Saturday, June 26, 2010
நாடக அரங்கு....
பொம்மை.....
(நாடகம்)
காட்சி ஒன்று
( ஒரு அப்பார்ட்மெண்டின் உறால் அது. சுவற்றில் அழகான ஷோகேஸ்
அதில் பல பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு
வெள்ளை நிற முயல்பொம்மை பீங்கானால் செய்யப்பட்டது.
அந்த முயல் தாவுவதுபோல் இருக்கிறது.)
(அந்த உறாலில் இரு பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருத்தியின் பெயர் ஈசுவரி. இன்னொருத்தி நிர்மலா. கூடவே
நிர்மலாவின் பையன் பாபுவும் இருக்கிறான். அவன் அந்த ஷோகேஸ்
முயல்பொம்மையை எடுக்க முயற்சிக்கிறான்)
ஈசுவரி: நிர்மலா உன்னைப் பார்த்து நாளாச்சு.. ஒரே அப்பார்ட்
மெண்ட்ல இருக்கோம்னுதான் பேரு..
நிர்மலா: எங்க வேலை சரியா இருக்கு ஈசுவரி. அதுவும் இவன
வச்சு சமாளிக்கறது பெரும்பாடா இருக்கு..படுத்தறான்..
பொழுது போயிடுது...
ஈசுவரி : விடு நிர்மலா..சின்ன பையன்தானே...அப்படித்தான்..
என்ன நினைச்சுப் பாரு..(பெருமூச்சுவிடுகிறாள்..)
கல்யாணம் ஆகி பத்து வருஷமாச்சு..நீ என்னப் பாரு..
நான் உன்னப் பாக்கிறேன்னு..ஓடுது பொழுது...
நிர்மலா: வருத்தப்படாதே ஈசுவரி. கடவுள் நிச்சயம் கண்ணத்
திறப்பார்..
(அப்போது பாபு ஒரு மோட்டாவை எடுத்துவந்து ஷோகேஸ்
அருகே போட்டு அதன்மேல் ஏறி முயல்பொம்மையை எடுக்க
முயல்கிறான். இவர்கள் கவனிக்காது பேச்சைத் தொடர்கிறார்கள்.)
ஈசுவரி : எனக்கு நம்பிக்கை போயிடிச்சி நிர்மலா..எத்தனை விரதம்..
எத்தனை கோயில்?...எத்தனை பிராத்த்தனை..ஒண்ணும்
பிரயோசனமில்லே..கடவுள் இருக்கான்னு சந்தேகமா இருக்கு..
(பொம்மையை எடுக்க முயலும்போது அது கைதவறி கீழே
தரையில் விழுந்து உடைகிறது...சில்லுகளாய்..)
நிர்மலா: யேய் பாபு.. அய்யய்யோ என்ன பண்ணே? அடக்கடவுளே
ஒடச்சிட்டியா..சனியனே..உன்னால தொல்லை...(அடிக்கிறாள்)
ஈசுவரி : என்ன நிர்மலா.. ரொம்ப ஆசையா வாங்கினது..இப்படிப்
பண்ணிப்புட்டான்..இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...அடக்
கடவுளே...எனக்குப் பயமாயிருக்கு..என்ன நடக்கப்போவுதோ?
நிர்மலா: சாரி ஈசுவரி..
ஈசுவரி : சாரி எதுக்கு நிர்மலா? அதனால உடைஞ்சது ஒட்டிடுமா..
(ஈசுவரி கோபமாகப் பேச நிர்மலா முகம் சுண்டுகிறது.)
நிர்மலா: தப்புதான் ஈசுவரி.. இதே மாதிரி வேறு வாங்கி கொடுத்துடறேன்.
(பிள்ளையைப் பார்த்து) சனியனே..எனக்குன்னு வந்து
பிறந்து தொலைச்சே பாரு...(ஓங்கி அறைகிறாள் கன்னத்தில்)
ஈசுவரி : என்னால மறக்கமுடியாத பொம்மை அது..இருந்தாலும்
இப்படிப்பட்ட மோசமான பிள்ளையைப் பெத்துக்கக்கூடாது..
