Thursday, December 1, 2011

கொஞ்சம் அரசியல்

?ஒன்று

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று நடைபெறும் கடையடைப்பு முழுமையாக இல்லை. பல கடைகள் திறந்துளளன. காரணம் அவர்களுக்கு இதன் விபரீதம் புரியவில்லை போலும். இது அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வாணிபம் செய்ய வந்து நாட்டைப் பிடித்த கதையாகும். மாநில அரசுகளை வற்புறுத்தவில்லை. அவரவர் விருப்பம் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தாலும் எதிர்காலச் சூழலில் கூட்டணியாக தேர்தல் களத்தில் நிற்கும்போது இது மாறுவதற்கு இடமிருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் அதற்கடுத்த நிலையிலுள்ள சிறுபான்மை பலமுள்ள கட்சிகளும் உறுதியாக இருக்கவேண்டும். எச்சூழலிலும் அனுமதிக்கக்கூடாது இதனை. இதுவே நமது வேண்டுகோள்.இரண்டு

நிலம் விற்றல், வாங்கல், நில அபகரிப்பு இவற்றில் தமிழக அரசின் நடவடிக்கை மிகத் திருப்தியாக உள்ளது. தங்கள் வாழவின் கனவும் இலட்சியமும் ஒரு மனைவாங்கி பின் கடன்வாங்கி வீடுகட்டுதல்தான் என்றிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது ஆறுதலான நடவடிக்கையாகும். எனவே தமிழக முதல்வரைப் பாராட்டலாம். இன்னும் பின்வரும் சில வேண்டுகோள்களைக் கருதிப் பாரத்தால் அது இன்னும் நலம் பயக்கும்.

1. மனைவாங்குபவர் யாராக இருந்தாலும் அதுகுறித்த விவரத்தை அரசுக்குத்
தெரிவிக்கவேண்டும். அதற்கான வருவாய் எங்கிருந்து ஈட்டியது என்கிற
விவரம் தெரிவிக்கவேண்டும்.

2. ஓரு மனை வாங்கியவர்கள் அடுத்த மனை வாங்குவது குறிப்பிட்ட சில
ஆண்டுகளுக்குப் பின் எனக் கட்டாயமாக்கவேண்டும்.

3. மனை விற்பவர்கள் மனை வாங்குபவர்களிடம் பத்திரப் பதிவு செய்து தருவதோடு
அதன் தொடர்பான மூல ஆவணப்பத்திரங்களையும் எவ்வித வில்லங்கமும் இல்லை
என்கிற சான்றிதழையும் தொடர்ந்து குறிப்பிட்ட மனைக்குரிய கூட்டுப்பட்டா,
தனிப்பட்டா எனத் தொடர்புடைய ஆவணங்களையும் வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும். இதற்குரிய தொகையை மனை வாங்குபவர்களிடம் வாங்கிக்
கொள்ளலாம்.

4. அவ்வாறு வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் திரும்ப மனையைப் பெற்றுக்
கொண்டு உரிய தொகையைத் திருப்பியளித்துவிடவேண்டும்.

5. எக்காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலம் விளை வயல்களை மனைப்
பிரிவிற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

6. மாதத் தவணைத் திட்டம் வழியாக மனை விற்பவர்கள் பற்றிய முழு விவரங்
களை அரசு பெறவேண்டும். தவிரவும் இதில் பணம் செலுத்துபவர்களுக்கு
போடப்பட்டுள்ள மனைப்பிரிவுகளை அழைத்துச் சென்று காணபிக்கவேண்டும்.

7. மனைப்பிரிவுகளில் இவர்கள் ஒதுக்கும் இடங்களில் பூங்கா போன்றவற்றை
உடன் உருவாக்கித்தரவேண்டும் அதன்பின்னரே அவர்கள் பிளானை வரன்முறைப்
படுத்தவேண்டும்.


மூன்று

கேரளாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் சிறுபெண்ணிற்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சந்தோஷ் என்னும் பாதிரியார் தாமாக முன்வந்து தானம் அளிக்க வந்தும் மருத்துவத் தர்மம் அனுமதிக்கவில்லை என்கிற செய்தி இவ்வார குமுதத்தில் வந்துள்ளது. வாழவேண்டும் என்று சொல்லுகிற பெண்ணை ஏன் சாக விடுகிறீர்கள் என்று அந்தப் பாதிரியார் கேட்டுள்ளார். இதில் அரசு தலையிட்டு மனிதாபிமானமிக்க முறையில் அந்த பெண்பிள்ளையை வாழ அனுமதிக்கவேண்டும்.


நான்கு

விலங்குகள் மீது பரிவுகாட்டும் புளுகிராஸ் எனும் அமைப்பிற்கு அன்பான வேண்டுகோள். நாய்களைக் கொல்லக்கூடாது எனும் உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனாலும் தெருவிற்குப் பத்துநாய்கள் ஒவ்வொருநாளும் படுத்தும் பாட்டை, அதனால் பொது மக்கள் படும் இன்னல்களை ஏன் கருத்தில் எடுத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள் எல்லா தெருநாய்களையும் சேகரித்து எங்காவது தனியிடத்தில் உங்கள் பராமரிப்பில் வைத்துப் பரிவுகாட்டுவது நலமாக இருக்கும் அல்லவா