Tuesday, May 23, 2017

பழிகொண்ட பித்தா...




                       அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றாள் ஔவை.  கிடைத்தற்கரிய பிறவி மானிடப்பிறவி என்பார் சான்றோர். ஆகவே தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவம். தோன்றும்போதே புகழுடன் தோன்றமுடியுமா? அப்படியல்ல பொருள்.. தோன்றி வளர்ந்து பணிசெய்யும் வாழ்வில் புகழ் எய்துமாறு உருவாக்கிக்கொள்ளல் அல்லது செயலாற்றுதல் அப்படியில்லையெனில் அதனைச் செய்யவேண்டியதில்லை.

                      கூற வந்தது இதுவல்ல. வாழ்வில் மனிதனாக உயிர்த்து வாழும்காலத்தில் செய்வனவற்றை ஒழுக்கமோடும் சிறப்போடும் செய்து முடித்து இறந்துபோகவேண்டும். குன்றாப் புகழ் கிடைக்குமெனில் உயிரைக் கொடுத்தும் அதனை ஈட்டிக்கொள்ளலாம். ஆனால் உயிரைக்கொடுத்து யாரேனும் பழி கொள்வாரா?

                       விதி அப்படியெனில் அப்படித்தான். விதி எப்படிவேண்டுமானாலும் பழியேற்றிப் பலிவாங்கும் பலம் கொண்டது.

                       வருநிதி பிறர்க்கு ஆர்த்த இருநிதிக் கிழவன் மகன் என்கிற மாசாத்துவானின் மகன் கோவலனுக்கு இப்படித்தானே நேர்ந்தது.

                         ஒழுக்கக்கேடு எந்த நிலையிலும் அதற்கான தண்டனையைப் பெற்றுத்தந்துவிடும்.

                          சித்பவானந்தர் சொல்லுவார் யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காட்டிற்குள் ஒரு சட்டியில் நெருப்புடன் போய் அதில் கை வைத்தால் நெருப்பு சுடாதிருக்குமா?
                          அதுபோல யாருக்கும் தெரியாமல் செய்யும் ஒழுக்கக்கேடு எப்படியும் தெரிந்துவிடும் என்பதுதான்..
                           கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல்.
                           யுத்தகாண்டத்தில் இராவணன் வதைப் படலத்தில்.
                           பாடல் இதோ.

                           போர்மகளை கலைமகளை புகழ்மகளை
                                 தழுவிய கை பொறாமை கூர
                           சீர்மகளை திருமகளை தேவர்க்கும்
                                 தெரிவு அரிய தெய்வக் கற்பின்
                           பேர்மகளை தழுவுவான் உயிர் கொடுத்து
                                  பழி கொண்ட பித்தா.. பின்னைப்
                            பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப்
                                  பணை இறுத்த பணைத்த மார்பால்?


         தன்னுடைய இணையற்ற வீரத்தினால் போரில் வெற்றித்திருமகளை அடைந்தவன் இராவணன்.  பல்வேறு கலைகளைக் கற்று கலைமகளையும் பெற்றவன். திறம்பட்ட பல்வேறு பண்புகளால் புகழ் மகளையும் தழுவியவன் இராவணன். என்றாலும்
                 சிறப்புமிக்க சீதாதேவியை.. தேவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத தெய்வத்தன்மை மிக்கக் கற்பினையுடைய அதனால் பெயர்பெற்றவளைத் தழுவும் ஆசையினால் உயிரைக்கொடுத்து மிகப்பெரும் பழியைப் பெற்றவனே பித்தனே.. பலம்பொருந்திய யானைகளின் கொம்புகளை ஒடித்த பெரிய மார்பையுடையவனே இப்போது பார்மகளை (மண்மகளை)த் தழுவிக் கிடக்கின்றாயே என்று அழுகிறான் இராவணனின் இளவல் வீடணன்.

                        உயிரைக்கொடுத்துப் புகழைப்பெறுவது நியாயம். உயிரைக் கொடுத்து பழி கொள்வது பித்துப்பிடித்தவன் செயல்தானே-. பித்தா என்கிறான்.
             
                        உனக்கு பித்தா?  அட பித்தா என வினைச்சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் இயங்குகிறது.

