Monday, October 14, 2013

கல்விக் கண்ணீர்....



கல்விக் கண்ணீர்..


                   ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வருகின்ற கொலை. கொள்ளை தொடர்பான அடிக்கடி வருகின்ற செய்திகளைப் போன்று கல்வித் தொடர்பான பிறழ்வு செய்திகள் மனத்தை வேதனைப்படுத்துகின்றன.
பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரின் உயிர் பறிப்பு. மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான பாலியல் வன்முறையை மேற்கொள்வது போன்ற செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் ஒரு கல்லுர்ரியின் முதல்வர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். இறந்துபோன அந்த முதல்வரின் ஒரே மகள் சிறு வயது அவளின் சொற்கள் இவை

                      அங்கிள்... அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே,
                      ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா அப்பா
                      இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?
                     (நன்றி தி இந்து நாளிதழ்...12.10.2013)

நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன தந்தையை இழந்த மகளின் வேதனை.

                 இது இப்படியே தொடர்ந்தால் எதிர்கால கல்வியின் நிலை என்னவாகும்? எதிர்கால சமுதாயம் எப்படி நல் சமுதாயமாக மலரும். எப்படி ஆயினும் இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் வேதனையானதுமாகும். இதற்குரிய நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. உரியவ்ர்களுக்குத் தண்டனையும் உறுதி. என்றாலும் படிக்கவேண்டிய நிலையில் அந்த மாணவர்களின் மனத்தில் இத்தனை வன்மம் வளர்த்தது எது.

                    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்லாசிரியர் இயல்புகளையும் மாணாக்கர் இயல்புகளையும் ஆசிரியர் பாடங் கற்பிக்கும் முறையையும் மாணவர்கள் பாடம் கேட்கும் முறைகளையும் குறிப்பிட்டு இலக்கணம் வகுத்திருக்கிறது.

                  இவற்றுக்கான தீர்வு என்பது ஆசிரியர்களும் சரி மாணர்க்கர்களும் சரி தரமாக உருவாக்கப்படவேண்டும் என்பதுதான்.

                   இன்றைக்கும் ஆசிரியர் பணியை உப தொழிலாகக் கருதும் ஆசிரியர்களின் விழுக்காடுதான் அதிகமாக உள்ளது. ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன்பும் சரி வந்தபின்பும் சரி பணம் சம்பாதித்தல்  என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள ஆசிரியர்கள்தான் அதிகம்.  தன்னை மேன்மேலும் தகுதிப்படுத்திக் கொள்வதுமில்லை. மாணவர்களுக்குப் பாடம் சொல்வதில் சரியான பயிற்சியின்மையும் உள்ளது.

                கல்வி குறித்து சித்பவானந்தர் குறிப்பிட்டுச் சொல்கிறார்

                 ஆசிரியர்கள் என்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடும்
                  ஈடுபாட்டோடும் எளிமையாகவும் இருக்கவேண்டும்.
                 ஏனென்றால் அவர்களை எப்போதும் மாணவர்கள்
                 கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள் என்று.
                 நாட்டிலுள்ள ஒழுக்கக் கேடுகளுக்கு ஒழுக்கமின்மையே
                 காரணம். ஒழுக்கசீலர்களாகவும் அறிவில் சிறந்தவர்களாகவும்
                 இருத்தல் வேண்டும். எப்போதும் ஒழுக்கத்தையும் அறிவையும்
                 மேம்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.
             

மேலும் காந்தியடிகள் குறிப்பிடும்போது

                     எந்தக் கல்வியின் இறுதிநோக்கமும் தொண்டாகவே இருக்க
                     வேண்டும். இப்படியொரு வாய்ப்பு ஒரு மாணவனுக்குக்
                      கிடைத்தால் அதனை அரிய வாய்ப்பாகவும் கருதவேண்டும்..  


ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
                 
                       Teach him always to him to sublime faith himself and faith in mankind.
                       Teach his never put a price tag on his heart and soul

தன்மீது தன்னம்பிக்கையும் இந்த மனிதகுலத்தின் மீது மாறாத அன்பு செலுத்துபவனாகவும் தன்னுடைய இதயம் மற்றும் ஆன்மாவின் மேல்
விலைப்பட்டியல் ஒட்டாத கல்வியையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் என வேண்டுகிறார்.

