Saturday, January 1, 2011

புத்தாண்டு பரிசுகள்..


புத்தாண்டு என்பதால் மட்டுமல்ல வழக்கம்போல புகைவண்டி பிடிக்க எழும் நேரமான 4 மணிக்கு எழுந்து குளித்து முடித்தாகிவிட்டது. கோயிலுக்குச் செல்லலாம் என்று நினைத்து மாடிக்கு சென்று படர்ந்து கிடந்த முல்லைக்கொடியில் (வீட்டில் மனைவி வைத்திருக்கும் சந்தன முல்லைக்கொடியில்) மலர்களைப் பறிக்கலாம் என்று கைவைத்தபோது ஒவ்வொரு முல்லையிலும் இரவின் பனித்துளி அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. மேலே கசிந்து வந்த சூரியஒளி பனித்துளியில்பட்டு தங்கம்போல் மின்னிக்கிடந்தது. இந்த அழகு நண்பன் மதுமிதாவிற்குப் புத்தாண்டு பரிசாக.கோயிலுக்கு கிளம்பி கடைத்தெரு வருகையில் எனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு டூவீலர் கிறிச்சென்று பிரேக் அடிக்க நானும் நிதானித்து நிறுத்தினேன். பளபளவென்று மின்னும் சில்வர் கவுன் போட்டு வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த ஒரு பெண்குழந்தை குறுக்காக ஓடிவர பின்னாலே துரத்திக்கொண்டு வந்த அதன் தாய் பயந்து அலற வண்டி மோதாமல் நின்றுவிட்டது. அந்த வண்டியோட்டியவர் சொன்னார் அம்மா..இன்னிக்கு நியு இயர்னு திட்டாமப் போறேன்..இப்படிய குழந்தய ரோட்டுல விடுவீங்க.. என்றபடி நகர...அந்தக் குழந்தை இடுப்பில் கைவைத்து சிரிப்புடன் ஒரு சின்ன நடனம்இட.. எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது கோபமுற்ற அதன் தாய் உட்ப..அந்த பிஞ்சு மழலையின் சிரிப்பு நண்பன் சுந்தர்ஜிக்குப் புத்தாண்டு பரிசாக..

மீனாட்சியம்மன் கோயியிலில் வழிபட்டுவிட்டு தட்சிணாமூர்த்தியிடம் வேண்டிவிட்டு ஆஞ்சநேயரை நெய் தீபமிட்டு வணங்குகையில் கம்மென்று முகத்தில் மோதியது துளசியின் மணம். ஒரு வயதானவர் கையடங்கா துளசி மாலையுடன் வந்து அதனை சன்னதியைப் பூட்டியிருந்தகேட்டில் வைத்துவிட்டு ஆஞ்சநேயரை வணங்கிவிட்டுப்போனார். வீட்டுலே இவருக்காக வச்சிருக்கேன் நிறைய துளசி செடிங்க. அதுல பறிச்சது என்றார் என்னிடம். அப்போதுதான் பறித்து வந்ததால் அதன் மணம் கோயிலெங்கும் கமழ்ந்தது. அந்த துளசியின் மணம் நண்பன் ரிஷபனுக்குப் புத்தாண்டு பரிசாக.

வீட்டிற்கு வந்து வழக்கம்போல வாங்கிவந்த கொத்தமல்லி காம்புகளை கூண்டிற்குள் இருக்கும் மகள் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்களுக்குக் கொடுக்க அந்தக் கூண்டு சிறுதுளைகள் வழியாக ஒவ்வொரு காம்பாகத் தர எப்போதும்போல பரபரவென்று கீச்கீச்சென்று அழகாக ஒலியெழுப்பி கொத்தமல்லி காம்பின் சாறு உறிஞ்சும் அழகும் அந்தப் பறவைகளின் வண்ணங்களும் சகோதரி பத்மாவிற்கு புத்தாண்டு பரிசாக.வீட்டில்வைத்திருக்கும் குபேர மரத்தின் மஞ்சள் பூக்களில் தேன் அருந்த வரும் தேன்சிட்டுகள் இன்றைக்குக் கூடுதலாக வந்திருந்தன. பூபூவாகத் தாவிக்கொண்டே தேனருந்தி சிறகடித்த அந்த காட்சி சகோதரி நிலாமகளுக்குப் புத்தாண்டு பரிசாக.

என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா ஜிஎம்பி அவர்களுக்கும் ஐயா ஆர்.ஆர்.ஆர் அவர்களுக்கும் மனம் நெகிழ்வோடு.

