Wednesday, June 10, 2020

என்னமோ நடக்குது........குறுந்தொடர்.... ஹரணி

'
               ரபரப்பான அந்த நகரின் மத்தியில் நீண்டு கிடந்த தெருக்களில் ஒரு தெரு பாரதியார் தெரு. அந்தத் தெருவின் 15 ஆம் எண் வீட்டில் சிறு பரபரப்புக் கூடிக்கிடந்தது.
         ஏம்பா.. மணி என்னாச்சுன்னு பார்த்தீங்களா காலத்தோட போகவேண்டாமா? என்றார் ராகவன்.
என்னங்க நீங்க என்னமோ இண்டர்வியுக்குப் போறமாதிரி பறக்க அடிக்கறீங்க?
அப்பா எப்பவுமே சின்சியர் சிகாமணி. அப்பா பொறுமையாக இருங்க. நாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. கெத்து காமிக்கணும்.. இல்லாட்டி தலையில மொளகா அரைச்சிட்டுப்போயிடுவாங்க..பொண்ணு வீட்டுக்காரங்க..
அப்படிச் சொல்லும்மா சௌமி என்று சொன்னாள் ராகவனின் மனைவி சௌந்தர்யா.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கைப்பேசியைக் ஆள்காட்டி விரலால் குடைந்துகொண்டிருந்தான் கோபி. அவன்தான் மாப்பிள்ளை. அவனுக்குத்தான் பெண் பார்க்கப் போகிறார்கள். அமெரிக்காவில் எம்பிஏ முடித்தவன். ஒரு சிறிதும் பந்தா இல்லாதவன். படிப்பு என்பது ஒரு மனிதனைப் பண்படுத்துவது என்ற ஒழுக்கத்தைக் கற்றவன். என்னப்பா கோபி எதுவுமே பேசாமல இருக்கே? என்றார் ராகவன்.
என்னப்பா பேசறது? விடுங்க. அம்மா இப்படித்தான் எதுக்கும் அலட்டிக்க மாட்டாங்க. உங்களுக்குத் தெரியாதா? அவங்க போக்குல விடுங்க. பெண் பார்க்கத்தானே போறோம். அவங்களும் காத்திருப்பாங்க. போகலாம். எதையும் நிதானமா செய்வோம்பா.. ஒண்ணும் பதறவேண்டாம்.. என்று பதில் சொல்லிவிட்டு மறுபடியும் ஆள்காட்டிவிரலோடு கைப்பேசிக்குள் புகுந்துகொண்டான்.
சௌமி அப்படியே அடுப்படிய பாரு கேஸ் ஆப் பண்ணிட்டனான்னு..
பண்ணியாச்சும்மா.
இங்கருந்து பதில் சொல்லாதம்மா. ஒரு தடவ பாத்துடேன்.
அம்மா.. டீயை நான்தானே சுட வச்சி சாப்பிட்டேன். அபபவே நிறுத்திட்டேன். பதறாதே.
நல்ல காரியத்துக்குப் போறோம்மா.. எதும் ஏடாகூடமா சகுனம் அமைஞ்சிடக் கூடாதுல்ல.
சௌமி அப்படியே கொல்லக் கதவ சாத்தி பூட்டுப்போட்டு வா.. நாம திரும்ப நேரமாயிடும்.. இருட்டிடும்.
சரி.. சஜினுக்குப் போன் அடிங்க.. கிளம்ப சரியா இருக்கும்.
சஜின் ஆக்டிங் டரைவர். எதுக்குமே அவனைத்தான் கூப்பிடுவார் ராகவன். ராசியான பையன். ஒழுங்கா நிதானமா கார் ஓட்டுவான். ராகவனுக்குக் கார் ஓட்டத்தெரியும். சில காரியங்களுக்கு அவர் ஓட்டமாட்டார்.
ஏங்க.. இன்னிக்கு வியாழக்கிழமை. மூணு வரைக்கும் ராகுகாலம் இருக்கு. அதுக்குமேலத்தான் கௌம்பணும்.. மணி இப்போ இரண்டரைதான் ஆவுது. மூணு மணிக்கு மேல சஜினுக்குப் போன் அடிக்கலாம். உடனே வந்துடுவான்.
ராகவன் சட்டென்று தளர்வானார்.
ஒரு ஜாதக யுத்தமே நடத்தி அதில் இந்த ஜாதகம் பொருந்தி வந்திருக்கிறது. இரு தரப்பிலும் சரிதான். ஜாதகமும் பார்த்தாச்சு. ஏழு பொருத்தம் இருப்பதாக வழக்கமாகப் பார்க்கும் ஜோதிடர் சொல்லிவிட்டார். கோபிக்கு ஏற்ற ஜாதகப்பொருத்தம். பெண்ணும் பரவாயில்லை. ஓரளவு கருப்பைத் தாண்டிய நிறம். மாநிறத்திற்குச் சற்று மேல்நிறம். கொஞ்சம் சிகப்பு என்றும் சொல்லாம். அவளும் எம்பிஏ படித்திருக்கிறாள். கோல்ட் மெடலிஸ்ட். தற்போது ஒரு ஐரோப்பிய நிறுனத்தின் சார்பு கம்பெனியில் வேலை பார்க்கிறாள். பெயர் காயத்ரி.
