குறுங்கதை
13
ஆதலினால் திருமணம் செய்வீர்
ஹரணி
உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களாக நிறைந்து
வழிந்த நகரமொன்றைக் கண்ட கவிஞன் ஒருவன் இப்படிக் கவிதை எழுதினான்.
கல்மரங்கள்
முளைத்த
காடு
என்ன
அருமையான கவிதை. அப்படித்தான் அந்த சிறு நகரத்தில் நாகரிகமான நகரத்தில் மையத்தில் கிட்டத்தட்ட
ஆறு ஏழு எட்டு ஒன்பது அடுக்குகள் என மொத்தம் ஒன்பது கட்டிடங்கள் முளைத்துக் கிடந்தன.
ஒன்பது கட்டிடங்களிலும் அடுக்கிற்கு ஐந்து வீடுகள் வசதியான வீடுகள் அமைந்திருந்தன.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு பேர்களும் அதாவது கணவன் மனைவி ஆண் பிள்ளை ஒன்று
பெண் பிள்ளை ஒன்றும் என்கிற கணக்கிலும் அல்லது ஆறு பேர்கள் இவர்களோடு பாட்டியும் தாத்தாவும்
என்கிற கணக்கிலும் வசித்து வந்தார்கள்.
காவிரி அடுக்ககம் எனும் கட்டிடத்தில்
23 என்கிற எண் பித்தளையில் பொறித்திருக்க மத்தியமாவதி இல்லம் எனும் பெயர்ப்பலகை பளபளத்துக்கிடந்த
வீட்டில் இப்போது நாம் உள்ளே நுழைகிறோம்.
சோபாவில் உட்கார்ந்து லாப்டாப்பில்
கோழிக்குஞ்சுகள் இரை பொறுக்குவதுபோல தன விரல்களால் மேய்ந்துகொண்டிருந்த தனஞ்செயன் விரல்களை
விடுவித்துத் தலையைத் திருப்பி மகளைப் பார்த்தார் ஆச்சர்யமாக.
என்ன சொல்றே ஷிகா.. (இப்போதெல்லாம்
ஷ்ஸ் இல்லாமல் பெயர் வைப்பது தேசக்குற்றம்)…
எஸ் டாட்… நான் ஒரு பையனைச் செலக்ட்
பண்ணி வச்சிருக்கேன்.. பட் நீங்க அதக் காதல்னு முத்திரைக் குத்திடாதீங்க.. இப்போ லாக்டவுன்
பீரியட்.. வி ஆல் காண்ட் மூவ்.. அதனாலா கிடைச்ச ஐடியாவுல அந்தப் பையனக் கேட்ச் பண்ணியிருக்கேன்..
வாவ்.. பிரமாதம்.. உன் மூளையே மூளைடி…
சொல்லு சொல்லு.. வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமலேயே.. இப்படி ஒரு செலக்சன் பண்ணியிருக்கே..
ஹவ் இட்ஸ் பாசிபிள்? என்றபடியே கையில் உள்ள கரண்டியை அப்படியே டைனிங் டேபிளில் படுக்கவைத்துவிட்டு
வந்து ஷிகா அருகில் உட்கார்ந்தாள் அவள் அம்மா முல்லைமதி.
சொல்றேம்மா.. அவசரப்படாதே.. என்று
சற்று வியர்த்தாள் ஷிகா. (டென்ஷனானாள்)
சொல்லு ஷிகா என்றார் தனஞ்செயன் மகளைப்
பார்த்து.
இப்போ லாக்டவுன் பீரியட்.. வீட்டுக்குள்ளேதான்
அடஞ்சு கிடக்கோம். வெளியே போக முடியல.. அதனால.. நம்ப ஷிட் அவுட்ல தொட்டிச் செடிகள்
போடலாம்னு பிளான் பண்ணேன்.. அதுக்கான முயற்சியிலே ஈடுபடும்போது.. எதேச்சையா எதிர்ல
பார்த்தேன்.. எதிர்ல பிரைட் அபார்ட்மெண்ட்.. அங்க மொட்டை மாடில ஒரு பையன் சுவற்றுல
வலை கட்டி அவன் மட்டும் பேஸ்கட் பால் ஆடினா.. சிங்கிள்.. அப்புறம் என்னமோ பர்னிச்சர்களை
அடுக்கி அதுமேல என்னமோ வித்தைகள் பண்ணான்.. அப்புறம் பைனாகுலர் வச்சி வானத்தைப் பார்த்துக்கிட்டிருந்தான்..
திடீர்னு மொட்டைமாடில எட்டு போட்டமாதிரி ஓடினான்.. வெரி இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சி..
சரின்னு அவனைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்னு முடிவுபண்ணேன்..
ஓகே அவன எப்படி காண்டாக்ட் பண்ணே?
ஒரு நாள் பைனாக்குலர்ல நம்ப அபார்ட்மெண்ட
பார்த்தான்.. அப்போ நான் ஹாய்னு ஒரு கையசைப்பு அசைச்சேன்.. சட்டுனு அவனும் கை ஷேக்
பண்ணான்..
