கொரோனாக் காலம்…..
தொடர்க் குறுங்கதைகள்…. ஹரணி
000
கதை 1
அம்மா வயது 83
அம்மாவிற்கு இப்போது 83 வயது நடக்கிறது.
எந்த நோய்க் கோளாறுமில்லை அவளுக்கு. அப்பா பற்றிய நினைவுதான். இன்னமும் கண் பார்வை
நன்றாகத் தெரிகிறது. கொல்லையைக் கூட்டிப் பெருக்குகிறாள். மரத்தில் நார்த்தங்காயும்
எலுமிச்சைப் பழமும் பறித்து வைக்கிறாள். அக்கா வீட்டிற்கு என் வீட்டிற்கு என்று பிரித்து
ஊறுகாய் போட்டு வைக்கிறாள்.
அம்மா போட்ட ஊறுகாய் என்று நினைத்தாலே
வாயில் எச்சில் ஊறுகிறது.
தானாக சமைக்கிறாள். அடிக்கடி அவள் வைக்கும்
குழம்புகள் வாழைக்காய் மொச்சைக்காய் நெத்திலி கருவாடு தேங்காய் துண்டுகள் போட்டு வைக்கும் கருவாட்டுக்குழம்பு.
கத்தரிக்காய் அப்படியே நான்காகப் பிளந்து
ஒட்டு மாங்காய் துண்டுகள் போட்டு வைக்கும் பருப்புக்குழம்பு. தொட்டுக்கொள்ளப் புடலங்காய்ப்
பொரியல் அல்லது முருங்கைக் கீரைப் பொரியல்.. இதுதான்.
சாப்பிட வா என்பாள். வரவில்லை என்றாள்
அதை சுடச்சுடத் தூக்கிக்கொண்டு வருவாள்.
ஐந்து குழந்தைகளைப் பெற்று எல்லாருக்குமான
வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்து இப்போது வாழும் பூர்வீக வீட்டில் அவளும் தனிமையும்தான்.
அந்த வீடு அவளின் ராஜ்ஜியம். அதில் அவள்தான் இன்றைக்கும் ராணி. அப்பாவின் பென்ஷன்தான்
ராஜ்ஜிய நிருவாகத்திற்கு.
கொரோனா அதிகம் வயதானவர்களைப் பாதிக்கும்
கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதால் அவளுக்கு நிறைய சோப்புகள், சானிடைசர்கள்,
கையுறைகள் போன்றவை வாங்கித் தந்து எப்படி எப்படிப் பயன்படுத்தவேண்டுமென்று நானும் அக்காவும்
அக்காவின் பிள்ளைகளும் தினமும சொல்லிக்கொடுத்து வந்தோம்.
ஆனால் ஒன்றைக்கூடப் பயன்படுத்தவில்லை.
எல்லாவற்றையும் ஒருநாள் ஒரு பையில் போட்டு
வந்து என் மனைவியிடம் தந்தாள்.
இங்கதான் இருக்கே?
இருந்தா என்ன? இத்தன வயசு வரைக்கும்
ஆண்டவன் கொடுத்ததே போதும்.. ஒரு நோய் நொடி இல்ல.. இனிமேலும் வராது. அந்தக் காலத்திலேர்ந்து
ரெண்டு வேளை குளிப்பேன். எந்த வேலை செஞ்சாலும் உடனே கை, கால் சோப்பு போட்டுக் கழுவிட்டுதான்
துடைப்பேன். பசிக்குதோ பசிக்கலையோ நேரத்துக்கு ரெண்டுவாய் சாப்பிட்டுடுவேன்.. உங்க
மாமா என்னைவிட குறச்ச வயசுலேயே போய்ட்டாங்க.. எல்லாமும் அவங்க சொல்லிக்கொடுத்ததுதான்..
அவங்க வயசத் தாண்டி நான் வாழறது கூடுதல்தான்.. என்னா மகமாயிகிட்ட வேண்டறேன்.. அப்படியே
படுத்தமான்னு போயிடணும்.. யாருக்கும் தூக்குனேன் கழுவினேன்.. சுத்தம் பண்ணேன்னு சொல்லக்கூடாது..
எனக்கு எதுவும் வராது. சுத்தமா இருக்கறேன்.. சுத்தமாத்தான் சாவேன்..என்றபடி
படியிறங்கி வேகமாய் நடந்தாள்.
(நாளை இன்னொரு கதையில் சந்திக்கலாம்)