Thursday, June 9, 2011

சில சிந்தனைகள்.......முடிந்த மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி நடக்கு மாதத்தின் இன்றுவரை சில மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வயதாகிப்போன என்னுடைய சித்தி. என்னுடைய படைப்பாள நண்பர்கள் இருவரின் அப்பாக்கள்.

வயது தளர்வு தவிர்க்கமுடியாதது என்றாலும் என்னுடைய சித்தப்பா இறந்துபோய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் தன்னுடைய இரு பிள்ளைகள் வீட்டிலும் வேறு எந்த உறவு வீட்டிலும் வந்து தங்காமல் என்னுடைய வயிற்றுக்கு உழைத்துக்கொள்கிறேன் என்று சாகின்ற கடைசி நிமிடம் வரை தனியார் கடையில் வேலைபார்த்து அதில் சேமித்து தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்குத் தவறாது செய்து யார் அழைத்தும் அவர்கள் அழைப்பையும் மறுத்து கடைசிவரை தன்மானத்துடன் உழைத்து உயிர்விட்ட அவர்களின் மரணம் பத்தோடு பதினொன்றாக இல்லை எனக்கு.

இரு படைப்பாள நண்பர்களும் கவிஞர்கள். ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். இன்னொருவர் அச்சகமும் பதிப்பகமும் இலக்கியச் சிற்றிதழும் நடத்தி வருபவர். மரணம் என்பது தவிர்க்கமுடியாதது என்றாலும் படைப்பாளர்களின் அப்பாக்கள் இறக்கும்போது அது ஏற்படுத்தும் தயரம் சற்று கூடுதலானது. அது அனுபவித்துப் பார்த்தால் தெரியும். ஒரு சாதாரண மனிதனின் தந்தை இறக்கும்போது அது தனி துயரமாகிறது. ஒரு படைப்பாளனின் தந்தை இறக்கும்போது அது இலக்கியமாகிறது என்பது என்னுடைய அனுபவம். என்னுடைய அப்பா குறித்து ஒரு நாவலை முடிக்கும் நிலையில் இருக்கிறேன். அதுமட்டுமல்ல சாதாரண மனிதனைக் காட்டிலும் ஒரு படைப்பாளனை இலக்கிய ஆளுமையை உருவாக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஒரு தந்தையின் உயிரும் உடலும் அணுவும் அதில் பின்னிப்பிணைந்தேயிருக்கிறது. அப்பா திடீரென்று இறந்துபோன அந்த தருணத்திலிருந்து ஒடிந்துபோயிருக்கிறார்கள். அந்த தருணத்திலிருந்து அவர்களை மீட்டுவிடும் காலம் என்றாலும் அதுவரை நிரம்பியிருக்கும் வெறுமை எதனாலும் மீட்கமுடியாதது என்பதுதான். இருவரின் அப்பாக்கள் ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்.

இலவசம் என்கிற சொல்குறித்து நிறைய யோசிக்கிறேன். குருகுலக் கல்வியில் மனமுவந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வியை தலைமுறைகளுக்கு இலவசமாய் தந்திருக்கிறார். தங்களின் அனுபவங்களைப் பலர் ஏடுகளிலும், கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் இலவசமாக தந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அயல்நாட்டுப் பெண்களைச் சிறைப்பிடித்தும் கொள்ளையடித்தும் தாலியறுத்தும் சேகரித்த பொருள்களை இலவசமாகத் தன்னுடைய மக்களுக்காகவும் தன்னுடைய புகழுக்காகவும் இலவசமாக வாரியிறைத்த வேந்தர்களும் மன்னர்களும் உண்டு. வாசலில் பசித்து நின்றவனுக்குப் பசியாற இலவசமாய் உணவு தந்து குளிர்ந்தவர்கள் உண்டு. இதனையே கூட்டங்களுக்குப் போட்டு விளம்பரப்படுத்திய இலவசங்களும் உண்டு. இலவசம் என்பதில் பல முரண்பாடுகளைக் கண்டறியமுடிகிறது. வெள்ளம், புயல், இயற்கை சீற்றங்களினாலும் வர்க்க முரண்பாடுகளின் ஆதிக்கத்தாலும் ஏற்படும் பேரழிவுகளுக்குப் பின்னாலும் இருக்க இடம் உண்ண உணவு உடுத்த உடை என்று இலவசங்கள் பட்டியலிடப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்துகிறோம் என்று பல்வேறு மதவாதிகளும் தங்களுடைய கருத்துச் செல்வங்களை இலவசமாக மக்களுக்கு வாரியிறைப்பதிலும் ஒரு கலக்கம் இருக்கவே செய்கிறது. ஒரு இன்பத்தையும் ஒரு துன்பத்தையும் இலவசத் தராசில் சமூகம் நிறுக்கிறது. அரசியல் இலவசங்கள் இப்போது டிவி, கேஸ், அரிசி, இப்போது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று விரிந்துகிடக்கிறது.

