Sunday, June 23, 2013

ஜால்ரா குறுந்தொடர்,,,,,5






                             கோயில் பிரகாரத்தில் ஜமக்காளம் விரித்திருந்தார்கள்.

                             பெரும்பாலும் ஆண்கள். நாலைந்து பெண்கள் நடுத்தரவயதில் உட்கார்ந்திருந்தார்கள்.

                             வேணுகோபால்தான் பேச்சைத் தொடங்கி வைத்தார்.

                             கும்பாபிஷேகம் நடத்தணும். எதிர்பார்த்தபடி கலெக்ஷன் வரலே. ரொம்ப வருஷமாச்சு.. தெருவுலேயும் நாலைந்து இழவு விழுந்துடிச்சி. சீக்கிரம் நடத்திடறதுதான் நல்லது. என்ன பண்ணலாம் அவஙக் அவங்க யோசனையை சொல்லுங்க..

                              எங்க பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க தந்திடறோம்..

                              இது என்ன சொத்தா. பங்குபோட்டு பராமரிக்கிறது. இது கடவுள் காரியம். ஆளுக்கு ஒரு செலவை ஏத்துக்கிட்டா மெயின் செலவு சமாளிச்சுடலாம்.. கும்பாபிஷேகச் செலவுக்கு மத்த தெருவுக்கு வசூலுக்குப் போவலாம்..
                               அதையும் யாருக்கு எதுன்னு சொல்லிடுங்க.

                               ஏங்க இது என்னங்க நான் சொல்றது. அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது. அதுக்கேத்தபடி ஏத்துக்கங்க.

                               உள்ளே தளம் போட்டு டைல்ஸ் போடணும். வெளிச்சுவரு காரை பேந்துபோய் கெடக்கு.. அதை சீர்பண்ணி டைல்ஸ் ஒட்டணும்.. பெயிண்ட் செலவு இருக்கு. கோபுரத்துல போனவந்தத சீர்பண்ணனும்.. விளக்கு இருக்கு. எதஎதது யாருக்கு ஒத்துவருமோ செஞ்சுக்கலாம்.

                                 பூசை சாமான்கள்ல பலது குறையுது,,

                                 என்ன என்ன கொறையுது?

                                 துர்வாக்கால் இல்ல... சூடம் ஏத்துறது இல்லே... சின்ன சின்ன பித்தளை தட்டுங்க கெடந்துச்சு,, இப்படி பல கொறையுது,,

                                 சாமி சிலையே பல கொறையுது,, வேணுகோபால் பேசினார்.

                                 என்ன சாமி சிலைங்க இருந்துச்சி சொல்லுங்க... என்றார் தாமோதரன்.
                                 எனக்கு விவரம் தெரிஞ்சு இருந்த சின்ன சிலைங்க பல காணும். எங்க தாத்தாவுக்கு அப்பா வாங்கி வச்சது.. அதுல ஒண்ணே ஒண்ணு சம்பநத்ரோடது,, அதக் காப்பாத்தி வீட்டுல வச்சிட்டுப்போனாரு எங்கப்பாரு..

                                 அத ஏன் உங்க வீட்டுல வச்சிருக்கீங்க?
                                 கோயில்ல பாதுகாப்பு இல்லன்னுதான்.. ரெண்டு தடவை கோயில் கேட்ட ஒடச்சிருக்காங்க.. அதனால எங்கப்பா வீட்டுல கொண்டு வந்து வச்சிட்டாரு... முக்கிமான விஷேசமான  நாளுஙக்ல கோயிலுக்கு எடுத்திட்டு வருவாரு...

