Sunday, May 27, 2012

பகிர்வுகள்...



ஆதங்கப் பகிர்வு


               1981 ஆம் ஆண்டு உலகளாவிய நிலையில் எங்கும் நடந்திராத நிகழ்வாக உருவாக்கபெற்றது இது. தனிப்பட்ட மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம். தஞ்சை பெற்றவரம் தமிழ்ப் பல்கலைக்கழகம். இதனை மாண்பமை முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உயரிய தொலைநோக்குடன் சிந்தித்ததன் விளைவாக தஞ்சை மண் புண்ணியம் பெற்றது. தமிழுக்கென்று ஒரு சீரீய பெருமை மிகு பல்கலைக்கழகம். இதன் நோக்கம் தமிழ் பண்பாடு தமிழ் நாகரிகம்.. தமிழர் மாண்பு...தொன்மை இவற்றினைக் காக்க எழுந்து ஓர் உயராய்வு மையமாக. அதன்படியே திட்டங்களும் வகுக்கப்பட்டு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பின்னர்தான் தெலுங்குப் பல்கலைக்கழகம் திராவிடப் பல்கலைக்கழகம் போன்றவை தொடங்கப்பட்டன என்பது கண்கூடு.

             பழம் பெருமைமிக்க தமிழ்மொழியின் தொன்மையையும் பழம் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வதர்களைப் போற்றுதலும் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க படைப்பாக்கங்களை வெளிக்கொணருவதும் அவர்களைப் போன்று இன்னும் பல அறிஞர்களையும் உலக தரத்திற்கு உருவாக்கி உலகமெங்கும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பதன் நோக்கமாகவே தமிழ்ப் பல்கலைக்கழகம் செயற்படவேண்டும் என்கிற உறுதிப்பாட்டில்தான் அது இயங்கிவந்தது.

              முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் கவனிப்பாரற்று சவலைப் பிள்ளையாயிற்று என்பதுதான் உண்மை. அதன் அரசியல் காரணங்கள் நிறைய. ஒரு மொழிக்காக உருவாக்கப்பெற்ற பல்கலைக்கழகத்தில் திட்டங்களைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள்... பேரறிஞர்கள் எழுதிய அரிய பொக்கிஷங்களான ஆய்வுப்படிகளை நுர்ல்களாகக் கொணடுவருவதில் இடர்கள்..இப்படி நிதிநிலைமையர்ல் தமிழ்ப்பல்கலைக்கழகம் பல இன்னல்களைச் சந்தித்தது. பல துணைவேந்தர்கள் வந்தார்கள் போனார்கள். ஆனாலும் அவர்களால் தமிழறிஞர் வ.அய்.சு.வின் இடத்தை நிரப்பவே முடியாமல்போனதுதான் வருத்தம்.

              இருப்பினும் இவற்றினைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். அது நமது நோக்கமல்ல.

               நமது நோக்கம் ஒரு மொழிக்கென்று அதுவும் நம் தாய்மொழிக்கென்று உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் மேன்மேலும் உயரத்திற்கு எடுத்துச்செல்லப்படவேண்டும் என்பதுதான். அதன்செயல்திட்டங்களும் பணிகளும் மீண்டும் செம்மையாக்கப்பட்டு அதன் உயரிய நோக்கமான உயராய்வு மையம் என்பது நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.

               ஒரு பல்கலைக்கழகம் என்பது புறத்தளவிலும் அகத்தளவிலும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக் கொண்டது. இது எந்த நிலையிலும் சிதைக்கப்படகூடாது என்பதுதான் மொழிக்கும் அதற்காக உருவாகியிருக்கும் பல்கலைக்கழகத்திற்கும் கொடுக்கப்படும் கௌரவம்.


                ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிலப் பரப்பில் ஒரு பகுதியைத் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு கொடுத்தாகிவிட்டது. தற்போது இன்னொரு பகுதியை வழங்கி அதில்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் கொண்டுவரலாம் என்பதாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

                மாண்பமை முதல்வர் அம்மா அவர்களுக்குப் பணிவான வேண்டுகோள வைப்பது இதுதான்.


                 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பது ஒரு குறிப்பிட்ட அலுவலகக் கட்டமைப்புக் கொண்டது. அதற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது.

