இந்த கதை கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்பு படித்தது. எங்கே படித்தேன் என்று நினைவில் இல்லை. காரணம் இந்தக் கதை இன்னும் மனசை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இப்படியும் கதை எழுத முடியுமா என்று தெரியவில்லை. உங்களின் பகிர்தலுக்கு.
அந்தப் பெண் இளம் வயது. ஆனால் கரையான் புற்றுப்போல அவள் உடல் முழுக்க வறுமை புற்று வைத்திருந்தது. பிச்சை எடுத்து பிழைப்பவள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று பால்குடிக்கும் குழந்தை. இன்னொன்று அதைவிட 1 வயது பெரியது. ரயிலில் பிரயாணம் செய்து பிச்சை எடுப்பவள்.
ஒரு நாள் இரவுநேரம் அமாவாசை நேரம் என்று வைத்துக்கொள்ளலாம். தனது இருகுழந்தைகளுடன் பயணம் செய்கிறர்ள். பசித்த வயிறு. பால் குடிக்கும் குழந்தை பசிக்கு அழுகிறது. பேசாதிருக்கிறாள். காரணம் பசிக்கிற குழந்தைக்குப் பால் கொடுக்கமுடியாத அளவிற்கு வறுமையான தேகமும் வற்றிய மார்புகளையும் உடையவள். எனவே பசிக்கு அழும் குழந்தை அழுதுஅழுது ஒரு கட்டத்தில் இறந்துபோய்விடுகிறது. இன்னொரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறது. இறந்த குழந்தையைக் கிடத்தி சிறிதுநேரம் அழுகிறாள். பின் ரயில் ஒரு ஆற்றைக் கடக்கையில் இறந்துபோன குழந்தையை ஆற்றில் எறிந்துவிடுகிறாள். ஏன் என்றால் இறந்த குழந்தையைப் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இயலாத நிலை.
ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நெடுநேரத்திற்குப்பின் ஒரு ஸ்டேஷனில் நிற்கிறது. இவள் இறங்கவேண்டும் என்று நினைத்து முடிவெடுத்து எழுகிறாள். உறங்கிகொண்டிருக்கும் குழந்தையைத் துர்க்கிக் கொண்டு இறங்கலாம் என்று அதனைத் தொடும்போது அது இறந்துபோயிருக்கிறது.
பதட்டத்தில் எதை எறிகிறோம் என்று தெரியாமல் இரவு நேரத்தில் அவள் ஆற்றில் எறிந்தது உயிருள்ள குழந்தையை.
இன்றைக்கும் மறக்கமுடியவில்லை இந்தக் கதையை.