Sunday, January 15, 2012

மனமே எல்லை.. (சிறுகதை)




                    இன்றோடு பதினைந்து நாட்களாகிவிட்டன. சங்கரன் தவறாது வருகிறார். நாளை வாருங்கள் என சொல்லி நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறேன்.

                    பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் ஒரு சிவன் ஆலயம். கிட்டத்தட்ட 5000 ஆண்டு பழமையானது. பக்கத்தில் பெரிய குளம். அதில் கம்பளம் விரித்ததுபோல அல்லிகள் மலர்ந்து கிடக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறோம். இறங்கி அல்லி பறித்தும் வந்திருக்கிறோம். படிக்கட்டுகளில் அல்லிகளை விலக்கி துணி வெளுப்பவர்கள் துணிகள் துவைக்கும் சப்தமும் அதற்கேற்ப அவர்கள் வாயிலிலிருந்து வரும் ஒலியும் கேட்க இனிமையாக இருக்கும். கரைகளில் இரு நடப்பட்ட குச்சிகளில் கட்டப்பட்ட கயிறுகளில் தோய்த்து நீலம் போடப்பட்ட வேட்டிகள் பளீரென்று சூரிய ஒளியில் மின்னியபடி காயும்.

               இப்போது ஒருசிலரின் முயற்சியால் அந்த ஆலயம் புதுப்பிக்கப்படுகிறது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற சிலர் தங்களது பென்ஷன் தொகையையும் பலரிடம் வசூலித்தும் இத் திருப்பணியை மேற்கொள்கிறார்கள். இதற்கான தொடக்கத்தை முனைப்பாக்கியவர்தான் சங்கரன். என்னிடம் இதுபற்றி பேசி ஏதாவது ஒரு செலவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். நானும் குறைந்த தொகையாக சொல்லி செய்கிறேன் என்றேன். உடனே அவர்கள் கோயிலுக்கென்று பெரிய மணி நாச்சியார்கோயிலில் ஆர்டர் கொடுத்திருக்கிறோம். நான்குபேர் பங்கில் உன்னுடையது ஒன்று என்றார் சங்கரன். சரியென்றேன்.

                  ஆனால் இயல்பில் சங்கரன் கொஞ்சம் கை சுத்தம் இல்லாதவர். ஓயாமல் பேசுவார். தேவையில்லாத கதைகள் சொல்லுவார். கைசுத்தமும் வாய் சுத்தமும் இல்லாதவர். சிவனின் பெயரைச் சொல்லிக் கேட்பதால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

                    என் மனைவி சொன்னாள.. இது இறைவன் காரியம் கொடுத்துவிடுங்கள். அவர் தவறு செய்தால் சிவன் பார்த்துக்கொள்வார். என்று அது எனக்கு சரியாகப் பட்டது.

                       சங்கரன் அன்று காலை வந்தார்.  உடன் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.
                        அவராகச் சொன்னார்.

                        முருகன்..இதற்கு ரசீது எல்லாம் கிடையாது. கொடுக்க முடியாது. அறநிலையத்துறை ஒத்துக்கொள்ளாது. உண்டியல் வைக்கவும்கூடாது. எனவேதான் நோட்டில் மட்டும் குறித்து வைப்போம். வாங்கிக் கட்டும் மணியிலும் பெயர் இருக்காது.

                         பரவாயில்லை என்றேன். வாங்கிக்கொண்டு போனார். போகும்போது சொன்னார். ஒரு முறை கோயிலுக்கு வா முருகா...

                        அன்று சனிக்கிழமை.

                        சங்கரன் சொன்ன கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்துப் போனேன். வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தொலைவுதான்.

