சகோதரியே...
உனக்கிட்ட வாழ்வு
பிச்சையென்று வரமானது
யார் குற்றம்?
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
ஏந்திய கைகளில்
என்ன விழுமோ? அதுதான்..
அன்றைய நாளை
செலவழிக்க,,,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உங்களுக்குத்தான் பாடப்பட்டதோ?
எத்தனை பேர்?
பத்து ரூபாய்
போட்டவன் சில்லறை மாற்றிப்
போட்டிருக்கலாம்,,
உன் பங்கு இரண்டு ரூபாய்க்கு
அதிகமில்லை ஆனால்
அதை அனுபவிக்க நீ கொடுத்தது
இம்முறை உயிரை,,,
அம்மா,, தாயே பிச்சை போடுங்க
என்று கேட்டதை யாரென்று
பார்க்காமல் விட்டுவிட்டாய்..
எமனிடம் கேட்டால் என்ன தருவான்
மரணத்தைத் தவிர?
கடவுளின் காலடியில்
பிச்சை கேட்டவளுக்கு
மரணத்தைப் பிச்சைபோட்டவன்
சாட்சிக்கு அந்தக் கடவுளே,,,
சகோதரியே பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்..
வள்ளுவன் கூட வஞ்சனையாகத்தான்
எழுதியிருப்பானோ?
கடவுளின் பிச்சையாகத்தான்
நீ போகிறாய்...
குறிப்பு.
இன்றைய செய்தித்தாளில் பத்து ரூபாய் பிச்சைக்காசைப்
பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணைக்
கொலை செய்துவிட்டார்கள். அதன் விளைவு இந்தக் கவிதை.