள் ஓட்டிக்கிட்டு திரும்பும்போது எதிரே ஒரு பைக்காரன் வந்துட்டான்.. இவனால பாலன்ஸ் பண்ணமுடியா வாய்க்கால்ல விழுந்துட்டான்.. முழங்கால் அடி.. வாயிலே அடி..

                  உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. முழங்காலில் பழைய இரும்பு ஒருரூபாய் நாணயம் அளவுக்கு சிராய்ப்பு இருந்தது சிவந்து.

                 நடக்க முடியாமல் கால்கள் மடக்கி வலிக்குதும்மா.. தாங்க முடியலே என்றான்.

                டாக்டர் கிளினிக்கு ஆட்டோபிடித்து கொண்டுபோனார்கள். உதடு கிழிந்திருந்ததை தையல் போட்டு ஊசி போட்டுவிட்டார். முழங்கால் சிராய்ப்புக்கு மருந்து போட்டார். மாத்திரைகள் எழுதித் தந்தார். வெந்நீர் ஒத்தடம் கொடுங்க..ரத்தக் கட்டு இருக்கு நாலைந்து நாளைக்கு படுக்கையிலதான் இருக்கணும்.. வேற ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லே.. மறுபடியும் ஆட்டோ பிடித்து வீட்டிற்குத் திருமபிவந்தார்கள்.

              உள்ளே கொண்டு வந்து அவனை படுக்க வைத்தார்கள். உடனே வேலுவிடம் கேட்டாள் எவ்வளவு செலவாச்சு?

               ஆயிரம் ரூபாய் ஆச்சு.. ப்ச்.. என்றான் வேலு உதட்டைப் பிதுக்கியபடி. ஆயிரம் ரூபாய் என்றதும் வருத்தம் வந்தது. முகம் இருண்டுபோனது. அப்போது அவளின் மகள் சொன்னாள்.. அம்மா... பயமா இருக்கும்மா?

                எதுக்கு பயம இருக்கு? என்றாள் சங்கரி.

                நாளைக்கு ப்ளஸ் டூ ரிசல்ட்ம்மா.. பயமா இருக்கும்மா..

                சங்கரிக்குள்ளும் அந்தப் பயம் பாம்பாய் மாறி படமெடுத்து ஆடத்தொடங்கியது.


//////////////////////////////////////////////////////////////////////////////////


    . 

Sunday, November 8, 2015

தீபாவளி...தீபாவளி..




                       தீபாவளி... தீப ஒளி... தீயவை ஒளி..(ழி),,,


                       எல்லோரையும் எப்படியேனும் சில கணங்களேனும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது தீபாவளி திருநாள்.

                        எல்லோரும் புத்தாடை உடுத்துகிறார்கள்.

                        கொஞ்ச நேரம் கவலைகளை மூட்டை கட்டி வைக்கிறார்கள். யாரிடமும் கோபம் காட்டாமல் இருக்கிறார்கள்.  கோபம் வந்தாலும் மறைத்துக்கொள்கிறார்கள். உறவுகளின் வீடுகளுக்குப் பலகாரங்களை எடுத்துப்போய் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

                           ஒரு தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எல்லார் வீட்டுப் பலகாரங்களும் சுவைக்கக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் மறக்கிறார்கள். மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

                          நன்றி சொல்லவேண்டும் தீபாவளி திருநாளுக்கு..


                         தீபாவளி திருநாளில்....

                         காவல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிற காவல் துறை அதிகாரிகளுக்கு...

                          பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிற நடத்துநர் ஓட்டுநர்களுக்கு...

                          யாருக்கேனும் உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருக்கிற 108 ஐ இயக்கும் பணியாளர்களுக்கு..

                            நாளைக் கொண்டாடலாம் என்று எண்ணும்போது மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோயில் துன்பப்படுவோர்க்கு..

                            தீபாவளி அன்றும் பணத்தால் சண்டையிட்டுக்கொண்டு தவிக்கும் ஏழை.. வழியற்றோருக்கு...

                              இப்படி இன்னொரு பக்கமும் இருக்கிறது.. அவர்களின் துன்பங்கள் தொலையவேண்டும் என்று ஒரு விளக்கும்... மத்தாப்பும்.. ஏற்றுவோம் ஒளியாக..

                              வாசலில் வந்து கையேந்துவோருக்கு உங்களால் முடிந்ததைத் தாருங்கள்..
                               பலகாரமோ... பட்டாசோ... சில்லறை காசுகளோ.. சிறு உடைகளோ... புன்னகையோ எதுவோ அதைத் தாருங்கள்..

                               படைப்பாளச் சகோதரர்கள்..

                               நல்ல கவிதை எழுதுங்கள்.. நல்ல சிறுகதை எழுதுங்கள்.. நல்ல கட்டுரை எழுதுங்கள்.. நல்ல செய்திகளை உலகறியத் தாருங்கள்..
                             
                               எண்ணத்தில் வண்ணமும்
                               ஏற்றத்தில் உயர்வும்
                               மாற்றத்தில் புதுமையும்
                               புதுமையில் பயனும்
                               பயனில் பொதுமையும்
                               பொதுமையில் தியாகமும்
                              தியாகத்தில் செம்மையும்
                               செம்மையில் பெருமையும்
                               பெருமையில் பேறும்
                               பேற்றில் வாழ்வும்
                               வாழ்வில் வளமும்
                               வளத்தில் தூய்மையும்
                               தூய்மையில் ஒளியும்
                               ஒளிரட்டும உலகெங்கும்...


                     வலைப்பதிவு சகோதர சகோதரிகளுக்குத் தீபாவளி வாழ்த்துக்கள்..