Monday, July 11, 2011
நினைவஞ்சலி
பேராசிரியர் கா.சிவத்தம்பி. நாடறிந்த தமிழறிஞர் அல்ல. உலகறிந்த தமிழறிஞர். அடிப்படையில் வரலாற்றுப் பட்டதாரியான பேராசிரியர் பின் தமிழின் மீதான தன் ஆளுமையைப் பதித்தவர். இலங்கையில் 1932 இல் பிறந்தவர். பர்மிங்காம் பல்கலையில் தனது முனைவர் பட்டம் பெற்றவர். 70 புத்தகங்களும் 200 க்கு மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியவர். பன்முக வாசிப்புத் தளங்களில் தனது ஆளுமையைப் பதித்தவர். அதனால் தமிழ் புதிய கோணத்தில் புதிய சுவாசிப்பில் வளம் பெற்றது எனலாம். இவருடைய ஆளுமையின் பதிவு தமிழின் மாறுபட்ட வழியை உருவாக்கித் தந்திருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் யாழ் பல்கலையில் பேராசிரியர் உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியர் எனப் பல பணிகள் புரிந்தவர். இவரின் பணிகள் தமிழுக்குக் கிடைத்த வரம்.
இலக்கியம், இலக்கணம், மொழியியல், திறனாய்வு, இலக்கிய வரலாறு, கவிதை எனும் நிலைகளில் தேர்ந்த ஆழமான புத்தகங்களை திறன்மிகு ஆய்வுநோக்கில் புதுமை வழியில் உலகிற்கு வெளிச்சப்படுத்தியவர். இவரின் சிந்தனைகள் மார்க்சிய நிலைப்பாட்டை வலியுறுத்தினாலும் இவரின் தமிழ்ப்பணிகள் யாரும் இட்டு நிரப்பமுடியாத சிந்தனைப் போக்குகளைக் கொண்டவை. இவரின் 79 வயதில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இவரின் சிந்தனைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தமிழாய்வு மட்டுமின்றி தமிழ் மொழியின் பல பரிமாணங்கள் உலகின் இருட்பகுதிகளை வெளிச்சமாக்கும் ஆற்றல்கெர்ண்டவை என்பதை உணர்ந்தாலே அது அவரின் ஆன்மாவிற்குச் செய்யும் கடமையாகும்.
மிகச்சிறந்த தமிழ் நுர்ல்கள் மறைந்துபோனதை வரலாறு தெரிவிக்கிறது. இவரும் மறைந்துபோன பேரிலக்கியம்தான். தமிழுக்குப் பேரிழப்புதான். இவரின் தகைமை இனியாவது உரிய நிலையில் போற்றப்படவேண்டும் என்பதுதான் தமிழாய்வாளர்கள் செய்யவேண்டிய தலையாயப் பணியாகும்.
06.07.2011 புதன்கிழமை இரவு தனது தமிழ்த்தொண்டை முடித்துக்கொண்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.00 மணிக்கு எரியூட்டல் நடைபெறுகிறது. அவரது ஆன்மா அமைதிகொள்ளட்டும்.
தமிழின் ஒரு சகாப்தம் கா.சிவத்தமபி.
Subscribe to:
Posts (Atom)