                         இன்னொருவன் மனைவிமேல் பித்துப் பிடித்ததால்தான் பித்தானான்.
                            எல்லாம் அறிந்தும் அறியாதவன்போலிருக்கும் சிவனை பித்தா எனவழைக்கக் காண்கிறோம்.
                            இராவணனும் எல்லாமும் அறிந்தவன்.
                            அறிந்தும் செய்த தவறு அழித்துவிட்டது.
                            விதியின் விளையாட்டுக் களத்தில் இராவணனும் பலியானான்.
                            அதனால்தான் வீடணன் பழிகொண்ட பித்தா என்கிறான்.
                            போர்மகள், கலைமகள், புகழ்மகள், சீர் மகள், பேர் மகள், பார் மகள் எல்லாமும் மகள்களே.. தன் மனைவி தவிர்த்து மற்றோரைப் பார்க்கவேண்டியது  தாய்மைப் பண்புடன் . என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
மேற்சுட்டிய மகள்கள் யாவரும் ஈடிணையற்ற உயர்ந்த தன்மையுடையவர்கள். உயர்ந்தவர்கள். தாய்  மட்டுமே ஈடு இணையற்றவள்.
தாரம் தவிர்த்து மற்றோரைத் தாய்மைப் போற்றுதல் உயிர்ச்சிறப்பு.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இன்று வாசித்ததில் வியந்தது மகிழ்ந்தது.

               கட்டுரை எழுதுதல்  என்பது ஒரு பயிற்சி. அதனைத் திறம்பட எழுதுதல் என்பது தேர்ச்சி. எல்லோரும் விரும்ப எழுதுதல் என்பது மாட்சி.

                    மாட்சியுடையோர் மாண்புடையோர்.

                    இன்று தினமணியில் கவிஞர் எழுத்தாளர் மற்றும் உயர் அதிகாரி திருமிகு இறையன்பு எழுதிய தொடர்க்கட்டுரை உச்சியிலிருந்து தொடங்கு. அதில் இன்றைய தலைப்பு பொழுதாக்கங்கள் HOBBIES அதாவது பொழுதை ஒவ்வொரு நாளும் ஆக்கமுறச் செய்தல் என்று புரிந்துகொள்ளலாம்.

                    இதில் இறையன்பு அவர்களின் நடை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பதால் மெருகேறிக்கொண்டே அது மொழியைக் கடந்து நிற்கிற ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அல்லது ஒரு புதுமொழிக்கான நடையைத் தருகிறது என்பேன்.

                    இறையன்பு எழுதுகிறார்..

                பணியை மட்டுமே கடிவாளம் போட்ட குதிரையாகச் செய்யாமல் பணி முடித்ததும் பொழுதாக்கங்களில் ஈடுபடுபவர்கள் பணியின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும்  அயராமல் பணியாற்றுகிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய பணிகளை முடிக்கிறார்கள். அவர்கள் மேசையில் கோப்புகள் தோப்புக்கரணம் போடுவதில்லை. அவர்கள் பார்வையாளர்களை மலர்ச்சியுடன் சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் பேசினால் மற்றவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை நிமிடங்களில் கிரகித்துக்கொள்கிறார்கள். பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல் கோபத்தை மறுநாளுக்கு வரவு வைக்காமலும் அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.

                    இதற்கு எதிரிடையானவர்களைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார் இறையன்பு

                எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ அந்தளவிற்குப் பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள்.  பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.

              பல உயரங்களில் அதிகாரம் செய்பவர்கள்  வாசித்துணரவேண்டிய வரிகள்.
 
                00000000000000000000000

                         
                             



                         

5 comments:

  1. இறையன்பு அவர்களின் சொற்கள் எல்லாமே எப்போதுமே பிரமாதம்தான்.

    //எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ அந்தளவிற்குப் பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள். பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.//

    மிக அழகான உண்மையான கூற்று.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  2. ஏதோ பதவி நிலையானதென்பது போல், அரங்கேறும் காட்சிகள், இன்று ஒவ்வொரு நாளும் காணும் காட்சிகளாக மாறிவிட்டன ஐயா
    அருமை

    ReplyDelete
  3. >>> பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல் கோபத்தை மறுநாளுக்கு வரவு வைக்காமலும் அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.. <<<

    திரு. இறையன்பு அவர்களுடைய ஆக்கங்கள் எதையும் நான் வாசித்ததில்லை.. தாங்கள் குறித்துள்ள வரிகளையும் இப்போது தான் காண்கின்றேன்..

    என் நிலையில் நான் இவ்வாறு தான் இங்கே நடந்து கொள்கிறேன்..

    ஆனாலும் -

    இந்தப் பணியிடத்திலிருந்து வேறிடம் செல்லுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்...

    என்ன பிழை செய்தேன்?.. - என்ற கேள்வியை அதிகார போதையில் இருப்பவர்கள் தங்களுடைய செவிகளில் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்..

    என்ன செய்வது!.. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்!..

    உணர்வுடையோர்களால் தான் எதையும் உணர முடியும்..
    அஃதிலார்க்கு எது சொல்லினும் பயன் ஒன்றும் இல்லை..

    நாளைப் பொழுது எனைக் காக்கும்..

    நல்லதொரு பதிவிற்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. இறையன்பு வின்சொற்பொழிவு தொலைக்காட்சிகளில் கேட்டிருக்கிறேன் சொல்ல வருவதை மிகவும் இயல்பாகச் சொல்லி விட்டுப் போவார் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete