Saturday, December 31, 2011

நம்பிக்கையும் வெற்றியும்




அன்புள்ளங்களுக்கு

வணக்கம்.

வழக்கம்போல இவ்வாண்டு முடிவுற்று இன்னும் சில மணிநேரங்களில் 2012 புத்தாண்டு மலரப்போகிறது.

எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு.
எல்லோருக்கும் திட்டமிடல்கள் உண்டு.
எதையாவது செய்யவேண்டும். கடந்த ஆண்டில் இயலாததை இவ்வாண்டிலாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பும் வேகமும் இருக்கும்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைத்துக்கொள்ளலாம்.
சில உண்மைகளைப் பேசத் துணியலாம்.
அச்சங்களைப் போக்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம்.
பலரையும் நேசிக்க மனம் கனியலாம்.
வெறுத்தோரில் பலரும் நமது மனக் கனிவுக்கு கூடி வரலாம்.
எல்லாவற்றையும் கடந்து நாம் வாழத்தான் வந்திருக்கிறோம்.

இயற்கைக்குத் தப்பி...புயலுக்குத் தப்பி...மழைக்குத் தப்பி...பல பறவைகளுக்குத் தப்பி...பூவாகி..காயாகி..கனியாகி கைக்குக் கிடக்கிற பழங்களைப்போலவே நமது வாழ்க்கையும் வாய்த்திருக்கிறது நமக்கு வாழ.

இயல்பாய் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். ஏக்கமும் வேண்டாம். திட்டமிடல்கூட வேண்டாம்.

நேர்மை. நம்பிக்கை. உழைப்பு இது போதும்.



நம்பிக்கை அழுத்தமான வேரைப் போன்ற நம்பிக்கை எல்லாவற்றையும் நமக்கு ஈட்டித்தரும்.

வாழுகிற ஒவ்வொரு தருணத்தையும் அது எதுவாக இருப்பினும் அந்த உணர்வில் அதனை அனுபவித்து கடப்போம்.

கடவுள் நம்பிக்கையுள்ளோர் அதனை இறுகப் பற்றலாம்.

எல்லோருக்கும் எல்லாமும் குறைவற நிறைநதியாய் நிறைந்து பெருகட்டும். வளமான வாழ்வில் புத்தாண்டை எதிர்கொள்வோம்.

எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.

அதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது.

அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.

இப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.

நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்.

என்னுடைய மனங்கவர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை பதிவுலக நண்பர்கள்..சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்.



தீதும் நன்றும் பிறர்தர வாரா.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அவரவர் எச்சத்தாற் காணப்படும்.

மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.

அன்பே சிவம்.

Monday, December 19, 2011

பகிரல்....

00000000
00000000

தமிழகத்தின் எல்லா இதழ்களும் வெகுஜன இதழ்களும் சரி...இலக்கிய இதழ்களும் சரி ஒருமித்த கருத்தை அதனதன் போக்கில் எடுத்துக்கூறியுள்ளன. கூடங்குளம் பிரச்சினையை. எப்படியாயினும் இது ஆபத்தை விளைவிப்பது என்பதுதான் அதன் சாராம்சமாக உள்ளது. எந்த ஒன்றும் மானிட இனத்தை மையப்படுத்திதான் அமையவேண்டும். அந்த மானிடர்க்குத் துன்பம் தரும் ஒன்றை மத்திய அரசு ஏன் விடாப்பிடியாய் கொண்டுவர நினைக்கிறது.

•••••••••
•••••••••

எல்லா அரசியல் முரண்களுக்கிடையிலும் விமர்சனங்களுக்கிடையிலும் தன் கொள்கையை விடாது முன்னேறுகிறது அரிமா அன்னா உறசாரே. வாழ்த்துக்கள்.

00000000
00000000

மதிப்பிற்குரிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஒரு பொதுவான வேண்டுகோளை இன்றைய செய்தித்தாளில் தமிழக மக்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதே செய்தித்தாளில்தான் ஐயப்பத் தரிசனம் செல்லும் வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரு மாநிலங்களிலும் இருதரப்பு மக்களும் பாதுகாக்கப்படவேண்டும்.

•••••••••
•••••••••

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் பெண்கள் இடம் பெறாமல் எந்த விளம்பரமும் இல்லை. இதுகுறித்த கருத்தாக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. சமீபமாக ஒரு சில விளம்பரங்கள் மனதைக் காயப்படுத்துகின்றன. ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு வானிலிருந்து வாளோடு வானத்திலிருந்து ஒரு பெண் குதிப்பது போன்ற விளம்பரம். இன்னொன்றில் பள்ளத்தில் சிக்கிகொண்ட லாரியைக் கூந்தல் கட்டி இழுத்து வருவது. விளம்பரத்தில் குறைந்த பட்சம் நியாயமாவது இருக்கவேண்டும்.

•••••••••
•••••••••

இது அரசியல் அல்ல. பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த நாள் இன்று. 90 வயதை நிறைவு செய்திருக்கிறார். இதுவரை எந்த முரணிலும் சிக்காதவர். 90 வயது பெரிய வயது. ஆச்சர்யம்.

0000000000
0000000000

ஒரு சின்ன அனுபவம். நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நாமக்கல்லில் இருந்தேன். அலுவல்பணி. மாலையில் நாமக்கல் ஆஞ்சனேயரைத் தரிசித்துவிட்டு தங்கத் தேரை இழுத்துவிட்டு எதிரில் இருக்கும் நரசிம்உறரையும் தரிசித்துவிட்டு கீழேயுள்ள மண்டபத்தின் இருளில் அமர்ந்திருந்தேன். தனிமையில். நண்பர்கள் மேலே தரிசனத்தில் இருந்தார்கள். அப்போது வளர்ந்த தாடியுடன் நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வந்து என்னருகே மண்டபத்தில் அமர்ந்து ஒரு 10 ரூ கொடேன் போஜனத்திற்கு என்றார். எதுவும் பேசாமல் எடுத்துக்கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சற்றுநேரம் என்னைப் பார்த்துவிட்டு மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம்.

000000000
000000000

Monday, December 12, 2011

நினைவுபடுத்தல்


வணக்கம்.

இவருடைய இயற்பெயர் சுப்பையா. சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

தனது ஞானத்தால் 11 வயதில் பாரதி பட்டம் பெற்றவர். பின்னாளில் உலகம் போற்ற மகாகவி என்றழைககப்பட்டவர்.

சுதந்திர தாகத்தையும் நாட்டின் விடுதலையையும் மனதில் இருத்தி கடைசிவரை வறுமையில் இருந்து ஒரு யானை காரணமாக இறந்துபோனவர். சின்ன வயதில் இறந்துபோனவர்.

இவருடைய கவிதைகள் மிகச் சிறந்தவை என்று சொல்கிறார்கள். போற்றுகிறார்கள்.

இவர் பிறந்த தினம் நேற்றுதான். அதாவது திசம்பர் 11 வது நாள் 1882 ஆம் ஆண்டு. செப்டம்பர் 11 ஆம் நாள் 1921 இல் இறந்துபோனார்.

பலருடைய பிழைப்பு இவரது கவிதைகளால் நடக்கிறது.

இளைய பருவத்தில்தான் இறந்துபோனார். இளைஞர்கள் திசைகள் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. காலம்தான் இவர்களை மீட்டெடுக்கவேண்டும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி...

Monday, December 5, 2011

தமிழ் வாழ்க




ஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் பேருண்மைகளுக்கு அடித்தளமானது. அதற்கான வேர் மிகமிக ஊடுருவிய ஆழம் கொண்டது. தமிழ் பேசும் யாவரும் பெருமை கொள்ளத்தக்கப் பண்புகளை என்றைக்கும் அழியாமல் கன்னித்த்ன்மையோடு கொண்டிலங்குவது தமிழ்.

