Sunday, May 28, 2017

இன்றைய தினமணி தமிழ்மணியில் என் கட்டுரை


இல்லற வாழ்வின் இணைப்புப் பாலம்


            செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் அகம் புறம் எனும் இரு பண்புநிலைகளைச் சார்ந்த பாடல்களைக் கொண்டது. இதில் அக இலக்கியம் இல்லறவாழ்வின் மேன்மையைப் பேசுவதாகும். அக இலக்கியங்களின் அடிப்படையே மாந்தர்களின் கூற்றுதான். கூற்று என்பது பேச்சு என எளிதாகப் பொருள் கொள்ளலாம். ஆனால் இந்த கூற்றுரைப்போரின் சொற்களின் பொருள்கள் மிக விரிவானவை மிகச் செறிவானவை. இதில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, பரத்தை கூற்று, நற்றாய் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று என விரியும். இவற்றில் தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வினை மேற்கொள்ள துணை நிற்பதே அகவாழ்வின் கூற்றுகளின் முதன்மையான நோக்கம். இதில் தோழி எனப்படும் பெண் செவிலித்தாயின் பெண்ணாக வருபவள். மதிநலம் மிக்கவள். துணிவானவள். கண்டிப்பானவள். அறத்தொடு நிற்பவள். எந்த தீயவிளைவுக்கும் ஆட்படாதவள். தலைவன் தலைவி இருவரும் இணைந்து இல்லறவாழ்வில் ஈடுபடுதலுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள். இவள் தலைவனிடத்தும் தலைவியிடத்தும் மிக்க அன்புடையவள். இவளின் பேச்சு நயமானது. சான்றாக தலைவனிடத்து தலைவி குறித்து தலைவியிடத்து தலைவன் குறித்தும் பேசுகிற பின்வரும் இருபாடல்கள் தோழியின் மாண்பை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல்களாகும்.
பாடல் எண். 27
            இப்பாடல் பாலைத்திணையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.  தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்துபோயிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுக்கமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதையுணர்ந்த தோழி தலைவியின் வருத்தம்போகப் பேசும் பேச்சு இது.
            தலைவன் உன் மீது மிகுந்த அன்புடையவன். எனவே அவன் அந்த அன்பை உனக்கு வழங்குவதில் தடையில்லாதவன். அவன் பாலை நிலத்து வழியாகத்தான் பொருள் ஈட்டுவதற்குச் சென்றிருக்கிறான். பாலை நிலம் வறண்டது. நீர்த்தாகம் எழ வைப்பது. என்றாலும் அங்கே அருமையான காட்சிகள் உண்டு. ஒன்றை சொல்கிறேன் கேள். தன்னுடைய இணையான பெண் யானைக்கு நீர்த்தாகம் எடுப்பதையுணர்ந்த ஆண் யானை அந்த பாலைநிலத்தில் வளர்ந்துள்ள யா என்கிற மரத்தின் நீர்ப்பட்டையை உரித்துக் கொடுக்க அதைவாங்கியுண்ணும் பெண்யானை நீர்த்தாகத்தைத் தணித்துக்கொள்ளும். இது அன்பால் நிகழும் காட்சி. இக்காட்சியை அந்நிலத்தின் வழியாகச் செல்லும் தலைவன் பார்க்கிறபோது கண்டிப்பாக உன் நினைவு வந்து விரைவில் திரும்பிவிடுவான் வருந்தாதே  என்கிறாள். இக்கருத்தைச் சுட்டும் அருமையான பாடல் பின்வருமாறு
                        நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
                        பிடிபசி களைய பெருங்கைவேழம்
                        மென் சினை யா அம் பிளக்கும்
                        அன்பின் தோழிஅவர் சென்ற வாறே
                                                                        குறு.27
(நசை – விருப்பம், பிடி – பெண்யானை, பெருங்கை வேழம் –ஆண்யானை, மென்சினை – மென்மையான கிளை, யா – மரம், ஆறு- வழி)
                        இதேபோன்று பிரிந்துபோன தலைவன் காலத்தை நீட்டிக்கிறபோது தலைவியைச் சந்திக்க வரும்போது அவனைத் தடுத்து தோழி பேசுகிறாள்.
            இது குறிஞ்சித்திணைப் பாடல். கபிலர் பாடியது.  இரவு நேரத்தில் வந்து செல்லும் தலைவனிடத்துத் தோழி பேசுகிறாள்.
            மூங்கிலால் தன்னுடைய காவல் மரமான வேர்ப்பலா மரத்திற்கு வேலியிட்டிருக்கும் மன்னனின் நாட்டைச் சேர்ந்த தலைவனே உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். அந்த காவல் மரத்தின் வேர்ப்பலா இருக்கிறதே அது பெரிய பழம். ஆனால் சிறிய காம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் வல்லமை படைத்தது. இது இயற்கையாக நடப்பது. பலாப்பழம் பெருக்கப் பெருக்க அந்த சிறிய காம்பிலேயே தொங்கும். இது இயல்பானது. ஆனால் உன்னுடைய பிரிவின் காரணமாக உன்மீது கொண்ட ஆசையானது அந்த பலாப்பழம் பெருப்பதுபோல பெருத்துவளர்கிறது. ஆனால் இந்த ஆசைஎனும் பழம் பெருப்பதோ அவளுடைய உயிர் எனும் சிறிய காம்பில். இது பலாப்பழத்தைப்போல தாங்கும் ஆற்றல் கொண்டதல்ல. உரிய காலத்தில் நீ வரவில்லை என்றால் ஆசைப்பழத்தின் பெருக்கத்தால் தாங்கமுடியாமல் உயிர்க்காம்பு முறிந்துவிடும். எனவே உடனே வந்து அவளை மணந்துகொள் என்கிறார். இந்த அற்புதத்தைப் பேசும் பாடல் பின்வருமாறு.
             வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
            சாரல் நாட செவ்வியை ஆகுமதி
            யாரஃ தறிந்திசி னோரே சாரல்
            சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங்கு
            இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே
                                                            கபிலர்
(வேரல் –மூங்கில், பலவு –பலா, கோடு – காம்பு, )
இவ்வாறு பலவிடங்களில் தோழியின் செயல்பாடு தலைவனும் தலைவியும் இல்லறவால்வில் இணைந்து வாழ்வதற்குப் பாடுபடும் அவர்களை இணைக்கும் இணைப்புப்பாலமாகவும் அமைந்துள்ளமை கண்டு வியக்கத்தக்கதாகும்.

                                                                                    முனைவர் க. அன்பழகன்

நன்றி . தினமணி - தமிழ்மணி 28.5.2017
                                                                                    
3.99 GB (26%) of 15 G