குறுங்கதை
12
வாழ்தல்தானே வாழ்க்கை
ஹரணி
அரசுப்
பணியிலிருந்து பரசுராமன் ஓய்வுபெற்று இரண்டாண்டு முடிந்து மூன்றாமாண்டு தொடங்கும் தருணம்.
பணி ஓய்வு பெற்ற காலத்திலிருந்து அவர் இன்றுவரை வழக்கம்போலவே பணி செய்துகொண்டேயிருக்கிறார்.
யார் போனில் பேசினாலும் வேலையாயிருக்கேன்.. நான் அப்புறம் கூப்புடறேன்னு சொல்றார்..
எல்லோருக்கும் ஆச்சர்யம் ஒரு மனுஷன் ரிட்டயரிடு
ஆனப் பிற்பாடு என்ன வேலை செய்வாரு? அதுவும் பொழுது முழுக்க.. ஒவ்வொரு நாள் மாலையிலும்
நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடிவிடுவார்கள் பணி ஓய்வு பெற்றவர்கள் எல்லாம்.
பரசுராமா உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்..
என்றார் ராகவன்.
என்னடா ராகவா விஷயம்? என்றார் பரசுராமன்.
முதல்ல வா வந்து இங்க உக்காரு.. உங்கிட்ட
நிறைய பேசவேண்டியிருக்கு.
சொல்லுடா என்றபடியே ராகவன் அருகில் உட்கார்ந்தார்.
என்னது எப்பப் பார்த்தாலும் பிசியா இருக்கேன்னே
சொல்றீயே அப்படி என்னதான் வேலை செய்யறே?
ஒருமுறை ராகவனைப் பார்த்தார். ராகவன் பரசுராமனைப்
பார்த்த பார்வையில் நிறைய கேள்விகள் கிடந்தன.
எனக்குப் பொழுதே போகமாட்டேங்குது பரசுராமா..
எம்புள்ள ஒரு வேலயும் செய்யவேண்டாம்.. பேசாம இருங்க.. வீட்டுல டிவி பார்த்துக்கங்க..
பேரக்குழந்தைகளோட விளையாடுங்க.. நீங்களும் அம்மாவும் ஜாலியா எங்காச்சும் போயிட்டு வாங்க..
உங்களுக்கு வீடு மாடி முழுக்க.. அதனால சாப்பிடறது டிவி பார்க்கறது தூங்கறது இதத் தவிர
வேறு என்டர்டெயின்மெண்டே இல்லடா… போரடிக்குது.. இப்படியே இருந்தா சீக்கிரம் செத்துப்போயிடுவேன்னு
பயமா வேற இருக்குடா…
அதற்குள் நாலைந்து பேர் வந்து இந்த உரையாடலில்
சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கும் விடை தெரியவேண்டும் என்று காத்திருந்தார்கள்.
பரசுராமன்
சொன்னார்.
என் வாழ்க்கையை டைம் மிஷினில மாத்துன மாதிரி
மாத்திட்டேன். சொல்றேன் கேளுங்க.. காலையில 5 மணிக்கு எழுந்து அரைமணிநேரம் பயிற்சி அரைமணிநேரம்
வாக்கிங்.. 6 மணிக்கு காப்பி. அப்புறம் நீயுஸ் பேப்பர்.. அதுக்கப்புறம் என் பேரக்குழந்தைகளோட
டிரஸ் அயன் பண்றது.. என் பையனோட பேண்ட் சர்ட் அயன் பண்ணறது.. அவங்களோட செருப்புகளைத்
துடைச்சி பாலிசு போடறது.. என்று சற்றே நிறுத்தினார்.
ஏண்டா பேரப்புள்ளங்களுக்குச் செய்யறது
ஒரு மகிழ்ச்சி. கடமை. மாடுமாதிரி வளந்த புள்ளயோட செருப்பு துடைக்கிறது ரொம்ப ஓவர்டா..
உனக்குப் பென்ஷன் வருதுல்ல.. அப்புறம் நீ என்ன அடிமையா? என்று கேட்டார் மாதவன்.
மாதவா அப்படியில்ல. எனக்குப் பென்ஷன்
வருது.. அடிமை இல்ல.. நாம சின்ன வயசுல நம்பளோட புள்ளங்க ஸ்கூலுக்குப் போறப்ப செஞ்ச
வேலதானடா.. இப்பவும் அவங்க நம்ப புள்ளங்கதானே.. நானு ரிட்டயர்டு ஆயிட்டேன்.. எனக்கு
நேரம் நிறைய கெடக்கு.. எம் புள்ள அப்படியில்ல
ஒரு ஆபிசுல வேலை .. அதுக்கான நேரம் இருக்கு… அந்த நேரத்துல அவன் ஆபிசுக்குப் போவணும்..
அதுவும் டென்ஷன் இல்லாமப் போவணும்.. அப்பத்தான் வேலையில கவனம் இருக்கும்.. அவனுக்கான
நேரத்தை டென்ஷனாக்கறது இந்த செருப்புக்குப் பாலிசு போடற வேலை.. பேண்ட் சர்ட்ட அயன்
பண்ணற வேலை.. எந்தப் பேண்ட்க்கு எந்த சர்ட் மேட்சுன்னு பார்க்கற வேல.. என்ன டிபன்னு
யோசிக்கற வேலை.. இதெல்லாந்தான்.. அந்தப் பாரத்துல சிலத நான் குறைச்சு வைக்கறேன். அவன்
பிரியாயிடுவான்.. அத்தோட எம் மருமககிட்ட முதல் நாள் இரவே கேட்டுக்குவேன்.. மறுநாள்
எம்புள்ளக்கி என்ன பேண்ட் சர்ட்டுன்னு .. அவள சமையல் வேலை மட்டும் பார்த்துக்கன்னு
சொல்லிடுவேன்.. ஒரு பிரச்சினையும் இல்ல..