                                    நல்ல கேட் ஸ்ட்ராங்கா போட்டு நல்ல பூட்டுப் போட்டுடுவோம்..
                                    தாராளமா செய்யுங்க.. ஆனா அது ஐம்பொன் சிலை,,  அதான் தயக்கமா இருக்கு..
                                    எல்லா சிலையும் ஐம்பொன்னு சிலைதான்..
                                    அதுலதான் சந்தேகமாக இருக்கு.. அத சரிபார்க்கணும்..
                                    என்ன அர்த்தத்துலே பேசறிங்க?
                                    எந்த அர்த்தமும் இல்ல,, இங்க இருந்த பல சாமர்னுங்க..சின்ன சின்னதா ஐம்பொன்னு காலப்போக்குல போயிடிச்சி...
                                    எப்ப போச்சு?
                                    சன்னமாப் போயிடிச்சி..
                                    நாங்க அஞ்சு வருஷம் பாத்திருக்கோம்.. அப்ப என்ன இருந்துச்சோ அது அப்படியே இருக்கு,,, என்றார் தாமோதரன்.
                                    அததான் சரிபார்க்கணும்னு சொல்றேன்.
                                     என்ன சநதேகப்படறியா நீ? எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னோடது தெரியுமா? தாமோதரன் ஆத்திரப்பட்டார்.
                                     சந்தேகம் இல்ல. ஆனா உண்மை தெரியணும் எல்லோருக்கும்.
                                     என்ன வேணுகோபால் பொத்தாம் பொதுவுல இப்படி குற்றம் சொல்றீங்க?
                                   ஒண்ணு சொல்றேன் கேளுங்க.. இதுவரைக்கும் ஆளுங்க இங்கவந்துதான் இந்த சிலைங்களுக்கு பாலிஷ் போடறது நடந்திருக்கு. அது எங்கப்பா இருக்கறவரைக்கு. பாலிஷ் போடறப்ப தெருக்காரங்க நாலைஞ்சு பேரு சாட்சியிருப்பாங்க.. எங்க பொறுப்பு மாறினதும் சிலைங்க எல்லாம்  மூலவரத் தவிர மத்தது  பாலிஷ் போட வெளியே போச்சு.. திரும்பிவரும்போது அது எப்படி இருந்துச்சின்னு தெரியாதுல்ல..
                                     செருப்பால அடிப்பேன் நாயே.. திமிரா.. என்குடும்பம் திருட்டுக் குடும்பம்னு சொல்றியா.. நீங்க டிரஸ்ட் பார்த்த யோக்கியதைதான் ஊருக்கே தெரியுமே? அதனால எங்கப்பா சண்ட போட்டு டிரஸ்டிய மாத்தி தான் பார்த்தாரு..

                                    ஒழுங்கா பேசுடா நாயே,, நான் அடிச்சேபுடுவேன்,,

                                    வேணுகோபாலும் தாமோதரனும் நேருக்கு நேர் எழுந்து ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தார்கள்.
 
                                     என்னப்பா இது கோயிலா? என்ன? நாங்க எதுக்கு இங்க இருக்கோம்? பழச விடுங்கப்பா.. சாமி சொத்த யார் தின்னிருந்தாலும் அத சாமி பாத்துக்கும் ஆக வேண்டியத பாருங்க..
     
                                       இவ வீட்டுலே வசசிருக்கிற சிலை ஐம்பொன்னுன்னு எப்படி நம்பறது? தாமோதரன் கேட்டார்.

                                      அது எங்க முப்பாட்டன் செஞ்சது.. யார வேணாலும் அழைச்சிட்டு வந்து பரிசோதிச்சுக்கலாம்.. இருங்க வரேன்.. என்றபடி எழுந்துபோய் இரண்டுபேராய் அந்த ஞானசம்பந்தர் சிலையைக் கொண்டு வந்து கோயில் வைத்தார்.

                                 என் பாரம் கொறஞச்து.. இனி இந்த சிலை ஒங்க பொறுப்பு.. என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. சோதிச்சும் பாத்துக்கங்க...

                                  சிலை கையிலே இருந்துச்சே அந்த ஜால்ரா என்ன ஆச்சு? அதுவும் ஐம்பொன்னுதான்..