தொல்காப்பியனும் வள்ளுவனும் கம்பனும் பாரதியும் எனத் தமிழின் பரப்பை ஆண்ட ஏறுகள் தமிழுக்கு என்றைக்கும் குறையாத செழுமை இலக்கியங்களைத் தந்தவர்கள். இன்றைக்கு தமிழ் மொழியை விளையாட்டு மொழிபோல பயன்படுத்துவது என்பது சாதாரணமாக உள்ளது.

நமக்குச் சோறிடும் தாயைப் புறம் தள்ளும் யாரும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. இன்றைக்கு நடிகர் தனுஷ் பாடிய ஒரு பாடல் இணையம் முழுக்க ஊடுருவி (புல்லுருவி) இளைய சமுகத்தின் வேதம் போல அது உச்சரிக்கப்படுவதாக எழுதுகிறார்கள். திரையிசைப் பாடல்களில் மொழியின் அருமையும் அமைப்பும் தெரியாத பலரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதுகிறார்கள் அதற்கு இசையும் கூட்டுகிறார்கள். தமிழின் பண்பாட்டை சிதைப்பதுபோல அவை பிறமொழிச் சொற்களின் கலப்பில் இப்படித்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்கிற பொது அறிக்கையினிடையே அவை பாடலாகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கொலைவெறி பாடலும்.

நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம் தனுஷ். ஆனால் தமிழ் பேசி தமிழ்நாட்டில் பிறந்த தமிழனின் செயல் இதுவல்ல. அமரகவிகள் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்னும் பலரும் தற்போது வைரமுத்து வாலி அறிவுமதி நா.முத்துக்குமார் எனத் தமிழின் மேன்மை சொல்லும் பாடலாசிரியர்கள் மத்தியில் இப்படியொரு அறிவிலித்தனமாகப் பாடலை எழுதிப்பாடி அதுகுறித்து கூச்சமிலலாமல் காரணம் சொல்கிறீர்கள். தமிழ்மொழி ஆற்றல் மிகுந்தது. அதனை யாரும் அழிக்கமுடியாது. அதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்தான் அழிந்துபோவார்கள். இதுதான் வரலாறு. இளைய வயது தமிழைப் படியுங்கள். அதன் இனிமையைச் சுவையுங்கள். அற்புதமாகப் பாடலாம் எழுதலாம். பொருள் ஈட்டுவது முக்கியமல்ல அது ஈட்டும் வழி ரொம்ப முக்கியம்.

உங்களுக்கு இது புரியுமா? என்றும்கூடத் தெரியவில்லை. ஆனால் இந்தப பாடலின் வெற்றி உங்களை கூசவைக்கவேண்டும் இனியொருமுறை இதுபோன்று அமையாதிருக்க.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு... பாரதிதாசன்.

Thursday, December 1, 2011

கொஞ்சம் அரசியல்

?



ஒன்று

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று நடைபெறும் கடையடைப்பு முழுமையாக இல்லை. பல கடைகள் திறந்துளளன. காரணம் அவர்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை போலும். இது அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வாணிபம் செய்ய வந்து நாட்டைப் பிடித்த கதையாகும். மாநில அரசுகளை வற்புறுத்தவில்லை. அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும் எதிர்காலச் சூழலில் கூட்டணியாக தேர்தல் களத்தில் நிற்கும்போது இது மாறுவதற்கு இடமிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அதற்கடுத்த நிலையிலுள்ள சிறுபான்மை பலமுள்ள கட்சிகளும் உறுதியாக இருக்கவேண்டும். எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது இதனை. இதுவே நமது வேண்டுகோள்.