நிர்மலா: நான் வரேன் ஈசுவரி..வந்து தொலைடா கழிச்சல்ல போற
நாயே...புள்ளயா வந்துருக்கு...பேய்..
(அடித்தபடியே இழுத்துக்கொண்டு போகிறாள்)
(ஈசுவரி உடைந்த முயல்பொம்மையின் சில்லுகளையே பார்த்துக்
கொண்டிருக்கிறாள்).
காட்சி இரண்டு
(அதே உறால்..ஈசுவரியும் அவள் கணவனும்..)
கணவன் : சரிவிடு..சின்ன பையன்தானே..வேணுமின்னா போட்டு
உடைப்பான்..ஆசையா எடுத்திருக்கான் கைதவறி விழுந்துடிச்சி..
வேற வாங்கிக்கலாம்.. பெரிசு பண்ணாதே இத...
ஈசுவரி: இல்லங்க..உங்களுக்குத் தெரியாது..நீங்க ஆபிசு போயிட்டா..
அதுதாங்க எனக்கு ஆறுதல்..கொஞ்சறதுக்கு எனக்கென்ன பிள்ளையா..
குட்டியா..அந்தக் கொடுப்பினைதான் எனக்கு இல்லே.. என்ன பாவம்
செஞ்சேன்னு தெரியல்லே..வயித்துலே வந்து தங்கறதும் நினைக்கறதுக்
குள்ளே கலைஞ்சி போயிடுது.. இதுகிட்டதான் சொல்லிப் புலம்புவேன்..
என் கவலைங்கள எல்லாம் பேசாம கேட்டுக்கும்.. இன்னிக்கு
வெள்ளிக்கிழமை..உடைஞ்சிப்போனது நல்ல சகுனமில்லீங்க..ஏதோ
நடக்கப்போவுது எனக்குப் பயமாயிருக்குங்க...(அழுகிறாள்)
கணவன் : ரொம்பக் குழம்பிக்காதே ஈசுவரி..சாதாரணப் பொம்மை..பேசாமப்
படு..பயமாயிருந்தா சாமியைக் கும்பிட்டு விபூதி பூசிக்கிட்டுப் படு..
நாளைக்கு உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்..
ஈசுவரி : இல்லங்க என்னமோ போல இருக்கு..என் பக்கத்துலே உக்காந்துக்கங்க.
கணவன்: சரி..சரி.. பயப்படாம படு.. (அருகில் உட்கார்ந்துகொள்கிறான்.)
காட்சி மூன்று
(நிர்மலாவும் ஈசுவரியும்)
நிர்மலா: ஈசுவரி.. எப்படியும் அந்த பொம்மைய வாங்கி கொடுத்துடறேன்.
அது மாதிரி முயல் பொம்மை கிடைக்கலியாம்.. பாபு அப்பா
அலைஞ்சி பாத்துட்டார்.
ஈசுவரி : சரி நிர்மலா..என் விதி..
நிர்மலா: வருத்தப்படாத ஈசுவரி. உன் கோபம் புரியுது..நல்லா அடிச்சு
விலாசிட்டேன்..உடம்புக்கு முடியாம படுத்திருக்கான்..
ஈசுவரி : அதனால என் பொம்மை கிடைச்சுடுமா..அது வெறும் பொம்மை
யில்ல.. என்னோட குழந்தை மாதிரி..கொன்னுட்டான்..
(சொல்லிவிட்டு ஈசுவரி திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறாள்.)
(அவள் போவதையே பார்த்துவிட்டு நிர்மலா திரும்பி நடக்கிறாள்.)
காட்சி நான்கு
(ஈசுவரியின் வீடு..அமர்ந்திருக்கிறாள். டிவியில் படம் ஓடிக்கொண்டிருக் கிறது. அவள் கணவன் கூடவே உட்கார்ந்து இருக்கிறான். அப்போது நிர்மலாவும் அவள் பையன் பாபுவும் உள்ளே வருகிறார்கள். பாபு முன்னால் ஓடிப்போய் ஈசுவரியின் முன்
நிற்கிறான்)
பாபு : ஆண்ட்டி அம்மா உங்களுக்கு பொம்மை கொண்டாரங்க...