                    இந்துஸ்தானத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்ட ஔரங்கசீப்  தனக்குப் பள்ளிப்பருவத்தில் ஆசிரியராக இருந்த முல்லா சாகேப் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

                             மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத் தத்துவங்களை
                              நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் மனத்தை நிதானத்தில்
                             வைக்கப் பயன்படும். அரிய தத்துவங்களைப் போதித்திருந்தால்
                             ஒருவேளை அதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு செல்வத்தில்
                             திளைத்துக்கிடந்தாலும சரி.. துரதிர்ஷ்டத்தில் தாக்கப்பட்டு
                             தோல்வியைத் தழுவினாலும் சரி இரண்டுக்கும் மயங்காத
                             மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள்
                             போதித்திருந்தால் நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன?
                             எப்படி இந்த பூமி இயங்குகிறது என்பதையெல்லாம் உணர்ந்து
                             கொள்ள எனக்கு இந்தக் கல்வியைப் போதித்திருந்தால்
                              உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டனவாக இருந்திருப்பேன்
என்று எழுதுகிறான்.

                              எனவே ஆசிரியரின் நேர்மை. ஒழுக்கம். தரம் . தன்மை. திறமை இவற்றைப் பொறுத்தே மாணவர் சமுதாயமும் உருவாகிறது. எனவே எப்படியாயினும் இனிமேலாவது ஆசிரியர் தெரிவில் முழுக்க முழுக்கத் தகுதி திறமையை மட்டும் கொண்டவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் எதிர்காலச் சமுதாயம் பண்படும் தரமான மாணவர்களும் உருவாவார்கள். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் எவ்வித ஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் முழுக்க கல்வித்தகுதியையும் அதற்கான திறனையும் கொண்டவர்களை மட்டுமே தெரிவு செய்தால் மிகுந்த நலமுடைய சமுதாயம் உருவாகும்.

                               இப்படியில்லாத சூழமைவில் நல்லாசிரியர்கள் இப்படித்தான் வன்முறைக்குப் பலியாகிப்போவார்கள். மாணவர்களும் நொடியில் ஏற்படும் மனச் சலனத்தில் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து சிதைந்துபோவார்கள். கல்வி. மருத்துவம் இரணடும் உயிர்காப்பவை. இவற்றில் எவ்வித எதிரான நடவடிக்கைகளுக்கும் இடம் தந்துவிடக்கூடாது. அப்படி கடுகளவு  ஓட்டை விழுந்தாலும் அது பெரிய பிளவாகி எல்லாவற்றையும் விழுங்கிவிடும்.

                          கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.

                               ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.
                                               



20 comments:

  1. இந்தக் கொடூரத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது ஐயா...

    ReplyDelete
  2. கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.

    ReplyDelete
  3. மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    //ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.//

    நாங்களும் தான். ;(

    ReplyDelete
  4. என்னதான் ஆறுதல் கூறினாலும், அந்தப் பெண் குழந்தையின் இழப்பினை ஈடு செய்ய முடியாது.

    ReplyDelete
  5. நம் சமூகத்தின் முகம் மற்றொரு குரூரமான தளத்துக்கு மாறத் துவங்கிய கட்டமாக 1990களுக்குப் பிந்தைய பருவத்தைப் பார்க்கிறேன்.

    இல்லம் என்ற ஓர் அமைப்பின் பிடி மெல்ல மெல்ல தளர்வடைந்து, கூட்டுக் குடும்பங்கள் தனித் தனிக் குடும்பங்களாக மாற்றம் அடையத் தொடங்கிய பருவம்.

    இன்னமும் தணிக்கையின் கட்டுக்குள் இருக்கும் திரைப்படக் கேளிக்கைக்கு நடுவில், சத்தமில்லாமல் சீரழிவின் நச்சை சகஜமாகப் பருகக் கொடுத்த தொலைக்காட்சியும், அதன் பின் நுழைந்த வலைத்தளமும் நுழைந்த பருவம்.

    பொருளாதாரத்தின் அங்கம் என்று மேதைகள் இன்னமும் சாதிக்கும் கூத்தான அரசு கொடுக்கும் இலவசங்கள், குடிக்க அநுமதித்து அரசே தொடங்கிக் கொடுத்த பருவம்.

    இந்த நாட்டின் துடிப்பை நான்கு சுவர்களுக்குள் முடக்கி, தன் சுகம், தன் சம்பாத்தியம் என்ற மிகக் குறுகலான தளைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு பொருளின் பின்னே ஆன்மாவின் தலையைக் கவிழச் செய்த பருவம்.

    இப்படி இப்படி பல பருவங்களாக நம் அழுகலின் இலைகள் செழித்து வளர்ந்து வந்திருக்கிறது.

    இம்மூன்று மாணவர்களுக்கும் வழங்க இருக்கும் அதிகபட்ச தண்டனையோடு இந்தப் பிரச்சினை முடிந்துபோய், மற்றுமொரு நாள் தொடங்கி விடும்.

    மனந்திறந்து தன் குரலைக் காட்டிக் கொள்ள இயலாத செயலற்ற ஒரு நாட்டின் பிரதமரிலிருந்து, பேச இயலாத ஒரு கடைசிக் குடிமகன் முடிய ஆன்மா முடங்கியபின் அங்கே நீங்கள் அதிர்ந்து திகைக்கும் எல்லாம் நடக்கும்.