இப்படி தினமும் அவனைப் பார்த்து ஒரு
ஹலோ சிம்பள் பண்ணினேன்.. அப்புறம் அவன யாருன்னு தெரிஞசுக்கலாம்னு ஒரு க்யூரியாசிட்டி வந்துச்சி..
அவன்கிட்ட பைனாகுலர்ல பாருன்னு சொல்லிப்
பார்க்கவச்சி.. என் ஏர்ல ஹேண்ட வச்சி உன் போன்
நம்பர் சொல்லுன்னு சொன்னேன்..
உடனே அவன் பக்கா பிரிலியண்ட் என்ன
பண்ணான் தெரியுமா.. ஏதோ சம் கிராக்கர்ஸ் வச்சி
ஒவ்வொரு கிராக்கர்ஸ்லேயும் ஒரு நம்பரா காத்துல எழுதிக்காட்டுனான்.. அப்படியே
எழுதிப் போன் பண்ணி அவன் மொத்தப் பயோடேட்டாவும் வாட்ஸ் அப்புல வாங்கிட்டேன்..
வாட்ஸ் அப்பிலயா?
ஆமாம் நானும் அவனும் வாட்ஸ் அப் பிரெண்ட்ஸ்.
அவன் பேரு.. பத்ரிநாத்.. அமெரிக்கன்
ஹார்டுவேர்ல பிடிஎப் பண்ணறான்.. மாதம் 4 லட்சம் புராஜக்ட்.. அப்பா ரிசர்ர் பேங்கு ரிட்டயர்டு.
அம்மா புரபசர்.. பிசிக்ஸ்ல.. ஒரு தங்கை.. அவ ஜெர்மனில ஒரு பல் டாக்டருக்குப் பேக்கப்
பண்ணிட்டாங்க.. ஒரு குட்டீஸ் இருக்கு.. பேரு ரிஷிவந்திகா.. ஒன்றரை வயசு.. முதல் பர்த்டே
முடிஞ்சுப்போச்சு.
.
தனஞ்செயன் அதிர்ந்துபோனார்.. அடக்கடவுளே
இவ்வளவு விஷயமா..
ஷிகா.. யூ ஆர் கிரேட் என்றாள் அம்மா.
என்ன முல்லை பேசறே நீ? என்றார் தனஞ்செயன்.
ஏங்க இந்த லாக்டவுன் பீரியட்ல இப்படி
ஒரு அலையன்ஸ் இருந்த இடத்திலேயே என் மகள் கேட்ச் பண்ணி வச்சிருக்கா.. அதப் பிக்ஸ் பண்ண
பாருங்க.. நம்ப பொண்ணும் லண்டன் எம்பிஏ.. பேட்மிட்டன்.. மியிசிக்.. டிராயிங் இண்ட்ரஸ்ட்..
ஐந்தேமுக்கால் அடி.. உயரம் ஒல்லியான முல்லைக்கொடிபோல உடம்பு.. நல்ல சிவப்பு.. கிள்ளவேண்டாம்..
தொட்டால் சிவக்கும் எம்பொண்ணுக்கு.. பாருங்க.. பாருங்க..
சரி அந்தப் பையனக் காமி என்றார்கள்.
வாட்ஸ் அப்பில் போட்டோக்கள் பூத்துக்
குலுங்கின. ஆறடி உயரம். வாட்ட சாட்டம் அழகு வேற.. சிரித்தபோட்டோவில்.. பல் வரிசை குறுமீசை
அழகு.. பக்கத்தில் ரிஷவந்திகாவுடன் அட்டகாசப் போஸ் கொடுத்திருந்தான்.. பக்கத்தில் பறக்கும்
ஒரு பிளாஸ்டிக் பறவையுடன்.
சரி வருகிறேன் என்று முல்லைமதி
உள்ளே போய் அரைமணிநேரத்தில் திரும்பிவந்தாள்.
உங்களுக்கு எல்லாம் ஒரு ஹேப்பி
நீயுஸ்
என்னம்மா?
என்ன முல்லை?
நான் அந்தப் பத்ரிநாத் அம்மா, அப்பாவோட
பேசி முடிச்சிட்டேன். எங்க ஊருக்குப் பக்கத்துஊருதான். ஒருவகையில் நமக்குச் சொந்தம்தான்..
வேற சாதியா இருக்குமோன்னு கொஞ்சம் மனசுக்குள்ளே மருவிட்டிருந்தேன். கிளியர் ஆயிடிச்சி..
ஒருவகையில் நம்ப ஷிகாவுக்குக் கட்டிக்கிற முறைதான்.. லாக்டவுன் முடிஞ்சவுடனே தாம்பூலம்
மாத்தி இந்த ஆவணியிலேயே கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க..
தனஞ்செயன் அப்படியே மகள் ஷிகாவைப்
பார்த்தார்.
கண்களால் அப்பாவை ஒரு சந்தோஷ டுவிட்
செய்தாள்.
காலத்திற்கேற்ற கதை! :)
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅட...! நல்ல கதை...!
ReplyDeleteநன்றி ஐயா.
Delete