Tuesday, May 12, 2015

கொஞ்சம் இலக்கியம்...




                      கணவன் மனைவி என்கிற உறவு குடும்பம் என்கிற நிறுவனத்தின் அடித்தளமாக உள்ளது.

                       நம்முடைய அப்பாக்கள் வாழ்ந்த காலத்தில்  கணவன் மனைவியாக இணைந்தவர்கள் பெரும்பாலும் விவாரத்து என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது ஆயிரத்தில் ஒன்றாகத்தான் இருந்தது.

                       திருமணம் ஆகி சில தினங்களிலேயே கணவனை இழந்தார்கள். என்றாலும் பிள்ளைகளை வளர்க்க கடைசிவரை விதவையாகவே வாழ்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். பிள்ளைகள் தவறு செய்தால் அடிக்கடி சொல்வார்... கம்னாட்டி வளர்த்த புள்ள கரைசேராதுன்னு சொல்ல வச்சிடாதே.. உங்கப்பன் விட்டுட்டுப் போனபொறவ நான் பட்டது அந்த சிவனுக்குத்தான் தெரியும் என்பார்கள்.

                      பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் கூட்டுக் குடும்பத்தில் இருந்திருக்கிறார்கள். சண்டையிட்டிருககிறார்கள்.  அடி வாங்கியிருக்கிறாள் மனைவி.  அடிக்கப்பட்டிருக்கிறான் கணவன் கண்டிப்பு என்கிற பெயரால். இருந்தும் அங்கே உறுதிப்பாடு என்பதைக் குடும்பம் என்கிற சொல் இணைத்து வைத்திருந்தது.

                         ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் தொடுப்பாகவும் வைத்திருந்தார்கள். அவற்றையும் அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

                        என்றாலும் முக்கியமான நிகழ்வகளில் அது இறப்பாக இருந்தாலும் சரி.. பிறப்பாக இருந்தாலும் சரி.. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளிலும் சரி.. மனைவிக்கே உரிமை இருந்தது. அதனால்தான் சங்க இலக்கியம் மனைவியர் என்பதற்கு உரிமை மகளிர்... மனையாள்.. இல்கிழத்தி.. இல்லாள் என்கிற சொறக்ளைக் கையாண்டிருக்கிறது.

                        பரத்தை வீட்டுக்குப் போய்வந்த தலைவன் ஒருவனுக்கு மனது உறுத்துகிறது. தலைவி தன்னிடத்து அன்பாக இருப்பாளா என்று. அவனுடைய சந்தேகத்தை உணர்ந்துகொள்கிறாள். நிரம்பவும் தெளிவாக தலைவி உரைக்கிற இப்பாடல் குறுந்தொகையில் உள்ளது. அற்பதமான பாடல் மட்டுமல்ல ஒரு பெண்ணின் குடும்பத் தலைவியின் உண்மையான அழுத்தமான பண்பாட்டு உணர்வை, பண்பை உணர்த்துகிற பாடல் இது.

                   அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
                   மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
                   இம்மை மாறி மறுமை ஆயினும்
                   நீயா கியரெம் கணவனை
                   யானா  கியர்நின் நெஞ்சுநேர் பவளே
                                                                குறுந்தொகை. பா.49 அம்மூவனார்.

பாடலின் பொருள்

                    அணிற்பல்லைப் போன்ற கூரிய முட்கள் நிறைந்த மணம் முதிர்ந்த தாழையினையும் (தாழம்பூ) நீலமணியின் ஒளியைப் போலும் கரிய நீரையுமுடைய (நெய்தல் நிலத்துப் பாடல் - கடலைக் குறிப்பது) தலைவனே. நீ கொடுமை செய்கிறாய் இந்தப் பிறவியில். சரி போகட்டும் அடுத்த பிறவியிலும் நீதான் கணவனாக இருப்பாய் நான்தான் உன் நெஞ்சுக்குப் பிடித்தவளாக இருப்பேன். அப்படி ஆகிவிடு.

                  என்கிறாள். தலைவனுக்குக் குறிப்பால் தன் அன்பையும் உணர்வையும் புலப்படுத்தும் பாடல்.  இன்னும் ஆழமாகப் பார்த்தால் இப்பிறப்பு மட்டுமன்றி மறுபிறப்பிலும் கொடுமை செய்கிற கணவனே அது உன் தன்மையாக இருந்தாலும் நீதான் எனக்குக் கணவன். உன் நெஞ்சுக்குப்பிடித்தவள் நான்தான் என்றும் உணர்த்துகிறாள்.

                          அனுபவிக்கவும் உணரவுமான பாடல் இது.

                          

5 comments:

  1. அடுத்த பிறவியிலும் நீயும் .. நானும் தான்!..

    (சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ?... நாம் அறிவோமே!..

    - என்ற வரிகள் - ஒரு திரைப் பாடலில் வரும்.)

    இது தான் நமது கலாச்சாரத்தின் அடிநாதம்.. ஆணிவேர்!..

    ReplyDelete
  2. அற்புதமான பாடல்... அழகிய விளக்கம் ஐயா...

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    பாடலும் விளக்கமும் வெகு சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உண்மையிலேயே அனுபவிக்கவும் உணரவுமான பாடல்
    நன்றி ஐயா

    ReplyDelete