குறுங்கதை
15
என்னோடு நியிருந்தால்….
ஹரணி
வடவாற்றில் தண்ணீர் இல்லை. ஆங்காங்கே குட்டைகள்
போல் தேங்கிக் கிடந்தன. அதில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. சில நாய்கள் அதில் விழுந்து
விளையாடிக்கொண்டிருந்தன. மணற்பரப்பைவிட கற்பரப்புகளே அதிகம். ஆறுகள் பெயரளவில் ஆறுகளாக
இருந்தன. பாலத்தின் மீது நின்று வெற்றாற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.
தலைக்குமேலே நாலைந்து பச்சைக் கிளிகள் பறந்து கடந்தன கீச்சிட்டபடி. பக்கத்தில் பாவா
கோயில். அது ஒரு ஜீவசமாதி கோயில் அருகே பெரிய அரசமரம். அதன்கீழ் ஒரு பிள்ளையார சிலை
அருகருகே சில நாகவடிவங்கள். அங்கே போய் உட்கார்ந்தான்.
மனம் முழுக்கக் கொஞ்சம் வேதனை வழிந்துகொண்டிருந்தது.
வழக்கம்போல கௌரியுடன் சண்டை போட்டு வந்துவிட்டான்.
திருமணமாகி நாற்பது வருடங்களில் ஒருநாளாவது
சண்டை இல்லாத திருநாளாக விடிந்ததில்லை. முடிந்ததும்.
சின்ன சின்ன விஷயங்களில் இருவம் கச்சைக்
கட்டிக்கொண்டு கத்திக்கொள்வார்கள்.
எதுக்கு இந்த மேட்டை எடுத்து வாசல்ல போட்டிங்க..
தண்ணீர் சிந்திப்போச்சு எடுத்துப்போட்டேன்.
திருப்பி எடுத்த இடத்துல போடணும்ல..
மறந்துட்டேன்.
அதெப்படி மறக்கும். அதான் ஒரு வேலைக்காரி
இருக்காள்ல பாத்துக்குவாள்னு ஒரு அலட்சியம்.
எதுக்கு இப்படி நீயா கற்பனை பண்ணிப் பேசறே.
.
நான் கற்பனை பண்ணிப் பேசறனா.. அதானே நடக்குது.
என்ன கௌரி இப்படி எதுக்கெடுத்தாலும் சண்டை
போடறே… ஒருநாளாச்சும் இப்படி இருந்திருக்கா?
நான் என்ன வெட்டியாவா வம்பிழுக்கிறேன்..
நீங்க செய்யுற காரியம் அப்படி…
அப்படி என்ன காரியம் பண்ணறேன்?
ஒரு சின்ன விஷயம் நாலு நாளா சொல்றேன்..
வெந்தயம் இல்ல.. பெருங்காயம் இல்லன்னு வாங்கிட்டு வந்தீங்களா?
மறந்துட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு
வரேன்.
எப்படிங்க மறக்கும்? உங்க வேலைன்னா மறக்குதா?
வீட்டு வேலைன்னா மறக்குது. அலட்சியம்.
உண்மையில மறந்துபோயிடுது…
பசிக்குதுன்னு சொல்லி வடை வாங்கிட்டு
வாங்கன்னா என்னிக்காச்சும் நேரத்துல வாங்கிட்டு வந்து தந்திருக்கீங்களா?
இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
நாள் முழுக்க வீட்டையே சுத்திவர்றவ..
என்னிக்காச்சும் ஒரு வடைக்குக் ஆசப்பட்டா உடனே கெடக்குதா? பேசறீங்க.. ரொம்ப யோக்கியம்
மாதிரி..
என்ன இப்படி எல்லாம் பேசறே?
என்ன பேசறேன்?
யோக்கியம் இல்ல.. அயோக்கியன்னு.. எல்லாம்.
அயோக்கியன்னு நான் சொன்னனா நீங்களா நினைச்சிக்கிட்டா
நான் பொறுப்பு இல்ல..
யோக்கியமான்னு கேட்டா என்ன அர்த்தம்?
ஒழுங்கா ஒரு காரியத்தையும் செய்யறதுல்லேன்னு
அர்த்தம்.
ஒழுங்கா நடக்காமத்தான் இத்தன வருஷம்
குடும்பம் நடத்தியிருக்கேனா..
பகல் போய் இரவு வந்து பகல் வந்துட்டா
குடும்பம் நடத்தறதுன்னு அர்த்தமா?
என்ன கௌரி எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்குப்போட்டியா
பேசறே?
நான் போட்டிப்போடறனா? அதுவும் நீங்க சம்பாரிக்கிற ஆம்பள.. நான் வீட்டுக்கு
வேலைக்காரியா வந்தவ.. போட்டிப்போடமுடியுமா?
உனக்கு என்ன தோணுதோ பேசு கௌரி.. உன்ன எதுவும்
என்னால பண்ணமுடியாது?
இதுக்குமேலயும் என்ன பண்ணனும்? ஒண்ணுகூட
கேட்டப்ப கெடக்காது..
உன்னோட குடும்பமே நடத்தமுடியாதுடி..
நான் மட்டும் என்ன இஷ்டப்பட்டா இருக்கேன்…
விருப்பம் இல்லாதவ போயிடவேண்டியதுதானே உங்க
வீட்டுக்கு?
ஏன்? என்னோட அப்பாவும் அம்மாவும் உயிரோட
இருந்தப்ப சொல்லியிருந்தா போயிருப்பேன். இப்போ அவங்க இல்ல.. கேட்க நாதியில்லேன்னு எதுவேணாலும்
பேசலாம்னு பேசறீங்க.. வயசும் ஆயிடிச்சு.. எங்க போவ எனக்கு நாதியிருக்கு..
ஒரு வார்த்தைக்கு எத்தனை வார்த்தை
பேசறே? ரொம்ப உனக்கு வாய் வளந்துடிச்சி கௌரி..
ஆமா.. நான்தான் நாய் மாதிரி வாய வளத்து
வச்சி பொழுதன்னிக்கும் கத்திக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்கேன்..
அப்ப என்னை நாய்ங்கிறீயா?
எது சொன்னாலும் தனக்குத்தான்னு எடுத்துக்கிட்டா
நான் எண்ண பண்ணமுடியும்?
பேசாமா போயிடலாம்டி உன்னோட மல்லுக்கட்டறதுக்கு..
இந்தப் பூச்சாண்டியதான் நானும் பல
வருஷமாப் பாத்துக்கிட்டிருக்கேன்
…
அப்பா புருடா விடுறான்.. சாவமாட்டான்னு
நினைச்சிட்டியா?
நீங்க ஏன் சாமி சாவறீங்க.. வேண்டாம்..
உங்கப் புள்ளங்களோட சந்தோஷமா இருங்க.. எல்லாம் அப்பனுக்குத்தானே நியாயம் பேசுது.. நான்
முடிவெடுத்திட்டேன். இத்தனை வருஷம் வாழ்ந்தாச்சு.. ரொம்ப சலிச்சுப்போச்சு.. உங்கள மாதிரி
சொல்லமாட்டேன்.. சட்டுனு கதை முடிச்சிடுவேன்.. போதும்டா சாமி..
இத்தனை வருடத்தில் ஒரு தடவைகூட கௌரி
சாகறேன்னு என்று சொன்னதில்லை. கோபி அதிர்ந்துபோனான். வயதாகிவிட்டது. இப்போது தொற்று
வேறு.. யாரோ ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தான். உடம்பு முழுக்க உதறியது. உடம்பெங்கும் லட்சக்கணக்கான
தேள்கள் கொட்டியதுபோன்ற வலியை அதிர்வுகளாக உணர்ந்தான். இப்படிக் கௌரி சொன்னதில்லை..
அந்தக் கணமே புறப்பட்டு வடவாற்றங்கரை வந்தான்.
அரச மரத்தினடியில் உட்கார்ந்து இத்தனையையும்
மனத்தில் ஓட்டிப்பார்த்தான்.
ஏதும் செய்துவிடுவாள்.. தன்னைப்போலப்
பூச்சாண்டி காட்டுபவள் இல்லை.
செத்துப்போய்விடுவாளா? நினைக்கவே கோபிக்கு மயக்கம் வருவதுபோல உணர்ந்தான்.
நெஞ்சு அடைத்தது. மூச்சு விடமுடியவில்லை. சட்டென்று ஒரு கணம் யாரோ சாட்டையால் அடித்ததுபோல
உணர்ந்து எழுந்தான். வீட்டிற்கு அவசரமாகப் போனான். உள்ளே எட்டிப் பார்த்தான் கௌரி சமைத்துக்கொண்டிருந்தாள்.
இவன் எட்டிப்பார்த்ததை உணர்ந்தவள்போலப்
பேசினான். சப்பாத்தியும் கொண்டக்கடலை குருமாவும் வச்சிருக்கேன்.. சூடா இருக்கு சாப்பிடுங்க..
என்றாள் தன்னிச்சையாக.
சாப்பிட்டார்கள்.
இரவு சொன்னான் தீர்க்கமாக.. கௌரி அப்படிஎல்லாம்
பேசாதே.. நான்கூடப் பூச்சாண்டி காட்டுவேன். நீ அப்படி இல்ல. ஏடாகூடமா எதாச்சும் செஞ்சுடாதடி..
என்னால வாழமுடியாதுடி… சண்டை போடறத்தான்.. இனிமே உயிருள்ளவரைக்கும் போடமாட்டேன்.. இது
சத்தியம்.. நீ போய்ட்டா நான ஒரு நிமிஷம்கூட இருக்கமாட்டேண்டி.. இது பூச்சாண்டி இல்லடி..
எதாச்சும் தின்னுட்டுச் செத்துப்போயிடுவேண்டி..
இப்ப எதுக்குப் புலம்பறீங்க.. இன்னிக்கு
நேத்தா சண்டை நடக்குது.. என்ன இப்படி பண்ணறீங்களேன்னு வருத்தமா இருக்கும். அது கொஞ்சநேரம்..
அவ்வளவுதான்.. அதுக்காக உங்கள விட்டுட்டுப்போகமாட்டேன்.. நான் இல்லாம நீங்க எண்ண பண்ணுவீங்கன்னு
எனக்குத் தெரியுங்க.. அப்படி எல்லாம் தவிக்க விடமாடேன்.. நீங்கப் போயிட்டா அப்படி மனசுல
தோனிச்சின்னா அந்த நிமிஷமே எங்கதையை முடிச்சிக்குவேன்..
முதுமையில் தனிமை ஆணுக்குக் கொடுமை என்று சொல்வதுண்டு. இந்தக் கதையும் அதையே உணர்த்துகிறது.
ReplyDeleteதொடரட்டும் குறுங்கதைகள்.
திருந்துவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்...
ReplyDelete