அகன்ற தெருக்கள்
அடர்ந்த மரங்களின் நிழல்கள்
அகன்ற உயர்ந்த
பாதுகாப்புச் சுவர்கள்
பெரிய பெரிய பங்களாக்கள்
எப்போதும்
கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
குரைப்புகள்
கடக்கும்போதெல்லாம் அவற்றை...
விரட்டலுக்காக? விடுதலைக்கா?
0000
நிறைய மழை
நிறைய சோர்வு
நிறைய இருட்டு
நிறைய பேச்சுக்கள்
நிறைய சப்தம்
கண் செருகுகையில்
இறங்கவேண்டிய சந்திப்பிற்குள்
நுழைகிறது ரயில்
இதையாவது எழுது என்று
கத்திவிட்டோய்கிறது
காலடியில் சிறுநதியான மழை
00000
அவனுக்கு
எதுவும் தெரியாதென்பதை
உரத்துச் சொல்லிக்
கெர்ண்டிருக்கிறான்
எதுவாயினும் தெரியுமெனக்கு
என்பதை மௌனமாக
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
நான்.
அவனுக்கான காதுகள்
நீண்டுகொண்டேயிருக்கின்றன
எனக்கான காதுகளையும்
அறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
0000
நம்பிக்கையை
ஊசியைப் போலவும்
உழைப்பை
நெருப்பைப் போலவும்
பயன்படுத்துங்கள்
எப்போதும் ஆபத்தில்லை
எப்போதும்...
000000000