Monday, January 16, 2012

ரௌத்தரம் பழகு...

               
                      மணி பன்னிரண்டைக் கடந்திருந்த இரவில் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட  எல்லா வீடுகளும் நல்ல உறக்கத்திலிருந்தன. ஒருசில வீடுகளில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு பணியை முடித்துவிட்டு வருபவர்கள் சாப்பிடும் சாப்பாட்டு வேளையது. பேச்சும் சாப்பாடுமாக சப்தம் தெருவில் மிதந்து கிடந்தது. இது எதுவும் இல்லாமல் தேவகியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாசல்கதவும் அடைக்கப்பட்டிருந்தது. அவளும் அவளின் 7 வயது பிள்ளையும் விழித்துக்கிடந்தார்கள்.

                              அப்பா எப்போ வருவாங்கம்மா?
                              வருவாங்க.. ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.
                              ஏம்மா தினமும் இப்படி வர்றாங்க..
                              உங்கப்பா கிட்டயே கேளு..
                              என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்கம்மா..போடா உங்கப்பா ரவுடி..பொறுக்கி..குடிக்கிறாரு உன்னோட சேரக்கூடாதுன்னு.. விரட்டியடிக்கிறாங்கம்மா..
                                ஆமாம் அப்படித்தான் செய்வாங்க..
                               ஏம்மா?
                                ஆமா உங்கப்பாதான் வெட்டிச் சண்டைக்குப் போறாரே...
                                அப்பாகிட்ட நீ சண்டை போடும்மா,,
                               உங்கப்பா பொறுக்கி கேக்கமாட்டான்...
                               நான் கேக்கறம்மா..
                               நல்லா கேளு...

                              அவன் சிறிய பிள்ளை அவன் மனதைக் கொட்டிவிட்டான். பெற்றவள் அதற்குப் பதில் சொல்ல இருக்கிறாள். தேவகி யாரிடம் கொட்டமுடியும். ராமலிங்கம் திருந்துவதாக இல்லை.
                             தெருவிலுள்ள எல்லா வீடுகளிலும் கடன் வாங்கியாயிற்று. நாடார் வெளிப்படையாகத் திட்டுகிறான். பழைய பாக்கிய கொடுத்துட்டு சாமான் வாங்குன்னு.. பால்காரன் ஒருமாதிரியா சிரிச்சுட்டு பால் கொடுததிட்டுப்போறர்ன்.. வீட்டுக்காரம்மா தெளிவாக சொல்லிவிட்டாள்..சீக்கிரம் வீட்டைக் காலிப்பண்ணிடுங்க... உன் புருஷன் எல்லாத்தையும் அடிச்சு வம்புக்கிழுக்கற மாதிரி என்கிட்ட செயய முடியாது.. நான் போலிசுக்குப் போயிடுவேன்...எங்க வீட்டுக்குன்னு ஒரு கௌரவம் மானம் இருக்கு.. காசுக்காக பொறுக்கிய குடிவச்சியர்ன்னு போறவங்க வர்றவங்க எல்லாம் கேக்கறாங்க.. நல்ல பொம்பளக்கி ஒரு சூடு ஒரு சொல்...காலி பண்ணிடு...ஒவ்வொருத்தனுக்கும் நாளைக்கி நான் பதில்சொல்ல முடியாது..

                           எல்லா அவமானங்களையும் தினமும் சந்திக்கிறாள். யாரிடமும் சொல்ல முடியவில்லை. அழுதுஅழுது கண்ணீரும் இல்லை கண்களில். வறண்டு விட்டது. வயிறு கேட்கவில்லை. பிள்ளைக்காவது சாப்பிட எதாவது வேணுமே...பார்த்து பார்த்து யாரிடம் கடன்வாங்கவில்லை என்று அலசி கடன் வாங்குகிறாள்..அதற்க ஆயிரம் கெஞ்சுகெஞ்சுகிறாள்.. பிச்சைதான் கேட்கவில்லை..