இரண்டு

நிலம் விற்றல், வாங்கல், நில அபகரிப்பு இவற்றில் தமிழக அரசின் நடவடிக்கை மிகத் திருப்தியாக உள்ளது. தங்கள் வாழவின் கனவும் இலட்சியமும் ஒரு மனைவாங்கி பின் கடன்வாங்கி வீடுகட்டுதல்தான் என்றிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஆறுதலான நடவடிக்கையாகும். எனவே தமிழக முதல்வரைப் பாராட்டலாம். இன்னும் பின்வரும் சில வேண்டுகோள்களைக் கருதிப் பாரத்தால் அது இன்னும் நலம் பயக்கும்.

1. மனைவாங்குபவர் யாராக இருந்தாலும் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத்
தெரிவிக்கவேண்டும். அதற்கான வருவாய் எங்கிருந்து ஈட்டியது என்கிற
விவரம் தெரிவிக்கவேண்டும்.

2. ஓரு மனை வாங்கியவர்கள் அடுத்த மனை வாங்குவது குறிப்பிட்ட சில
ஆண்டுகளுக்குப் பின் எனக் கட்டாயமாக்கவேண்டும்.

3. மனை விற்பவர்கள் மனை வாங்குபவர்களிடம் பத்திரப் பதிவு செய்து தருவதோடு
அதன் தொடர்பான மூல ஆவணப்பத்திரங்களையும் எவ்வித வில்லங்கமும் இல்லை
என்கிற சான்றிதழையும் தொடர்ந்து குறிப்பிட்ட மனைக்குரிய கூட்டுப்பட்டா,
தனிப்பட்டா எனத் தொடர்புடைய ஆவணங்களையும் வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும். இதற்குரிய தொகையை மனை வாங்குபவர்களிடம் வாங்கிக்
கொள்ளலாம்.

4. அவ்வாறு வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் திரும்ப மனையைப் பெற்றுக்
கொண்டு உரிய தொகையைத் திருப்பியளித்துவிடவேண்டும்.

5. எக்காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலம் விளை வயல்களை மனைப்
பிரிவிற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

6. மாதத் தவணைத் திட்டம் வழியாக மனை விற்பவர்கள் பற்றிய முழு விவரங்
களை அரசு பெறவேண்டும். தவிரவும் இதில் பணம் செலுத்துபவர்களுக்கு
போடப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை அழைத்துச் சென்று காணபிக்கவேண்டும்.

7. மனைப்பிரிவுகளில் இவர்கள் ஒதுக்கும் இடங்களில் பூங்கா போன்றவற்றை
உடன் உருவாக்கித்தரவேண்டும் அதன்பின்னரே அவர்கள் பிளானை வரன்முறைப்
படுத்தவேண்டும்.


மூன்று

கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் சிறுபெண்ணிற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சந்தோஷ் என்னும் பாதிரியார் தாமாக முன்வந்து தானம் அளிக்க வந்தும் மருத்துவத் தர்மம் அனுமதிக்கவில்லை என்கிற செய்தி இவ்வார குமுதத்தில் வந்துள்ளது. வாழவேண்டும் என்று சொல்லுகிற பெண்ணை ஏன் சாக விடுகிறீர்கள் என்று அந்தப் பாதிரியார் கேட்டுள்ளார். இதில் அரசு தலையிட்டு மனிதாபிமானமிக்க முறையில் அந்த பெண்பிள்ளையை வாழ அனுமதிக்கவேண்டும்.


நான்கு

விலங்குகள் மீது பரிவுகாட்டும் புளுகிராஸ் எனும் அமைப்பிற்கு அன்பான வேண்டுகோள். நாய்களைக் கொல்லக்கூடாது எனும் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனாலும் தெருவிற்குப் பத்துநாய்கள் ஒவ்வொருநாளும் படுத்தும் பாட்டை, அதனால் பொது மக்கள் படும் இன்னல்களை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் எல்லா தெருநாய்களையும் சேகரித்து எங்காவது தனியிடத்தில் உங்கள் பராமரிப்பில் வைத்துப் பரிவுகாட்டுவது நலமாக இருக்கும் அல்லவா