Saturday, July 27, 2013

புதிய தரிசனம்.....வலைக்காடு



       புதிய தரிசனம் என்ற இதழில் வலைக்காடு எனும் பகுதியில் எனது வலைப்பக்கம் பற்றி  திருமிகு இரா.எட்வின் அவர்கள் எழுதியிருப்பது.

5. ஹரணி பக்கங்கள்…


ஹரணியின் வலை இது.மக்களுக்கான எழுத்தாளாளரான இவரிடமிருந்து ஒரு   டஜன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்த   வலையின் நெடுகிலும் நம்மால் பார்க்க இயலும்.

“ கை அளவு கற்க ஆசைகடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.”   என்பதாகப் பிரகடனப்படுத்துகிறது இவரது வலைஆனால் இது கடலுக்காக     வீசப்பட்டவலைகடல் எதுவும் இந்த வலையில் இதுவரை அகப்படவில்லை   எனினும் நிறைய நதிகள் சிக்கியிருக்கின்றன இவரது வலையில்

எல்லாம் இருக்கிறது இந்த வலையில்அன்புகாதல்காமம்கருணைதாய்மைமொழி குறித்த அக்கறை,தொன்மம் பற்றிய புரிதல்கோவம்ஆதங்கம்இலக்கியம்,   என்று எல்லாம் கிடைக்கிறது.

யாருடைய ஆத்திச்சூடியோடும் இந்த வலையில் இருக்கக்கூடிய ஹரணியின்   ஆத்திச் சூடிகளை நாம் ஒப்பிட்டுப்பேச முடியும்.  சமூக அக்கறையோடு கூடிய ஆத்திச்சூடிகள்அவற்றில் மூன்றைச் சொல்ல   வேண்டும்.

1 . அன்புசால் உலகு செய்
2 . ஓடி ஓடி உறவுகொள் வளர்.
3 . ஊரின் நியாயம் கேள்.

இந்த மூன்றிற்காக மட்டுமே இவரது வலையைக் கொண்டாடலாம்.

“ நான் பார்த்து
  வளர்ந்தவன் இப்போது
  நகராட்சி கவுன்சிலர்
  இவர் பிறந்தது தெரியுமென்று
  சான்று தருகிறான் எனக்கு ” என்பது மாதிரி நறுக்குக் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன இவரது வலையில்.

விரலிடுக்கில் கசியும் நீரைப்போல ஏராளமான நல்லதுகளை நாம் கசியவிட்டிருக்கிறோம். மரப்பாச்சி பொம்மைகளும் அவற்றில் ஒன்று. மரப்பாச்சி என்ற சொல்லைக் கேள்விப் படும் பொழுதெல்லாம் லபக்கென்று நமது மனது ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதைக்கு ஓடிவிடும். “ மரப்பாச்சியா” அல்லது “ மரப்பாச்சி பொம்மையா ” என்று சரியாய் நினைவில்லை.

பக்கத்து பணக்கார வீட்டுக் குழந்தை ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடும். அதைப் பார்த்த பக்கத்துக வீட்டுக் குழந்தை தனக்கும் விளையாட அதுபோல ஒரு மரப்பாச்சி பொம்மை வேண்டுமென்று அடம்பிடிக்கும். அவர்கள் வீட்டில் பாப்பாக் குழந்தை இல்லாததால்தான் அவளுக்கு விளையாட மரப்பாச்சி தேவைப் பட்டதென்றும் இவளுக்கு விளையாட தம்பிப் பாப்பாவே இருப்பதால் மரப்பாச்சி தேவை இல்லை என்றும் ஒரு வழியாக சமாதானப் படுத்துவார்கள்.

ஒரு வழியாக சமாதானமடைவாள் குழந்தை. பணக்காரக் குழந்தை பரப்பாச்சிக்கு சோப்பு போட்டு அதை தண்ணீர்த் தொட்டியில் முக்கி குளிப்பாட்டுவாள். இதைப் பார்த்த இந்தக் குழந்தையும் பாப்பாவிற்கும் சோப்பு போட்டு தண்னீர்த் தொட்டியில் முக்குவள். குழந்தை செத்துப் போகும். அய்யோ அப்படி ஒரு வலி இருக்கும்.

ஏழ்மையை சொல்ல ஜெயகாந்தனுக்கு கருவியாக வாய்த்த, தொன்மச் சிறப்புமிக்க தமிழ்க் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான மரப்பாச்சியை இந்தத் தலைமுறை முற்றாய் இழந்திருக்கிறது. இதைப் பற்றி அக்கறையோடு ஹரணி சொல்கிறபோது இன்னும் என்னத்தையெல்லாம் இழக்கப் போகிறோம் என்று தோன்றுகிறது.

“ காந்தியும் குமரேசனும் ” என்றொரு குழந்தைகளுக்கான சிறு கதை இருக்கிறது. இதே தலைப்பில் வெளிவந்துள்ள தொகுப்பிலும் இது இருக்கிறது. பொதுவாகவே குழந்தைகளைப் பற்றி இலக்கியங்கள் வருமளவிற்கு குழந்தைகளுக்கான இலக்கியங்கள் வருவதில்லை என்றொரு குறை இருக்கிறது. அந்தக் குறையையும் போக்குகிற முயற்சி இந்த வலையில் இருக்கிறது. குழந்தைகள் வாசிப்பதற்கான நிறையப் படைப்புகளை இவர் தர வேண்டும் என்று கேட்கிறோம். குறைந்த பட்சம் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தையுமேனும் இவர் வலையில் வைப்பது அவசியம்.

முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி குறித்து இப்போது பரவலாக வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளும் ஹரணி நல்லவைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறார். சரவணன் என்ற பார்வையற்ற இளைஞன் உழைத்து, அடுத்தவர்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு குறிப்புகள் தயாரித்து செறிவான ஆய்வினைத் தந்துள்ளதை பெருமிதத்தோடு பதிகிறார்.

இதை இன்றைய ஆய்வாளர்கள் வாசித்தால் நல்ல செறிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும்.

அவரது தந்தை எழுதிய கவிதை ஒன்றினைப் பரணில் கண்டெடுத்தவர் அதை நமக்கு பந்தி வைத்திருக்கிறார். மிகுந்த எள்ளலோடு இருக்கிறது. ஹரணி குறைந்த பட்சம் இரண்டாவது தலைமுறை என்பது புரிகிறது.

சிறுமை கண்டு சீறுதல் தமிழின் ஆகப் பெரிய மேன்மை என்பதை இவர் பாரதி கொண்டு நிறுவ முயன்றிருப்பது அழகானது.

சகுணியின் வலையில் முற்றாய் விழுந்த தருமன் திரௌபதையை சூதில் வைத்து தோற்கிறான். இது பாரதியை பேரதிகமாய் கோவப் படுத்துகிறது.

எல்லா தருமங்களையும் கற்றுணர்ந்த தருமன் இந்தக் கேவலத்தை செய்திருப்பது கண்டு கொதிநிலைக்குப் போன பாரதி பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்,

” ஆயிரங்களான நீதி
  அவை உணர்ந்த தருமன்
  தேயம் வைத்திழந்தான்
  சீச்சி சிறியர் செய்கை செய்தான் ”

தருமனிடமிருந்து அறத்தை எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்க தமிழோ அவனது அறத்தைக் கேள்வி கேட்டது.

“ உன் தத்துவம் தவறென்று தரணிக்கு சொல்லவும்
  தமிழுக்கு உரிமை உண்டு “

என்று சொல்வதற்கு அவ்வைக்கு தைரியத்தைக் கொடுத்ததும் தமிழ்தான்.

ஆக, சிறுமை கண்டு சீறுதல், இறைவனே அறம் பிறழ்ந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுதல் போன்ற குணங்கள் தமிழுக்கு இருப்பதை அழகியலோடு சொல்கிறது இந்த வலை.

நதிகள் விளையாடும் வலை இது. பாருங்கள்,


நன்றி: புதிய தரிசனம்

கணையாழி கவிதை



     அனபுள்ள சகோதரி கீதமஞ்சரி அவர்கள்

                        என்னுடைய விருதுபெற்ற கவிதையைக் கேட்டிருந்தார்கள்.
அதனை முன்பே செய்திருக்கவேண்டும். தற்போது எல்லோரின் பார்வைக்கும் அந்த விருது பெற்ற கவிதையைப் பதிவிட்டிருக்கிறேன். நன்றிகள்.


