Saturday, October 26, 2013

எழுதப்படாத உயில்.....குறுந்தொடர்...3

எழுதப்படாத உயில்... குறுந்தொடர்...3




                          அவசரப் பிரிவிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
ரங்கராஜன் வெளியேதான் காத்திருந்தார்.

                          அவர் பையன் மற்றும் சில உறவினர்கள் பக்கத்து வீட்டுப் பையன் நின்றுகொண்டிருந்தார்கள்.

                           ஏம்பா.. கவனமா பாத்துக்கக்கூடாதா?  என்றார் ரங்கராஜன் மகனிடம்.

                          என்னோடதாம்பா பேசிக்கிட்டிருந்தாங்க அம்மா.. பாத்ரூம் போய்ட்டு வரேன்னுட்டு போனாங்க... கொஞ்சநேரங்கழித்து மடார்னு சத்தம் கேட்டது... அம்மான்னு சத்தம். ஓடினேன்.. மலலாக்க விழுந்துகிடக்காங்க..

                         தரையிலே லேசா வழுக்கியிருக்கு.. ஆனா பாசி இல்லே.. கால் நழுவியிருக்கு..

                         டாக்ட்ர் என்ன சொன்னார்?

                        விழுந்த அதிர்ச்சியிலே மயக்கமாயிருக்காங்க.. பின் மண்டையிலே அடின்னாலும் பயப்படறதுக்கில்லேன்னுட்டாங்க...ரெண்டு நாள் கண்காணிப்புலே வச்சி பாத்துட்டு அழைச்சிட்டுப் போங்கன்னு டாக்டர்
சொல்லிட்டாரு..

                        ரங்கராஜன் சறறு அமைதியானார். அந்த வராந்தாவில் பெஞ்சு தேடி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

                                                  000000000000


                      வாசலில் குரல் கேட்டு வாசலுக்குப் போனாள் தேவகி.

                      அஞ்சல்காரப் பெண் கையில் ஒரு கடிதத்துடன் நின்றிருந்தாள்.

                       இந்தாம்மா...  எனற்படி கொடுத்துவிட்டுப் போனாள்.

                       அக்கா... உன் பேருக்குத்தான் வந்திருக்கு..

                      உள்ளே போனதும் அந்தக் கடிதத்தை அங்கையர்க்கண்ணி
வாங்கிக்கொண்டாள்.

                         கடிதம் பிரித்தாள். அது கடிதமல்ல அரசாங்க ஆணை.

                        அவளை வேலையில் சேரச்சொல்லி வந்திருந்த ஆணை அது.

                        உள்ளே பார்த்து கத்தினாள். அம்மா ஆர்டர் வந்துடுச்சி...

                       அங்கையர்க்கண்ணியின் அம்மா உள்ளிருந்து உறாலுக்குள் வந்தாள்.
                       எப்போ வந்துச்சி?

                      இப்பத்தாம்மா போஸ்ட் உமன் கொடுத்திட்டுப் போறாங்க.

                      எப்ப வேலையிலே சேரச்சொல்லி வந்திருக்கு?

                      நாளைக்கும்மா...

                      சரி...உனக்கு விருப்பந்தானே?

                     விருப்பமில்லாட்டியும் போய்த்தானே ஆகணும்மா என்றாள் அங்கையர்க்கண்ணி..

                      அப்போ உனக்கு இஷ்டமில்லியா?

                      அப்படிச் சொல்லலேம்மா.. போகவேண்டிய கட்டாயம் இருக்குல்லே.. அதைச் சொன்னேன்...

                       சரி அதை உங்கப்பா போட்டோகிட்ட வச்சி விளக்கேத்து..

                      அங்கையர்க்கண்ணி அதை அப்பாவின் புகைப்படத்திற்குக் கீழாக
வைத்துவிட்டு வணங்கினாள்.

                      அப்பா நீங்க இருந்து எனக்குக் கிடைக்கவேண்டிய வேலை. நீங்க இறந்துபோய் எனக்கு கிடைக்குது உங்களுக்குப் பதிலா... கஷ்டமா இருக்குப்பா.. நீங்க இல்லாம இருக்கறது..

                         கண்ணீர் வழிய வேண்டி நின்றாள் அங்கையர்க்கண்ணி.

                         மறுநாள் தாலுகா ஆபீஸ் தேடி  தானே போனாள்.

                         காலையிலேயே அம்மா அப்பா போட்டோ முன்பு விபூதி இட்டு போற இடத்துலே பாத்துக் கவனமா நடந்துக்க என்றாள்.

                          அம்மாவின் ஆசி போதும்.

                          நேராக அவள் தாசில்தாரைப் பார்த்தாள்.

                          கடிதத்தைப் பிரித்து படித்த அவர்.. அவளைப் பார்த்து
ஓ.. அந்த சிவராமன் பொண்ணா நீ.. அருமையான மனுஷம்மா.. ஒரு பாலிசி
யோட வாழ்ந்தவர்ம்மா... சரி.. வாழ்த்துக்கள்.. உன் அப்பா மாத்ரியே வேலை பாரு... எதுவானாலும் சந்தேகம் கேளு.. எல்லோரும் உதவியா இருப்போம்..

