Friday, April 19, 2013

தொட்டி மீன்கள்......குறுந்தொடர்.



                     தொட்டி மீன்கள்.....  குறுந்தொடர்....


                                                                                            ஹ ர ணி


                                                        (1)


                           சின்னஞ்சிறிய வீடு.

                           ஒரு கூடத்தை ஒரு ஓரமாக செவ்வக வடிவமாகத் தடுத்து அதை சமையலைறை என்று பெயரிட்டு சமையலறையும் கூடமும் சேர்த்து வீடு என்று பெயர் தாங்கியிருந்தது.

                            துலக்கி வைத்த பாத்திரங்களை நீர் வடிக்கப் போடும் அன்னக்கூடையின் சாமான்களைப்போல அந்த சிறிய வீடெங்கும் பாத்திரங்கள் சிதறிக்கிடந்தன.

                             அந்த வீட்டிற்குள் நோட்டம் இட்டபடியே உள்ளே போனான் சொர்ண்த்தாயி. ஒற்றைக் குத்துசெடிபோல உடம்பும் உயரமும் தாங்கியவள். சுருங்கிய கருப்பு பேரிச்சம்பழம்போல உடம்பு. முன்னே லேசாக துருத்திய பற்கள். மூக்கின் துவாரங்கள் ஓரம் துர்சி படிந்ததுபோல பொடிப்படலம்.  நெடுங்காலம் மூக்குப்பொடி போடும் பழக்கம் உள்ளவள் என்பதை அது அடையாளப்படுத்தியிருந்த்து. கையிலிருந்த மஞ்சள் பையை இன்னும் இறுக்கிகொண்டு தொடர்ந்தாள் வீட்டை அளக்கும் பார்வையை விடாது,,

                                 வாங்கம்மா... என்றபடி வீட்டினுள் இருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி சற்றே சாயம்போன பாயை காற்றில் உருவி தரையில் விரித்தாள்.

                                    வரேன்...வரேன்.. என்று இருமுறை சத்தமாக சொன்னபடியே அப்படியே பாயில் உட்கார்ந்து தண்ணீ கொடு என்றாள்.

                                   அதற்கெனக் காத்திருந்ததுபோல அந்த நடுத்தர வயது பெண் தண்ணீர் லோட்டாவை நீட்டினாள்.

                                 லோட்டாவை ஒருமுறை பார்த்துக்கொண்டே தண்ணீர் அருந்தினாள்.

                             அதற்குள்  அந்த நடுத்தரவயது பெண்ணின் கணவர் உள்ளே ஒரு பையைத் துர்க்கியபடி நுழைந்து வாங்கம்மா... எப்ப வந்தீங்க? என்றார். அப்படியே பையை தன் மனைவியிடம் நீட்டியபடி,,, பைய பார்த்துக்க.. சரியான்னு.. என்றபடி  சற்று தள்ளி பாயிலிருந்து விலகி சிமெண்ட் தரையில் உட்கார்ந்துகொண்டார்.

                              சொர்ணத்தாயி தன்னுடைய மஞ்சள் பையிலிருந்து ஒரு தாளை எடுத்து மடித்த நிலையிலேயே அவரிடம் தந்தாள்

                                 இந்தாங்க... நீங்க கொடுத்த ஜாதகம். பொருத்தமா இருக்கு. ஆனா தம்பி பொண்ணு பத்தாவதுதானே படிச்சிருக்குன்னு லேசா விசனப்படறான். நான் சமாதானப்படுத்தியிருக்கேன். கூடயே டிகோப் படிச்சிருக்கு டைப்ரைட்டிங் சார்ஹேண்ட் எல்லாம் தெரியும்.. இப்பகூட ஒரு தனியார் கம்பெனியிலே வேலைசெய்யுதுன்னு.. எல்லாம் சரியாயிடுவான்.. உங்களுக்குத் தெரியாததா?

                                  இந்தளவுக்குப் படிக்க வச்சதே பெரிசுதாங்கம்மா... என்னோட நிலைமைக்கு இதுதான் முடிஞ்சது.

                                 அது சரிதான்.. ஜாதகம் பொந்தி வரதே அதிர்ஷ்டம்தானே,,, அவனே ஒரு கொணங்கெட்ட பய... நல்லா சம்பாதிக்கிறான்..சட்டுனு கோபப் படுவான்.. கொஞ்சம் பவுன கூடகீடப் போட்டுட்டா சரியாப்போவுது,,

                                  அது எப்படிம்மா முடியும்?  போடறேன்னு சொன்னத குறையாம செஞ்சுடறேன்...இன்னும் ரெண்டு பொண்ணு இருக்கில்லே,,

                                  என்னது இன்னும் இரண்டு பொண்ணா? அதிர்ச்சி காட்டினாள் சொர்ணத்தாயி,,

                                   ஏம்மா தரகர் சொல்லலியா?

