Tuesday, November 5, 2013

எழுதப்படாத உயில்....... குறுந்தொடர் 4




                       கடிதங்களைப் படிக்கப் படிக்க அங்கையர்க்கண்ணிக்கு ஆர்வமாக இருந்தது.

                      சில கடிதங்கள் வேதனைப்பட வைத்தன.
                 
                      சில கடிதங்கள் கோபப்பட வைத்தன.

                      சில கடிதங்கள் இரக்கங்கொள்ள வைத்தன.

                      சில சுவையாகவும் சிரிக்கவும் வைத்தன.

                      சில கடிதங்கள் வியக்க வைத்தன.

               அவளுக்கு வேறு ஒரு புதிய உலகத்தின் கதவுகளை அந்த அலுவலகக் கடிதங்கள் திறந்து வைத்தன.

                  சமுகத்தின் முழு உருவமும் அவள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

                  தன்னுடைய தந்தை இறந்துபோய் கிடைத்தவேலை என்றபோது மனதில் தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது என்று யோசிக்கவே செய்தாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. விலகிப்போய் விட வேண்டும் வெகுதுர்ரத்திற்கு இவற்றின் வாசனை இல்லாமல் என்றுகூட தீர்மானம் செய்து வைத்திருந்தாள்.

                    ஆனால் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டன ஒவ்வொரு கடிதமும்.

                    இதைவிட ஏராளமான பிரச்சினைகளுக்குள் மனிதர்களும் குடும்பங்களும் சிக்கிக் கிடப்பதையும் அவற்றிலிருந்து மீட்டுவிடுங்கள் எங்களையும் என்பதுபோல கடிதங்களின் செய்திகள் புலம்பின.

                    எங்கப்பா நேர்மையானர். ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காதவர். பணியில் இருக்கும்போது இறந்துபோய்விட்டார். இன்றுவரை அவருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையும் குடும்ப ஓய்வூதியமும்கூட வரவில்லை என்று புலம்பியது ஒரு கடிதம்.

                     எங்க குடும்பத்திற்கென்று பூர்விகமாக இருந்தது அந்த 100 குழி நிலந்தான். அதையும் அவங்க எடுத்துகிட்டாங்க.. நாங்க ஒருவேளைகூட முழுசா சாப்பிடமுடியாம தவிக்கிறோம். எங்க நிலத்தை மீட்டுக்கொடுங்க..

                    எம்மவன் ஆத்திரத்துல கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். என்னைக் காப்பாத்த யாருமில்லே. எனக்கு வரவேண்டிய முதியோர் உதவித்தொகை கிடைச்சா காவயிறு ரொப்பிக்குவேன்...வாங்கிக் கொடுங்க மவராசா...

                     நான் இயற்கையை நேசிப்பவன். இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் வள்ர்க்கிற மாமரததுலேர்ந்து இலை கொட்டி தினமும் நாங்க அள்ளவேண்டியதாயிருக்கு. எங்க காம்பவுண்டுக்குள்ள வர்ற கிளைய வெட்ட ஏற்பாடு செய்யணும்..

                    இது அரசாங்க மருத்துவமனை. வசதியிலலாத நோயாளிங்க நிறைய வர்றாங்க.. ஆனா போதிய மருந்து வசதி.. இல்ல.. கட்டிடம் பழைய காலத்துக் கட்டிடம்.. இடிஞ்சுவிடும் நிலையிலே இருக்கு.. பக்கத்துலே தாய்சேய் நலவிடுதி இருக்கு.. இருக்கற நாலு கட்டிலேயும் துருப்பிடிச்சு.. ஏத்த இறக்கமா ஆடிக்கிட்டிருக்கு.. எனவே மருத்துவமனைக்கு வந்த நோயை சரி பண்ணணும்..

                      மழை பெய்தா முனிசிபல் பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்பறையும் ஒழுகுது. புள்ளங்க படிக்கமுடியாம நினையறாங்க.. உடனே அதை சரிப்பண்ணித் தரணும்..

                     எங்க வள்ளுவர் நகருக்கு ஒரேயொரு குடிநீர் இணைப்புக் கேட்டு இதுவரை 437 மனுக்கள் கொடுத்திட்டோம்.. ஒரு மனுக்காவது பதில் கொடுங்க.. இதுலே மனுநீதீ நாள்ல மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு 25ம் அடங்கும்..

