பாவையர்மலர் ......செப்டம்பர் 2015 இதழில் வந்த என் சிறுகதை...
///////////////////////////////////////////////////////////////////////
உனக்காகக் காத்திருப்பேன்
..
ஹரணி
கிருபாகரன் அங்கு
போனபோது தண்ணி எடுக்கப் போயிருந்தார்கள். கூட்டமிருந்த்து. உறுமிமேளம்
கொட்டிக்கொண்டிருந்தவர்கள் உச்சத்தில் இருந்தார்கள். அழுகைசத்தமும்
அதிகரித்துக்கிடந்தது. நல்ல வெயிலில் வேர்த்துக்கொட்டினாலும் பேருக்குப்
போட்டதுபோலிருந்த பந்தலில் கிடந்த ஓட்டைகள் வழி இறங்கி அழுபவர்களின்மேல சல்லடையை
வரைந்திருந்த்து வெயில். நாற்காலிகள் கொஞ்சம் காலியாக்க் கிடந்தன. உட்காருவதற்கு
முன்னதாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று அருகே போனான். கையிலிருந்து மாலையைப்
போட்டான். மாலையைப் போடுவதற்கு முன் அதிலிருந்து சில ரோஜா இதழ்கள் உடம்பின்மேல்
விழுந்தன. மாலையைப் போட்டுவிட்டு சிறிதுநேரம் அங்கே நின்றான். முகம் மாறாமல்
இருந்தது. மருத்துவமனையில் உறங்கிக்கிடக்கும் நோயாளியைப்போலத்தான்
உறங்கிக்கிடந்தாள். வழக்கம்போல நெற்றியில் சின்னதான கருப்புப்பொட்டு. அவளுக்குக்
கருப்புப்பொட்டுதான் எப்பவும் பிடிக்கும். அதுவும் பயித்தம் பருப்புப்போல
சின்னதாய்.
இறந்துபோய்விட்டாள் ஈசுவரி என்பதை மனம் நம்ப மறுத்த்து. கடைசியாக அவளைப்
பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இருபது வருடங்களில் அவளைப் பற்றிய
சிறு தூறல்கூட மனத்தில் விழவில்லை ஈரமாய். என்றாலும் ஓரிருமுறைகள் எதற்காகவோ
அவளைப் பற்றிய நினைவு வந்த்து கிருபாகரனுக்கு. முதன்முதல வேலை கிடைத்து பிறந்த
ஊரைவிட்டு வெளியூர் வந்து விடுதேடி அலைந்து கிடைத்த தெருவில்தான் ஈசுவரியும்
பூர்விகமாக்க் குடியிருந்தாள்.
வேலைக்குப்
போகுமபோதெல்லாம் வாசல் படியில் உட்கார்ந்து எதையேனும் படித்துக்கொண்டிருப்பாள்
ஈசுவரி. முதலில் எந்த விளைவும் நிகழ்ந்துவிடவில்லை. எதேச்சையாக ஒருமுறை அவள்
வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்கப்போனபோது அவள்
வீட்டருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்த்தும் அவள் வீட்டில் இருநதுதான்
பந்தலில் துக்கம் விசாரிக்க வந்த அனைவருக்கும காபி போட்டுக் கொடுத்தார்கள்.
ஈசுவரிதான் முதன்முதலில் கிருபாகரனுக்குக் காபி நீட்டினாள்.
மன்னிக்கணும்
நான் காபி சாப்பிடறதுல்லே. பழக்கமில்லை. டீதான்.
சரி என்று
போய்விட்டாள் ஈசுவரி. சற்றுநேரத்தில் டீ போட்டு எடுத்துவர, கிருபா கேட்டான்
எதற்கு இத்தனை
சிரம்ம் உங்களுக்கு?
எங்களுக்கு
என்ன சிரம்ம்? சாவு வீட்டுக்கு வந்திருக்கவங்களுக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னு
சொல்லுவாங்க... சாவு வீடா இருந்தாலும் பிடிக்காத்த எப்படி ஏத்துக்கமுடியும்? அதான்
காபி பிடிக்கலேன்னதும் டீ போட்டு எடுத்திட்டு வந்தேன்.
