Sunday, June 16, 2013

சொல்வேட்டையும் தினமணியும்

தினமணியும் சொல்வேட்டையும்...


               தினமணி நாளிதழ் இதழியல் வரலாற்றில் முக்கியமான வரலாற்றுப் பதிவு இதழாக இருந்துவருகிறது. இந்நாளிதழுக்கு ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்பவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருகுறிப்பிட்ட  கூறுகளைத் தனித்த அடையாளமுடன் பெற்று வாசிப்போரின் கவனத்தை ஈர்த்துவருவது கண்கூடு. கேஎன் சிவராமன் ஆசிரியராக இருந்தபோது அவரின் தனித்துவம் நாளிதழ் முழுக்கத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு புதிய ஆசிரியர் பொறுப்பேற்கும்போதும் இது நிகழ்கிறது. இந்த வரிசையில் தற்போது திரு கே. வைத்தியநாதன். இவரின் ஆசிரியப் பொறுப்பில் புதிதாக வெளிவரும் பகுதி சொல்வேட்டை எனும் பகுதியாகும்.

                 நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் அவர்கள் ஆரம்பித்துள்ள இந்தப் பகுதியில் வாரம் ஓர் ஆங்கிலச் சொல்லை அளித்து அதற்கு இணையான தமிழச்சொல்லை வாசகர்கள் கருத்துரைக்கு விட்டு முடிவு செய்யும் பகுதியாகும். ஒரு மொழியின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த சொல்லாக்கம் என்பது மிக முக்கியமானதாகும். அவ்வகையில் சொல்வேட்டை எனும் பகுதி மிக முக்கிய தமிழ்ப்பணியாகும். பலரும் ஆர்வமாக இதில் பங்கேற்று வருகிறார்கள்.

                   நான் அறிவியல் தமிழ். கலைச்சொல்லாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இப்பகுதியைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தற்போது போனவாரம் தொடங்கி நானும் இதற்கு இணையான தமிழ்ச்சொல் வழஙகிய நிலையில் போனவாரமும் இந்த வாரமும் என்னுடைய சொற்களும் கருதப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் பலரும் சொற்கள் அளித்துள்ள நிலையில்  இணையான தமிழச்சொல்லாக நீதியரசர் அவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிற சொல்லை நான் மட்டுமே பரிந்துரைத்திருக் கிறேன்    என்பது மகிழ்ச்சியானது. . ஏன் என்றால் alter ego என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பலர் பரிந்துரை செய்திருந் தாலும் நீதியரசர் அவர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல்லை நான் மடடுமே அளித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

                       கிட்டத்தட்ட 34 சொற்களை இணைச் சொல்லாகப் பரிந்துரை செய்திருந்தேன். அதில் நீதியரசர் அவர்கள்

                          தன்னியல்புப் பிரதி. தன்னுருப் பிரதி. தன்னுரு நகல். தன்னுரு மெய். தன் மாற்றுரு. மாற்றாளன். மெய்யுரு மாற்று. தன் மாற்று வடிவு ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டுள்ளார்.

                            இதில் இணையான சொல்லாக  தன் மாற்றுரு என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை வேறுயாரும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                             நீதியரசர் அவர்களுக்கும் தினமணிக்கும் என்னுடைய நன்றிகள்.

                             இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

                             நீங்களும் இந்த சொல்வேட்டைப் பகுதியில் கலந்துகொள்ளலாம். தமிழுக்காற்றும் தொண்டு அது.