நான் ஒடச்ச அதே முயல் பொம்மை..
நிர்மலா: மன்னிச்சுக்க ஈசுவரி..இந்தா அவரு பெங்களுரு போனப்ப பாத்திருக்காரு..
மறக்காம வாங்கிட்டு வந்துட்டாரு..எடுத்துக்க..திரும்பவும் மன்னிப்பு
கேட்டுக்கறேன்.
பாபு : ஆண்ட்டி வாங்கிக்கங்க..நான் ஒடச்ச அதே பொம்மைதான்..
ஈசுவரியின்
கணவன்: ஈசுவரி.வாங்கிக்க..கொடுங்க..விடுங்க..இது பெரிய விஷயமே
இல்ல.. (ஈசுவரி எழுந்து வாங்குகிறாள்.)
பாபு : ஆண்ட்டி அங்கேயே வச்சுடுங்க..இனி நான் எடுக்கமாட்டேன்..
எங்கப்பா எனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காரு..இதே மாதிரி
முயல் பொம்மை...
எழுந்து அதை ஷோகேஸில் வைக்கப் போகிறாள். வழியில்
கிடந்த பாத்திரத்தைக் கவனிக்கவில்லை. கால் அதில் பட
தடுமாறி விழப்போக..சமாளிக்க பொம்மையை நழுவவிடுகிறாள்.
மறுபடியும் அந்த முயல்பொம்மை கீழே விழுந்து உடைகிறது
சில்லுகளாய்.. அதிர்ந்துபோய் நிற்கிறாள் ஈசுவரி..
( திரை )
லேபிள்கள்:
நாடக அரங்கு...
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுலகில் வித்தியாசமான முயற்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஹரணி.
உடைபடும் பொம்மைகளுக்காய்
அடிபடும் குழந்தைகள்.
அந்த முடிவுதான்.. அவள் கையாலேயே உடைபடுகிற விதி.. நாம் பொம்மைகளை நேசிக்கிற அளவு உயிருள்ள ஜீவன்களை நேசிப்பதில்லையோ.. மதுமிதா சொன்னது போல பதிவுலகில் வித்தியாசமான முயற்சி.. தொடருங்கள். ஹரணி..
ReplyDeleteவேர்ட் வெரிஃபிபிகேஷனை எடுத்து விடுங்களேன்..
ReplyDeleteஅன்புள்ள ரிஷபன்...
ReplyDeleteதங்களின் கருத்திற்கு நன்றி. குழந்தைகளை நாம் இன்னும் சரியாக அணுகவில்லை என்பது என் பெருங்குறையாக உள்ளது. வேர்ட் வெரி...எடுத்துவிட்டேன். இதனால் தாங்கள் அடைந்த சிரமத்திற்கு மன்னிக்கவும். மீண்டும் நன்றிகள்.
அன்புள்ள மதுமிதா..
ReplyDeleteநன்றிகள். நானும் நீயும் கரந்தையில் டீக்கடையில் நின்றுகொண்டு இலக்கியம் பேசி கழித்த நாள்கள் நினைவுக்கு வந்துவிட்டன. மனம் நெகிழ்கிறது. நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteநாடகம் அருமை தொடருங்கள்.........
தங்கள் கருத்திற்கு நன்றி கல்பனா.
ReplyDeleteபொம்மையைத் திரும்பிக்கொடுக்கும் இடம் நெகிழ்ச்சியாக உள்ளது.... தொடர்ந்து நாடகங்களை உருவாக்குங்கள்
ReplyDeleteநன்றி பெருமாள்.
ReplyDeleteநல்ல பதிவு.சுயம் மற்றும் மற்றமை பற்றி நிறைய கேள்விகளை எழுப்புகிற பதிவு.இது போன்ற எழுத்துக்கள் சந்தோஷத்தை விதைக்கின்றன.
ReplyDeleteநன்றி சைக்கிள் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
ReplyDeleteவலைப் பதிவுதனில் முதல்முதலாக நாடக பாணியில் ஒரு கதை வாசித்தேன்..மகிழ்ச்சி..இதைப் போலவே இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..
ReplyDelete