                          மேசையின் மணியை அழுத்த அலுவலக உதவியாளர் ஓடிவந்தான்.

                         இவங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காங்க.. நம்ப ரங்கராஜ்ன் கிட்டே கூட்டிட்டுப் போ..

                          இவர்கள் ரங்கராஜ்ன் மேசைக்குப் போனபோது அவர் மும்முரமாக ஏதோ ஒரு கோப்பில் -குறிப்பு எழுதிக்கொண்டிருந்தார்.

                         சார்... என்று அவரைக் கலைத்தான். அலுவலக உதவியாளர்.

                         நிமிர்ந்தார்.

                         மேடம் புதுசா வேலைக்கு வந்திருக்காங்க,,, உங்ககிட்ட தாசில்தார் ஐயா உடச்சொன்னாரு..

                          அங்கையர்க்கண்ணியை நிமிர்ந்து பார்த்தார்.

                          அவளும் பார்த்தாள்.

                           இருவருக்கும் பாந்தமான ஒரு அலை பரவியது.

                           உக்காருங்க.. என்றதும் உட்கார்ந்தாள்.

                           ஜாயனிங் ரிப்போர்ட் கொடுத்தாச்சா?

                           அப்படின்னா? என்றாள்.

                           சட்டென்று ரங்கராஜனுக்கு சிரிப்புவந்தது. சிரித்துவிட்டுக்
கேட்டார்.

                          என்ன படிச்சிருக்கீங்க?

                          பிபிஏ..

                          அவளுக்கு பணிசேர்வறிக்கை எப்படி எழுதுவது என்று சொல்லி எழுதச்சொன்னார்.

                          வெள்ளைத்தாள் எடுத்துக் கொடுத்தார்.

                          அனுப்புநர் பெறுநர் பொருள் பார்வை என்று வரிசையாக அழகாக பொறுமையாக சொன்னார்.

                           எழுதினாள்.

                           அவளின் கையெழுத்து  மாவில் விழுந்து ஓடும் எலியின் கால் தடங்களைப் போல அழகாக இருந்தது.

                            அதை ரசித்தார் ரங்கராஜன்.

                            அவள் எழுதி முடித்ததும் ரங்கராஜனிடம் நீட்டினாள். அவர் அதை சரிபார்த்துவிட்டு உள்ளே போய் தாசில்தாரிடம் கொடுங்க என்றார்.

                            எழுந்துபோய் கொடுத்துவிட்டு வந்தாள்.

                            அவர் அக்கடிதத்தின் மேல் சிறுகையொப்பமிட்டுத் தந்திருந்தார்.

                            ரங்கராஜ்ன் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து அவரைப்
பார்த்து  நன்றி  என்றாள்.

                            ரங்கராஜன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு சில கடிதங்களை அவளிடத்து தந்து இதைப் படித்து என்ன பொருண்மை என்று ஒரு தனித்தாளில் குறியுங்கள் என்றார்.

                           அவள் கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

                                                                          (உயில் எழுதப்படும்)



7 comments:

  1. /// மாவில் விழுந்து ஓடும் எலியின் கால் தடங்களைப் போல /// ரசித்தேன்...

    சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  2. அவளின் கையெழுத்து மாவில் விழுந்து ஓடும் எலியின் கால் தடங்களைப் போல அழகாக இருந்தது.

    அதை ரசித்தார் ரங்கராஜன்.

    உவமை ரசிக்கவைக்கிறது..!

    ReplyDelete
  3. ரங்கராஜனின் மனைவியும் நலம் பெற வேண்டும்!.. அங்கயற்கண்ணியின் அலுவலகப் பணியும் சிறக்க வேண்டும்!..

    ReplyDelete
  4. எலியின் கால் தடங்கள்
    புதிய உவமை ஐயா.
    தொடர்கின்றேன் நன்றி ஐயா

    ReplyDelete
  5. போகிற போக்கைப் பார்த்தால் ஐம்பது அத்தியாயங்கள் வரக்கூடும் போல் தோன்றுகிறதே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அன்புள்ள ஐயா.

    வணக்கம். உங்களின் ஆசை என்னை துர்ண்டுகிறது. 50 அத்தியாயங்கள் எழுத. ஆனாலும் இது குறுந்தொடர் பிளாஷ்பேக்குடன் முடிந்துவிடும். மாறுபட்ட ஒரு நாவலை சில அத்தியாயங்கள் பதிவிட விரும்புகிறேன். அது இக்குறுந்தொடர் முடிவடைந்ததும் வெளிவரும். முற்றிலுமான மாறுபட்ட தளத்தில் உருவாகப் போகிற நாவல் அது. முன்னோட்டத்திற்காக சில அத்தியாயங்கள் பதிவிடவிருக்கிறேன். நன்றிகள். எப்போதும் போல இணைய சகோதர சகோதரிகளின் அன்பை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கும்போது தெரிகிறது , இது ஒரு தலை முறைக் கதை என்று. பேத்தி அங்கயர்க் கண்ணி......தொடர்கிறேன்.

    ReplyDelete