                 பல்கலைக்கழகத்திற்கென்று ஒரு ஒழுங்கும் மரியாதையும் இருக்கிறது. அதது அதனதன் இடத்தின் இருந்தால்தான் கொண்டாடப்படும் மாண்பு நிலைப்படும்.

                எனவே இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவுவது வேறுவேறு பணிச்சூழலில் இரண்டையும் அகௌரப்படுத்தும் செயலாகவே அமையும்.

                முதல்வர் அம்மா அவர்கள் அருள்கூர்ந்து இதனைப் பரிசீலித்து உரிய திட்டமிடலை ஆணையாக வழங்கவேண்டும். மேலும் உங்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் அதன் பழைய மாண்பை பெற்று உலகெங்கும் தேமதுரத தமிழோசை பரவும்வகை செய்யவேண்டும் என்பதுதான் இதன் ஆதங்கப் பகிர்வாக அமைகிறது.



    மகிழ்ச்சிப் பகிர்வு


                     தஞ்சை பெசண்ட் அரங்கில் அனன்யா பதிப்பகத்தின் சார்பில் தஞ்சாவர்க்கவிராயரின் கவிதைநுர்ல் வளையல் வம்சம் வெளியீட்டுவிழா 26.05.2012 அன்று மாலை வெகு சீர்மையோடும் சிறப்போடும் நடந்தேறியது.

                    விழாவில் கலந்துகொண்டவர்கள் பலரும் மிகச் சிறந்த படைப்பாளிகள்..ரசனை மிக்கவர்கள்.. பல்துறைசார்ந்த அறிஞர்கள்..வாசிப்பாளர்கள்.. என அவரவர் கருத்துக்களை நுர்ல் குறித்து பகிர்ந்துகொண்டார்கள்.

                       ஓவியர் வீரசந்தானம் அவர்கள் வளையல் வம்சக் கவிதைகள் குறித்து ஒரு ஓவியக்கண்காட்சியை ரசிப்பதுபோல காற்றில் தனது சொற்களால் வரைந்து காட்டினார்.

                      காதம்பரி வெங்கட்ராமன் வழக்கம்போல தனது ஆழமான உணர்வுகளை வளையல்வம்சத்தின் மேன்மையுணர வெளிப்படுத்தினார்.

                        நா.விச்வநாதன் அவருக்கேயுரித்தான கம்பீரத்தில் வளையல் வம்சத்தை நனைத்து எல்லோரையும் உணர்வில் ஈரப்படுத்தினார்.

                        ஒரு மனித நேயமிக்க மருத்துவராக விளங்கும் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் நான் மருத்துவராக வரவில்லை நோயாளியாக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அற்புதமான சுருக்கமான அதேசமய்ம் செறிவான ஒரு கவிதையை வழங்கிவிட்டது பிரமிப்பானது. சுந்தர்ஜி சொன்னது போல் டாக்டர் கவிஞராகிவிட்டார். ஆனால் நாங்கள் மருத்துவராக முடியுமா? என்று, உண்மைதான்,

                          வளையல் வம்சம் குறித்த தனது கருத்துக்களைக் குறிப்பிடுவதற்கு முன்னர் கவிதையை விமர்சிக்க வரவில்லை. நான் அனுபவிப்பவன். ஆகவே நான் அனுபவித்ததை கட்டுரையாக வாசித்துவிடுகிறேன் என்று உறரணி நீண்டதொரு கட்டுரை வாசித்தளித்தார்.

                           கவிதை என்பது வாசிக்கப்படவேண்டும் இசை என்பது  கேட்கப்படவேண்டும் நட்சத்திரம் தேவையெனில் வானத்தின் உச்சியில் சென்று தேடுவதைப்போலவும் கடலுக்குள் இருக்கும் கூழாங்கல் தேவையெனில் கடலுக்குள் இறங்கி அதன் ஆழம் வரை செல்வதுபோல நான் கவிராயருக்குள் இறங்குகிறேன், அவருக்கும் எனக்குமான உறவில் உருவானவை இக்கவிதைகள் என அற்புதமான ஒரு கருத்தை சுந்தர்ஜி மொழிந்துவிட்டுபோனது காதில் இசையாக ஊடுருவியது.

