குறுங்கதை 19
அப்பாவின்
நண்பர்கள்
ஹரணி
இந்த மாதம் பதினைந்தாம் தேதிதான் திதி
ராகவனுக்கு. இரண்டாண்டுகள் ஆகிவிட்டன ராகவன் இறந்துபோய். ஆனால் நட்சத்திரப்படி முன்கூட்டியே
வந்துவிட்டது. ஐந்தாம் தேதி திதி என்பதால் முன்கூட்டியே ஐயரிடம் சொல்லியாகிவிட்டது. கொரோனா காலம் என்பதால் ஐயர் கொஞ்சம் கூடத்தான் தொகை
கேட்டிருந்தார். அவர் கேட்ட காய்கறிகள் மற்றும் எல்லாமும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தன.
ராகவனின் மகன் கோபி சொன்னான் அம்மா..
இதையெல்லாம் பார்க்கவேண்டாம்… அப்பாவின் திதி நன்றாக நடக்கவேண்டும். அப்பா உயிருடன்
இருந்தவரைக்கும் தாத்தாவுக்குக் குறைவின்றிச் செய்தார். நானும் அதை அப்படியே செய்வேன்
என்றான்.
சரி என்றாள் ராகவனின் மனைவி.
ராகவன் போனபிறகு பொருளாதார ரீதியாக கொஞ்சம்
அடி வாங்கியிருந்தது குடும்பம் என்றாலும். சமாளிக்கும் வருமானமும் கிடைத்தது.
ராகவன் பெருந்தன்மையானவன். உயிருடன் இருந்தபோது
பலருக்கு உதவி செய்திருக்கிறான். அவன் இறந்தபோது அவனிடம் கடன் வாங்கியவர்கள் ஒருவர்கூட
வரவில்லை. ஏமாற்றுவேலைதான்.
எப்படிப் போய் கேட்கமுடியும்? ராகவனிடம்
எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் கொடுத்திருப்பதை வாய்மொழியாகச் சொல்லி வைத்திருந்தான்.
அதைக் கேட்டபோது சொல்லி வைத்தாறபோல
வாங்கிய அத்தனைபேரும்.. தம்பி.. அப்பா உயிருடன் இருந்தப்பவே கொடுத்திட்டோம்பா.. என்றார்கள்.
கோபி எதுவும் பேசாமல் திரும்பி வந்தான்.
திதி அன்று ஐயர் சொன்னபடி எல்லாமும்
இருந்தன. உருண்டை தக்காளிபோல ஐயர் வந்து இறங்கினார் ஆக்டிவாவில்.
எல்லாரும் வந்துட்டாளா என்றார்.
இல்ல சாமி.. கொரோனா யார்கிட்டயும் சொல்ல முடியல.. எங்க குடும்பம்.. எங்க வீட்டுக்காரரோட
தம்பி குடும்பம் அவ்வளவுதான்.. நீங்க ஆரம்பிங்க என்றாள் ராகவன் மனைவி.
ஐயர் ஆரம்பித்தார்.
அப்போது வாசலில் வண்டிகள் சப்தம் கேட்டது. நாலைந்து இளைஞர்கள் ஆளுக்கொரு வண்டியில்
வந்திருந்தார்கள். எல்லோரும் கோபி வயதொத்தவர்கள். ஆளுக்கொரு பை வைத்திருந்தார்கள்.
உள்ளே வந்தார்கள்.
யார் நீங்க?
சொல்றோம் என்றபடி தாங்கள் வைத்திருந்த
பையில் இருந்து பணக்கட்டுகளை எடுத்து தரையில் வைத்தார்கள். கோபியும் அவன் அம்மாவும்
அதிர்ந்துபோனார்கள்.
என்ன இது?
ராகவன் அங்கிள்கிட்ட எங்கப்பாக்கள்
வாங்கினது.. எங்க மூணு பேரோட அப்பாவும் ஒண்ணா
ஆக்சிடெண்ட்ல இறந்துபோயிட்டாங்க.. எங்கம்மா சொன்னாங்க… உங்கப்பா ராகவன் அங்கிளை ஏமாத்துனதோட
பலன்.. நமக்குப் போதுமான பணம் இருக்கு.. அவரோட பணத்தைக் கொண்டுபோய் கொடுத்திட்டு வந்துடுங்க..
நீங்களாச்சும் மிஞ்சி இருக்கணும்னாங்க.. அதான் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன் என்றார்கள்.
கோபியும் அவன் அம்மாவும் ராகவன் போட்டோ
பார்த்து அழுதார்கள்.
அந்த தாய்களுக்கு வணக்கங்கள்...
ReplyDeleteநல்ல புத்தி சொன்ன அந்த தாய்மார்களுக்கு வணக்கம். பணத்திற்காக எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லும் உலகம் இது.
ReplyDelete