Monday, October 21, 2013

எழுதப்படாத உயில்....குறுந்தொடர்...2

குறுந்தொடர்...


                                            எழுதப்படாத உயில்.....2



                                 ரங்கராஜன் அடிக்கடி மனம் சோர்ந்துபோனாலும் வேலையில்  சோர்ந்துபோவதில்லை.

                                 செய்கிற வேலையைத் திருத்தமாகச் செய்வார்.

                                 யாரும் அதில் குறைகாண முடியாதது மட்டுமல்ல. அந்த வேலையை மறுபடியும் செய்யவேண்டியதில்லை.

                                 அத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்.

                                 ஆனால் உலகியல் நீதி வேறு என்பதுதான் ரங்கராஜ்ன் வரைக்கும் நிருபிக்கப்பட்டிருந்தது.

                                 உண்மை உழைப்பு நேர்மை இவற்றோடு பணி செய்பவனுக்கு எப்போதும் பணியிலும் சுமை இருக்கும் வாழ்க்கையிலும் சுமை கூடியிருக்கும்.

                                ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

                                ஒருவேலையும் செய்யாமல்.. செய்கிற வேலையிலும் கவனக் குறைவாகவும் செய்கிறார்கள்...  அலுவலகத்தில் நுழைந்தவுடனேயே அரசியல்...

                                 ஆனால் லஜ்ஜையே இல்லாமல் துளிகூட கூச்சமும் இல்லாமல் மாதம் பிறந்தால் சம்பளம் மட்டும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

                                   ரங்கராஜனுக்கு அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு விஷயம் அடிக்கடி மனத்திற்குள் கேள்வியாக வந்துபோகும்.

                                   இப்படி ஊரை ஏமாற்றி மனசாட்சியின்றி வேலையும் பார்க்காமல் ஆனால் சம்பளம் மட்டும் வாங்கிகொண்டுபோகும்போது அவர்கள் வீட்டில் இப்படி உழைக்காமலே ஊதியம் பெறுகிறாயே இது உனக்கு கேடில்லையா என்று யாராவது ஒருத்தராவது கேட்கமாட்டார்களா?

                                  எப்போதோ படித்த பழமொழி நினைவுக்கு வந்துவிடும்.

                                  நச்சு மரத்தில் எப்படி நல்ல பழம் பழுக்கும்?

                                  நிச்சயம் குடும்பமே நச்சாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உடனே சமாதானமாகிவிடுவார்.

                                 ஒவ்வொரு முதல் தேதியிலும் இந்த ஓரங்க நாடகத்தை மனதிற்குள்ளே அவரே நடித்து அவரே இயக்கி அவரே பார்த்து நடத்திக் கொள்வார்.

                                  யாரோ கூப்பிட நிமிர்ந்தார்.

                                  ரங்கராஜன் சார் ஓஏபி பில் போயிடிச்சான்னு தாசில்தாரு கேக்கறாரு..

                                  அனுப்பி நாலு நாளாச்சு... கண்ணன் என்றார்.

                                  சார்.. நமக்கு வேண்டியவரு.. ரொம்பநாள் குடும்ப நண்பர்.. அவரோட சால்வன்சி பைலு தாசில்தாரு மேசையிலேயே கெடக்கு..

                                  என் மேசைக்கு வந்தா உடனே அனுப்பிடுவேன் வெங்கட்ராமன் என்றார்.

                                  அதுபோதும் சார்... ரொம்ப நன்றி..
                 
                                   சார் டீ.. என்றபடி நாயர் கடைப் பையன் டீ கொண்டு வந்தான்.

                                   என்னடா எப்படியிருக்கே?

                                   ஏதோ சாரே..  நாள் கழிஞ்சி... நிம்மதியில்லா...

                                   உனக்கு என்னடா கவலை?

                                  இந்த உலகத்துலே வந்து பொறந்திட்டா சாரே எல்லோருக்கும் கவலைதானே மிச்சமிருக்கு.. எப்ப எது நடக்கும்னு யாருக்கு தெரியும் சாரே,, அவன் ஏட்டை படிச்சுட முடியுமா? வரேன் சாரே,, அப்புறமா டீ கிளாச எடுத்துப்போறன்..

                                    இவருடைய பதிலை எதிர்நோக்காமல் போய்விட்டான்.

                                    எதார்த்தமா பேசிவிட்டுப் போகிறான் வாழ்வின் நுட்பத்தை.

                                    யோசித்தபடியே டீயைக் குடிக்க ஆரம்பித்தார்.

                                    கடைசி மிடறை உறிஞ்சத் தொடங்கும்போது ப்யூன் நடேச்ன அவசரமாக வந்து அவர் மேசை முன் நின்றான்.

                                    என்ன நடேசா?

                                     தாசில்தாரு கூப்பிடறாரு சார்...

                                    என்ன விஷயம்?

                                    தெரியலே சார்... ஆர்டிஓ கிட்டேர்ந்து தபால் வந்துச்சி.. பிரிச்சு பார்த்ததும் போய் கூப்பிட்டு வான்னார்..

                                     என்ன  பிரச்சினை என்று தெரியவில்லை. ஏதாவது கடிதம் அனுப்பியதில் இணைப்பு விட்டுப்போயிருக்கும்.

                                    என்னவாயிருக்கும் என்று ஆர்டிஓ ஆபிசுக்கு அனுப்பிய தபால்களை வரிசையா மனத்தில் புரட்டியபடி எழுந்து தாசில்தார் அறை நோக்கிப் போனார்.

