Thursday, July 5, 2012

ஒரு கவிதை,,,,,,,,,,ஒரு செய்தி........



          தமிழில் இப்போது வாசிப்பதற்கு என்று தரமான இலக்கிய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தங்களுக்கெனக் குழு மனப்பான்மை கொண்டு இயங்கினாலும் அவற்றின் சில செய்திகள் வெகு தரமானவை. ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி அவற்றை வாசிக்க வாசிக்க சுவை கூடுகிறது. மனம் செழிப்பாகிறது. சில இதழ்களை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன்.

                      1.  உயிர் எழுத்து
                      2. உயிர்மை
                      3. கணையாழி
                      4. புதிய காற்று
                      5. சௌந்தரசுகன்
                      6. காக்கைச் சிறகினிலே
                      7. கனவு
                   
இது முதல் சுற்று நினைவில் வந்தவை. இவற்றில் நீண்ட காலமாக வரும் இதழ்கள் உண்டு. எனவே நான் சீனியாரிட்டிபடி குறிப்பிடவில்லை. மனம் போன போக்கில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                    கவிதை எழுதுதல் என்பது இறைவன் கொடுத்த வரம். அதிலும் வெகு எளிமையாக எழுதுவது அதேசமயம் அழுத்தமாகவும் ஆழமாகவும் வாசிக்க செழிப்பாகவும் எழுதுவது நிரம்பிய சிந்தனையை ஏற்படுத்தும் அனுபவப் பின்னணியைக் கொண்டது.  மனுஷ்யப்புத்திரன் கவிதைகள் அப்படித்தான். சொற்களில் மனம் கசிகிறது. லயிக்கிறது. அனுபவிக்கிறது. ஆனந்தம் கொள்கிறது. துன்பமில்லாது மனதில் இறங்கிக்கொள்கிறது. எனவே இந்த மாதம் உயிர்மையில் மறைந்த எழுத்தாளர் திரு கிருஷ்ணா டாவின்சிக்கு சமர்ப்பித்துள்ள கவிதை உங்களின் வாசிப்பிற்கு. இன்னும் மனதில் அசைந்துகொண்டிருக்கிறது இக்கவிதை.

                    இரங்கல் கூட்டம்

                    இரங்கல் கூட்டததில்
                     விளக்குகள்
                     மிகவும் பிரகாசமாக இருந்தன..

                    சொல்வதற்கு
                    ஏராளம் இருந்தன உண்மைகள்
                     ஏராளம் இருந்தன பொய்கள்
                    இரண்டுக்கும் இடையிலும்
                    கொஞ்சம் இருந்தன.

                    இறந்தவனை
                    எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று
                    ஒருவருக்குமே தெரியவில்லை
                    ஒவ்வொருவராக முன்வந்தார்கள்
                     ஒருவர் அவனை தண்ணீராக மாற்றிக் காட்டினார்
                     இன்னொருவர் அவனை ஒரு புகையாக மாற்றினார்
                     வேறொருவர் ஒரு காலித் தொப்பியிலிருந்து
                     அவனை ஒருபுறாவாக பறக்கச் செய்தார்
                     யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரில் எரியும்
                     கணநேர ஜவாலையாக மாற்றினார்...

                     அவனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வந்தார்
                     மரணம் ஒரு மலரை காகித மலராக்கி அமரத்துவம்
                      அடைய செய்துவிட்டது என்றார்..
                     யாரோ ஒருத்தி அவன் மீதான காதலை அப்போதுதான்
                     முதன்முதலாக வெளிப்படுத்தினாள்
                      ஒரு ஒவீயர் அவனை ஒரு ஓவியமாக்கியிருந்தார்
                      ஒரு புகைப்படக்காரர் அவனை புகைப்படமாக்கியிருந்தார்
                       ஒரு ஒளிப்பதிவார் அவனைக் காட்சிப்படுத்தியிருந்தார்
                       ஒரு கவிஞர் அவனை ஒரு கவிதையாக்கினார்

                       நான் சொன்னேன்
                       எனக்கு அவனை அவ்வளவாகத் தெரியாது இந்த மரணம்
                       அவனைத் தெரிந்துகொள்ள
                       ஒரு சிறந்த வாயப்பாக இருந்தது என்று


                        இறந்தவன் ஒன்றும் சொல்லவில்லை
                        அவன்போக்கில் முகத்தைத் திருப்பிக்கொண்டு
                        உட்கார்ந்திருந்தான்.