இப்படித்தான்
பழக்கமானது.
இருவருக்கும்
உள்ள படிப்புப் பழக்கம் கிளை நூலகத்திலும், புத்தக்க் கண்காட்சியிலும் நிகழ்ந்த
சந்திப்புக்களும் ஒருவரையொருவர் காதலில் தள்ளியது.
அதுவரை
எதார்த்தமாக, இயல்பாக இருந்தவள் காதலுக்குப் பின்னர் பயம் கண்களில் தெரிந்தது.
எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினையாயிடும். இதுக்கெல்லாம்
ஒத்துக்கமாட்டாங்க.. ஆனாலும் மனசு உங்கள விடாம துரத்துது என்றாள்.
சந்திப்புக்கள் குறைவாக நிகழ்ந்தாலும் மனம் தரையில் ஒட்டிய தாரைப் போல
ஒட்டிக்கொண்டது.
தவிக்கத்தொடங்கியது உள்ளம்.
எல்லாத்
தருணங்களிலும் ஈசுவரி என்னென்னவோ செய்தாள்.
நாம கல்யாணமே
பண்ணிக்கமுடியாதா? என்று கேட்டான் கிருபாகரன்.
வாய்ப்பில்லை
கிருபா.. எனக்கு அந்த துணிச்சலும் இல்லை. எங்க வீட்டுச் சனங்க இரக்கமில்லாதவங்க..
எதுவேணாலும் செஞ்சுடுவாங்க.. இப்படியே உங்கள பார்க்கறது இல்லாமப் போயிடும்.. அத
என்னால தாங்கமுடியாது.. சொல்லிவிட்டு அழுதாள் ஈசுவரி.
அவள்
சொன்னதபோலவே ஆயிற்று.
இரண்டாண்டுகள் உணர்வுப்பூர்வமாக கழிந்த ஆண்டுகள். அவளும் பட்டப்படிப்பை
முடித்திருந்தாள்.
கிருபாகரன்
பதவி உயர்வுக்காக எழுதிய தேர்வில் வென்றுவிட பதவிஉயர்வும் மாறுதலும் வந்த்து.
ஆனால் விருப்பத் தேர்வு என்று சலுகை அளித்திருந்தார்கள்.
மாறுதல்
வேண்டாமென்று எழுதிக்கொடுத்தான்.
ஈசுவரிக்கு
போன உயிர் திரும்பி வந்த்துபோல மகிழ்ந்தாள்.
ஆனாலும்
யாருக்கும் தெரியாமல் சந்தித்துக்கொண்டார்கள். கிருபாகரன் கேட்டான் எனக்குப்
பயமில்லை. உனக்கு விருப்பம்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.
என்னால
முடியாது.. என்று மறுத்துவிட்டாள். பிடிச்சிருக்கு ஆனா கல்யாணம் எங்கவீட்டு
சம்மத்த்தோட நடந்தா பரவாயில்லை. அப்படி நடக்க வாய்ப்பில்ல.. வேண்டாம்.. அவங்கள
பகைச்சிட்டு எனக்கு கல்யாணம்வேண்டாம்..
தெளிவாக அதேசமயம் பயத்துடனும் பேசினாள் ஈசுவரி.
இதற்கிடையில்
தீவிரமாக கிருபாகரனுக்குப் பெண் பார்த்தார்கள். அதற்கு முன் ஈசுவரிக்குத் திருமணம்
நடந்து முடிந்திருந்த்து.
ஈசுவரிக்குத்
திருமணம் நடந்து இரண்டாண்டுகள் கழித்து கிருபாகரனுக்கும் பெண் பார்த்து
முடித்தார்கள்.
யாருக்கும்
பத்திரிக்கை கொடுக்கவில்லை. ஈசுவரி உட்பட.
அவரவர்க்கான
வாழ்வில் கரைந்து நின்றபோதுதான் ஒருநாள் ஈசுவரி போன் செய்தாள். நம்பர் மட்டும் வர
கிருபாகரன் போனை எடுத்தான்.
யாரு
வேணும்? என்றான்,
நான்தான்
ஈசுவரி பேசறேன்.
எந்த
ஈசுவரி?
ஈசுவரிங்க..
கிருபா தானே...
ஆமாம்..
சொல்லுங்க.
ஈசுவரி
என்னைத் தெரியலியா?
தெரியலியே..
எனக்கு இப்ப ஞாபக மறதியாயிடிச்சி.. எந்த ஈசுவரி?
பல
சம்பவங்களைச் சொன்னாள்.
எதுவும்
ஞாபகம் இல்லங்க.. ஈசுவரி.. நீங்க யாருன்னு தெரியலியே..
நினைவுக்கு வரமாட்டேங்குது.. அது போகட்டும் உங்களுக்கு
என்னவேண்டும்?
ஒண்ணும்
வேண்டாங்க... என்னை தெரியலியா? என்றாள் மறுபடியும்.
ஆமாம் தெரியல... நாலஞ்சு ஈசுவரிங்க
பேரு என்னோட செல்லுல இருக்கு.. என்றான் வேண்டுமென்றே.
வருத்தப்படுவாள்
என்றாலும் முடிந்துபோன முன்கதையைக் கிளறக்கூடாது. அது தேவையில்லாத்து. வேண்டாம்
என்று விலக்கியபின்னர் எந்த ஒன்றையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நமக்குக் கிடைக்கும்
என்று நம்பிக்கை கொண்டிருக்கையில் அது கைநழுவிப்போகிறதென்றால் நிச்சயம் அது
நமக்கில்லை என்பதுதான் உண்மை. எனவேதான் ஈசுவரியை பற்றிய நினைவையே அகற்றிக்கொள்ள
விரும்பினான்.
நாலைந்து
மாதங்களுக்கு பின்னர் ஈசுவரிக்கும் எனக்குமான பொதுவான நண்பர் அந்த செய்தியைச்
சொன்னார். ஈசுவரிக்கு மார்புப் புற்றுநோய் என்று. ஆபரேசன் செய்திருப்பதாகவும்
தகவல். வருத்தமாக இருந்த்து. ஒருவேளை அந்த வேதனையைப் பகிர்ந்துகொள்ளத்தான் போன்
பேசியிருக்கவேண்டும். சரி இன்னொருமுறை பேசினால் பேசிக்கொள்ளலாம் என்று
விட்டுவிட்டான். நாமாகப் பேசினால் அது வேறுவிதமான பிரச்சனைகளைக் கிளப்பிவிடும்
என்று.
கடைசிவரை ஈசுவரி
பேசவேயில்லை. ஆனாலும் அப்படியா என்று கைப்பேசியை அணைப்பதற்கு முன் பேசிய அந்தக்
கடைசிச்சொல் நீங்காமல் மனத்தின் ஓரம் இறுகிக்கிடந்த்து.
இனி அதுவும்
இல்லை. முடிந்துவிட்டது. இனி ஈசுவரி எதுவும் பேசப்போவதில்லை. பேசியது போதும்...
வாழ்ந்த்து போதும்.. என்று வாழ்வை முடித்துக் கொண்டாள் போலும்..
மரணம்
ஒன்றுதான் எல்லாவிதமான பிரச்சினைகளையும் சட்டென்று தீர்த்துவிடுகிறது.
குளிப்பாட்டி
எல்லாச் சடங்குகளையும் செய்து ஈசுவரியை பாடையில் ஏற்றினார்கள். ஊர்வலம்
புறப்பட்டது. ஈசுவரியின் மகன் கொள்ளியைப் பிடித்திருந்தான். அவனுக்கருகில்
ஈசுவரியின் கணவர் பழுப்பேறிய ஈர வேட்டியை இடுப்பில் கட்டியபடி
போய்க்கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில்
பூக்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. தன்னிடத்தில் பேசிய சொற்களை ஒவ்வொன்றாக
நினைத்துக்கொண்டான் கிருபாகரன்.