ஆறுதல்....


                       அது எனக்கான அறையாக இருந்தது
                       என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை
                       என்றைக்கும் நிறைவேறாத கனவுகளை
                       யாருமறியாமல் கொட்டித் தீர்த்த துயரங்களை
                       எப்படி சுருண்டாலும் ஏற்றுக்கொண்ட
                       மாண்பை

                       கொட்டிக்கவிழ்த்த சொற்களை ஏந்திக்
                       கொண்ட பழுப்பேறிய தாள்கள்
                       முன்பு எழுதப்பட்ட முனை மழுங்கிப்போன
                        புழுக்கைப் பென்சில்களை

                        என்றைக்கும் யாருடனும பகிர்ந்துகொள்ள
                       முடியாத வாழ்வின் ரகசியங்களைப்
                        பேணிக் காத்த எல்லாவற்றையும் வாரிக்
                        கொட்டுகிறார்கள் குப்பையோடு குப்பையாய்..

                       ஓடிவந்து முகரும் நாய்களைப்போல
                       மனமோடிக் கலைக்கிறது குப்பைகளில்
                       உனக்கு வேறு இடம் இருக்கிறதென்று
                      ஆறுதல் பேசும் அம்மா வறுமையை
                       மறைக்கிறாள் பெற்ற முன்பணத்தில்...
                       ஒரு கவிதையாய் எழுதிவைக்கிறவை

                       என்றைக்கும் உயிலாக
                       மாறுகிற சாத்தியமில்லையென்றாலும்
                       மனமறியும் ஒரு வாசிப்பாலும்
                       வலியாலும்
                       வாழ்ந்த வாழ்க்கை
                       பேசப்படலாம்  என்பதாகவே
                       இன்றைக்கான ஆறுதல்...


                            (நன்றி. கணையாழி மே 2013   நன்றி வளரி )
                     

Thursday, July 25, 2013

மூன்று செய்திகள்.....



அன்புள்ள...


                     ஹ ர ணி வணக்கமுடன்.

                     மூன்று செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மகிழ்கிறேன்.


                    ஒன்று


                                புதிய தரிசனம் என்று ஒரு இலக்கிய மாதமிருமுறை இதழ்
வெளிவருகிறது. இதில சிறந்த வலைப்பக்கங்கள் பற்றி மதிப்பிற்குரிய திரு எட்வின்(நோக்குமிடமெல்லாம நாமன்றி வேறில்லை வலைப்பக்கம்) அவர்கள் எழுதப் பத்திரிக்கை கேட்டுள்ளது. அதன்படி இந்த மாதம்
இரண்டாம் இதழில் என்னுடைய வலைப்பக்கம் பற்றி எழுதியுள்ளார்.

                  இரண்டு

                                 மானா மதுரையிலிருந்து  வளரி எனும் இலக்கிய இதழ் வருகிறது. இதன் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன். ஒருநாள் இரவில் என்னுடன் கைப்பேசியில் தன்னை அறிமுகம் செய்துகொண்டு நாங்கள் மாதா மாதம் இலக்கிய இதழ்களில் வரும் சிறந்த கவிதைகளைத் தெரிவு செய்து அதற்கு கவிப்பேராசான் மீரா விருது அளிக்கிறோம். அந்தவகையில் சென்ற மே மாதம் கணையாழியில் வந்த எனது கவிதை ஆறுதல் என்னும் தலைப்பிலானது தெரிவுசெய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்து வாழத்துத் தெரிவித்தார். உங்களின் முன்னதாக அவருக்கு மீண்டும் எனது நன்றிகளைத்
தெரிவித்துக்கெர்ள்கிறேன்.

                  மூன்று

                  மொரீஷியசில் மகாத்மா காந்தி இன்ஸ்டிட்யூட் ஒன்று உள்ளது. இது அரசு கல்வி நிறுவனமாகும்.  இதில் என்னுடைய நண்பர் பேரா. கேசவன் சொர்ணம் தமிழ்த்துறையின் தலைவராக உள்ளார். அவருக்கு என் சில புத்தகங்களை அனுப்பிவைத்தேன். அதில் ஒரு புத்தகம் பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா  என்பதாகும். இது அவர்கள் கல்வி நிறுவனத்தில் பார்வை நுர்லாக வைக்கப்பட்டுள்ளதையும் பாடத்திற்கு உதவியாக உள்ளதையும் தெரிவித்தார்.

                       இது உங்களின் பகிர்தலுக்கு.

                     
                    0000000000000000


                   அடுத்த குறுந்தொடரின் தலைப்பு ..........

                                              எழுதப்படாத உயில்...





ஜால்ரா... குறுந்தொடர் 8




                         கோயில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

                          எல்லா வேலைகளும் துரிதமாக முடிந்துவிட்டன.

                          வேணுகோபால் சுழன்று சுழன்று முடிநத்வரை வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். கோயில் காரியம். தன்னுடைய பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தார். அடுத்த கும்பாபிஷேகத்திற்கு தன்னுடைய ஆயுள் இடங்கொடுக்கவேண்டுமே என்ற தீர்மானத்தில் செய்து
கொண்டிருந்தார்.

                           தாமோதரனும் இன்னொருபுறம் எது தேவையோ சொல்கிறார்களோ அதை செய்து கொடுத்தர்ர்.

                           அன்று மாலை குமரேசன் கோயிலுக்கு வந்தான்.

                           சங்கடஹர சதுர்த்தி என்பதால்  கோயிலில் கூட்டம் இருந்தது.

                          வேணுகோபால் யாரு? என்று விசாரித்தான்.

                          நான்தான் என்று முன்னால் வந்தார்.

                          வாங்க கோயில் உள்ள வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
என்றான்.

                          உள்ளே போனார்கள்.

                          சற்றுக் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தார்கள்.

                          விழாக்குழு மட்டும் இருந்தது. தாமோதரனும் இருந்தார். யார் இவன் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

                          குமரேசன் பையிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து அதை வேணுகோபால் கையில் கொடுத்தான்.

                              என்ன இது? நீங்க யாரு ? என்றார் வேணுகோபால்.

                           நர்ன் கோயில்ல மேளம் வாசிக்கிறவன். தனத்து அக்காவுக்கு தெரிஞ்சவன். ரொம்ப உறவுமுறையும் கூட. உங்ககிட்டே அக்கா இதைக்
கொடுத்திடச் சொன்னாங்க..இதை கோயில்ல விநாயகருக்கு முன்னால வச்சிப் பிரிக்கச் சொன்னாங்க.. என்றர்ன்.

                              ஆச்சர்யமுடன் வேணுகோபால் அந்தப் பையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தார்.

                               அதனுள் பளபளவென்றிருந்த ஒரு ஜால்ரா.

                              ஐம்பொன்னால் செய்யப்பட்டிருந்தது.

                              அக்கா இதை என்கிட்டதான் செய்யச்சொன்னாங்க,, செய்து கோயில்ல கொடுக்கச் சொன்னாங்க,, இந்தக் கடிதத்தையும் கொடுக்கச்
சொன்னாங்க,,

                                 கடிதத்தைப் பிரித்து உரக்கவே படித்தார்,

                               அன்புள்ள ஐயாவுக்கு...