                            வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
                           எழுந்துபோய் திறந்தாள்.
                           ராமலிங்கத்தைத் துர்க்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். வெளியே ஆட்டோ ஓடிக்கொண்டிருந்தது.
                           வராதேன்னா கேக்கமாட்டேங்குறான்.. எங்க மானம் போவுது.. நாங்களும் குடிக்கிறோம்.. ஆனா அளவா..எங்ககிட்ட இருக்கற காசுக்கு கௌரவமா குடிக்கிறோம்.. உம்புருஷன் மானம் ரோஷமே கிடையாது.. குடிக்கறதுன்னா எதுவும் செய்வான்போலிருக்கு.. பழகுன தோஷத்துக்குக் கொண்டு வந்திருக்கோம்... சாக்கடையிலே விழுந்து கிடந்தான்.. பாத்துக்க.
                           இன்னும் சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டிவிட்டுபோனார்கள்.
                           உடலெங்கும் சாக்கடைத் தண்ணீர்.. நாற்றம் குடலைப் புடுங்கியது. மெல்ல அவன் உடைகளைக் கழற்றினாள். பிள்ளையிடம் கொடுத்தான். அவன் முகம் சுளித்தபடி எடுத்துக்கொண்டுபோய் பாத்ரூமில் போட்டான். சட்டை கழற்றும்போது முனகினான். பையில் கையைவிட்டுப் பார்த்தாள். வெறுமையாக இருந்தது. நாலைந்து பீடிகள்..ஒரு கசங்கிய பத்து ரூபாய்த்தாள்..அப்புறம் சின்ன தீப்பெட்டி...
                           அப்பா...அப்பா.. என்று எழுப்பினான் பிள்ளை.
                           உங்கப்பன் எழுந்திரிக்கமாட்டான். போய் படு..காலையிலே பேசலாம்.
                          காலையிலே பேசுவாராம்மா...
                          மகனின் முகத்தைப் பார்த்தாள்..போய்ப் படுத்து துர்ங்கு..
                          காலையில் எட்டுமணிக்குமேல் ராமலிங்கம் எழுந்தான்.
                           எழுந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். ஏய்  டீ கொடு..
                           பையன் வந்தான்.
                            என்னடா?
                           அப்பா...என்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டேங்குறாங்க..சங்கரு அவன் அப்பாவோட போய் கரும்புக்கட்டு வாங்கிட்டு வராம்பா..அவங்க காசு கொடுத்து வாங்கறானாம்..நீ சண்டை போட்டு காசு கொடுக்கமா வாங்கிட்டு வருவியாம்.. நீ  ரவுடியாம்.. எல்லாரும் பொறுக்கிப்புள்ளன்னு விரட்டறாங்கப்பா...நீ வந்து காசு கொடுத்து கரும்பு வாஙகிட்டு வரலாம்பா..வர்றியா..
                              வரேன்..போலாம்.. தேவகி கொண்டு வந்து டீயைக் கொடுத்தாள்.
                               இதெல்லாம் உன் வேலையாடி? என்றான்.
                              எனக்கு வேறு வேலையில்ல பாரு...உன் யோக்கியதை அப்படி.. வீட்டுக்காரம்மா காலிபண்ணலேன்னா போலிசுக்கு போவேங்கறாங்க..எல்லார்கிட்டயும் கடன் வாங்கியாச்சு....நாளும் கெழமையும்   அசிங்கப்பட்றேன்... உனக்கு குடிச்சா போதும்..நல்ல குடும்பத்துலே பொறந்திட்டோம்னு பொறுமையா இருக்கேன்.. புள்ள வேற இருக்கான். அவனுக்கா எல்லாம் பொறுத்துபோறேன்.. வேற யாரும் உன்கிட்ட குடும்பம் நடத்தமாட்டா...
                                ஏன் நடத்தறே? உங்கப்பன் வீட்டுக்குபோயேண்டி.. யார் குறுக்கே நீட்டி தடுத்தா?
                               எதுக்கு?  எனக்கும்  என் பிள்ளைக்கும்  ஒரு வழிய காட்டு.. இல்லேன்னா இப்படியே இருக்கமாட்டேன்...
                              என்னடி செய்வே?
                              எதுவும் செய்வேன்.
                              என்னடி இன்னிக்கு பேச்சு ஒரு மாதிரியா போவுது..
                              இனிமே பொறுக்கமுடியாதுன்னுதான்..
                              பொறுக்கமுடியாதா,,,என் குணம் தெரியுமில்லே..,
                              என் குணம் உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.. என்றாள் தேவகி அழுத்தமாக.
                              என்னடி செய்வே? என்றான் மறுபடியும்.
                             எதுக்கும் எல்லை இருக்கு. உன்ன மாத்திக்கணும்.. இப்படியே செஞ்சா..ஒரு பிடிசோறுபோதும் உன் கதைய முடிக்க...சத்தம்போடாம கலந்து வச்சி கதையை முடிச்சிடுவேன்.. நாலு வீட்டுலே பத்து பாத்திரம் தேச்சு நானும் என் பிள்ளையும் நிம்மதியா இருப்போம்.
                                உடம்பு ஒருமுறை ராமலிங்கத்திற்கு துர்க்கிப்போட்டது. அவள் கொடுத்து குடித்த காலி டீ தம்ளரை ஒருமுறை பார்த்துக்கொண்டு..தொண்டையைத் தடவினான் அவசரமாய்..திரும்பி பிள்ளையைப் பார்த்தான் பயமுடன். ...அதே பயத்துடன் தேவகியையும் பார்த்தான்.
                                முகத்தில் சலனமின்றி தெளிவாய் இருந்தாள் தேவகி.