அப்புறம் என்றனர் ஆவலுடன்.
பரசுராமன் பெருமையோடு சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு நாளைக்கு ஒரு போர்ஷன் எடுத்துக்கிட்டு
ஒட்டடை அடிப்பேன். தெரு இரும்புக் கேட்டுல் இருக்கிற தூசு தும்புகளை எல்லாம் சின்னதா
பிரஸ் வச்சி மெதுவா செஞ்சா.. நேரம் ஓடிடும்…
சொல்லு சொல்லு பரசுராமா.. செமயா இருக்கு
என்றார் கோபிநாத்.
அப்புறம் டிபன் சாப்பிட்டுக் கடைத்தெருவுக்குப்
போய் அன்னிக்கு சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிட்டு வருவேன். கொடுத்திட்டு பத்து
மணிக்கு சிவன் கோயிலுக்குப் போவேன். கையில நாலைஞ்சு நீயூஸ் பேப்பர் எடுத்திட்டுப்போவேன்.
அதான் காலையிலேயே படிச்சிடறியே..
அது இல்ல முதநாள் படிச்ச பேப்பர்கள எல்லாம்
எடுத்திட்டுப்போய் கோயில் பிரகாரத்துல உட்கார்ந்து சின்ன சின்ன துண்டுகளாக் கிழிச்சி
வரப்போறவங்ககிட்ட கொடுப்பேன் திருநீறு குங்குமம் மடிச்சிக்க.. அங்கங்கே தூண், கட்டைகள்,
கொட்டி வீணாக்காம இருக்க..
திரும்பி வந்து கொஞ்சம் டீவி பார்ப்பேன்.
அதுல முக்கியமான செய்திகளைக் குறிப்பு எடுத்து வச்சிக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு
எம் பேரப்புள்ளங்களுக்குப் பொது அறிவுக் கதையாச் சொல்லுவேன். அப்புறம் சின்னதா ஒரு
தூக்கம். நாலு மணிக்கு எழுந்து மருமக இல்லாட்டி மனைவி கொடுக்கிற காப்பிய குடிச்சிட்டு
அப்படியே உட்கார்ந்து நானு மருமகள் மனைவி கொஞ்சம் அரட்டை அடிப்போம். மகன் பிள்ளைகள்
வந்துட்டா அவங்களோட கொஞ்சம்..
சற்று நிறுத்தினார்.
டேய் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு ஆனா இத
பாலோ பண்ணமுடியுமான்னு தெரியல…
செய்யலாம்.. சொல்றேன் கேளுங்க.. இடையிடையே
ஈபி பில் கட்டறது.. பேங்குக்குப் போய் பாஸ் புத்தகங்களை என்ட்ரி போடறது.. மாசத்துக்கொருமுறை
உடம்பபோய் நார்மல் செக்கப் பண்ணிக்கறது.. அப்புறம் தினமும் மாலையில எப்படியாச்சும்
ஒருமணிநேரம் உங்களோட இங்க வந்துடறது.. இப்படி..
அடேங்கப்பா.. ரொம்ப சூப்பரான கதை மாதிரி
இருக்கு.
கதை இல்லடா.. இன்னும் நிறைய இருக்கு நாலு
வண்டிங்க இருக்கு.. கார்இருக்கு.. அதுங்கள மாசத்துக்கு ஒருமுறை வாட்டர் சர்வீஸ் பண்ணிக்கறது..
ரெண்டு நாளைக்கு ஒரு முறை துடைக்கறது.. இரவுல அதுங்களுக்குப் புராப்பரா கவர் போட்டு
மூடி வைக்கறது.. என் மனைவி கொஞ்சம் செடி வளர்க்குறா.. அதுங்களுக்குத் தண்ணீ ஊத்தறது..
செடியிலேர்ந்து பூ பறிச்சு கொடுக்கறது..
அப்பா சாமி போதும்டா என்று எல்லோரும்
மூச்சு வாங்கினார்கள். அதை சொன்னார்கள் மூச்சு வாங்குதடா..பரசுராமா..
டேய்.. நாம பார்த்து ரிட்டயர்டு ஆனது
ஒரு வேலை. மூச்சு இருக்கறவரைக்கும் எந்தச் சிக்கலும் இல்லாம இருக்கணும். இது நாமளா
விரும்பி செஞ்சுக்கணும்.. இது நம்மோட ரிட்டயர்டுமெண்ட் இல்லாத வேலைன்னு நினைச்சுக்கணும்..
இப்படி செஞ்சிக்கிட்டே இருந்து படுத்தோமா சட்டுன்னு போயிடணும்.. தூக்கத்துலேயே.. வாழ்த்தானடா
வந்தோம்.. நாம் வாழறதுதாண்டா வாழ்க்கை. எப்பவும் நாம உயிர்ப்போட இருந்தாதான் நாம வாழ்ந்த
வாழ்க்கை அர்த்தமாகும்.
00000
ஆகா...! வாழ்வு முறை இப்படி அல்லவா இருக்க வேண்டும்...
ReplyDeleteஅருமை ஐயா...
நன்றி ஐயா
Deleteஓய்வு பெற்றபின் வாழும் முறைக்கான சரியான புரிதல். நல்லதொரு கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா.
Delete