                                முப்பது வருஷமா கோயில் வாசல்ல குடித்தனம் இருந்தேன்.
கூட்டுறதும் பெருக்கறதும் நமக்கு கிடைச்ச வரம்னு செஞ்சுக்கிட்டிருந்தேன்,
என் புருஷன் செத்துப்போன பிற்பாடு எனக்கும் என் மவளுக்கும் எல்லாமும் அந்த விநாயகருதான்,, அப்படித்தான் நெனச்சிக்கிட்டேன்.. செஞ்சதெல்லாம் போதும்னு அங்கருந்து கௌப்பிட்டாரு.. சும்மாவா கௌப்பினாரு.. ஜால்ரா திருடுன பாதகின்னு ஒரு பட்டப்பெயரோட,, எத்தனை நாள் அழுது துடிச்சிருப்பேன்.. ஏன் இப்படி பண்ணே விநாயகரேன்னு.. யோசிச்சுப் பார்த்தேன்.. கோயில் கும்பாபிஷேகம் வருது.. எல்லாரும் என்னென்னமோ
கோயிலுக்கு செய்யறாங்க.. நம்மால முடியலியேன்னு விசனப்பட்டுக் கிடந்தேன். அப்பத்தான் திருட்டுப் பட்டம் கட்டுனாரு விநாயகரு... யோசிச்சு பார்த்தேன். என்புருஷன் போனபொறவு எனக்கிருந்தது ஒரு வீடும் அறுத்துப் போட்ட தாலிப்பவுனும்தான்,, வீடு போயிடிச்சி..மிச்சம் தாலிதான்,, ஆளுக்காள் செய்யும்போது நீயும் செய்யலேன்னு கவலைப்படாத தாலிய வித்து செய்யுன்னுதான் இந்த திருட்டு நாடகத்தை ஆடினாருன்னு நினைச்சிக்கிட்டேன். அப்படி சமாதானபப்டுத்திக்கிட்டேன். தாலிய வித்து இந்த ஜால்ராவ செஞ்சுட்டேன்.. அவர் வேண்டியத கேட்டு வாங்கிட்டாரு.. ஆனாலும் மனசு ஆறலே....திருட்டுப் பட்டம் வாங்கிட்டோம்னு.. என்னால முடிஞ்ச பரிகாரம். என் மேல விழுந்த பழிய துடைச்சிட்டேன்.. எல்லாரும் மனசுவந்து ஏத்துக்கணும்...

                                எல்லோரும் ஒருநிமிடம் கண்கலங்கினார்கள் தனத்திற்காக.
வலம்புரி விநாயகரைப் பார்த்தார்கள். அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.
தங்கள் கைப்படவே அதை திருஞானச்சம்பந்தரின் திருக்கரங்களில் வைததார்கள். அளந்து பார்த்து செய்ததுபோல் அது அவரின் பொற்கரங்களில் பொருந்தி நின்றது.

                               தாமோதரன் மனமெங்கும் உறுத்தல் தேள்கள் ஊர்ந்து
கிடந்தன.

                               ஒவ்வொன்றும் கொட்ட ஆரம்பித்தது.

                              உடலெங்கும் மனமெங்கும் வலி ஊடுருவியது.

                              கூட்டத்திலிருந்து எழுந்தார். விநாயகரை மனசார
வணங்கினார். பின் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்..

                             எல்லாருக்கும் வணக்கம். என்னுடைய வேண்டுகோளைக்
கேளுங்கள். என் விருப்பத்திற்கு உங்க எல்லாருடைய அனுமதியும் வேண்டும்னு பணிவோடு கேட்டுக்கறேன். நான் சிறுபிள்ளைத் தனமாக எது பேசியிருந்தாலும் என்னையும் என் குடும்பத்தாரையும் மன்னிச்சிடுங்க.. இந்தக் கோயில்ல விவரம் தெரிஞ்சு என்னென்ன பொருள்கள் இருநது இப்ப
காணாமப் போயிடிச்சோ அத்தனைனையும் ஒண்ணுவிடாம நான் வாங்கி வச்சிடுறேன், இது சத்தியம். எல்லாரும் ஏத்துக்கணும். இந்த சன்னதியில் தனலெட்சுமிமேல அந்தத் திருட்டுப்பழியைக் கட்டிப் பேசினது நான்தான்.
விநாயகர் முன்னால தனத்துக்கிட்டே மனசார மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
அவ முன்னாடி நான் ரொம்ப பாவியாயிட்டேன்... தனம் என்னை மன்னிச்சிடு.. என்று கண்கலங்கினார்.

                           எல்லோருமே விநாயகரை வணங்கினார்கள்.

                            குமரேசன் ஐயா.. நான் கிளம்பறேன் என்றான்.

                            வேணுகோபால் சொன்னார்..  தம்பி.. அடுத்தவாரம் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் .. அவசியம் தனத்தை வரச்சொல்லுங்க...

                             அவங்க வரமாட்டாங்கய்யா என்றான்.

                             ஏம்பா?

                            அவங்க உடம்பு முடியாம இருந்து போனவாரம் செத்துப்
போயிட்டாங்கய்யா,,

                                                        (ஜர்ல்ரா ஓய்ந்தது)


                              

Monday, July 22, 2013

ஏழைதாசன் இதழ்......என்னைப் பற்றி,,,,


            அன்புள்ள

                             வணக்கம். ஏழைதாசன் என்றொரு இலககிய 25 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுக்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. இவ்விதழ் அயல நாடுகளிலும் தன்னுடைய கால் பதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                             இவ்விதழில் என்னைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரை
வந்துள்ளது  இந்த வலைப்பதிவு வழியாக ஏழைதாசன் இதழின் ஆசிரியர் திருமிகு விஜயகுமார் அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

                             இந்த இதழின் முகப்பையும் அட்டைப்படக் கட்டுரை செய்திகளையும் என்னுடைய வேண்டுகோளுக்கிணங்க ஸ்கேன் செய்து உதவிய கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

                               இனி உங்களின் பார்வைக்கு.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////





















/

Lyricist Vaali who died at a hospital in Chennai on Thursday was cremated on Friday. File photo





   வாலி.....
   ஒரு பாடல் சகாப்தத்தின்                                                                               முடிவு....


   அஞ்சலி...

               
   எத்தனையோ எழுதினாய்
   அத்தனையும் அருவியாய்
   கொட்டினாய்...

  எதையும் எழுதமுடிந்தவன்தான் நீ


                               அதற்காக
                               மரணத்தின் பாடலை உனக்கே
                               எழுதிக்கொண்டாயா?

                               மரண இசைக்குறிப்பிற்கு
                               நீயேவா பாடலாவது?

                               மண்ணுலகையெல்லாம்
                               பாட்டில் வைத்தாய்
                               அதனால் தீர்ந்ததென்று
                               விண்ணுலகம் சென்றாயா
                               சொல் தேடி?

                               உனக்காக அழக்கூட சொல்லில்லை
                               எங்களிடத்தில்
                               எந்தச் சொல்லும் உன் கைப்பட்டதல்லவா
                               என்றே ஒரு சொல்லை உலகுதிர்க்க
                               நின்றவனல்லவா?

                               வாலிக்கு வசப்படாத ஒன்றுண்டா
                               என்றே வசப்பட்ட புகழிற்கு
                               மயங்கி மரணத்தையுமா
                               வசப்படுத்துவாய்?

                               நெருப்பு உன்னுடலில்
                               பல்லவியெடுத்து சரணம்தொடுக்க
                               மௌனச் சொற்களால் நீ எழுதிக்
                               கொண்டிருக்கும்
                               பாடலே எங்களுக்குக் கடைசியாய்
                               கண்ணீரில் சேகரித்துக்கொண்டிருக்கிறோம்..

                                உன் பாணியில்
                                சொல்வதென்றால்

                                வாலியுன் பிரிவு
                                பிரிக்கமுடியாத வலிதான்

                                இசைக்கு இன்பம் எழுதியவன் நீ
                                இசைந்தது மரணத்திற்கு இன்பமானது
                             
                                எங்கள் கண்ணீரின் இசைக்கு
                                உனது மரணத்தைப் பாடலாக்கிய
                                மகத்துவத்தை என்றைக்கும்
                                மறக்காதிருக்க எழுதிப் போனாயோ?

                               0000000000000

                             

                             
                             
                             
                             
                                .

                               

                           

                             









Tuesday, July 16, 2013

ஜால்ரா.....குறுந்தொடர்,,,7




                          வலம்புரி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் தொடங்கியிருந்தன.

                           வெளிச்சுவர் முழுக்க சரி செய்தாகிவிட்டது.

                           வேணுகோபால் தன்னுடைய செலவில் குங்கும வண்ணமும் யானைத் தந்த வண்ணமுமான டைல்ஸ்களை ஒட்டி அழகாக்கியிருந்தார்.
துர்ரத்தில் இருந்து பார்த்தாலும் தெரிந்துவிடும் அது கோயில் என்று.

                             அது சரியான கோயில் வண்ணத்தில் பொருந்தியதில் வேணுகோபாலுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

                            யாராவது கேட்டால்  எனக்கென்னங்க தெரியும்.. அவருக்குத் தெரிஞ்சிருக்கு.. என்ன் செய்யுடான்னு கேட்டு வாங்கிட்டாரு..என்ன அம்சமா இருக்கு பாருங்க சுவரு... என்று பெருமைப்பட்டுக்கொண்டார். அப்படி பேசும்போதெல்லாம் வலம்புரி விநாயகரையும் பார்த்து கும்பிட்டுப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டார்.