இங்கிருந்து சரியாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் பெண் வீடு உள்ளது. பெண்ணின் அப்பா பள்ளித் தலைமையாசிரியராக இருந்து பணி ஒய்வு பெற்றவர். ராகவன் தாசில்தாராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். கோபி, சௌமி இரு பிள்ளைகள் மட்டுமே அவருக்கு. சௌமிக்குத் திருமணம் ஆகிவிட்டது எற்கெனவே. இரண்டு பேத்திகள் இருக்கிறார்கள் ராகவனுக்கு. நல்ல குடும்பம். திருப்தியான வாழக்கை.
காயத்ரி குடும்பமும் அப்பர் மிடில் கிளாஸ்தான். கைக்கு அடங்கியதுதான் வாய்க்கும் அடங்கும் என்பார்கள். பெண் வீடு குறித்து விசாரித்தாகிவிட்டது. எல்லோரும் நல்ல கருத்துதான் சொல்லியிருக்கிறார்கள்.
மூன்றரை மணிக்கு சஜின் வரக் கிளம்பினார்கள்.
பெண் வீட்டிற்குப் போக மணி நாலரை ஆகியிருந்தது. வழியில் பழங்கள் பூ என்னென்னமோ வாங்கியதில் மணி ஆகிவிட்டிருந்தது
வாசலிலேயே காத்திருந்தார்கள். பெண்ணின் அப்பா முகத்தில் டென்ஷன் தெரிந்தது.
வாங்க..வாங்க.. நேரமாச்சுன்னு படபடப்பா இருந்துச்சி..
உங்களுக்குத்தான் தெரியுமே பெண்களக் கிளப்பறது தேர கிளப்பற மாதிரின்னு..
நாங்க தேருன்னா நீங்க என்ன தேர இழுக்கற வடமா என்றாள் சௌந்தர்யா.
அம்மா என்ன ரைம்மிங்காப் பேசறே.. வாழ்க்கைங்கற தடத்துல தேரும் வடமும்தான் கணவனும் மனைவியும்.. என்றாள் சௌமியா கிண்டலாக.
என்னோட பொண்ணு படபடன்னு பேசுவா மனசுல வச்சுக்க மாட்டா..
எல்லோரும் காத்திருந்தார்கள். இன்னிக்கு லீவு போட முடியலே.. நீங்க சாயங்காலம்தானே வர்றேன்னு சொன்னதால அதுக்குள்ள ஆபிசு போயிட்டு ஒன் அவர் பர்மிசன்ல வந்துடறேன்னு சொன்னா...
வரட்டும்... வரட்டும்..
அதுக்குள்ள நீங்க சுவீட்டும் காபி சாப்பிடுங்க.. காயத்ரி வந்ததும் பேசிக்கலாம்..
சுவீட்டும் காரமும் காபியும் சாப்பிட்டு முடித்தபோது மணி ஆறாகிவிட்டிருந்தது.
என்னப்பா இன்னும் காயத்ரிய காணோம்.. போன் அடிங்க என்றாள் பெண்ணின் அம்மா.
இப்போது ராகவன் டென்ஷன் ஏற்றிக்கொண்டிருந்தார்.
கோபி வழக்கம்போல கைப்பேசிக்குள் சுறிறிக்கொண்டிருந்தான்.
மணி ஆறேகால் ஆகியிருந்தது.
சார்.. சார்.. சார்.. எனத் தொடர்ந்த குரலில் வாசலில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தது.
ஏதோ விபரீதம் போல உணர்ந்தார்கள் அனைவரும். வாசலுக்கு ஓடினார் பெண்ணின் அப்பா. கூடவே ராகவனும்.
வாசலில் ஒரு போலிஸ்கார் நின்றுகொண்டிருந்தார். முகத்தில் பரபரப்பு.
காயத்ரி உங்க பொண்ணா சார்?
ஆமாம். என்னாச்சு?
சாரி.. சார்.. உங்க பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க.. பஸ் டாப்புல கெடக்காங்க.. அவங்க பேக்குலேர்ந்து முகவரி பார்த்து வரேன் சார்..
காயத்ரீ என்றலறினார்.
யாரோ திடிரென தாக்கியதுபோல கோபி அதிர்ந்துபோனான்.
மின்னல் தாக்கியதுபோல அவன் குடும்பம் உறைந்துபோனது.
பஸ்ஸ்டாப் நோக்கி எல்லோரும் ஓடினார்கள்.
                                                                                                    (இன்னும் நடக்கும்)
.