சிலவற்றைப் பின்வருமாறு இலவசமாக எண்ணிப்பார்க்கலாமா?

1. உலகின் ஒரு மனிதனுக்கு மிகஉயர்ந்த வாழ்க்கைப் பாடத்தை வறுமை கற்றுத்
தருவதுபோல எதுவும் கற்றுத்தந்துவிடமுடியாது. இந்த வறுமையையே வாழ்க்கை
யாகக் கொண்டு படித்து நல்ல தரத்தில் நிற்கும் மாணவர் மாணவிகளை அடையாளம்
கண்டு அவர்களின் படிப்பு முழுக்க இலவசம் என்றும் படிப்பு முடித்தவுடன் கண்டிப்பாக
நிரந்தரமாக ஒரு வேலை இலவசம் என்று அரசு முடிவெடுத்தால் அந்த இலவசம்
தரமானது.

2. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதில் ஒரு விழுக்காடு (?) மட்டுமே
உண்மை ஏழை விவசாயிக்கு சென்று சேர்கிறது. எனவே இதனை தயவு தாட்சண்யம்
இல்லாமல் ரத்து செய்து இந்த இலவசத்தை ஏழைப்பெண் திருமணத்திற்கும் அவளை
ஏற்கும் ஏழை கணவனுக்கு ஒரு நிரந்தர வேலை எனவும் மாற்றினால் அந்த இலவசம்
தரமானது.

3. வீட்டுக்கொரு இலவசம் என்பதை அந்தந்த வீட்டின் படித்த ஒரு பெண்ணுக்கோ அல்லது
ஆணுக்கோ அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு நிரந்தர வேலையைத் தந்தவிட்டால்
டிவி, எரிவாயு, மிக்சி, கிரைண்டர் அவர்களுக்கு தானாக வர்ங்கிக்கொள்ளும் திறன்
வந்துவிடும்.

4. முற்பட்ட இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக தகுதியும் திறமையும் நிரம்பப்
பெற்றவர்கள் இன்னும் வாழ்வின் அச்சத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். தகுதியும்
திறமையும் கொண்டவர்கள் அவர்களுக்குரிய வாய்ப்பைப் பெருக ஒதுக்கீடு என்பதை
சில நிலைகளில் கட்டுப்படுத்தி அவர்களையும் இந்தத் தகுதி திறமைக்குள் உட்படுத்த
லாம். மேலும் கல்வி உதவித்தொகை என்பது பெரும்பான்மையும் சரியாகப் பயன்
படுத்தப்படாமல் வேறு பயன்களுக்கு செலவு செய்வதை இன்னும் சற்று தீவிரமாகக்
கண்காணிதது ஒழுங்குபடுத்தினால் கல்வித்தொகை என்பதன் அர்த்தம் சரியாகும்.

5. வேலைக்குச் சேருவதில் ஒதுக்கீடு பின்பற்றுவது நடைமுறை. அதற்காக பதவி உயர்வு
போன்று ஓய்வுபெறும்வரை ஒதுக்கீடு பின்பற்றுவது தகுதியையும் தரத்தையும் பாழ்
படுத்தும்.

6. கடவுளும் பக்தியும் அவசியமானது. அதற்காக போக்குவரத்து நெரிசலான சாலைகளில்
ஆபத்தான மின்கம்பங்களில் ஒலிபெருக்கி கட்டுவது இவற்றைக் கட்டாயம் தடைசெய்தல்
பல உயிர்களுக்கு நிறைவு தரும் இலவசமாகும்.

7. கைபேசி பயன்பாட்டினை வரையறுப்பது அவசியம். குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு
பயன்படுத்துவதிலிருந்து கட்டாயத் தடை விதிக்கலாம்.

8. புழுதியும் நீரும் பல நோய்களுக்குக் காரணமாகின்றன. எனவே இவற்றை ஒழுங்குபடுதத
விரைவான சாலைகள் பராமரிப்பு, தரமான நீர் சேகரிப்பு இவற்றை ஏற்படுத்தித்தர
வேண்டும். அதாவது ரியல் எஸ்டேட்டிற்கு அங்கீகாரம் வழங்கும் வரைவில் கட்டாயம்
பூங்காவிற்கு இடம் ஒதுக்கவேண்டும் என்பதுபோல் கட்டாயம் தரமான நீர் ஆதாரத்திற்கு
ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு அங்கீகாரம் வழங்கலாம்.

9. மருத்துவமனைகள் இன்னும் ஆரோக்கிய சூழலில் பராமரிக்கும் நிலையை உருவாக்க
லாம். குறிப்பாக படுக்கை வசதிகள், பராமரிப்பு என்பதில் கவனம் அதிகம் வேண்டும்.
டாஸ்மாக் போன்றவற்றின் ஒழிப்பிலும் இதற்கான தொகையை மாற்றிப் பயன்படுத்த
லாம்.

இவையாவும் மனுக்களின் கோரிக்கையல்ல. மனவெளியில் கிடப்பவை. சிந்தனைக்காக மட்டுமே.