                              வீட்டில் தாமோதரன் மனதுக்குள் பல திருட்டுப் பூனைகள் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தன.

                               சேச்சே.. அந்த  சாமியார் சிலை அவன் வீட்டுல மாட்டிடிச்சி...
தெரிஞ்சிருந்தா அப்பவே மாத்தியிருக்கலாம்.. இன்னைக்கெல்லாம் லட்சக்கணக்கில போவும்.. என்ன அம்சமா இருக்கு.. அது கையில இருந்த ஜால்ராவே அன்னிக்கு நல்ல விலை ஐம்பொன்னுன்னு அள்ளிட்டுப் போயிட்டான்.. அதுவும் ஞானப்பால் குடிச்ச குழந்தைக்கிட்ட இருந்ததுதுன்னு பெருமையா வரலாறு சொல்லி வாங்கிட்டுப்போயிட்டான்.. இனி ஒண்ணும் பண்ணமுடியாது.. பேசாம வாய விடாம இருந்திருந்தா அவன் வீட்டுலேயே வச்சிருப்பான்.. சமயம் வரும்போது ஆட்டய போட்டிருக்கலாம்.. நம்ப வாயாலே பேசி அவனை கோயில்ல கொண்டு வந்து வக்க வச்சிட்டோம்.. பாப்போம்.. சமயம் கிடச்சா மாத்திடலாம்.. அதுக்குள்ள அதுமாதிரி ஒரு மாதிரி எடுத்து வச்சிடணும்.. கும்பாபிஷேகம் முடியட்டும்..

                              சட்டென்னு சட்டையை மாத்திக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.

                              ஆட்கள் உள்வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                              எப்பய்யா முடிப்பீங்க?

                              முடிச்சிடுவோங்க... இன்னும் பின் பிரகாரச் சுவரு மட்டும்தான் பாக்கி..

                               இதையேதான் நாலுநாளா பேசறீங்க?  வாய்தான்.. வேலை ஓடமாட்டேங்குது..

                              இல்லங்கய்யா முடிச்சிடுவோம்..

                              அந்த வேணுகோபால் தானே உங்கள வச்சது.

                              ஆமாங்கய்யா..

                              ஆமா வேலைய இழுத்து செய்யறதுக்கு எவ்வளவு கமிஷ்ன் பேசியிருக்கீங்க அவன்கிட்ட

                               ஐயா.. என்ன இப்படி கோயில்ல தப்பா பேசறீங்க.. அவரு எங்ககிட்ட கோயில்காரியம் கொறச்சு வாங்கிக்கங்கன்னாரு.. நாங்களே ஒருநாள் கூலிய வேண்டாம்னுட்டுத்தான் செய்யறோம்.. கோயில் காரியம்.. எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டும்னு...

                                நல்லா பேசறீங்கய்யா.. சரி.. வேலைய முடியுங்க..

 என்றபடி உள்ளே திருஞானசம்பந்த்ர் சிலையைத் தேடினார்.

                              உள்ளே கருவறைக்குள் போனார். உள்ளே இடது பக்கத்தில் நின்றிருந்தார் ஞானசம்பந்தர்.

                              சட்டென்று தன்பையில் இருந்து கேமிரா செல்போனால் அதைப் படம்பிடித்தார்.. மாதிரி வேண்டுமே..

                              பிடித்துவிட்டு வெளியே வரும்போது வேணுகோபால் நின்றுகொண்டிருந்தார்.

                              என் பையன் அருட்பிரசாத கவரு ஆயிரம் போடணும்னு சொன்னான்.. அதான் விநாயகரைப் படம் பிடிச்சேன்... தானாகப் பேசினார்.

                             நான் எதுவும் கேக்கலியே... எதாச்சும் செய்... என்றார் வேணுகோபாலன்.

                              நமக்கு வாயிலேயே சனி என்று நினைத்துக்கொண்டு தாமோதரன் தனக்குள் பேசியபடி கோயிலை விட்டு வெளியே வந்து வீடு நோக்கிப்போனார்.

                             எதிர்வீட்டில் எப்எம் பாடியது.. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..

                             வலம்புரி விநாயருக்குப் பெரிதாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேணுகோபால் அப்படியே தரையில் உட்கார்ந்துகொண்டார். வெளியிலிருந்து காற்று சிலீரென்று உள்ளேபோய் அவரின் முகத்தில் மோதியபோது உடம்பு மனசு எல்லாம் குளிர்ந்ததுபோலிருந்தது. ஒருமுறை திரும்பி விநாயகரைப் பார்த்துக்கொண்டார்.

                             தனம் மனம் முழுக்க வேதனைப் புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன, இத்தனைகாலம் கோயில் வாசலில் கிடந்ததுக்கு இப்படியொரு பழியா?

                             மனம் கொள்ளாமல் தவித்தாள்.

                             துவண்டு துவண்டு படுத்தாள்.

                             என்னம்மா ஆச்சு? என்றாள் மகள்.

                             ஒன்றுமில்லையென்று  சொல்லி சமாளித்தாள்.

                              அன்று மாலை குமரேசன் வீடுதேடிப் போனாள். குமரேசன் தவில் வித்வான். தன்மையானவன்.

                               வாங்க  தன்த்தக்கா என்றான்.

                                நல்லாயிருக்கியா தம்பி..

                                நல்லாயிருக்கேன் அக்கா.. சொல்லுங்க என்ன செய்தி? என்றான்.

                               உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்பா.
என்றாள்.

                                சொல்லுங்கக்கா.. என்றான்.

                               தன் இடுப்பு சுருக்குப் பையை விடுவித்து அதிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

                                  என்னக்கா இது?

                                  பிரிச்சுப் பாருப்பா... என்றாள்.

                                                                                                          (ஜால்ரா ஒலிக்கும்)

                                 

                            

Monday, July 15, 2013

நத்தையோட்டுத் தண்ணீர்..... ஜிஎம்பி ஐயாவின் கடிதம்...



              வணக்கம்.

             ஜிஎம்பி ஐயா பற்றி உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.

             73 வயதுடைய இளங்காளை அவர்.

             இந்த வயதிலும் தன்னுடைய  அனுபவ விருட்சத்திலிருந்து ஒவ்வொரு சுவை கனியாகத் தந்துகொண்டேயிருக்கிறார்.

             பாருங்கள் ஓர் அதிசயத்தை. அவரின் பதிவுச் சொற்கள் தவறில்லாமல் பதிவாகியிருக்கும். இதிலென்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். அவருக்குத் தட்டச்சு தெரியாது. என்றாலும் தளராமல் ஒற்றை விரலால் எத்தனை பெரிய பதிவுகளையும் அனாசயமாகப் பதிவிட்டுவிடுகிறார்.

                நாம் கற்றுக்கொள்ளவேண்டும் அவரிடமிருந்து நிறைய.

                என்னுடைய இல்லத்திற்கு வந்தபோது அவரிடம் சில புத்தகங்களைத் தந்தேன். உடனே அதில் வித்தியாசமாக இருக்கிறது என்று நத்தையோட்டுத் தண்ணீரைப் படித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் அதுபற்றி.

