Wednesday, October 16, 2013





                                                       குறை தீர்க்கும் நாள்


                                  அன்றைக்கு சிங்கத்திற்கு அலுப்பாக இருந்தது வேட்டைக்குப் போவதற்கு. ஆனாலும வயிறு பசிக்குமே என்கிற கவலையும் இருந்தது.

                                யோசித்துகொண்டேயிருந்தது.

                                அதற்குள் விடிந்து கதிரவனும் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டான்.

                                  அப்போது ஒரு நரி வந்தது.

                                  நரியை அடித்துத் தின்றுவிடலாம் என்று யோசித்தபடியே நரியைப் பார்த்தது. சிங்கத்தின் கண்பார்வையிலேயே நரி புரிந்துகொண்டுவிட்டது. இருப்பினும் ஒடனே ஓடிவிடவும் முடியாது.சிங்கம் எப்படியும் கொன்றுவிடும் என்று அதற்குத் தெரியும்.

                                   நரி யோசித்தது.

                                   பின் சொன்னது

                                  என்ன மகாராஜா இன்றைக்கு வேட்டைக்குப் போகாமல் இருக்கிறீர்கள்?  நான் வரும் வழியில்தான் ஒரு இளம்மான் கூட்டத்தைப் பார்த்தேன். அத்தனையும் பிஞ்சுமான்கள்.

                                  சற்று நிறுத்தி  தான் வீசிய வலையில் சிங்கம் நுழைந்ததா என்று நோட்டம் பார்த்தது.

                                  பிஞ்சு மான்கள் என்றதும் சிங்கத்திற்கு எச்சில் ஊறியது. சட்டென்று அடக்கியபடி சொன்னது

                                    இல்லை நரியாரே இன்றைக்கு அலுப்பாக இருக்கிறது. எனவே வேட்டைக்குச் செல்லும் எண்ணம் இல்லை. ஆனாலும் வயிறு இப்போதைக்கு லேசாகப் பசிக்க ஆரம்பித்திருக்கிறது.

                                  அப்படியா அப்படியானால் நானொரு யோசனை சொல்கிறேன் என்றது,

                                  சிங்கம் தலையாட்டியது உடனே.

                                  நரிக்கு தான் தப்பித்துவிட்டோம் என்று உறுதியானவுடன் அந்த யோசனையை சொன்னது சிங்கத்திடம்.

                                 சிங்கம் அந்த யோசனையைக் கேட்டதும் மகிழ்ச்சியானது.

                                 உடனே காடெங்கும் அந்த அறிவிப்பு  ஒலித்தது.

                                  இன்றைக்கு வேட்டைக்கு செல்ல விருப்பமில்லாத நமது ராஜா அவர்கள் குறைகளைக் கேட்கவுள்ளார். எந்த விலங்காக இருந்தாலும் அதன் குறைகளைச் சொல்லலாம் உடனே தீர்த்து வைக்கப்படும். யாரும் வராமல் இருக்கக்கூடாது. இது அரச கட்டளை.

                                   எல்லா மிருகங்களும் ஓடோடி வந்து சிங்கக் குகை வாசலில்
குழுமி நின்றன.

                                     சிங்கம் எல்லோரையும் நோட்டமிட்டது.

                                     நரி சொன்னது பொய்யில்லை. நிறைய இளம் மான்களும் சற்றே பெருத்த விடலை மான்களும் நின்றுகொண்டிருந்தன.

                                     சரி ஒவ்வொருத்தராகக் குறைகளைச் சொல்லுங்கள்..

                                    முதலில் ஒட்டகச் சிவிங்கி வந்து சொன்னது.

                                     இந்த யானைகள் எல்லா மரங்களையும் முறித்துவிடுகின்றன. எனவே எங்களுக்கு இலை தழைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

                                     சரி. யானைகளே சில மரங்களை விட்டுவிடுங்கள். ஆமாம் இல்லையென்றால் நான் கொன்றுவிடுவேன் உங்களை.

                                     சரி மகாராஜா என்றன யானைகள்.

                                     இப்படி ஒவ்வொன்று ஒரு குறையை சொல்லச் சொல்ல அதனை மாற்றி மாற்றி மற்ற மிருகங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது சிங்கம்.

                                    அதற்குள் நன்றாக வெயில் வந்துவிட்டதால் சிங்கத்திற்கு பசி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

                                    குறைகள் சொன்னவர்கள் போகலாம் என்றது.

                                    கடைசியில் சில முயல்களும் நாலைந்து மலையாடுகளும் இளம் மான்களும் மிஞ்சியிருந்தன.

                                      சரி மான்களே உங்கள் குறை என்ன? என்றது சிங்கம்.

                                      மகாராஜா... நாங்கள் மேயும் புல்வெளிகளில் எல்லாம் பன்றிகளும் எருமைகளும் சேற்றோடு உருண்டு புரள்கின்றன அதனால் புல் மேயமுடியாமல் பட்டினியாகக் கிடக்கவேண்டியிருக்கிறது. எனவே உடம்பு பாதித்திருக்கிறது. சரி தண்ணீரை குடிக்கலாம் என்றாலும் இவைகள் குட்டைகளையும் குழப்பிவிடுகின்றன. சேற்று தண்ணீர் தெளியும்வரை காத்திருப்பதால் பட்டினியால் உடல் சோர்ந்துபோய்விடுகிறது  என்றன.

                                      அடடா,, இதென்ன பரிதாபம்.. அதனால்தான் எல்லோரும் மெலிந்து கிடக்கிறீர்கள்.. பசி என்பது எல்லோருக்கும் பொதுவானது. என்னுடைய  காட்டில் யாரும் பசியாக இருக்கக்கூடாது.. சரி உங்களுக்கு மட்டும் அனுமதி தருகிறேன்..என் குகையைச் சுற்றி பசும்புற்கள் பரந்து கிடக்கின்றன நீங்கள் தினமும் வந்த மேய்ந்து பசியாற்றிக்கொள்ளலாம்.

                                  அரசே உங்களின் பெருந்தன்மையே பெருந்தன்மை என்று  பாராட்டின நரிகள்.

                                  மான்களும் மகிழ்ந்துபோயின.

                                  சரி வாருங்கள்..இன்றைக்கே உங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றது சிங்கம்.

                                   மான்களும் உற்சாகமாய் ஓடிப்போய் மேய ஆரம்பித்தன.

                                   குகைக்கு அந்தப் பக்கம் பாருங்கள் எத்தனை பச்சையென்று.

                                  சிஙகம் காட்டிய இடத்திற்கு சென்றன சில மான்கள். அவற்றை யாருமறியாமல் அப்படியே வாயால் கவ்விக்கொண்டு குகைக்குள் போய் சாப்பிட ஆரம்பித்தது சிங்கம் உற்சாகமாய்.

                                  இதையறியாமல் மான்கள் குகையைச் சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன.

                                                    ====