                    எம் பையன அரசாங்க இலவச ஆஸ்டல்ல சேர்க்கப்போறேன். என்னோட கணவர் இறந்துபோய் ஆறு வருஷமாவுது.. எனவே எனக்கு வாரிசு சர்டிபிகேட்டும்.. என்னோட பையனுக்கு வருமானச் சான்றிதழும் தரணும்..என் குடும்பத்துலே யாருமே படிக்கல்லே.. என் மவனாச்சும் படிக்கணும்னு ஆசப் படறேன்.. ஐயா.. உதவிப் பண்ணா புண்ணியமா போவும்.. உங்க புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.

                      எனக்கு நாலு பொண்ணுங்க... இதுலே மூணு வாதம் வந்து காலு சூம்பிப் போச்சு.. எனவே ஊனமுற்றோர் சான்றிதழ் கொடுத்தால் என் பிள்ளைகள் வாழ்க்கை காப்பாற்றப்படும்..

                     அங்கையர்க்கண்ணிக்கு இந்த உலகத்தின் துன்பங்கள் அவளுடைய துன்பத்தை எடுத்துப்போய் துர்ரப் போட்டு புதைத்துவிட்டு வந்து இவளிடத்தில் நின்று விசுவரூபம் எடுத்திருந்தன.

                   ஒவ்வொரு கடிதத்திற்காய் பொருண்மை எழுதினாள்.

                    அதை எடுத்துப்போய் ரங்கராஜனிடம் காண்பித்தாள். பார்த்துவிட்டு அவளுடைய கையெழுத்தை அவன் ரசித்தான்.

                     உங்க கையெழுத்து குறுக்கி உக்காந்திருக்கிற முயல்குட்டிங்க மாதிரி இருக்கு.

                     அந்த உவமையை மனத்தில் காட்சிப்படுத்தி உடனே சிரித்தாள்.

                     நன்றி சார்.. ஆனால கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காதுன்னு சொல்லுவாங்க சார்..

                     சொல்லுவாங்கதானே...? இந்த உலகம் எதைத்தான் சொல்லலே?

                    சரி இந்தாங்க இதுக்குபேரு தன்பதிவேடு பர்சோனல் ரிஜிஸ்டர்னு  பேரு.. இதுலதான் அந்தக் கடிதங்கள் பதியணும்.. ஏற்கெனவே பதிஞ்சிருக்கிறத பாருங்க.. அதத் தொடர்ந்து எல்லாக் கடிதங்களையும் பதியுங்க.. ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க.. இதக் கத்துக்கிட்டா மத்த வேல எல்லாம் சுலபம்.. எதுவாயிருந்தாலும் நானிருக்கேன்.. பதட்டப்படாம வேல பாருங்க.. ஈடுபாட்டோட வேல பாருங்க.. எதுவும் கஷ்டமாயிருக்காது..

                       ரங்கராஜனின் வார்த்தைகள் சிட்டுக்குருவிகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்வதுபோல அவளின் தலையிலும் தோள்களிலும் வந்து அமர்ந்ததுபோல் உணர்ந்தாள்.

                        ஏனோ பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடித்துப்போயிற்று அவளுக்கு.

                         ரங்கராஜ்னை ஒருமுறை பார்த்தாள்.

                         தீவிரமாக ஏதோ ஒருகோப்பில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தான்.

                        அங்கையர்க்கண்ணி ஒவ்வொரு கடிதமாக பதிய ஆரம்பித்தாள்.

                        எல்லாக் கடிதங்களுக்கும் சிக்கலைத் தீர்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

                       அது வருவாய்த்துறையே தவிர வறுமை தீர்க்கும் துறையல்ல என்று அங்கையர்க்கண்ணி உணரும் நாள் தொலைவில் இருந்தது.

                         நாலைந்து நாட்களில் அவள் அந்த அலுவலகத்தோடு ஒட்டிப்போனாள்.

                          தாசில்தர்ர் சொன்னார்.. பரவாயில்லம்மா.. சின்னப் புள்ளயா இருந்தாலும் நல்லா புடிச்சிக்கிட்டே.. இவ்வளவு சீக்கிரம் வேலையும் கத்துக்கிட்ட.. வெரிகுட்..

                          பெரிய சான்றிதழ் கிடைத்ததுபோலிருந்தது.