                இப்போதுதான் பேராசிரியர் கருப்புசாமியின் விமர்சனத்தைப் பதிவிட்டுவிட்டு மின்னஞ்சலைத் திறந்தேன். இன்ப அதிர்ச்சி. ஜிஎம்பி ஐயாவின் கடிதம். உங்கள் பகிர்வுக்காக அதுவும். இன்று இரு விமர்சனக் கனிகள் சுவைத்த திருப்தியுடன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அன்புள்ள ஹரணிக்கு
முகம் தெரியா நட்பினாலேயே தங்கள் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்த நான் நேரில் உங்களைச் சந்தித்ததில் அகமகிழ்ந்தேன் என்பதே நிஜம். உங்களது எளிமையும் பணிவும் என்னைக் கவர்ந்தது. அது எல்லோரையும் கவரும் என்பதும் உண்மை. நான் அங்கு வந்திருந்தபோது என் கை கொள்ளா அளவுக்குப் புத்தகங்களை எனக்குக் கொடுத்தீர்கள். அண்மை காலமாக வாசிப்பைத் தொலைத்திருந்த எனக்கு அது ஒரு விருந்துபோல் தோன்றியது. படிப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட முதல் புத்தகம் தங்களது “நத்தையோட்டுத் தண்ணீர்.” தலைப்பே வித்தியாசமாய் இருக்க படிக்கத் துவங்கியபோதே ஒன்று விளங்கியது. சக மனிதர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லும் empathy இல்லாவிட்டால் இந்தமாதிரி கருத்துகள் உதிக்காது. அர்ச்சகர் தரும் சிறிது தீர்த்தத்தை அருந்தும்போது சற்று மனப்பாரம் குறைந்தாற்போல் இருக்கும் என்று எழுதி இருக்கிறீர்கள். அதிகம் படித்தறியாத எனக்கு சந்தேகங்கள் பல எழுவதுண்டு. மழைக் காலங்களில் வயல் வரப்புகளில் நத்தைகள் திரிவது கண்டதுண்டு. அதே போல் கடற்கரைகளில் கிளிஞ்சல்கள் மற்றும் சிறிய சங்குகளும் கண்டதுண்டு. நீங்கள் குறிப்பிடும் நத்தையோடும் சிறிய சங்குகளைப் போலவே இருக்கும். இதுதான் அதுவா.?
எழுதுவதே எண்ணங்க்ளைக் கடத்த என்பது என் கணிப்பு. அது பொழுதுபோக எழுதினாலும் எழுத உந்துவதே உள்ளத்தின் உணர்வுகள்தான். நூலின் துவக்கத்தில் சமர்ப்பணமாக நீங்கள் கூறியிருக்கும் உள்ளம் படைத்தோரில் நானும் ஒருவன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.அதுவும் தலைமுறை இடைவெளி என்று கூறி பல நல்ல இயல்புகள் தொலைக்கப் பட்டு விட்டன. ஏதும் செய்ய இயலாத நிலையில் எழுதுவதன் மூலம் உள்ளக் கொந்தளிப்புகளையாவது கொட்டித்தீர்க்கலாம். அப்படி வெளிவரும் எழுத்துக்கள் கற்றதனுடையவும் அனுபவத்தினும் வெளிப்பாடு என்பது புரிகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடைபெறும் ஒன்றினை மற்றது அறிந்த கத்திச் சண்டையெ என்பதும் புரிகிறது. அவற்றை தனித்தனியாக ஒவ்வொரு அத்தியாயமாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஒரு ஆசிரியராக இருந்து பொறுமையாக, வெளிப்படையாக அனுபவ முத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உங்களது ஒவ்வொரு கருத்திலும் உடன்பாடு உண்டு.. மற்றபடி விமரிசிக்க எனக்குத் தகுதி போறாது.
என் பணிக்கால வாழ்வில் பெரும்பகுதியை தர உறுதி மற்றும் தரக் கட்டுப்பாடு என்றே கழித்துவிட்டதால் சில குறைகள் என் கண்ணில் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது.
இந்த நூலில் குறை ஒன்றும் இல்லை இருந்தாலும் உள்ளடக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள அத்தியாய வரிசை நூல் கோர்க்கப்படும்போது மாறி இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா.?   

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000


நத்தையோட்டுத் தண்ணீர் .....விமர்சனம்.... கோபியிலிருந்து...



            பேரா. நீ.வ.கருப்புசாமி அவர்கள் கோபி கலை அறிவியல் கல்லுர்ரியில் பணிபுரிகிறார். அவருக்கு எனது நுர்லை அனுப்பியிருந்தேன். நுர்ல் பெற்றதும் உடனே பேசினார்.


                    அன்பழகன் சார்... நான் வண்டியில்போகும்போது கீழே விழுந்து காலில் அடிபட்டு மாவுக்கட்டு போட்டு படுத்திருக்கிறேன். உங்கள் புத்தகம் வந்துவிட்டது. எனவே நகரமுடியாத சூழலில் படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான ஒரு புத்தகம் யாரும் படிக்கிற மாதிரி எளிமையாக இருக்கிறது. முழுமையாகப் படித்துவிட்டு எழுதுகிறேன் என்றார்.

இன்று அவரின் விமர்சனம் அஞ்சலில் வந்தது. உங்களின் பகிர்வுக்காக.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


               நத்தையோட்டுத் தண்ணீர் என்னும் நுர்லில் சமூகத்திற்கு ஏற்புடைய கருத்துக்களை சோழவளநாட்டின் வட்டாரத் தமிழில் எழுதியமையும் பண்பாடு. உறவு. நட்பு. வாசிப்பு. தமிழ ஆய்வாளரின் நிலைகள் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தெளிவாகவும் எளிமையாகவும் கருத்துக்களை எழுதியுள்ளமையைக் காணலாம்.


1, வாசித்தல் சுவாசித்தால்...

             என்னும் கட்டுரையில் நிகழ்கால உயர்கல்வியில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தையும் தேடலையும் புத்தகங்களில்தான் கிடைக்கும். இன்றைய வாசித்தலின் வகைகளையும் அதனால் ஏற்படும் உறவுகள். பண்பாடு. தன்னம்பிக்கைச் சிந்தனைகள் வாசிப்பதால் வளர்த்துக்கொள்ள இயலும் உலகியல் வழக்கு எப்படி உள்ளது அதனால் சமுதாயத்தில ஏற்படும் மாற்றங்களையும் எனத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

2, நட்பு

               நவீன காலத்தில் நட்பின் நிலையை மிகவும் சுருக்கமாகவும் இன்றைய நட்பின் சூழலையும் மிகவும் அழகாக விளக்குவதற்கு ஜாதகத்தில் தொடங்கி வாலிப வயதில் நழுவிய விதத்தையும் சூழ்நிலைக்கு ஏற்ப தோன்றும் நட்பையும் மிகவும் சிந்திக்கும்படியாக நடப்பில் தன்மையில் எழுதியுள்ளார்.

3. மடலேறுதல்

                    இன்றைய கடிதங்கள் எப்படியுள்ளன? அறிஞர் அண்ணா. காந்தியடிகள். மு.வ. கடிதங்கள் சமுதாயத்திற்கு ஆறுதலாக அமைந்திருந்தன. இன்றைக்குக் கடிதங்கள் காணாமலேயே போய்விட்டன. பழைய மடல்கள் ஆறுதல் மொழிகளாக இருந்தன இன்றைய செய்திகள் மடலேறுதல் போல அமைந்துள்ளன .

4. சந்தர்ப்பவாதிகள்

                 தலைப்பில் வாழ்க்கையில் சந்தர்ப்பவாதிகள் சமூகத்தில் அதிகம் உண்டு அவர்கள் நல்லவர்களை எளிதாகக் குழியில் தள்ளிவிடுவார்கள் காரியம் நிறைவேறும்வரையில் மிகவும் நளினத்தோடு பேசுவார்கள் காரியம் முடிந்தபிறகு எண்ணிப் பார்ப்பதில்லை என்பதை இளைஞர்களுக்கு சுட்டிக் காட்டும் விதம் அருமையாக உள்ளது.

5 பண உறவுகள்

             உண்மையான உறவுகள் சமுகத்தில் விதை அற்ற விளைபொருட்கள் போல் உள்ளன. பணம் பததும் செய்யும் பாதாளம் வரை பாயும் என்பதை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

6. வழிகாட்டிகள்

             நல்ல வழிகாட்டிகள் மூலம் இளைய தலைமுறை மற்றும் வளர்ந்தவர்கள் தங்கள் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளமுடியும் என்றும் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவர்கள் வயல்நிலம் போலவும் ஏற்காதவர்கள் மேடுபள்ளம் போன்றவர்கள் போலவும் என அர்த்தமுள்ள வகையில் தெளிவாக்கியுள்ளார்.

7. இளம் பருவமும் மனவெளி விளையாட்டுக்களும்

                  இளமையில் விளையாட்டுக்கள் இல்லாத கல்வி உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் கேடாக அமைந்துள்ளன. இதன் விளைவுகளையும் சிதைவுகளையும் சமுகத்தின் மீதான மிகுந்த அக்கறையோடும் நிகழ்கால சூழலையும் எனப் பதிவு செய்துள்ளவிதம சிறப்பானது.

