Saturday, December 31, 2011
நம்பிக்கையும் வெற்றியும்
அன்புள்ளங்களுக்கு
வணக்கம்.
வழக்கம்போல இவ்வாண்டு முடிவுற்று இன்னும் சில மணிநேரங்களில் 2012 புத்தாண்டு மலரப்போகிறது.
எல்லோருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு.
எல்லோருக்கும் திட்டமிடல்கள் உண்டு.
எதையாவது செய்யவேண்டும். கடந்த ஆண்டில் இயலாததை இவ்வாண்டிலாவது செய்யவேண்டும் என்கிற முனைப்பும் வேகமும் இருக்கும்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம். குறைத்துக்கொள்ளலாம்.
சில உண்மைகளைப் பேசத் துணியலாம்.
அச்சங்களைப் போக்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வாய்க்கலாம்.
பலரையும் நேசிக்க மனம் கனியலாம்.
வெறுத்தோரில் பலரும் நமது மனக் கனிவுக்கு கூடி வரலாம்.
எல்லாவற்றையும் கடந்து நாம் வாழத்தான் வந்திருக்கிறோம்.
இயற்கைக்குத் தப்பி...புயலுக்குத் தப்பி...மழைக்குத் தப்பி...பல பறவைகளுக்குத் தப்பி...பூவாகி..காயாகி..கனியாகி கைக்குக் கிடக்கிற பழங்களைப்போலவே நமது வாழ்க்கையும் வாய்த்திருக்கிறது நமக்கு வாழ.
இயல்பாய் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். ஏக்கமும் வேண்டாம். திட்டமிடல்கூட வேண்டாம்.
நேர்மை. நம்பிக்கை. உழைப்பு இது போதும்.
நம்பிக்கை அழுத்தமான வேரைப் போன்ற நம்பிக்கை எல்லாவற்றையும் நமக்கு ஈட்டித்தரும்.
வாழுகிற ஒவ்வொரு தருணத்தையும் அது எதுவாக இருப்பினும் அந்த உணர்வில் அதனை அனுபவித்து கடப்போம்.
கடவுள் நம்பிக்கையுள்ளோர் அதனை இறுகப் பற்றலாம்.
எல்லோருக்கும் எல்லாமும் குறைவற நிறைநதியாய் நிறைந்து பெருகட்டும். வளமான வாழ்வில் புத்தாண்டை எதிர்கொள்வோம்.
எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.
அதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது.
அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.
இப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.
நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்.
என்னுடைய மனங்கவர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை பதிவுலக நண்பர்கள்..சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அவரவர் எச்சத்தாற் காணப்படும்.
மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு.
அன்பே சிவம்.
Subscribe to:
Post Comments (Atom)
நம்பிக்கையைத் தொடர்ந்தே வரும் வெற்றி என்பதை
ReplyDeleteமிக அழகாகச் சொல்லிப் போனது பதிவு
நல்லதையே நினைப்போம்
நிச்சயம் நல்லதே நடக்கும்
அருமையான வருடத் துவக்கம்
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
//எல்லாமும் உடனடியாக கைக்குக் கிடைத்துவிடில் அதில் சுவையில்லை. அப்படியெதுவும் வாழ்வில் கிடைப்பதுமில்லை. இருப்பினும் பல்வேறு இடர்களுக்கிடையிலும்..சிறு துன்ப நிகழ்வுகளுக்கிடையிலும்.. சிக்கல்களுக்கிடையிலும்.. கிடைத்த வாழ்வைத்தான் பல சாதனையாளர்களும்..சரித்திர நாயகர்களும்...வாழ்வில் வெற்றிபெற்றவர்களும் பேசவும் எழுதவும் கண்டிருக்கிறோம்.
ReplyDeleteஅதில்தான் வாழ்க்கையின் சுவை இருக்கிறது. அதில்தான் முழுநிறைவும் இருக்கிறது//
உண்மை. அனுபவித்தவன் என்ற வகையில் வழிமொழிகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அடர்ந்த அனலுக்கிடையில் பதமாகும் சுவையாகும் உணவைப்போலவே அது அமைகிறது.
ReplyDeleteஇப்படியே இந்த வாழ்வு இருந்தால் போதும்.
நம்முடைய நம்பிக்கையும் உழைப்பும் எல்லாவற்றையும் தரட்டும்//
நிறைவான வரிகள்...
என் மனதை அப்படியே படம் பிடித்த வரிகள். என் மனைவியிடம் படித்துக் காட்டினேன். என்ன இது நீங்கள் சொல்வது போலவே எழுதி இருக்கிறார் என்றாள்.
ReplyDeleteமனம் நிறைவாய் உள்ளது .
புத்தாண்டு வாழ்த்துக்கள்.