ஊர்வலத்தின்
பின்னே அவளை நினைத்துக்கொண்டு நடந்தான்.
சுடுகாட்டில்
எல்லாச் சடங்குகளையும் முடித்தார்கள். திரும்பி நடந்தார்கள். கிருபாகரனும்
பேருந்துநிலையம் நோக்கி நடக்கத் தொடஙகினான். சுடுகாட்டுப் பாதையை விடுத்து மெயின்
ரோட்டுக்கு வந்தபோது யாரோ அழைக்கத் திரும்பிப் பார்த்தான்.
சார்..
நீங்க கிருபாகரன் தானே?
ஆமாம்
சார்.
நான்
ஈசுவரிக்கு நெருங்கிய உறவு சார்.. அவளுக்குப் பெரியப்பா பையன் நான்.. உங்கள பத்தி
ஒரு தடவ சொல்லியிருக்கு.. நல்ல வாழ்க்கையை இழந்திட்டேன்னு புலம்பியிருக்கு.
ஈசுவரிக்கு எதுவுமே சரியா அமையலே சார்..
அவளோட புருஷனுக்கு இன்னொரு தொடுப்பு இருக்கு சார்.. எப்பவாச்சும் வருவான்
சார்.. பசிக்கு அலையற மிருகம் இரைய தேடுறமாதிரி.. கடைசியா இப்ப வந்திருக்கான்.. ஒரு
புள்ளசார்.. அவன்தான் சார் ஆறுதல் அவளுக்கு.. பையன் கெட்டிக்காரன் சார்..
பொழச்சுக்குவான்.. இன்ஜியரிங் முடிச்சுட்டான்.. கஷ்டப்பட்டுப் படிக்க வச்சுட்டா
ஈசுவரி... சரி இனி என்ன பேசி என்ன ஆவப்போவுது.. போய்ட்டா.. இந்தாங்க சார் இதை
உங்க்கிட்ட கொடுக்கச் சொன்னா.. என்று பழுப்பேறிய ஒரு சிறு கவரைக் கொடுத்துவிட்டு..
நான் வரேன் சார் என்று போய்விட்டான்.
போட்டோ
ஸ்டுடியோவில் போட்டோ வைத்து தருகிற கவர் அது. ரொம்ப பழுப்பேறியிருந்தது. பிரித்து
பார்த்தான் உள்ளே கசங்கிய ஒரு போட்டோ இருந்தது. அது கிருபாகரனுடைய பழைய போட்டோ..
கல்லூரியில் படித்தபோது எடுத்த போட்டோ. ஈசுவரி கேட்டுவாங்கியது நினைவுக்கு வந்தது.
சுத்தமாக அந்தப் போட்டோவில் இருந்த முகத்திற்கும் இப்போது இருக்கும் கிருபாகரனின்
முகத்திற்கம் நிறைய வேறுபாடுஇருந்த்து. அந்தப் போட்டோவைக் கொண்டு அது கிருபாகரன்
என்று அடையாளம் காணமுடியாது. அந்தளவுக்கு முகம் மாறியிருந்தது.
உண்மைதான் முகம்
மாறித்தான் இருக்கிறது உள்ளமும்கூட என்பதை நினைக்கக் கிருபாகரனுக்குள் ஓர்
உறுத்தல் வந்த்து. ஒருமுறை பையிலிருந்து செல்போனை எடுத்துப் பார்த்துக்கொண்டு
மறுபடியும் பையில் வைத்துக்கொண்டான்.
மனதை உலுக்கும் சிறப்பான கதை! வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteஇந்தியாவில் ஏராளமான காதல்கள் இப்படித்தானே முடிகின்றன! ஒரே ஒரு வித்தியாசம், சிலருடைய ஈஸ்வரிகள் இன்னும் உயிருடன் இருக்கவும் கூடும்...
ReplyDeleteமனதை கனக்கச் செய்யும் கதை ஐயா
ReplyDeleteவாழ்த்துக்கள் .. ஹரணி
ReplyDelete