    ஒரு பாலியல் கொடுமையாக, ஒரு கொலையாக, ஒரு நூதனத் திருட்டாக அது இருக்கும். உரையாடல்கள் அற்றுப் போன, இரைசல்களால் மட்டும் நுரைக்க நிரம்பியிருக்கும் அர்த்தமற்ற நாட்களால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளை மட்டுமே கொடுக்க முடியும்.

    ஒரு ஆசிரியருக்கான மரியாதையையும், ஒரு மாணவனுக்கான கல்வி எது என்பதையும் இச்சமூகம் பல நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  6. அன்புள்ள சுந்தர்ஜி.

    வணக்கம்.

    தங்களின் ஆழமான பொருண்மை கெழுமிய கருத்துரைகள் என்னை மேலும் கசிய வைக்கின்றன. எதிர்காலக் கல்விச்சூழல். சமுதாயம் எண்ணி மேலும் அச்சமுறுகிறேன். தரமான கல்வி மலர்ந்துவிடாதா.. மெய்மை சுவாசிக்கும் ஆசிரிய சமுதாயம் உருவாகிவிடாதா? ஏக்கமுறுகிறேன்.

    எழுதவும் படிக்கவும் தரமான கல்வி போதிக்கவும் தயாராக இல்லாத சூழமைவில்தான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன் எனக்கான நெருப்பை வெப்பம் குறையாமல் காத்து.

    நன்றிகள்.

    ReplyDelete
  7. அன்புள்ள தனபாலன்

    உங்கள் பதிவில் சமீபமாக குழந்தைகள் குறித்த நிறைய தகவல்களுடன் வெளிவருவதைப் படித்துக்கொண்டிருக்கிறேன். காலத்திற்கேற்ற சரியான பதிவு. தொடர்ந்து செய்யுங்கள். இவை எதிர்கால ஆசிரிய மாணவ சமுதாயத்தை நலமுறச்செய்யும்.நன்றிகள்.

    ReplyDelete
  8. அன்புள்ள இராஜராஜேஸ்வரி

    வணக்கம்.

    அந்த முதல்வரின் பெண்பிள்ளை மனத்தில் நின்று கசிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இதைத்தவிர என்ன செய்ய முடியும் என்கிற இயலாமையும் எனக்கு உறுத்துகிறது சகோதரி. நன்றிகள்.

    ReplyDelete
  9. அன்புள்ள வைகோ ஐயா.

    தங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் கசிவுகள் இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழாத சூழலை அதிகரிக்கும். நன்றிகள்.

    ReplyDelete
  10. அன்புள்ள சீனி

    நன்றாக நினைத்துப்பாருங்கள் தன்னுடைய மாணவர்களே தன்னை நோக்கி உயிர்பறிக்க அரிவாள் வீசுவதும்,,, தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை வெட்டுகிறோம் என்கிற உணர்வற்றுமான சூழலை எண்ணுங்கள்.. எத்தனை வேதனையாக உள்ளது. நினைத்து நினைத்து வருந்துகிறேன் சீனி. நன்றிகள்.

    ReplyDelete
  11. அன்புள்ள ஜெயக்குமார்..

    உண்மைதான். ஆனாலும் இழப்பு வேதனைதானே?

    ReplyDelete
  12. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - என்பதைப் பெற்றோர்கள் போதிப்பதில்லை இந்நாளில். "சுளை சுளையாகப் பணம் கட்டுகிறோமே, பிறகென்ன மரியாதை அவர்களுக்கு?" என்ற மனப்பாங்கு தான் நிலவுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் குரவம்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் துணை போகவேண்டிய கட்டாயத்தில் ஊமையாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நிர்வாகங்கள் தப்பிவிடுகின்றன. ஆசிரியர்கள் பலியாகிறார்கள்.

    ReplyDelete
  13. ஒரு நீண்ட பெருமூச்சை தருவித்த கட்டுரை..

    ReplyDelete
  14. ஐயோ! மனம் பதறுகிறது..எங்கு தவறு?? பணம் பெருகுவதால் செல்லம் கொடுத்துக் கல்வியைக் காசுக்குப் பெறலாம் என்ற மனம் படைத்த பெற்றோராலா? பணத்திற்கு பணி என்று பணி செய்யும் சில ஆசிரியர்களாலா? தமிழ் எதற்கு படிக்கவேண்டும் என்று கேட்கும் காலத்தினாலா? தமிழ் நீதி நூல்களைக் கற்றாலே நல்ல சமுதாயம் உருவாகுமே...

