Tuesday, February 21, 2012



                 என் அன்பிற்கினிய பதிவர்களுக்கு...

                                பேருந்து நாவலின் நான்காவது அத்தியாயத்தை நியாயப்படி 14.2.2012 அன்று பதிவிட்டிருக்கவேண்டும். தொடர்ந்து வகுப்புகள் எடுக்கும் பணிச்சூழலில் பயணங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன ஓய்வெடுக்க முடியாமல். எனவே இரு வாரங்கள் கடந்துவிட்டன. மார்ச் முதல் வாரத்தில் மட்டுமே இனி பதிவிடும் சூழல். எனவே நாவலை வாசித்து கருத்துரைக்கும் அன்புள்ளங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். மார்ச் முதல் வாரத்தில் இதனை ஈடுகட்டிவிடுவேன் என நம்புகிறேன். நன்றிகள்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


                                           என்ன நியாயம் இது சந்திரா?
                                                                                    (நியாயம் கேட்கும் குட்டிக்கதை)


                     மனசுக்குள் புழுங்கிக்கொண்டிருந்தான் சந்திரசேகர். மறுபடியும் மறுபடியும் அனலில் வாட்டப்படும் திடப்பொருளாய் மனசு நொந்துபோயிருந்தான்.

                         உலகத்தில் நியாயம் என்பது நல்லவர்களுக்கு எப்போது எட்டாக்கனியா? அதை எதிர்பார்ப்பது தவறா? என்பதுபோன்ற பல கேள்விகள் அவன் நிம்மதியையும்...மனதையும்,,,மகிழ்ச்சியையும் அரித்துக்கொண்டிருந்தன கரையான்களைப்போல...
     
                        எதிர்பார்க்கவில்லை சியாமளா இப்படி செய்வாள் என்று.

                        ஒரு ஆண்டு இல்லை  கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்து.. பல்வேறு எதிர்ப்புக்களிடையே இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

                       நான் சாதிக்கப் பிறந்தவன் சாகமாட்டேன் என்று சத்தியம் செய்து உழைத்துக்கொண்டிருந்தான் இரவுப்பகலாய்...

                       அதுதான் தவறாயிற்று..

                        எதிர்வீட்டிற்கு குடிவந்தான் வெங்கடேசன் அவன் மனைவியுடன். அவன் மனைவி அழகில் குறைந்தவள் இல்லை. இவனும்  அழகில் குறைந்தவன் இல்லை.

                        எதிர்வீடு என்பதால் அறிமுகம் செய்துகொண்டது தவறாயிற்று.

                         சியாமளா நம்பிக்கைத் துரோகம் செய்தாள்.

                        அவளுக்கு சந்திரசேகர் இல்லாத இரவுகளில் வெங்கடேசன் ஆக்கிரமித்துக்கொள்ள இடம்கொடுத்தாள்.

                          விஷயம் தெரிந்ததும் துடித்து துவண்டுபோனான் சந்திரசேகர். அதைப்பற்றி கவலைப்படவில்லை சியாமளா. நாள் முழுக்க சொற்போர் நடந்தது எந்த முடிவும் ஏற்படாமல்.

                           வெங்கடேசனின் மனைவியும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆம்பிள்ளை அப்படித்தான் இருப்பான். பெண்தான் சரியாக இருக்கவேண்டும் என்று ஒரு தத்துவம் பேசிவிட்டு இயல்பாகிப் போனாள்.

                           பன்னிரண்டு வருட குறிஞ்சிப்பூ அன்பை உதறமுடியவில்லை. வெளியில் காட்டிக்கொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு விபரீத முடிவு எடுத்தான். அதன்படி மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய வம்சம் இனி இல்லாது போகட்டும் என்று குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டு வந்துவிட்டான்.

                          இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றார்கள். இதென்ன நியாயம் சந்திரா? என்று பலர் கேட்டார்கள்.

                            மனதாரக் காதலித்தேன். அந்த அன்பைக் கொன்றுவிட்டாள். அவளோடுதான் நான் வாழவேண்டும் எல்லாவற்றையும் உதறினேன். அவளுடைய இந்த செயலால் இனி அவளுக்கு என்னால் ஒரு வாரிசு உருவாகக்கூடாது..சரியான அன்பை உணராமல் வாழ்ந்துவிட்ட செயலுக்காக நான் என் வம்சத்தையே அழித்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்..

                            கண்ணீரால் உதிர்த்து சொன்னான்.

                            என்ன நியாயம் சந்திரா? என்று நானும் கேட்க நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போது அவன் முகத்திற்கு நேராய் கேட்க முடியாமல் போகிறேன்.