8, தமிழாய்வுகள்

            தமிழ் இனம் தன்னை எப்படி இழிவுபடுத்திக்கொண்டாலும் குறை கூறினாலும் யாரும் கவலைபடாத நிலை உள்ளது. நுனிப்புல் மேய்தலாக இன்றைய ஆய்வுகள் உள்ளன. தமிழ் மீது அக்கறை இல்லை. அதோடு கருத்துத் திருட்டுக்கள் அதிகமாக ஆய்வுகளில் இடம்பெறுவது மிகவும் வருத்தமாக உள்ளது.  நாமே நம் மொழிக்கு வலிமை சேர்க்கவேண்டும். தவறினால் மொழிக்கும் இனத்துக்கும் தீமை செய்பவர்களாக இருக்கிறோம் என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் இக்கட்டுரையில்.

9. என் ஆசிரியர்கள்

                 அன்றைய காலத்தில் வாழ்ந்த ஆசிரியர்களின் மதிப்புக்களையும் மாணவர்களைத் தங்கள் சொத்துக்களாக மதித்த பாங்கையும் இன்றைய ஆசிரியர்கள் நெறிப்படுத்தும் பண்பு இல்லாதவர்களாகவும் மாறிப்போனதை கொண்ட வாழ்க்கைதான் நமக்கு வாய்த்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

10. நீதிபோதனை வகுப்புகள்..

                  பள்ளியில் நீதிபோதனை வகுப்புக்கள் இல்லாமல் போனதால் மாணவர்கள் மனதில் தைரியம் இல்லை. வாழவேண்டிய குழந்தைகள் சில தோல்விகளைகூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.  அன்றைய நீதிபோதனை வகுப்புக்கள் தன்னம்பிக்கைக்கு உகந்த வகையில் உள்ளதை இக்கட்டுரை வாயிலாக உணரமுடிகிறது.

11,  நம்பிக்கை அனுபவ வைத்தியம்

                  அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு மனச் சோர்வு அடையும்போது பெரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் மொழிகளால் மாறிப்போனது. பல்வேறு கை வைத்தியமுறைகள் குழந்தைகளைப் பண்படுத்தின. இன்றைய சூழல்  வழி தெரியாமல் திகைக்கின்ற வாழ்க்கையைப் படம்பிடித்து இக்கட்டுரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. பெரியவர்களின் இழப்பின் மதிப்பையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

12. சில அர்ப்பணிப்புக்கள்

               மனிதனாகப் பிறந்தவன் வாழும் காலத்திலும் வாழ்ந்து முடித்த காலத்திலும் சிலருக்காவது வழிகாட்டியாக இருந்து ஏதேனும் செய்துவிட்டு அதனை விட்டுவிட்டுப்போகவேண்டும. அது அர்ப்பணிப்பாக இருக்கவேண்டும் என்ற அரிய கருத்தைப் பதிவுசெய்துள்ளவிதம் சிறப்பானதாக இக்கட்டுரையில் வெளிப்படுகிறது.

13, வடவாற்றங்கரையில்

                        இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து விளையாடிய ஆற்றங்கரையயையும் அது வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருந்ததையும் எண்ணிப் பார்க்கும் விதமும் ஆற்றங்கரையோரம் இருந்த சிவ வழிபாட்டு முறைகளையும் இளமை நினைவுகளையும் கூறும்போது அது மண்வாசனையோடு மணக்கிறது இக்கட்டுரையில்.

14. சபை நாகரிகம்

                         இப்புத்தகத்தில் இது கடைசிக்கட்டுரை. பண்பட்ட மனிதர்கள்கூட  சபை நாகரிகம் தெரியாமல்  இருப்பதையும் சபையில் எப்படி பேசவேண்டும் எப்பொழுது பேசவேண்டும் என்று பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரிவதில்லை. இவற்றை மாணவ சமுதாயத்திற்கு எடுத்துக்கூறி நெறிப்படுத்தவேண்டும் என்ற உணர்வை இககட்டுரை உணர்த்துகிறது.

                    மொத்தத்தில் நடைமுறை வாழ்க்கையில்  இளைய தலைமுறையினருக்கும் வளர்ந்த தலைமுறைக்கும் இப்புத்தகம் கற்றுக் கொடுக்கும் நிலையில் அமைந்துள்ளது.  நம்முடைய பண்பாடும் மதிப்புக்களும் சிதைந்துவிடக்கூடாது என்கிற கவலையோடு உருவாக்கப்பட்டிருப்பதே இந் நுர்லின் வெகு சிறப்பாகும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

Sunday, July 14, 2013

நத்தையோட்டுத் தண்ணீர் விமர்சனம்




         பேராசிரியர் மா. கோவிந்தராசு என்பவர் அரசு கலைக்கல்லுர்ரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். கிட்டத்தட்ட 30 நுர்ல்களின் ஆசிரியர். இலக்கணம், திறனாய்வு, இலக்கியம், படைப்பிலக்கியம் எனும் பன்முகத் தளங்களில் இயங்குபவர். அவரின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்ல் குறித்த விமர்சனம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     பேரன்பும் பெருமதிப்பும் கெழுமிய பேராசிரியர் க.அன்பழகன் (ஹரணி) அவர்களுக்கு அன்பு வணக்கம். நலமும் நாட்டமும் ஒன்றே.

       தங்களின் நத்தையோட்டுத் தண்ணீர் நுர்லினை ஆழ்ந்து வாசித்தேன்.

      இந்நுர்ல் தங்கள் அனுபவத்தின் சாறு. சுயசரிதையின் கூறு..கிராமம். இயற்கை. விளையாட்டு. நல்ல பெற்றோர். வாசிக்கும் பழக்கம். எழுதும் பழக்கம். நன்னெறி. குருபக்தி. நாகரிகம். தமிழர் பண்பாடு என இச்சூழலில் வளர்ந்த அனைவருக்கம் தங்களின் அனுபவம் ஏற்பட்டிருக்கும். அனுபவங்களை நினைப்பதும் பேசுவதும் எளிது... அவற்றை வரிவடிவமாக்குதல் அரிது.

         இந்நுர்ல் பற்றித் தங்களிடம் நேரில் அல்லது செல்பேசியில் கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தங்களின் மடலேறுதல் கட்டுரை என்னை எழுத வைத்தது. இந்நுர்லில் உள்ள மூன்றாவது கட்டுரை மடலேறுதல் என்பதில் கூறியுள்ளபடி பேசினால் போதாது.. கடிதம் எழுத வேண்டும் என்பதை உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

         சைவ சித்தாந்த சாத்திரங்களைப் போலப் பதினான்கு கட்டுரைகளில் பலநுர்று அறவுரைகள். அத்தனையும் பார்த்து. கேட்டு. அனுபவித்து உணர்ந்தவை. தங்களின் அனுபவத்தைச் சாறாகவும் இனிப்பாகவும் தந்திருக்கிறீர்கள்.

             ஏன் வாசிக்கவேண்டும்? எப்படி வாசிக்கவேண்டும்?  வாசிப்பின் பயன் என்ன? இன்றைய வாழ்க்கைக்கு வாசிப்பின் தேவை என்ன? இவற்றிற்கு அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் இன்றைய எதார்த்த உலகில் வாசிப்பு குறைந்து. உறக்கமும் ஊர்ப்பேச்சும் அதிகரித்து வருகின்றன. இந்நிலை மாறவேண்டும். இதற்குத் தங்களைப் போலப் பலர் துர்ண்டுதல் வேண்டும்.

              தங்களின் எழுத்தில் எளிய மொழிநடையும் சிறுசிறு தொடர் அமைப்பும் தெரிகின்றன. கட்டுரையிலும் தங்கள் கவிதையின் தாக்கம் வெளிப்பட்டுள்ளது.

                           வாசிப்பு என்பது ஒரு கலை
                           வாசிப்பு என்பது ஒரு தவம்
                           வாசிப்பு என்பது ஒரு பரவசம்
                           வாசிப்பு என்பது ஓர் உணர்வு
                            வாசிக்க வாசிக்க வளம் பெறுகிறோம் (ப.3)

             வாழ்க்கையின் அனுபவம் இலக்கிய வடிவம் பெறும்போது அது போற்றப்படுகிறது. இந்த நுர்லில் முத்திரை வரிகள் பல காணப்பெறுகின்றன. சான்றுக்குச் சில

                      வாசிப்போம் வாழும்வரை வாழ்வதற்காக.....
                      வாழ்கிறோம் என்பதை அர்த்தப்படுத்தவும்...

                      நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது...