    ReplyDelete
  15. அன்புள்ள ஐயா அவர்களுக்கு

    நம் பிள்ளைக்குத் தரமான கல்வி என்பதை நினைக்காத பெற்றோர்களே அதிகம். நான் ஐம்பதாயிரம் கொடுத்து சேர்த்திருக்கிறேன். நான் 75 ஆயிரம் கட்டியிருக்கிறேன். எல்கேஜிக்கே 1 லட்சம் ஆகிவிட்டது எனப் பெருமைபேசிய பேச்சின் புதைக்குழிக்குள் தான் பெற்ற பிள்ளைகளைத் தவமாய் வேண்டிப் பெற்ற பிள்ளைகளைப் புதைத்துவிட்டபின்னர் என்ன வேண்டியிருக்கிறது தரம்?

    வள்ளுவன் சொன்னதுபோல மற்றும் தன் உண்மையறிவே மிகும் என்பதுபோல ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பணத்தைக் கட்டிவிட்டால் எல்லாப் பிள்ளைகளும் அறிவில் உச்சம் பெற்றிடுவார்களா? அப்படிப் பள்ளிகள் உருவாக்கிவிடுமா? ஒரு சிறிய கணக்கெடுங்கள் இப்படிப்பட்ட பள்ளியில் ஒரேயொரு வகுப்பில் படித்த அத்தனைப் பிள்ளைகளும் உயர்கல்வியில் என்ன நிலையிலிருக்கிறார்கள் அவர்களின் வாழக்கைத் தரம் என்ன? அவர்களின் வருவாய் என்ன?

    நகராட்சிப்பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் குறைந்த கட்டணம் பெறும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படித்தவர்கள் இன்று உயர்ந்த நிலையில் இல்லையா? எத்தனை சான்றுகள் வேண்டும்?

    அதிகக் கட்டணத்துடன் சேர்ப்பு. பள்ளி விட்டு வந்ததும் வாயில் ஒரே திணிப்பு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அப்புறம் தனிப் பயிற்சி முடிந்து வந்தவுடன் படுக்கை. இந்தப் பச்சைக் குருத்துகள் என்ன ஆகும்?

    எத்தனை தாயும் தகப்பனும் தினமும் பள்ளி விட்டு வந்ததும் பிள்ளைக்காக நேரம் செலவழிக்கிறார்கள்? அவர்களுக்கு
    என்று நேரம் ஒதுக்குகிறார்களா?

    வேதனையாக இருக்கிறது ஐயா.

    ReplyDelete
  16. அன்புள்ள மாது..

    தங்களின் முதல் வருகையே பெருமூச்சை விட வைத்துவிட்டது. வேறு வழியில்லை. நினைத்துப் பாருங்கள் அந்த முதல்வர் உயிர் பிரியும வேதனையின் உச்சத்தில் என்ன நினைத்திருப்பார்? யாராக இருந்தாலும் ஒரு உயிரை எடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? நன்றாகப் பொறியியல் படித்து நன்றாக வருவான் என்று அந்தப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள் மனநிலையை எண்ணிப்பாருங்கள். தான் பெற்றெடுத்த பிள்ளை இப்படிக் குற்றவாளியாக வாழ்விழந்திருக்கிறதே எனும்போது என்ன பாடுபடும்?

    வலிகள். வலிகள்.

    ReplyDelete
  17. அன்புள்ள கிரேஸ்..

    இன்னும் திரைப்படங்களில் கல்லுர்ரிக் காட்சிகள் என்றால் தமிழ் வகுப்பைக் காட்டி ஏளனம் செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

    தமிழ் எதற்குப் படிக்கவேண்டும் என்று கேட்பது இருக்கட்டும் தமிழ் படிப்பவர்கள் சரியாகப் படிக்கிறார்களா? தமிழ் நீதிகள் அவர்களின் மனத்தை அசைக்கின்றனவா?

    நாலடியாரும் கொன்றைவேந்தனும் உலகநீதியும் வள்ளுவரும் யேசுவும் புத்தரும் நபிகளும் மகாவீரரும் விவேகானந்தரும் சொன்னதைவிட உணர்த்தியதைவிட இன்னும் இருக்கிறதா இவ்வுலகில் மானுடம் செழிக்க ஒரு புது நீதி?

    அஹிம்சையால் உலகமெங்கும் அசைத்துக் காட்டிய மகாத்மா பிறந்த தேசமிது.

    கற்பது மட்டும்ல்ல கற்பிப்பதும் நெறிப்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா, தமிழ் என்றாலே கேலி என்ற நிலைக்கு ஆனது வருத்தமே. நம் நீதி நூல்களைவிட வேறு என்ன ஐயா வேண்டும்? உணர்வுப்பூர்வமாக விருப்பத்துடன் கற்றுக்கொடுத்து மாணவர் மனதில் பதியுமாறுச் செய்யவேண்டும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி பங்குண்டு.

      Delete