Thursday, October 23, 2014

தீபாவளி கொண்டாடியவர்கள்...



              தீபாவளி கொண்டாடியவர்கள்...


              தீபாவளி ஒவ்வொரு ஆண்டு வந்தாலும் அதுவொரு எதிர்பார்ப்பை உருவாக்கியே வருகிறது.

                முன்கூட்டியே அவரவர் தகுதி, வேலை, சம்பளம், பட்ஜெட் இவற்றிற்கு ஏற்பத் திட்டமிட்டு குடும்பத்தின் அனைவரும் சேர்ந்துபோய் துணி எடுத்து வந்துவிடுகிறார்கள்.

                 தீபாவளி வருவதற்கு முன்னமே இரண்டு மாதங்களுக்கு முன்பே துணி எடுத்து ரிலாக்ஸாகத் தைத்துக் காத்திருப்பவர்கள். இவர்களின் திட்டமிடல் எப்போதும தவறாது.

                ஒரு மாதத்திற்கு முன்பு தீபாவளி குறித்து பேசத் தொடங்கி அது தொடர்பாகக் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டை வந்து அது அணையாத நெருப்புப்போல தீபாவளி வரும் ஒரு வாரத்திற்கு முன்பு அணைந்துபோகும். எப்படியோ பணம் புரட்டி எல்லாமும் எடுத்தவுடன்.

                தீபாவளிக்கு முன்தினம் கண்டிப்பாக அன்றைக்கு எப்படியும் மழை பெய்யும். ஒரு குடைதான் இருக்கும். குடை மறந்துபோகும். கூட்டம் நெருக்கும். எதையும் பார்த்து நிதானமாக எடுக்கமுடியாது. என்றாலும் வேறு வழியின்றிப் போய் எடுத்து வீடு வந்துசேரும்போது நேரம் மட்டுமல்ல எரிச்சலும் நீண்டிருக்கும்.

                           அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் வருகிற கூட்டம்.  வாயில் பற்ற வைத்த சிகரெட் அல்லது பீடியுடன் ஒரு கையால் வேட்டியின் நுனியைப் பற்றிக்கொண்டு முன்னே ஒரு கிராமத்து கணவன் அசைய.. பின்னே அவன் மனைவியும் பிள்ளைகளும் முகத்தில் மகிழ்ச்சியுடன்.. வேடிக்கைப் பார்த்தபடி நெரிசலில் நடப்பார்கள்.

                           பல விவாதங்கள்.. சிறுசிறு சண்டைகள்...பிரச்சினைகள்.. வீட்டிற்குப் போனவுடனே துணி பத்தவில்லை மாற்ற வாவென்ற அழைப்புக்கள். டாப் இருக்கு சரியான பாட்டம் கிடைக்கலே..  இவ்வளவு கலர் இருக்கு நான் நினைச்ச கலர் அமையலே.. எல்லாருக்கும் நல்லா அமைஞ்சுடிச்சி.. எனக்குத்தான் கலரும் அமையலே துணியும் அமையலே.. இப்படி பல உரையாடல்கள்.. பணம் பத்தாமை.. மனம் போதாமை... குணம் போதாமை..

                       எப்படியே தீபாவளி நாள் விடிகிறது.

                       முன்தினம் இரவிலிருந்து மத்தாப்புகளும் ராக்கெட்டுகளும் வண்ணம் காட்ட.. படபடவென்று பட்டாசுகள் வெடிக்கின்றன.

                       தீபாவளியன்று வீடுவீடாகப்போய் பலகாரங்கள் பரிமாறி துணிகுறித்த விசாரிப்புகள். எதிர்பார்ப்புகள்..

                         எல்லாம் முடிந்து அன்று மாலை..

                         ஒரே உரையாடல் எல்லோரிடத்தும்

                         என்னதான் பாத்துப் பாத்து எடுத்தாலும் இந்த வருஷமும்
டிரெஸ் சரியா அமையலே..  நாலைஞசு பேரு சொல்லிட்டாங்க.. இது மாட்ச் இல்லே.. இதப்போய் எடுத்தியான்னு.. சே..

                          குடிசைகள் அடர்ந்த  தெருக்களின் ஊடே நடந்தால்... நடக்க முடியாது...வாசல்தோறும் பளபளப்பான சேலைகளில் உள்ளே கன்னங்கரேலென்ற பெண்கள் வாயெல்லாம் சிரிப்பாக.. ஆண்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு,  எனப் புளொரெசண்ட் கலர்களில் சட்டை வெள்ளை வேட்டி.. பிள்ளைகள் உடம்பில் ஜாக்கெட் அணிந்ததுபோல மினி சர்ட்.. மேலே ஒரு கலர் கீழே ஒரு கலர்.. சட்டையில் அங்கங்கே பிளாப்புகள் பட்டன்கள்.. பாக்கெட்டுகள்.. கீழே பேண்டை மடித்துவிட்டிருப்பார்கள்.. கைகளில் உதிரி வெடிகளைப் பிடித்திருப்பார்கள்... கையெல்லாம் மருந்தின் படலம் முட்டையோட்டின் உள் சவ்வுபோலப் படர்ந்திருக்கும்.. அதை பேண்ட்டில் தேய்த்தபடி வெடி வெடிப்பதில் மும்முரமாக.. சின்னஞ்சிறு பிள்ளைகள் பாதி முறுக்கு கடித்தபடியோ.. அதிரசம் வாயில் பாதி சட்டையில் பாதி உதிர்த்தபடியோ..சட்டைப் பாக்கெட்டில் துருத்திக்கொண்டிருக்கும் வாழைப்பழம்.. இப்படி தெருமுழுக்க எல்லோருக்கும் தீபாவளியை உதிர்த்துக்கொண்டிருக்கும் சிரிப்பு.. சிரிப்பு...

                      ஒவ்வொருஆண்டும் இப்படித்தான்... இவர்கள்தான் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.. மறுநாள் எதுவுமில்லை என்ற உணர்வை முற்றிலுமாகத் தொலைத்துவிட்டு..

                            மனதால் கொண்டாடுவோம் தீபாவளி மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லாமும் குறையாக இருந்தாலும்..