Sunday, July 19, 2020


குறுங்கதை… 11
                        கதை டீச்சர்
                                                 ஹரணி 

            வங்கி ஏடிஎம் இருக்கிற தெரு அது. தெருவின் கடைசியில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு முன்னதாக சிறிய ஆஞ்சநேயர் கோயில் அதற்கு முன்னதாக அந்த வங்கி ஏடிஎம். பணம் எடுப்பதற்கு விநாயகன் அந்த தெரு வழியாகத்தான் செல்வது வழக்கம்.

             தெருவின் முனையில் திரௌபதையம்மன் கோயில். அந்தக் கோயில் படிகளைக் காப்பதுபோல இருபுறமும் சின்ன முக்கால் அடி சுவர். திண்ணைபோல அமர்ந்துகொள்ளலாம்.

             கட்டிட விரிசலில் முளைத்துத் துருத்திக்கொண்டிருக்கும் செடியைப்போல அந்த வயதானவள் கோயிலின் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டேயிருப்பாள். விநாயகன் போகும்போது மட்டும் அவனைப் பார்த்து சிரித்து ஏதோ சொல்ல நினைப்பாள். ஆனால் அவன் அதைக் கவனிக்காமல் கடந்துபோய்விடுவான்.

           விநாயகனின் மகளைச் சிறுவயதில் பள்ளிக்கு அழைத்துப்போன ஆயா அவள். வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளித்தான் அந்த ஆங்கிலத் தொடக்கப்பள்ளி இருந்தது. அங்குதான் சேர்த்திருந்தான். மிகவும் சரியாக இருப்பாள். ஆனால் அப்போதிருந்தே எதையாவது பேசிக்கொண்டேதான் அழைத்துப்போவாள். தன்னுடைய குடும்பம் பற்றி, நியாய அநியாயங்கள் பற்றி காற்றில் சொல்லிக்கொண்டுபோவாள் ஆனால் அது அந்தப் பிள்ளைகளிடம் சொல்வதுபோல இருக்கும்.

           இப்போது விநாயகனின் மகள் திருமணமாகியே போய்விட்டாள். இந்தப் பாட்டி இருக்கிறாள். எப்படியும் எண்பதைக் கடந்திருப்பாள்.

              அன்று போகும்போது மகளின் பெயரைச் சொல்லி தென்றல் அப்பா நில்லுங்க.. என்று கூப்பிட்டாள்.

              உடனே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விநாயகன் அருகில் போய் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து அவளிடம் நீட்டினான். இதற்குத்தான் கூப்பிட்டிருப்பாள். அடிக்கடிக் கொடுத்திருக்கான்.

             வேண்டாம்பா பணம் என்றாள்

             ஏன் பாட்டி எதாச்சும் வாங்கிச் சாப்பிடேன் என்று மறுபடியும் நீட்டினான். மறுபடியும் அவள் மறுத்தாள்.

             எதுவுமே சாப்பிட முடியலப்பா.. அவ்வளவுதான் எல்லாத்தையும் தள்ளிடிச்சி.. மிச்சம் நான்தான்.. என்னத்தான் இன்னும் ஆண்டவன் தள்ளாம தள்ளாட வைக்கிறான்..

            சொல்லுங்க பாட்டி என்ன வேணும்? எதுக்குக் கூப்பிட்டிங்க..

            தென்றல் நல்லாயிருக்கா.. கல்யாணம் ஆயிடிச்சி.. மாப்பிள்ளை தம்பி நல்லா வச்சிருக்காரா.. நம்ப புள்ள ரொம்ப சாதுவாச்சே என்று பேசிக்கொண்டேபோனாள். விநாயகனுக்கு சற்று எரிச்சல் ஊட்டியது. நேரத்தை வீணாக்குகிறாளே கிழவி என்று.

            எல்லாரும் நல்லா இருக்கோம்.. என்ன செய்தின்னு சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேலையிருக்கு பாட்டி என்றபடி அவள் மறுத்துவிட்ட பத்துரூபாயை பையில் வைத்தபடி கேட்டான்.

             ஒண்ணுமில்லப்பா.. என்னோட சாவுக்குத் தென்றல அழச்சிட்டு வாப்பா என்றாள் திடீரென்று.

             என்னது உன்னோட சாவுக்கா.. என்னாச்சு கிழவிக்கு.. கிறுக்குப் புடிச்சிருச்சா.. ஏம்பாட்டி என்னாச்சு இப்படி பேசறே அதுவும் கோயில்ல உக்காந்துக்கிட்டு..

             உள்ளே திரௌபதையைக் காட்டி.. அவதான் வழி காட்ட மாட்டேங்குறாளே… எம்பொண்ணு.. போனமாசம் செத்துப்போயிட்டா.. அவளோட புள்ளங்க.. நாலு பேத்தி இருக்குங்க.. அதது அதது குடும்பம் புருஷன் புள்ளன்னு போயிடிச்சி.. மருமவப்புள்ள யாரேயோ சேத்துக்கிட்டான் இந்த வயசுல… எல்லாம் இருந்தும் எப்படியும் அநாதைப் பொணந்தான்.. நான்.. இப்ப வேற என்னமோ பரவுதுன்னு கூட்டம் வரக்கூடாதுன்னு சொல்றாங்க..

            அதுக்கென்ன பாட்டி.. இருக்கறவரைக்கும் கவலையில்ல.. எல்லாருக்கும் சாவு வரத்தான்போவுது.. அது வர்றப்ப வரட்டும்.. என்றான் விநாயகன்.

            இல்லப்பா.. சாவு சொல்லிக்கிட்டு வராது.. ஆனா வந்துடும்.. தென்றல் மாதிரி நான் பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் வுட்ட புள்ளங்களோட அப்பாங்கக்கிட்ட சொல்லியிருக்கேன்.. அதுங்களும் எனக்குப் பேத்தி மாதிரிதான்.. நான் செத்தா வந்து எனக்கு நெய்ப்பந்தம் புடிக்கணும்.. அதுக்குத்தான் முன்கூட்டியே சொல்லி வச்சேன்.. செத்துப்போயிட்டா சொல்லமுடியாதுல்ல என்று சொல்லி சிரித்தாள் பாட்டி.

          இதெல்லாம் நடக்கிற காரியமா என்று  மனதுக்குள் நினைத்துக்கொண்டு அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சரி பாட்டி என்று அவள் ஆறுதலுக்காகச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.

           அன்றிரவு மகள் பேசினாள் போனில். செய்திகளுக்கிடையில் விநாயகன் பாட்டி குறித்துச் சொன்னான்.

             உடனே மகள் உற்சாகமாய்.. அப்பா.. அந்தக் கோயில் பாட்டிதானே நல்லாருக்கா.. இத்தனைவயசுக்குக் கண் அதுக்கு நல்லாத் தெரியும்பா.. அந்தப் பக்கம் போனா என்னைக் கூப்பிட்டுப் பேசும்பா.. பள்ளிக்கூடத்துக்குப்போவுமபோது அத்தனை கதை சொல்லும்பா.. செத்துக்கித்துப் போயிட்டா ஒரு வார்த்தை எனக்குச் சொல்லிடுப்பா அவசியம் வரணும்பா.. அது எனக்குக் கதை டீச்சர்பா என்றாள் மகள்.


                  00000