வாழ்க்கையின் சொற்கள்
இறைந்துகிடக்கின்றன...
சொல்.... சோறு...... பதம்..... சிரிப்பு.....
அழுகை... நம்பிக்கை....
வெற்றி....
தோல்வி,,,,.
தண்ணீர்... . கண்ணீர்....
சிதைவு... சரிவு... சத்தியம்...
மௌனம்.. . மகிழ்ச்சி....
கசிவு... அன்பு... பரிவு... ஏக்கம்...
எதிர்பார்ப்பு...
. எளிமை....
துடிப்பு....
... சகிப்பு...
தகிப்பு... .முயற்சி.... இறுதி...
தொடக்கம்...
யாருக்கு எது கிடைக்கும்?
யாருக்கு என்ன தெரியும்?
அவரவர்க்கு அவரவர்க்குரியது ஒரு வாழ்க்கை.
அது அந்த வாழ்க்கைதானா?
உறுதி செய்யமுடிவதில்லை ஒருபோதும்
ஒதுங்கிவிடவும் முடிவதில்லை வேண்டாமென்றும்...
வாழ்ந்துதானே ஆகவேண்டும்
நம்முடையதல்லாதிருந்தாலும்
நம்முடையதாகவிருந்தாலும்
கழிகிறது கட்டற்று....பெருக்குகிறது
தேவையானதுட்படவும்...வகுக்கிறது
வகுபடாதிருக்கும் நிலையிலும்...
கூட்டுகிறது எதுவாயினும் ஒதுக்கியபின்னரும்
இந்த என்றைக்கும் விடைகாணமுடியாத
கணக்கின் கணத்தில் அசைகிறது
வாழ்க்கை கணக்கில்லாமல்....
கட்டுப்படாமல்...
ஆனால்
கணக்கிற்குட்பட்டதுபோலவும்
கட்டுப்பட்டிருக்கிறேன் என்று உறுதிமொழி
அளித்ததுபோலவும்
கடைசிவரைக்கும்....
எனினும்
வாழ்தல்தானே வரம்....
சுகம்...உரம்...பதம்...பரிபூரணம்...
ஓம் சாந்தி....ஓம் சாந்தி... ஓம்சாந்தி...