                        இறந்தவனின் சின்ன மகளுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது
                        அவள் இருக்கைகளுக்கு இடையே நடக்கத் தொடங்கினாள்
                         ஒவ்வொருவராக சிரிப்பு மூட்டத் தொடங்கினாள்
                         எல்லோருமே சிரிக்க விரும்பினார்கள்
                         ஆனால் எச்சரிக்கையுட்ன்
                         சிரிப்பைத் தவிர்த்தார்கள் அவள்
                          உயிரோடு இருக்கும் யாரோ ஒருவரின்
                         சின்ன மகளுடன் சேர்ந்துகொண்டாள்


                          அவர்கள் எல்லா இடத்திலும் ஒடிக்கொண்டே இருந்தார்கள்
                          தயாரிக்கப்பட்ட பேச்சுக்களின் பக்கங்கள் காற்றில்
                          பறக்கத் தொடங்கின
                          இறந்தவனுக்காக கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்
                          இறந்தவனின் குழந்தைக்காக கண்ணீர் சிந்த விரும்பியவர்கள்
                          இதை கவனிக்காமல் இருக்க முயற்சித்தார்கள்


                          வெளிவாசல் கதவை எட்டிப் பார்த்த இறந்தவனின் குழந்தை
                          உயிரோடிருப்பவனின் குழந்தையிடம்
                          ரொம்ப இருட்டாயிடுச்சு எப்ப வீட்டுக்கு போகலாம்
                          என்று கேட்டாள்


                          இருளோடு
                          இருளாய் நின்றுகொண்டிருந்த
                          இறந்தவன்
                          தன் சில்லிட்ட கைகளர்ல்
                          அந்தக் குழந்தைகளின்
                          தலையை வருடுகிறான்..
                                                                                    (கிருஷ்ணா டாவின்சிக்கு)


                   மிக நீண்ட கவிதை நான் மடக்கியதை எல்லாம் நீட்டியிருக்கிறேன்.
ஆனாலும் இது அற்புதமான கவிதை.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


செய்தி


                     கணையாழி கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து நாற்பது ஆண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பிருந்து வருகிற இதழ். இந்த சூலை இதழில் கணையாழியைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக தன் மனப் போராட்டத்தை எழுத்தாளர் கவிஞர் ம,இரா அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். தொட்ர்ந்து அதில் எழுதி வருபவன் என்பதால் என்னுடைய பதிவை வாசிக்கும் நண்பர்களுக்கு ஒருவேண்டுகோள்.

                தரமான பத்திரிக்கை நின்றுவிடக்கூடாது. அதற்கு உதவவேண்டும். அவரவர் மன. பண எல்லைக்குள் கணையாழிக்கு உதவலர்ம். மாதமாதம் நான் ஒரு இதழ் வாங்கிக்கொள்கிறேன் என்று உறுதியளிக்கலாம். ஓராண்டு சந்தா தருகிறேன் என்று கூறலாம். நண்பர்களுக்கு ஒரு கணையாழியை வாங்கித் தந்து அறிமுகம் செய்யலாம். நண்பர்களையும் வாங்க வைக்கலாம். படைப்புக்களை அனுப்பலாம். அவரவர் வலைப்பதிவுகளில் இதனைக் குறிப்பிட்டு தாக்கத்தை ஏற்படுத்தலாம். என்ன முடியுமோ அதை செய்யலாம்.

                  நம்மால் முடிந்ததை செய்ய அழைக்கிறேன்.

                  கணையாழி முகவரியும் தொடர்பு எண்ணும்.


                  தனி இதழ் விலை ரூ.20 ரூபாய்.
                  ஓராண்டு = 220   ஈராண்டு = 440  மூன்றாண்டு = 650
                  ஐந்தாண்டு = 1000 வாழ்நாள் = 5000

                   முகவரி/  எச்56/எப்.4 மருதம். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர்.
                                       சென்னை 600 041.

                    தொலைபேசி =  914424514244

========================================================================
                     
                         

                  

8 comments:

  1. kavithai kalanga vaiththathu...

    ReplyDelete
  2. இருளோடு
    இருளாய் நின்றுகொண்டிருந்த
    இறந்தவன்
    தன் சில்லிட்ட கைகளர்ல்
    அந்தக் குழந்தைகளின்
    தலையை வருடுகிறான்.

    (:

    ReplyDelete
  3. டாவின்ஸிக்கு எழுதப்பட்ட அஞ்சலி உருக்கியது ஹரணி.

    சிறு பத்திரிகைகள் எல்லாமே அநேகமாக குழுவாகவும், அவர்களுக்கான ஜாதீய அடையாளங்களுடன்தான் இயங்குகின்றன.இதில் எதுவும் விலக்கில்லை. பழைய கணையாழி எப்போதோ மரித்துவிட்டது. பெயர்தான் இன்னும் வாழ்கிறது எச்சமாய்.

    ReplyDelete
  4. அருமையான கவிதையை அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அற்புதமான கவிதைகள்
    அறியத்தந்தமைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete