மழையின் பெருஞ்சினத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கட்டுக்கடங்காத கோபமாய் அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறோம்.
அதன் நெற்றிக்கண் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறோம்.
தேள் கொட்டினால் கடுக்கிறது.
மழையும் கொட்டுகிறது..
யாரும் அடித்தால் வலிக்கிறது.
மழை(யும்) அடிக்கிறது.
எல்லோரையும் பாரபட்சமில்லாமல் நனைக்கிறது.
எங்கும் ஈரமாயிருக்கிறது. மனது தவிர.
உள்ளே மனது ஈரமாவதற்குத்தான் வெளியே பெய்யெனப் பெய்கிறது மழை. பெருகி வெள்ளமாகிறது.
அடித்துக்கொண்டுபோகிறது உயிர்களை.
மழையின் வாழிடத்தை அதன் கூடுகளை... குளங்களை... ஏரிகளை...நீர்த்தேக்கங்களை.. கிணறுகளை... குட்டைகளை.. என எல்லாவற்றையும் அடைத்து... தூர்த்து... மனைகள் போட்டுவிட்டோம். நாம் வாழ.
இயற்கையின் இடத்தைப் பிடுங்கி நாம் செயற்கையாய் கட்டிக்கொண்டோம்.
அல்லிகளும்.. தாமரைகளும்.. பறவைகளும் களித்து மகிழ்ந்த எத்தனையோ நீர்நிலைகளை அழித்துவிட்டோம்.. மனதில் ஈரமில்லாமல்.
வனவிலங்குகளின் காடுகளை அழிக்க அவை நகரங்களை நோக்கி வந்தன.
ஆபத்து என்று அலறினோம்.
அவற்றின் வாழிடத்தில் நாம் இருந்துகொண்டு அவற்றை விரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?
ஆகவேதான் மழை தன் இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடியது. கேட்கவில்லை. அழுது பார்த்தது. கண்டுகொள்ளவில்லை.
நனைத்து பார்த்தது. நனையவில்லை மனம்.
இனி போராட்டத்தின் உச்சமாய் கொட்டியும்..அடித்தும்.. வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளில் புகும்போது கதறுகிறோம்..
இது மழை தரும் பாடம் நமக்கு.
இது சிறுகோபம்தான்.
விழித்துக்கொள்ளவேண்டும்.
அவரவர் ஊரில் இருந்த குளங்களையும் ஏரிகளையும் நீர்த் தேக்கங்களையும் மழையின் வீடுகளாக அவற்றைத் திருப்பி அளிப்போம். இயற்கையோடு ஒத்துப்போவதுதான் இயல்பானது.
இயற்கைதான் மனிதனை வாழவைக்கிறது.
இயற்கையாய் வாழ்வதுதான் வாழ்க்கை.
அடுத்த மழைக்காலத்தில் மழையின் கோபத்திற்கு ஆளாகாமல் அவற்றின் வீடுகளை அவற்றிற்குத் திருப்பித் தருவோம்.
தமிழகமெங்கும் பச்சை வளம்பெறட்டும்.
பசுமை மலரட்டும். நம் வாழ்க்கையும் வளம் பெறட்டும்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
இளங்கோவடிகள் போற்றிய மாமழையை நாமும் போற்றி வாழும் வாழ்வை உருவாக்குவோம்..
மீதமிருக்கும் இயற்கையையாவது
ReplyDeleteவிட்டு வைக்கவேண்டும் ஐயா
நியாயத்தை உணர வேண்டும் ஐயா...
ReplyDeleteகாலத்திற்கேற்ற கருத்து மழை...
ReplyDeleteஉண்மை! இயற்கையை அதன் போக்கில் விட வேண்டும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
உண்மைதான்... இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது.. எல்லாம் இறைவன் துணை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலத்திற்கேற்ற கவிதை. இயற்கையை எதிர்த்து வாழ்விடங்கள் அமைத்துக் கொண்டு இப்போது திண்டாடுகிறோம்.....
ReplyDelete