                      எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு
                     சுட்டிக் காட்டுவது நட்பு

                      எழுதிப் பகிர்வதால் மறக்கமுடியாத சுமை இறங்கி
                      விடுகிறது. மறந்ததுபோல் ஆகிறது. இலேசாகிறது.

                      காற்று நுழைய முடியாத இடத்தில் கடித உணர்வுகள்
                      நுழையும். அது வாழ்வின் அந்தரம்.

                       உணர்வுகள்தான் உறவுகள்

                       மருத்துவப் பரிசோதனைகளில் நெகடிவ் என்று வந்தால்தான்
                       பாசிடிவ் வாழ்க்கை

                      பாவனை முழுக்க விஷம் தடவிய சொற்கள்


         சந்தர்ப்பவாதிகளுக்கு உருவகப் பெயர்களாக

                    மண்குதிரை. உடைந்த பாத்திரம். சிதைந்த பொருள். அழுகிய
                   பண்டம். புதைமணல்.  எனத் தந்திருப்பது நுட்பமானது.


   பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்னும பாடலடிகளும்  தங்களின் பண உறவுகள் கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

                              பணம்தான் தகுதி
                              பணம்தான் தரம்
                              பணம்தான் உரம்
                              பணம்தான் சக்தி
                              பணம்தான் உயிர்
                              பணம்தான் மரணம்
                              பணம்தான் கடவுள்
                     
கவிஞர் கண்ணதாசன் அனுபவம்தான் எல்லாம் என்பார். தாங்களோ பணம்தான் எல்லாம் என்கிறீர். இஃது இன்றைய நிலை.

               பொது வாழ்க்கைக்கும் ஆய்வுகளுக்கும் இன்றைய வழிகாட்டிகள் எப்படி இருக்கின்றார்களோ என்பதை எதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள்.

                வழிகாட்டும் தகுதியை இழந்தவர்கள் வழிகாட்டிகளாகக் கொண்டாடப்படுகிறார்கள். தகுதியின்மையும் சாதியும் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. தகுதியின்மையே தகுதி என்கிற நிலைப்பாட்டில் பெருமிதம் கொள்கிறார்கள்.

              எதார்த்தமான நிஜ வாழ்க்கையில் நடைபெறும் குழந்தைகள் தொடர்பான செய்திகளை அருமையாக ஆழமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

                இன்று தமிழாய்வு என்னும் பெயரில் நடக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் மிகப்பெரும் கொலைபாதகங்களாக அமைந்துள்ளன என்று கூறுவது மிகப்பெரும் உண்மை. இன்று காணப்படும் மோசமான வழிகாட்டிகளையும் ஆய்வாளரின் அவலங்களையும் உள்ளவாறு கூறியுள்ளீர்கள்.

                  என் ஆசிரியர்கள். வடவாற்றங்கரையில் என்னும் கட்டுரைகள் இருத்தலியக் கோட்பாட்டுடன் பதிவாகியுள்ளன. பள்ளிகளில் முன்பெல்லாம் M.I. Period என்று நீதிபோதனை வகுப்பு நடைபெறும். இன்று இல்லாதது வருத்தம்தான். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் பலருக்கு நீதி போதிக்கத் தெரியாது. அல்லது அதற்குத் தகுதியில்லை என்பதும இங்குக் குறிப்பிடதத்க்கது.

                  அமெரிக்கா, இங்கிலாந்து. ஜப்பான். ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தாம் மேற்கொண்ட காரியத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்கே வழிகாட்டியவர்கள் நம் முன்னோர்கள் இவண என்பது நோக்கத்தக்கது.

                  சத்திய்த்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் அரிச்சந்திரன்
                 தருமத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவன் தருமன்

ஆனால் இன்றைக்கு மக்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு அரிதாகி வருகின்றது. அதனால் ஒரு துறையில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை.

               அவை அறிதல். இடமறிதல். நாகரிகம். பண்பாடு முதலானவற்றைக் கடைசிக்கட்டுரை பேசுகின்றது.

               இந்நுர்ல் கால் நுர்ற்றாண்டுக்கும் முந்தைய காலச்சுவடு. இன்றைக்கு வரலாற்றுப் பெட்டகம். தமிழன்னைக்கு அருங்கலன். தமிழர்களுக்கு அறைகூவல். சிறுவர்களும் இளைஞர்களும் படித்தவர்களும் ஆய்வாளர்களும் நெறியாளர்களும் இந்நுர்லை மீண்டும் மீண்டும் புரிந்து வாசிக்கவேண்டும்.

               பேராசிரியர் (ஹரணி) அவர்கள் இதுபோல் பல அரிய நுர்ல்களை இன்னும் எழுதுவதற்கு என்னுடைய நல்வர்ழ்த்துக்கள்.

                                                                                                  என்றும் அன்புடன்
                                                                                                 மா.கோவிந்தராசு


குறிப்பு...  1.  நுர்லின் தலைப்பு நத்தையோடு என்று உள்ளது. பெரும்பாலும்
                        நத்தைக்கூடு என்றுதான் சொல்வார்கள்.

                   2. குளியல் அறையில் குதிகால் பாதம் தேய்த்துக் குளிக்கச் சொர
                       சொரப்பான கருங்கல் தங்கள் தந்தை வைத்திருந்தார். அதனைப்
                      போல் எனக்கும் ஒருகல் (கரந்தையில் கிடைக்கும்) தர இயலுமா?



பேரா. கோவிந்தராசு அவர்கள் என்மேல்  கொண்ட அன்பின்காரணமாக மிகையாகவும் அன்புபாராட்டி எழுதியிருக்கிறார். இருப்பினும் அவரின் அன்பிற்கு தலை வணங்குகிறேன்.


 அவரின் குறிப்பிற்குப் பதில்கள்.

                       நத்தைக்கூடு என்பது எழுதுகிற வழக்கு. ஆனால் பேச்சு வழக்கில்
                      அந்த நத்தையோட்டை எடு என்றுதான் சொல்வார்கள். பேச்சு
                      வழக்கைப் பயன்படுததியிருக்கிறேன்.

                       என் தந்தையார் பயன்படுத்திய கல் தற்போது இல்லை. இருப்பினும்
                      தங்களுக்காக ஒரு சொரசொரப்பான கல் வாங்கித்தர மிகவும்
                      விருப்பப்படுகிறேன்.


                        நன்றிகள்.
                      

Saturday, July 13, 2013

குழந்தை இலக்கியம்......... காந்தியும் குமரேசனும்




 அறிமுகம்


                              நான் எழுத்துலகில் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு குழந்தைகள் என்றால் அளவுக்கதிகமான உணர்வுகளை வெளிப்படுத்துவது உண்டு. எனவே குழந்தை இலக்கியம் என்பது குறித்த உணர்வு எப்போதும் என்னுள்  அணையாத நெருப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது.

                                 1. குழநதைப் பாடல்கள்
                                 2. குழந்தைக் கதைகள்
                                 3. குழந்தைகள் தொடர்பான விளையர்ட்டுப்பொருட்கள்
                                 4. குழந்தை இலக்கியங்களை ஆவணப்படுத்துதல்
                                 5. குழந்தைகளுக்கான நாவல்கள்
                                 6. குழந்தைகளுக்குப் படக் கதைகள்
                                 7. குழந்தைகளுக்கு அறிவியலைக் கதையாகக் கூறல்.
                                 8. குழந்தைகளுக்கான நாடகங்கள்
                                 9. குழந்தைகளுக்காக உலகக் குழந்தை இலக்கியங்களை
                                     மொழிபெயர்த்தல்
                                10. குழந்தைகளுக்கான அகராதி உருவாக்கம்

எனப் பன்முகத் தளங்களில் என்னுடைய திட்டங்கள் திட்டமிடப்பட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். இதன் ஒவ்வொரு பிரிவையும் ஒரு மாதிரியாகத் தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கே இந்த அறிமுகம்.

                              மைசூர் இந்திய  மொழிகள் நடுவண் நிறுவனம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்துடன் இணைந்து நடத்திய குழந்தைகளுக்குக் கதை எழுதுதல் எனும் பயிற்சிப்பட்டறையில் 15 நாள்கள் கலந்துகொண்டு சுமார் 50 கதைகளை எழுதித் தந்துள்ளேன். அந்த 50 கதைகளும் தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் படங்களுடன் கூடிய புத்தகங்களாக இந்திய மொழிகளில் உலவ விருக்கிறது. அதற்கான படிகளைப் புத்தககம் வெளிவந்ததும் எழுதிய ஆசிரியர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள். அவை வந்ததும் அறிமுகப்படுத்துவேன்.