நண்பர் சிவகுமாரன்...நண்பர் ஆர்விஎஸ்...சகோதரி ஆதிரா...என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு இழையும் தருணங்களுடன்...


கைகூப்புகிறேன்.

17 comments:

 1. உங்களுடைய புத்தாண்டுப் பரிசுகளைப் பற்றி படித்துக்கொண்டு வருகையில் என்னுள் ஒரு பரபரப்பும் கூடவே எதிர்பார்ப்பும்.என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. பரிசு பெற்ற குழந்தையின் மகிழ்ச்சியோடு உங்களுக்கும் உஙகள் குடும்பத்தார்க்கும் என் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவிக்கிறேன் அன்பு ஜீஎம்பி.

  ReplyDelete
 2. பிஞ்சின் மழலை மாறாத இளஞ்சிரிப்பை எனக்களித்த நட்பே!உனக்குப் பொருத்தமான பரிசாய் எதைத் தருவேன்?எனத் தடுமாற வைத்த தேடலையே பரிசாய் அளிக்கிறேன்.

  மிகவும் நெகிழ்ச்சியுடன் அந்தப் புன்னகையை என் மனதுக்குள் சூட்டிவைக்கிறேன் ஹரணி.

  ReplyDelete
 3. அன்புள்ள ஐயா,

  உங்களைப்போன்ற முதிர்ந்த அனுபவமிக்கவர்கள்தான் எங்களுக்கு வழிகாட்டுதல். அந்த அனுபவத்திற்காகத்தான் எனது பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் புத்தாண்டு பரிசாக. நன்றி.


  நன்றி சுந்தர்ஜி.

  ReplyDelete
 4. மனம் நெகிழ்ந்த நன்றி ஹரணி.
  ஒளியும்,குளிர்ச்சியும்,மணமுமான
  உன் நட்பே பெரிய பரிசு.

  ReplyDelete
 5. வாழ்த்துக்களை சொன்ன விதம் கவிதையாக இருந்தது.அருமை.

  ReplyDelete
 6. நன்றி மதுமிதா.

  ReplyDelete
 7. நன்றி சைக்கிள். அடிக்கடி மறந்துபோகிறேன். என்னுடைய புத்தாண்டு பரிசில் உங்களுக்கும் இடமுண்டு. விடுபட்டமைக்காக வருந்துகிறேன். எத்தனை முறை கதவடைத்தாலும் எனது புத்தக அலமாரியில் அங்கங்கே வந்து தேங்காய் நாரை அடைத்து கூடுகட்டும் அந்த அணிலின் சுட்டித்தனத்தை உங்களுக்குப் புத்தாண்டு பரிசாக.

  ReplyDelete
 8. வார்த்தைகளற்ற தருணங்களில் வாழ்க்கை அவ்வப்போது மனசுக்குள் பூச்சொரிந்து கொண்டே இருக்கிறது...
  ஹரணி.. உலகம் இனிதாகட்டும் உங்கள் மனசு போல.

  ReplyDelete
 9. எனக்கும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்புடனும் ,இல்லையென்றால் சண்டை போடவேண்டும் என்ற முடிவுடனும் வந்து வாசிக்கத்துவங்கிய என்னை நெகிழச் செய்துவிடீர்கள் ...
  நன்றி நன்றி நன்றி ..
  பிரியத்திற்கு ப்ரியம் தான் உங்களுக்கு நான் அளிக்கும் பரிசு ..

  ReplyDelete
 10. நன்றி ரிஷபன். உங்களைப் போன்ற நட்புக்கு இல்லாமல் வேறெதற்குப் புத்தாண்டு கொண்டாட.

  ReplyDelete
 11. உங்களுக்கு இல்லாமலா பத்மா. ஆழமான சொற்கோர்ப்புடன் தரும் உங்கள் பதிவுகளில் ஒரு சமூகப் பொறுப்புண்டு. தவிரவும் நண்பர்களுடனும் சகோதர உறவுகளுடனும்தான் புத்தாண்டை கொண்டாடவேண்டும். நன்றி,

  ReplyDelete
 12. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. நன்றி திருச்சொல்.

  ReplyDelete
 14. ரொம்ப வித்தியாசமா இருந்தது. superb
  Happy new year!

  ReplyDelete
 15. உங்கள் தோட்டத்துப் பூக்கள் அழகென்று மட்டுமே சொன்னேன்.வாழ்த்துப் பூக்களைக் கொடுத்து விட்டீர்கள்.நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 16. நன்றி நாகா சுப்பிரமணியன்.

  ReplyDelete
 17. நன்றி சைக்கிள்.

  ReplyDelete

Follow by Email