                                    வாங்க ரங்கராஜன் என்றார் தாசில்தார்.

                                    சொல்லுங்க சார்.. என்றார்.

                                    உக்காருங்க... என்றார்..

                                    ரஙகராஜன் உட்கார்ந்தார்.

                                    வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி தாசில்தார் பதவி உயர்வு வந்திருக்கு ரங்கராஜ்ன்..

                                     ஒருநிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எதிர்பாராதது இது.

                                      சட்டென்று இப்படி வருமென்று தெரியவில்லை.

                                      இந்தாங்க தபால் என்று கொடுத்தார் தாசில்தார்.

                                      வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.  உண்மைதான்.

                                      மனசுக்குள் மகிழ்ச்சி புரண்டு படுத்தது.

                                      நாயர் கடைபையன் பேசியது நினைவோடையில் ஒருகணம் மிதந்துபோனது.

                                      ரொம்ப நன்றி சார்.

                                       நன்றி போதாது ரங்கராஜ்ன். இன்னிக்கு சாயந்தரம் எல்லாருக்கு எஸ்கசி தரணும்.

                                      கண்டிப்பா சார்.

                                      தன்னுடைய இருக்கைக்கு வந்தார்.  என்னவோ சாதித்ததுபோலிருந்தது அந்த பதவி உயர்வு கடிதம் வந்ததும்.

                                      தன்னுடைய உழைப்பிற்கு ஒரு மரியாதை இருக்கிறது என்று நம்பிக்கை துளிர்த்தது.

                                      இன்னும் நன்றாக உழைக்கவேண்டும் என்றுதான் அவருள் தோணியது.

                                      வீட்டிற்குத் தெரிவித்தால் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். வேறு யாரிடத்தில் உண்மையான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளமுடியும் தன் குடும்பத்திடம் தவிர.

                                    அப்போது டெலிபோன் மணியடித்தது.

                                    பதிவறை எழுத்தர் பஞ்சநாதம் எடுத்து... ரங்கராஜன் சார்..
உங்களுக்குத்தான் போன்.. என்று ரிசிவரை பக்கத்தில் வைத்துவிட்டு போனான்.

                                   எழுந்துபோனார். போனை எடுக்கும்போதே இனி இந்த மேசையில் உட்கார்ந்தபடியே போனை எடுத்துப் பேசலாம் .

                                    ஆமாம் அந்த மேசைதான் உதவி தாசில்தார் மேசை.

                                    போனை காதில் வைத்ததும் மறுமுனையில் அவருடைய
பையன் பேசினான்.

                                     அப்பா... அம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க.. பின் மண்டையிலே நல்லா அடி.. ஏகப்பட்ட ரத்தம்.. மெடிக்கலுக்கு துர்க்கிட்டு போறோம் உடனே வாங்கப்பா என்று பதட்டத்துடன் போனை வைத்துவிட்டான்.

                                      அப்படியே போனை வைத்துவிட்டு தாசில்தாரிடம் சொல்லிவிட்டு மெடிக்கலுக்கு ஒரு ஆட்டோ பிடித்து ஓடினார்.

                                     ரங்கராஜன் மருத்துவ மனைக்குள் நுழையும்போது அவர் மனைவி சாரதாவை அவசரப் பிரிவிற்குள் கொண்டுபோனார்கள்.

                                                             
                                               (உயில் வளரும்)

                         


                                 




                     

8 comments:

  1. நல்ல விறுவிறுப்பான கதை. ஒரு சந்தோஷம். அதை அனுபவிப்பதற்குள் ஒரு சோகம். இது தான் வாழ்க்கை. தொடரட்டும்.

    ReplyDelete
  2. பட்டினத்தார் கையிலிருந்த கரும்புபோல
    இனிப்பும் கசப்பும் முன் பின்னாய்
    இருக்கும் இன்றைய பதிவு
    மேலும் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டிப் போகிறது
    தொடர்கிறேன்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மேடு பள்ளங்கள் நிரம்பியதுதான் வாழ்க்கை என்பதனை ஒரே அத்தியாயத்தில் அழகுற எடுத்துரைத்துள்ளீர்கள். நன்றி ஐயா

    ReplyDelete
  4. சிறிது சந்தோசப்பட்ட மனதில் திடீரென்று அதிர்ச்சி... நிஜ வாழ்வும் அப்படித்தான் ஐயா... தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. துன்பத்திற்கு மருந்து என்ன...? முந்தைய பகிர்வின் தொடர்ச்சியாக... குறளின் குரலாக...
    நான் + துன்பம்

    ReplyDelete
  6. உண்மை உழைப்பு நேர்மை இவற்றோடு பணி செய்பவனுக்கு எப்போதும் பணியிலும் சுமை இருக்கும் வாழ்க்கையிலும் சுமை கூடியிருக்கும்.

    மகிழ்ச்சியை பகிர்வதற்குள் ஒரு சுமை கூடிவிட்டதே..!

    இனிப்புக்குப் பிறகு கசப்பு..!

    ReplyDelete
  7. தொடரின் பாத்திரங்கள் இன்னும் அறிமுக நிலையில். மகிழ்வும் துயரும் மாறிமாறி வருவது வாழ்வில் இயற்கை என்றாலும் சுப நிகழ்ச்சிகளையே மனம் விரும்புகிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. சுகமும் சோகமும்.. நாணயத்தின் இரு பக்கங்களைப் போல!..எனினும் யாருக்கும் கஷ்டங்கள் வரக்கூடாது!..

    ReplyDelete