Tuesday, December 7, 2010
வதமும் வரமும்
போதையோடு மீறிமீறி
முத்தமிட்ட வாயைக் கிழிக்க
ஒர் இணை கைகள்...
பெண் ஈன்றேன் என்பதற்காய்
இடுப்பிலுதைத்த கால்களை
முறுக்கிச் சிதைக்க ஒர் இணை கைகள்..
எப்பவும் காமம் செருகியிருக்கும்
கண்களைக் கவ்வியெறிய
ஒர் இணை கைகள்...
கழிவுகளையும் கொத்தும் காக்கையென
கண்டதையும் வாரிக்கொள்ளும்
கைகளைப் பற்றிக் கழித்துவிட
ஒர் இணை கைகள்...
விருப்பமற்ற வேளையிலும்
மிருகமெனப் புணர்ந்துதறும்
உணர்வின் உயிரறுக்க
ஒர் இணை கைகள்....
அநியாயப்படுகையில்
அசிங்கப்படுகையில்
அருவருப்படைகையில்
அடக்கப்படுகையில்
அவதாரமெடுக்காமல்
பொறுமையெனும் கடலிலிருந்து
மேலெழும்பி வரவேண்டும்
இப்படி...
தமிழைத் தாயாய் காப்பவனைத்
தழைய தழைய அணைப்பதற்கு
ஒர் இணை கைகள்...
எல்லையில் எல்லையிலாத் தீரமுடன்
எந்தன் தாய்நாடு காத்திறக்கும்
இளையரைத் தாங்கி இளைப்பாற்ற
ஓர் இணை கைகள்..
மனநிலை இழந்துவிட்ட இதயங்களை
இதமாய் தாங்கிநிற்கும் அந்தத்
தாயுமானவனை தழுவிப் பாராட்ட
ஓர் இணை கைகள்...
சோதரத் தமிழ்மக்கள் சுடுகாடாய்
சுருண்டதற்காய் தன்னுயிரை சுட்டிட்ட
அந்த முத்துச் சகோதரனின் ஆன்மாவை
ஏந்திச் சுமப்பதற்காய்
ஓர் இணை கைகள்...
என
வருவாள் பெண்
சபிக்கப்பட்ட வாழ்க்கையில்
வதம் செய்யவும்
வரம் கொடுக்கவும்....
லேபிள்கள்:
வதமும் வரமும்
Subscribe to:
Post Comments (Atom)
வதம் செய்யவும்,வரம் கொடுக்கவும்
ReplyDeleteவரும் அப்பெண் தெய்வத்திற்காய்க்
காத்திருப்போம்.
மனதைப் புரிந்துகொண்ட என் இனிய நட்பே நன்றிகள் பல.
ReplyDeleteஅநியாயப்படுகையில்
ReplyDeleteஅசிங்கப்படுகையில்
அருவருப்படைகையில்
அடக்கப்படுகையில்
அவதாரமெடுக்காமல்
பொறுமையெனும் கடலிலிருந்து
மேலெழும்பி வரவேண்டும்
வதம் செய்யவும்...
வரம் கொடுக்கவும்....
கவிதையும் படமும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து!
நன்றி ஐயா... பெண்ணினத்தின் மீதான மிச்சமிருக்கும் நம்பிக்கைகளுக்கு!
அற்புதமான உணர்வூட்டும் கவிகொடுத்த ஹரணியை வாரித் தழுவவும் வேண்டும் ஓர் இணை கைகள்.
ReplyDeleteபடத் தேர்வும் அபாரம் ஹரணி.