Saturday, October 24, 2015



                  முதல் விழா.... கேஜி பப்ளிகேஷன்ஸ்....முதல் விழா...



                 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கேஜி பப்ளிகேஷன்ஸ் .  என்னுடைய புத்தகங்களை வெளியிடுவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட து.  ஒருபுத்தகத்தை வெளியிடுவதெனில் ஒரு பதிப்பக முகவரி வேண்டும் என்கிற அளவில் ஒரு முகவரியாக செயல்பட்டு வருகிறது இன்றுவரை. . இதன்வழியாக 35 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இலக்கியம், இலக்கணம், அகராதி, சிறுகதை, நாவல், கவிதை, பெண்ணியம். வரலாறு மொழியியல் எனும் பொருண்மைகளில் நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில நூல்கள் பரிசும் பெற்றிருக்கின்றன.

                 இருப்பினும்  படைப்பிலக்கியம், இலக்கியம், ஆய்வியல், வரலாறு, தத்துவம் என இன்னபிற துறைகளில் பலர் திறம்படப் பணியாற்றி வருகின்றனர் என்றாலும் அவர்கள் காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டு அல்லது கவனிக்கப்படாமல்  இருப்பது கவலைக்குரியதாகும். எனவே  தரமாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் தன்னாலியன்ற பணிகளைச் செய்துவரும் உண்மையான  கல்வியாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்கிற முனைப்பில் அவர்களை அடையாளப்படுத்த ஒரு சான்றிதழும் சிறு பரிசும் வழங்கி அவர்களைக் கௌரவித்தால் அது அவர்களின் அடுத்த இலக்கிற்குத் தொய்வில்லாமல் இருக்கும் என்பதன் வழியாக ஆண்டுக்கு 20 பேரைத் தெரிவு செய்து இவ்வாறு பெருமைப்படுத்தலாம் என முடிவெடுத்தேன்.  மிகப்பெரும் விருதோ பரிசோ இது இல்லையென்றாலும் இவர்களைப் போன்றோர்களால்தான் மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற உண்மையை அவர்களின் திறன்மிகு செயல்களால் உலகிற்கு உணர்த்தவேண்டும் என்பதுவும் இதற்குக் காரணம்.

                   பத்தாண்டுகளாக மனத்திற்குள் இருந்த கனவை இந்த ஆண்டு செயற்படுத்த முடிவெடுத்து அதன் முதல் கட்டமாக  தஞ்சாவூர், கரந்தைப் பகுதியைச் சார்ந்த திருமதி கோ.சந்திரா, தலைமையாசிரியை , சிறந்த ஆசிரியைக்கான தமிழக அரசின் இராதாகிருஷ்ணன் விருது பெற்றமையால் அவர்களைக் கௌரவிக்கலராம் என்றெண்ணி அதற்கான  ஏற்பாடுகளைச் செய்தேன். அப்போது இதுபோன்ற விழாக்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கரந்தையில்  ஸ்ரீராம் செராக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அன்புத்தம்பி திரு முருகானந்தம் அவர்கள் கேட்டுக்கொண்டதோடு அல்லாமல் இதற்குரிய கேடயங்களை நான் தருகிறேன் என்றும் வாங்கி வந்தார் . அதன்படி விழா ஆயுத பூஜை 21,100,2015 அன்று ஸ்ரீராம் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் செராக்ஸ் நிறுவனத்தில் எளிய முறையில் நடைபெற்றது. அதன் நிகழ்வுப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திரு சோ.முருகானந்தம். ஸ்ரீராம் கம்ப்யட்டர்ஸ் மற்றும் செராக்ஸ் உரிமையாளர் இரண்டாவது இருப்பவர் ஆங்கிலப் பேராசிரியர் திருமிகு  என்.பாலகிருஷ்ணன் தொடர்ந்து ஹரணி மற்றும் தமிழக சிறந்த ஆசிரியைக்கான இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி கோ.சந்திரா அவர்கள்.


               எனவே உங்கள் பகுதியில் இதுபோன்ற கல்வியாளர்கள் இருப்பின் உண்மையில் அவர்கள் அர்ப்பணிப்பு மிகுந்த கல்வியாளர்கள் என்று நீங்கள் நினைத்தால் அவர்களின்  தன்விவரக்குறிப்பும், அவர்களின் கல்விப்பணிகள் பற்றிய விவரங்களுடன் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். வருடம் முழுக்கத் தங்களின் கல்விப்பணியில் தொய்வில்லாமல் உழைப்பவர்களாக இருத்தல் அவசியம்.  இத்தகைய தரம் வாய்ந்த கல்வியாளர்களை உலகிற்கு அறிமுகம் செய்ய கேஜி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.  பெருமையுடன் இதனை எதிர்கொள்கிறது.  கல்வியாளர்களை உரிய  கல்வித்தரக்குழு தெரிவு செய்யும்.  இது முழுக்க முழுக்கத் தரமான கல்வியாளர்களை முன்னிறுத்துவது. ,

                      கல்வியாளர்களோ அல்லது அவர்களைப் பரிந்துரை செய்பவரோ .அனுப்பலாம். நல்ல தரமிக்க சத்திய ஆய்வாளர்களால் நம் தாய்மொழி மேலும் வளம் பெறட்டும்.. இன்னும் பல திட்டங்களைச் சிந்தை கொண்டிருக்கிறது கேஜி பப்ளிகேஷன்ஸ், கடவுளும் காலச்சூழலும் அதற்கு உதவவேண்டும்.


.குறிப்பு,.

                 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியாற்றும் கல்வியாளர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.

                   திசம்பர்த் திங்கள் இறுதிவரை கல்வியாளர்கள் தங்கள் விவரங்களையும் பரிந்துரையாளர்கள் தங்கள் பரிந்துரைகளையும் அனுப்பலாம்.                    


மின்னஞ்சல் முகவரி... anbalagan.gom@gmail.com




                 

5 comments:

  1. தங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. மற்றவர்களைப் பாராட்டவும் மனம் வேண்டும்
    அது தங்களிடம் நிறையவே உள்ளது ஐயா
    தஙகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்கள் மனதுள் உயர்ந்து வருகிறீர்கள்... நீடூழி வாழ்க!

    ReplyDelete
  4. 'மனதுள்' எனும் வார்த்தைக்குமுன் 'என்' என்று சேர்த்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  5. சிறப்பான ஒரு தொடக்கம். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளும் ஐயா.

    ReplyDelete