                                   அந்த கம்னாட்டி நாய் சொல்லலியே,,,

                                    எங்க பொண்ணு ஜாதகத்துக்கு பின்னாடி எழுதி கொடுத்திருக்கேனே,,,

                               இல்லையே,, ஒருபக்கம்தான் செராக்ஸ் எடுத்துக் கொடுத்தான் அந்த தரகு கம்னாட்டி,, என்றாள், சொல்லிவிட்டு பல்லைக் கடிததுவிட்டு,, முனகிக் கொண்டேயிருந்தாள்,

                               சரி அதை விடுங்க  உங்க முடிவை சொல்லுங்க என்றர்ள் சொர்ணத்தாயி,,

                              எங்களுக்கும் ஜாதகம் பொருந்தியிருக்கும்மா... ஆனா நான் சொன்னத மீறி என்னால பவுனு போடற சக்தி இல்லம்மா,,, என்றார்.

                               சட்டென்று எழுந்துகொண்டாள்..

                                என்னம்மா உக்காருங்க.. ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டுப் போங்க..

                                இல்லை, நீங்க யோசிச்சுட்டு சொல்லுங்க.. நானும் அந்த தரகன் கிட்டே சொல்லியனுப்புறேன்,, நல்லது அமையும்போது பிடிவாதம் பிடிக்கமுடியாது,,

                              அம்மா,, இது பிடிவாதம் இல்லே, இயலாமை, சுத்தமா என்னால முடியாது, இந்தக் கல்யாணத்த முடிச்சாலே அடுத்த கல்யாணத்துக்கு நாலஞ்சு வருஷம் ஆவும்,, என்னோட நிலைமை அப்படி,,

                                படியிறங்கிக்கொண்டாள், பிடிவாதமாக வாசல் வரை வந்த காபியைக் குடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டு,

                               பேருந்தில் ஏறி வந்து இறங்கி வீட்டுக்கு நடந்தாள்,

                               வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன, வந்துவிட்டான் போலிருக்கு, லேசாகப் பயம் வந்தது சொர்ணத்தாயிக்கு,,

                                தயங்கியபடியே உள்ளே போனாள்,

                               உள்ளே அவளின் மகன் லோகநாதன் குளித்துவிட்டு வாசனை பவுடர் போட்டுக்கொண்டிருந்தான், பின் செண்ட்டும் அடித்துவிட்டுப் பின்தான் சொர்ணத்தாயி பக்கம் திரும்பினான்,

                                அவன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துப் பார்த்தாள்,

                                அவன் கேட்டான்.

                                ஏண்டி கிழட்டுக் கம்னாட்டி,, பொழுதுபோயி விளக்குக்கூட போடாம எங்கடி போயி மேஞசுட்டு வரே,,,எங்கப்பன் செத்தது உனக்கு ஊர் மேய வசதியா இருக்குபோலிருக்கு,,

                                    பொண்ணு ஜாதகத்தைக் கொடுக்கப்போ,,,,னே,,,,

                                   என்ன மயிறக் கொடுக்கப்போனே,,, குள்ள செறிக்கி,,, உன்ன துர்க்கிப்போட்டு வவுந்தாதான் வூடு அடங்கிக் கிடப்பே,,,

                                   இல்ல தம்பி,,, என்றாள் பணிவாய்

                                   கிட்டே வந்து அவள் குரல்வளைபைப் பிடித்தான்,, கிழட்டு நாயே கூடக்கூடப் பேசறியா நீ,,,,? போய் சாதத்தை வடிடி,,,

                                    குரல்வளையைப் பிடித்ததால் சற்று தடுமாறி ஒருமுறை இருமிவிட்டு சமையலறைக்குள் அவசரமாய் புகுந்து உலையை வைத்து கேஸைப் பற்றவைத்தாள்,,

                                     மறுநாள் காலை விடிவதற்குள் வாசலில் யாரோ கத்திக்
கூப்பிடுவது கேட்டது,

                                     அவசரஅவசரமாய் சொர்ணத்தாயி வெளியே வந்து கதவைத் திறந்தாள், வாசலில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள், சற்று உயரமாக இருந்தாள்,  அவள் பக்கத்தில் ஒரு பெண் குழந்தை மேல்சட்டையில்லாம்ல் ஒரு கவுன் அணிந்தபடி நின்றுகொண்டிருந்தது,

                                       யாருடி,,, வேணும் என்றாள் எடுத்த எடுப்பிலேயே செல்லத்தாயி,,

                                     கூப்பிடுடி ஒம் மவனை,,,

                                     நீ யாருடி? என்றாள் பதிலுக்கு ஆத்திரமாய் சொர்ணத்தாயி,

                                     ஓம்புருஷன் மவனைக் கூப்பிடுடி கிழவி,,, அவன் சொல்வான் நான் யாருன்னு,,, பொண்ணா பாக்கப்போறே நீ?  உன்ன மயிற அறுத்தா எல்லாம் சரியாயிடும்..

                                     சொர்ணத்தாயிக்கு திக்கென்றிருந்தது,

                                     அந்த அதிகாலையில் தெரு சிரிக்க ஆரம்பித்தது,

                                     லோகநாதன் துர்க்கம் கலைந்த கண்களுடன் வெளியே வந்தான், வந்தவன் வெளியே நின்றிருந்தவளைப் பார்த்ததும் அதிர்ந்தான்,

                                                                                                         (மீன்கள் துள்ளும்)