                           அனன்யா அருள் கவிராயர் கவிதைகள் குறித்த  தனது கருத்துக்களைக் கட்டுரையாக வாசித்தளித்தார்.

                            முத்தமிழ் விரும்பியின் கவிராயர் குறித்த கருத்துக்கள் எளிமையாகயும் சுவையாகவும் அதேசமயம் தெளிவாகவும் முத்தமிழின் சுவையைக் கூட்டுவதாக அமைந்தது.

                            தேவரசிகன் தனக்கேயுரித்தான பாணியில் மிக நுட்பமான கவிராயரின் கவிதைகளை எடுத்துப்பேசினார்.

                              கடைசியாக வந்தாலும் கச்சிதமாகப் பேசுவேன் என உறுதிசெய்வதுபோல ஒரு கதையைச் சொல்லி மனத்தை தைக்கவிட்டு போனார் கவிஜீவன்.

                             நீண்ட நாட்களுக்குப் பின் ஓர் அற்புதமான கவிதை நிகழ்வில் மனம் சுகந்து கிடந்த நிறைவு கிடைத்தது. வாய்ப்பளித்த அனன்யா பதிப்பகத்தாருக்கும் கவிஞர் அருளுக்கும் நன்றிகள். கவிதை நுர்ல் குறித்து நாளைய பதிவில் பகிர்ந்துகொள்வேன்.


           வேண்டுகோள் பகிர்வு


                           மேனிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒவ்வெரு மாணவியும் மாணவரும் அவரவர் திறனுக்கேற்பச் சூழலுக்கேற்ப மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். எல்லோரையும் எல்லாக் கடவுளர்களும் காக்கட்டும்.

                    1. நன்றாகப் படிக்கிற மதிப்பெண்களைத் தரப்படுத்தியிருக்கிற அத்தனை ஏழைப் பிள்ளைகளையும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் விரும்பும் மேல்படிப்பிற்குச் செல்ல அரசு துணைபுரியவேண்டும்.

                   2. நம்முடைய விருப்பங்களுக்குப் பலிகொடுக்காமல் அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பிய படிப்பை வழங்கவேண்டுமாய் பெற்றோர்கள் நடந்துகொள்ளவேண்டும்.

                   3. பணமுடைய மனமுடையவர்கள் முடியாத பிள்ளைகளுக்கு உதவுங்கள்.


                                    ஒரு கவிதை,,,,,,,, அல்ல வாழ்க்கைத்துளி

                                     அம்மாவின் பழைய
                                      புகைப்படத்தைத்
                                      துடைத்துத்துடைத்துப்
                                      பார்த்தேன்
                                      பளிச்சென்றே தெரியவில்லை
                                      அப்புறம் புரிந்தது
                                      ஐயோ,,
                                      அது அழுக்கல்ல
                                       காலம்...
                                                             தஞ்சாவூர்க் கவிராயர்
                                               நன்றி. வளையல் வம்சம்..


               நுர்ல் பகிர்வு


                          கவிராயர் அறிமுகப்படுத்தி வைத்தார். யாழி என்றொரு இளைய கவிஞன். வயதில்தான் இளையவன். கவிதையில் வானத்தை உரசுபவன்.
என் கைரேகை படிந்த கல் என்பது இவன் கவிதை நுர்லின் பெயர்.
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழச்சொல்கிற கவிதைகள்.

                    திணிப்பை
                    எதிர்க்கும்பொருட்டுக்
                    கடித்துவிடுகிறது
                    செருப்புகூட
                    தன்னை உணர்த்தி
                    சில நேரங்களில்...

                    வாசிப்பதுதான் கவிதைக்குப் பெருமை.

                    யாழி,,,யுடன் பேச....9976350636.

‘                   கவிராயர் யாழியை அறிமுகம் செய்கிறபோது சொன்னார். எனது கவிதை குறித்து இவனைப் பேசச் சொல்லியிருக்கக்கூடாது ஏனென்று சொன்னால் இவன் குயில், குயில் பாடத்தானே செய்யும். பேசுமா என்ன என்று,
அது தொகுப்பு முழுக்கத் தெரிகிறது.

                     வாழி யாழி....

                        
                                                                              நாளையும் பகிர்வேன்...