                         கோயிலில் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சங்கரனும் இன்னும் இருவரும் இருந்தார்கள்.  நான் போனேன். வா..வா..முருகா.. நீ வந்தது ரொம்ப மகிழ்ச்சி என்றார். நான் கோயிலைச் சுற்றி வணங்கிவிட்டு உள்ளே உட்கார்ந்தேன். அப்போது ஒரு வயதான பெண் சுமார் 65 வயதிருக்கலாம். முகமெங்கும் வேர்வைத்துளிகள். எண்ணெய் வழியும் முகம். நரையோடிய தலை. மெலிந்த கைகளில் நரம்புகள் புடைத்து கிடந்தன. கையில் ஒரு சிறிய சொம்பு இருந்தது. வந்து சங்கரனிடம்.. ஐயா இந்தாங்க என்று பால்சொம்பை நீட்டினாள்.  சங்கரன் வாங்கிக்கொண்டு சொன்னார்... முருகா இவங்க எதிரில புறம்போக்குல குடிசை போட்டு இங்க 30 வருஷமா இருக்காங்க..ரெண்டு மாடு வச்சி கறந்து பால்வியாபாரம். . நான் இந்த கோயில் வேலை ஆரம்பிச்சதும்.. தினமும் 200 பால் அபிஷேகத்துக்குன்னு கொடுத்துடுவாங்க... என்றார்.

                     அந்தப் பெண்மணி தரையில் என் எதிரே உட்கார்ந்தாள். ஒரு மஞ்சள் பை வைத்திருந்தாள். அதை சங்கரனிடம் நீட்டினாள்.  ஐயா.. இதுல கொஞ்சம் பணம் இருக்கு.. எண்ணிக்கொடுங்க என்றாள். சங்கரன் அதை தரையில் கொட்ட அதில் ஐந்து ரூபாய்கள்..பத்து ரூபாய்கள்..ஐம்பது ரூபாய்கள்.. நுர்று ரூபாய்கள்.. சில்லறை காசுகள்....ஒரு ரூபாய்..இரண்டு ருபாய்..ஐந்து ரூபாய்... என.. சஙகரன் அதை எண்ணியபடியே முருகா..நீயும் எண்ணு என்றார். நானும் எண்ண ஆரம்பித்தேன்..

                    மொத்தம் 5675 ரூபாய் இருந்தது. எண்ணி சஙக்ரன் அவளிடம் கொடுக்கப்போகையில்...அவள் அவர் கையைத் தடுத்து.. ஐயா.. என்னால முடிஞ்சது..கோயிலுக்கு வச்சுக்கங்க என்றாள். என் மனதுக்குள் அதிர்வு வந்தது.
சங்கரன் கேட்டார் இவ்வளவு பணம்... என்று தயங்கினார்..
                   அவள் சொன்னாள்.

                    பால் விக்கற காசுல தினமும் ஐந்து ரூவா எடுத்து வச்சிட்டு வந்தேன். ஒரு அய்யாயிரம் கொடுத்திடலாம்னு நினைச்சேன்.. முடியல்ல. மூவாயிரம் தான் சேந்துச்சி.. போனவாரம் கன்னுக்குட்டி செத்துப்போச்சின்னு நினைச்சேன்.. ஐயா..ஒரு டாக்டர அனுப்பிச்சிங்க..அது பிழைச்சிக்கிடிச்சி.. எல்லாம் அவனோட சொத்துன்னு அந்த கன்னுக்குட்டிய வித்துட்டேன்..ரெண்டாயிரம் கிடச்சிடிச்சி...செத்துபோயிருந்தா நஷ்டம்தானே,,,
பொழச்சது அவன் செயல்தானே..அதானல அந்தக் காசயும் போட்டேன்.. அய்யாயிரம் தாண்டிடிச்சு இப்பத்தான் மனசு நிம்மதியா இருக்கு...  என்றபடி வரேன் ஐயா.. மாட்டுக்கு தீனி வைக்கணும்..

                      எழுந்து  மீண்டும் கருப்பக்கிரகம் பார்த்து கைகளை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறிப்போனாள்..

                        நம்பிக்கைத்தான் எதற்கும் அடிப்படை என்பதை அவள் உணர்த்திவிட்டுப்போனாள். மனசுக்குள் அந்த அதிர்வு அதிர்ந்துகொண்டேயிருந்தது. எழுந்து சங்கரனிடம் சொல்லிவிட்டு  மனத்தெளிவோடு சிவனை வணங்கிவிட்டு வெளியே வந்தேன்.