                          முதல் மாத சம்பளத்தில் அவள் அந்த அலுவலக்த்தில் இருப்போருக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தாள்.

                           எல்லாம் முடிந்தபின்.. தனியாக ஒரு பார்சலை கொண்டுவந்து ரங்கராஜ்னிடம் நீட்டினாள்.

                           என்ன இது?

                           உங்களுக்குத்தான்.. நான் முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்.

                          அதான் பார்ட்டி வச்சிட்டியே?

                          அது எல்லோருக்கும் பொதுவா..இது உங்களுக்குத் தனியா..

                          ஏன்?

                          ஏன்னா நீங்க மட்டும் ஸ்பெஷல் எனக்கு.

                          என்ன சொல்றே?

                          சார்.. அப்புறம் சொல்றேன்.. இப்ப வாங்கிக்கங்க யாரும் வந்துடப் போறாங்க.. என்னோட மனம் உவந்து தர்றது இது.. வாங்கிக்கங்க..

                            ரங்கராஜ்ன் வாங்கிகொண்டான்.

                           நன்றி. ஒரு நாள் என் வீட்டுக்கு வாஙக..

                           நிச்சயமா வருவேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் வருவேன்
என்றாள்.

                           ரங்கராஜ்னுக்கு எதுவும் புரியவில்லை.

                           சரி எப்ப வேணாலும் வாங்க என்றான்.

                          ஒரு வியாழக்கிழமை.. ரங்கராஜ்ன் வீட்டிற்கு அங்கையர்க்கண்ணி போனாள்.

                         வாங்க உக்காருங்க..

                          இதோ வந்துடறேன் என்றபடி உள்ளே போனான் ரங்கராஜன்.

                          வீட்டை கண்களால் சுற்றிப் பார்த்தாள். எதிரே சுவ்ற்றில் இருந்த ஒரு புகைப்படம் அவளை அதிர வைத்தது. ரங்கராஜன் மார்பளவு உள்ள புகைப்படம் அது. பக்கத்தில் ஒரு பெண் இருந்தாள்.

                           அருகே போய் பார்த்தாள். அந்தப் பெண் அழகாக இருந்தாள்.
உள்ளுக்குள் ஏதோ மடமடவென்று சரிய ஆரம்பித்ததுபோல் உணர்ந்தாள். படபடப்பாக இருந்தது.

                           ரங்கராஜ்ன் காபியோடு வந்தான்.

                           அவள் புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டு

                            வாங்க அங்கையர்க்கண்ணி.. அவள் என்னோட மனைவி..
என்றதும் அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

                            முகமெங்கும் வியர்த்துக்கொட்டியது.

                            இந்தாங்க காப்பியைக் குடிங்க..

                            காப்பியை வாங்கும்போது கைகள் நடுங்கின.

                            அப்போதுதான் பயங்கரமாக ஒரு பெண்ணின் அலறல் கேட்டது.

                            சட்டென்று பயந்துபோய் கையிலிருந்து காப்பி டம்ளரை அப்படியே நழுவிவிட்டாள் அங்கையர்க்கண்ணி.

                                                                                                        (உயில் எழுதப்படும்)

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குறிப்பு

                    வணக்கம்.

                    இந்த வாரக் கல்கியில் நண்பர் ரிஷபனின் ஒரு சிறுகதை
                    வெளிவந்துள்ளது.

                    கதையின் தலைப்பு எப்பவாவது ஒரு ரவுண்டு.

                    நீண்ட நாட்களுக்குப் பின் படித்த ஓர் அற்புதமான
                   மனத்தை நெகிழ வைத்த கதை அது.

                    நெடுநேரம் மனத்தைக் கட்டிப்போட்டிருந்தது.

                    கதையின் பொருண்மை.... அதை சொன்ன விதம்..
                    காட்சிகள்...எல்லாமும் வெகு நேர்த்தியாகப்
                    பின்னப்பட்டிருந்தது.

                    ஒரு நல்ல திரைக்காட்சியைக் கண்டதுபோல
                   மனநிறைவு.

                   உலக தரத்திற்கு இயங்கும் சிறுகதை அது.

                   திருமிகு ரிஷபன் கட்டாயம் அவரது பதிவில்
                  பதிவிடுவார்.. அவசியம் வாசியுங்கள்.

                    உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

                     அன்புடன்

                   ஹரணி.