                              தற்போது 2008 இல் யுரேகா புக்ஸ நிறுவனத்தாரால் நண்பர் எழுத்தாளர் ஜாகீர் ராஜா அவர்களின் முயற்சியால் என்னுடைய 5 கதைகளைக் கேட்டுப் பெற்று அவை புத்தகமாக வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றைத் தற்போது வெளியிடுவதற்குக் காரணம் குழந்தை இலக்கியம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதற்கான அவசியத்திற்காகத்தான்.

                             புத்தகத்தின் தலைப்பு..... காந்தியும் குமரேசனும் என்பதாகும். இதில் உள்ள 5 கதைகளில் ஒரு கதை உங்கள் பார்வைக்காக மகிழ்ச்சியுடன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

                                       காந்தியும் குமரேசனும்.


               குமரேசன் அவன் அப்பா மாரியுடன் மார்க்கெட்டில் உட்கார்ந்திருந்தான். அவன் அப்பா ஒவ்வொரு மீன் வகைகளையும் கூறுகளாகப் பிரித்துக்கொண்டிருந்தார்.

                      டேய் குமரேசு போய் ஒரு கட்டு காஜா பீடி வாங்கிட்டு வாடா என்றான் .

                       போப்பா முடியாது... நீ போய் வாங்கிக்க... புகை பிடிச்சா கேன்சரு
வந்துடும்னு வாத்தியாரு சொல்லியிருக்காரு.

                         கம்னாட்டி பெரிய கலெக்டரு மவன்.. கேன்சரு எனக்குத்தானே
வரும்... போய் வாங்கிட்டு வாடா... என்றான் மாரி மறுபடியும்.

                          முடியாதுப்பா.. இத எல்லாம் பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு
உறுதிமொழி எடுத்திருக்கோம்.

                           மாரிக்குக் கோபம் வந்தது. திரும்பவும் கேட்டான்.
நான் வியாபாரத்த பாக்கணும் போறியா.. மாட்டியா...

                             முடியாதுப்பா.. என்றதும் சட்டென்று குமரேசனை காலால் உதைத்தான். இதை எதிர்பார்க்காத குமரேசன் நிலைதடுமாறி அப்படியே குப்புற விழுந்து அம்மா என்று கத்தினான்... பெயர்ந்த சிறுசிறு ஜல்லிகள் முளைவிட்டிருந்த தரை அது... அதில் குமரேசன் முகம் மோதி கண்ணுக்கு அருகில் உதட்டில் எனக் கிழிந்து ரத்தம் கொட்டியது..

                            என்னய்யா மனுஷன் நீ...? இப்படியா உனக்கு கோவம் வரும்? என்று காய்கறிகடை போட்டிருந்த ஒரு பெண் ஓடிவந்து குமரேசனைத் துர்க்கினாள்.

                           முகமெங்கும் ரத்தம் வழிந்தது.

                            சாவட்டும் கம்னாட்டி பயபுள்ள... ஒருவேலை சொன்னா கேக்க மாட்டேங்குது... எதுத்து எதுத்து பேசுது.. பெரிய  மயிறு படிப்பு படிக்குது... ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே அப்பனை மதிக்கமாட்டேங்குது..

                              எல்லோரும் மாரியைத் திட்டினார்கள்.

                              புள்ள முகத்தப் பாரு... ரத்தமா வழியுது.. ஆசுபத்திரிக்கு
அழைச்சிட்டுப் போங்க... குமரேசனை யாரோ அழைத்துக்கொண்டு போனார்கள்.

                                 டாக்டர கேட்டார்

                                 எங்கடா விழுந்தே?

                                 எங்கப்பா உதைச்சு தள்ளிப்புட்டாரு.. அடிபட்டுடுச்சு...
என்றான்.

                                  உங்கப்பா என்ன வேலை செய்யறாரு?

                                 மீன் புடிச்சி விக்கிறாரு.. மார்க்கெட்ல

                                 நீ ஏன் மார்கெட்டுக்கு வந்தே? அவனுக்கு ரத்தத்தைத் துடைத்து மருந்து போட்டுக்கொண்டே கேட்டார்.

                                  ஸ்கூல்ல கட்டுரை நோட்டு சாரு கேட்டாரு... மீன் வித்து வாங்கித்தாரேன்னு எங்கப்பாதான் அழைச்சிட்டு வந்தாரு... என்றான்.

                                 எதுக்கு உங்கப்பாரு உதைச்சாரு?

                                 பீடி வாங்கிட்டு வரச்சொன்னாரு.. முடியாதுன்னேன்.. அதுக்காக ஒதச்சாரு.. பீடி பிடிச்சா கேன்சரு வரும்னு எங்க சார் சொன்னாரு.. அவங்க அப்பா அப்படித்தான் செத்தாருன்னு சார் சொன்னாரு.. பார்க்கவும் தொடவும் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்திருக்கோம் பசங்க எல்லோரும்..

                                  வெரிகுட்.. என்று அவனைத் தோளில் தட்டியபடி டாக்டர்
போய்விட்டார்.

                                  வெளியே வந்தார்கள்.

                                   விசயம் கேள்விப்பட்டு குமரேசனின் அம்மா தனம் ஓடிவந்தாள்.

                                     என்னடா ஆச்சு? பதறிப்போய் கேட்டாள்.

                                     ஒண்ணும் இல்லம்மா.. அப்பா ஒதச்சிட்டாரு..

                                      சரி நீ ஸ்கூலுக்குப் போ.... என்றாள்.

                                      கட்டுரை நோட்டு வாங்கணும்மா.. என்றான்.

                                      தனம் மாரிக்கு அருகில் போய் மீன்கள் கிடந்த ரெக்சின் சீட்டைத் துர்க்கி அடியில் வைத்திருந்த பணத்தை எடுத்தாள்.

                                     எதுக்குடி பணத்தை எடுக்கிறே என்றான் மாரி கோபமாய் புகையை விட்டபடி...

                                     அவனுக்கு நோட்டு வாங்க என்றாள் தனம்.

                                     பெரிய கலக்டரு படிப்பு படிக்குது..போ.. நோட்டை வாங்கிக் குடு என்றான்.

                                      கலக்டருக்குத்தான் படிக்கப்போறான். உன்ன மாதிரி பீடி வலிச்சிக்கிட்டு மீன் விக்க சொல்றியா? என்று கேட்டபடி பணத்தை குமரேசன் கையில் கொடுத்து ...நோட்டு வர்ங்கிட்டுப் போ.... என்றாள்.

                                     வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லோரும் கேட்டார்கள்.

                                      என்னடா குமரேசு ஆச்சு?

                                       கீழே விழுந்திட்டேன் என்றான்.

                                       வகுப்பு தொடங்கியதும் வாத்தியார் வந்து வருகைப் பதிவேடு எடுக்கையில் குமரேசன் பெயரைக் கூப்பிட்டதும் எழுந்து வணக்கம் சொன்னான். நெற்றி வலித்தது. முகமெங்கும் வீங்கிக் கிடந்தது. முனகியபடி உள்ளேன் ஐயா..

                                       குரல் சரியாக விழாததால் வாத்தியார் நிமிர்ந்து குமரேசனைப் பார்த்தார்.

                                       இங்க வாடா என்றார்.

                                      அருகே போனான்.

                                       என்னடா ஆச்சு?

                                       அடிபட்டுடிசசி சார்.. என்றான்.

                                       எப்படி அடிபட்டுச்சி?

                                       விவரம் சொன்னான். கேட்டதும் வாத்தியார் முகம் மலர்ந்தது.

                                    உடனே மாணவர்களைப் பார்த்து சொன்னார்.

                                    குமரேசன் மாதிரித்தான் இருக்கணும். உறுதிமொழிப்படி நடந்திருக்கான்.. இப்படித்தான் தீய செயல்களை எதிர்த்து நிக்கணும்.. யார் செஞ்சாலும் தப்புத்தான்... அப்பாவாக இருந்தாலும் சரிதான்.. காந்தி இப்படித்தான் போராடினாரு.. நான் குமரேசனைப் பாராடட்றேன். ..எல்லாரும் கை தட்டுங்க என்றர்ர்.

                                   எல்லாரும் கைதட்டினார்கள். குமரேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வலி குறைந்தது போலிருந்தது.