                                    அது காணாமப் போனதாலதான் எங்கப்பா சிலையும் போயிடும்னு பயந்து வீட்டுக்குத் துர்க்கிட்டு வந்துட்டாரு.

                                    எனக்குத் தெரிஞ்சு தினமும் கோயிலை கூட்டிப் பெருக்கறது அந்த தனம்தான்.. ஜால்ரா அப்பத்தர்ன் காணாமப்போனது..

                                     அடப்பாவி அந்த பொம்பள அப்பாவி.. அதுமேல பழிய போடாத,,,
                                     ஏன் அத ஏமாத்தி கொறச்ச விலைக்கு  வீட்டை வாங்கிட்டியே அதனால சப்ப கட்டுறியா?

                                     நான் ஏமாத்தி வாங்கல்லே.. இந்த வலம்புரி விநாயகருக்குத் தெரியும்.. அதுவா மருமவனுக்கு விபத்துன்னு.. வித்துட்டு வைத்தியம் பார்க்கப்போறேன்னிச்சு.. அதான் வாங்கி உதவினேன்.

                                      அய்யய்யோ விடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்துப் பெரிசா இருக்கு.. எது நடந்தாலும் விடுங்க.. இனி ஆகவேண்டியத்ப் பாருங்க.. ஆளுக்கு ஒரு பொறுப்ப எடுங்க.. இந்த முதக் கூட்டமே ஒண்ணுமில்லேன்னா ஒரு காரியமும் பார்க்கமுடியாது.

                                      நான் கடைசிவரைக்கும் ஆகிற சிமெண்ட் செலவு என்னோடது.
                                      நான் டைல்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன்.

                                      விளக்குங்க.. தண்ணி போர் செலவு என்னோடது..

                                      தட்டுமுட்டுப் பித்தளை சாமான் நான் வாங்கித் தநதுடறேன்.

                                      மத்த மத்த காரியத்துக்கு ஐயரே,, பட்டியல் போடுங்க.. தெருத்தெருவா வசூலுக்குப் போகலாம்.. தினமும் நாலு பேராச்சும் போவணும்..

                                      அதுக்கென்ன போகலாம்.

                                      சரி ஐயரே,, தீபாராதனைக் காமிங்க.. கூட்டத்த இத்தோட முடிச்சுக்கலாம்.. அடுத்தக் கூட்டத்தில பாத்துக்கலாம்..

                                   எல்லோரும் எழுந்தார்கள்.

                                   வேணுகோபால் தாமோதரனை முறைத்தபடியே எழுந்து நின்றார்.

                                   கோயிலுக்கு எதிரே தனலெட்சுமியின் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தார். ஏனோ மனசுக்கு வருத்தமாய்  வந்தது.

                                                                                                        (ஜால்ரா ஒலிக்கும்)

                                       
                                             





6 comments:

  1. முடிவில் அந்த ஜால்ராவினால் தான் பிரச்சனை ஆகுமோ ?என்று நினைக்கிறேன்...

    சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. நடைமுறையில் பஞ்சாயத்து ஏடாகூடம் அப்படியே கண்முன் பிரதிபலிக்கின்றது!...

    ReplyDelete
  3. சுவாரசியமான கதையின் போக்கு படிப்பவர்களை எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டது ..........பாராட்டுக்கள்

    ReplyDelete

  4. வேணுகோபாலன் வீட்டில் ஐம்பொன் சிலை வந்தபோதே விவகாரங்கள் இருந்திருக்க வேண்டும் . காரணம் ஊர்ப் பெரிய மனிதர்களுக்குத் தெரியாதா. சிலைகளே காணாமல் போய்விட்ட பிறகு ஜால்ராவுக்காகப் பிரச்சனையா. ? தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. பஞ்சாயத்துக் காட்சி கண் முன் தோன்றியது. தொடர்கிறேன் அய்யா

    ReplyDelete