Sunday, May 29, 2011

வாசிக்க (சு) வாசிக்க


சமீபத்தில் படித்த புத்தகம் இது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம் இது.

நல்ல பேச்சாளராகவும் நல்ல வாசிப்பாளராகவும் அவர் இருக்கிறார்
என்பதற்கு இந்தப் புத்தகப் பரிந்துரை சாட்சி.

புத்தகத்தின் பெயர் சாணக்ய நீதி ஸமுச்சயம். தஞ்சை சரசுவதி மஉறால்
நுர்லக வெளியீடு. சமஸ்கிருதத்தில் அமைந்த காகிதச்சுவடி. இதிலுள்ள
சுலோகங்களைத் தமிழ் வரிவடிவத்தில் அமைத்து பொழிப்புரை எழுதப்
பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர் மேற்படி நுர்லகத்தில் சமஸ்கிருதப்
பண்டிட்டாகப் பணிபுரியும் புலமையாளர் முனைவர் ஆ.வீரராகவன் அவர்கள்.

ஸமுச்சயம் என்பதற்கு தொகுப்பு என்பது பொருளாகும். சாணக்கியரால்
கூறப்பெற்ற நீதிகள் இதில் சுலோகங்களாக உள்ளன. அத்தனையும் வாழ்ககை
நீதிகள். அத்தனையும் அற்புதப் பயன் விளைவிப்பவை. அரசனுடைய கடமை
தீயோர்களை ஒடுக்கி நல்லோர்களாகிய மக்களைக் காக்கவேண்டும். அதற்காக
இதற்கு ராஜநீதி என்றும் அழைப்பார்கள்.

இதன் விலை முப்பது ரூபாய். அவசியம் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய
புத்தகம்.

இதிலிருந்து சில நீதிகள் / நெல்லிக்கனி சுவைபோல...


ஃ பணிவற்ற வேலையாள்.கொடைத்திறனற்ற அரசன்.கெட்ட நண்பர்கள்.
பணிவில்லாத மனைவி. நாலவரின் செய்கையும் தலையைத்துளைக்கும்
கொடிய வியாதிகள்.

ஃ மதிப்பும்,வேலையும்,சுற்றமும்,கல்வியும் எங்கு கிடைப்பதில்லையோ
அங்கு ஒருக்காலும் வசிக்கக்கூடாது.

ஃ சிறந்த அறிஞர்களாக இருந்தாலும் ஒரு பாமரச்சிறுவனின் நற்கருத்துக்களை
ஏற்கலாம். அது வயதான அனுபவம் வாய்ந்தவரிடமும்கூட கிடைக்காது.

ஃ முறையாக இருந்தால் பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

ஃ செல்வச்சிதைவு,மனவருத்தம்,மனையில் நிகழும் தகாச்செயல்கள்,
வெகுமானம், அவமானம் ஆகியவற்றை அறிவாளி வெளிப்படுத்தமாட்டான்.

ஃ உணவு செரிக்காதபோது தண்ணீர் அருமருந்து. செரித்தபின் அது உடலுக்கு
வலிமை. உண்ணும் வேளையில் அம்ருதமாகும தண்ணீர் உணவின் முடிவில்
விஷமருந்தியதற்கு ஒப்பாகிறது.

ஃ பிறர் பொருளைக் காணும்போது குருடானாகவும், பிற பெண்டிருடன் பழகும்
போது அலியாகவும், பிறர்மீது குற்றம் சுமத்துகையில் ஊமையாகவும்
இருப்பவன் துர்ய்மையானவன்.

ஃ மிக அதிகமான புண்ணியங்கள்- மிக அதிகமான பாவங்கள் எதற்கும் பலன்
இப்பிறவியிலேயே கிடைத்துவிடும். 3 நாட்கள் அல்லது 45 நாட்கள் அல்லது
3 மாதங்கள் அல்லது 3 வருடங்கள் அதற்கான காலம். எனவே எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

ஃ வண்டிக்கு ஐந்து கை தொலைவும், குதிரைக்குப் பத்துகை தொலைவும்,
யானைக்கு ஆயிரம்கை தொலைவும், தீயவனுக்கு வெகுதொலைவும் என
விலகிச்செல்லவேண்டும்.

ஃ திரும்பப் பயிற்சி புரியாமல் கல்வியும், செரிக்காத நிலையில் உண்ணும்
உணவும், வறியவன் பலருடன் சேர்ந்து பொழுதுபோக்கலும், வயது முதிர்ந்த
வனுக்கு பருவ மங்கையும் விஷத்திற்கொப்பாகும்.


இவை சில சான்றுகள். 79 பக்கங்கள். அதிகபட்சம் இரண்டு மணிநேரத்தில் படித்து முடித்துவிடலாம். சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் அதற்குரிய சுலோகங்களுடன் அனுபவித்துப் படிக்கலாம்.>