Wednesday, October 19, 2011

சந்திப்பு

மகிழ்ச்சி

வழக்கமாக தேர்தல் பணிகளுக்கென ஆசிரியர்களையும் அரசு அலுவலர்களையும் பயன்படுத்துவதைக் காட்டிலும் எண்ணற்ற வேலையற்ற பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்தினால் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் தேர்தல் நடைபெறும். தவிரவும் அவர்களுக்குக் கிடைக்கும் தொகை சிரமப்படும் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் என்று பலமுறையும் அடிக்கடியும் சொல்லிவருகிறேன் வாய்ப்ப் அமையும்போதெல்லாம். இது நடைபெறும் என்பதற்கு அறிகுறியாக இந்த உள்ளாட்சி தேர்தலில் சில மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து தேர்தலைக் கண்காணிக்கும் காமிரா பயிற்சி அளித்துள்ளார்கள். தேர்தல் கமிசனுக்கு ஒரு சல்யூட். மகிழ்ச்சி.


கவிதை

ஒரு வருத்தம்
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது..

ஒரு மகிழ்ச்சி
பல்வேறு அளவுகளையும்
பல்வேறு பரிமாணங்களையும்
கொள்கிறது.

ஒரு வருத்தத்திற்கு ஈடாக
ஒரு மகிழ்ச்சியையும்
ஒரு மகிழ்ச்சிக்கும் ஈடாக
ஒரு வருதத்த்தையும்
அளவிட்டும் பரிமாணமிட்டும்
தரமுடிவதேயில்லை ஒருபோதும்

என்பதுவான
வருத்தமும்
மகிழ்ச்சியும்
உறுத்துகிறது...அனுபவிக்க....



உண்மைச் செய்தி


செவ்வாழையின் குருத்தைப்போல இருந்தான் அவன். எப்போதும் சிரித்த
முகம். காலையில் செய்தித்தாள் போடுவான். அப்புறம் பள்ளிக்கு செல்வானாம்.
பத்தாம் வகுப்பு படிக்கிறவன். என் மனைவியிட்ம் மடடும் ஏதேனும் ஒரு கதை
சொல்வதற்கு ஐந்து நிமிடம் அவனுக்கிருந்தது தினமும். ஒரு காபி தருவாள்
அவனுக்கு. தீராத வயிற்றுவலி என்று அவன் வாடகை வீட்டில் கயிறிட்டு உயிர்
விட்டதாக சொன்னார்கள். அதிர்ந்துபோனேன். அவன் தந்த உலகு செய்தியெல்லாம்
வாசித்தவர்கள் அவன் செய்தியை வாசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் செய்தி.

15 comments:

  1. முதலில் ஒரு மகிழ்ச்சியையும் கடைசியில் ஒரு வருத்தத்தையும் பதிவிட்டு இடையில் அழகான ஒரு விளக்கக் கவிதையும் அனுபவித்துப் படிக்க எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வலையில் சிறிது காலமாகக் காணோமே.

    ReplyDelete
  2. ஓர் ஆசை
    துருத்திக் கொண்டு
    எப்போதும் முன்னே
    அவாவுகிறது.

    வருத்தமும் மகிழ்ச்சியும்
    தங்களுள் சமன் கொள்ளாமல்
    மகிழ்ச்சியின் அளவு
    வருத்தத்தின் அளவை விஞ்சி
    கொஞ்சமே கூட இருப்பினும்
    வருத்தத்தின் அழுத்தம் குறைந்து
    தாங்குகிற தெம்பு கிடைக்குமே என்று.

    ReplyDelete
  3. கவிதை பிரமாதம்!
    //அவன் தந்த உலகு செய்தியெல்லாம்
    வாசித்தவர்கள் அவன் செய்தியை வாசிக்கத் தயாராக இல்லை என்பதுதான் செய்தி.//
    :(

    ReplyDelete
  4. தேர்தல் கமிசனுக்கு ஒரு சல்யூட். மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. தேர்தல் கமிஷன் செயல்பாடு இன்னமும் நல்ல முறையில் இதுபோல் நடக்கட்டும் இனி.

    கவிதை நெஞ்சை அள்ளுகிறது.

    பேப்பர் பையன் நெஞ்சை நெகிழச் செய்து விட்டான்.

    ReplyDelete
  6. அந்த சிறுவனுக்கு என் இதயம் கனிந்த அஞ்சலிகள்...

    ReplyDelete
  7. மனம் விட்டு பேசியிருக்கக் கூடாதோ.. அவன்.. கனத்துப் போகிறது..

    ReplyDelete
  8. அன்புள்ள ஐயா..
    தொடர் பணிகள். தொடர் வகுப்புகள். தங்கள் கருத்துரைக்கு நன்றி. இடைவெளிகளில் தொடர்ந்து பதிவுகள் தருவேன். நன்றி.

    ReplyDelete
  9. கண்டிப்பாக ஜிவி சார். அதுதான் என்னோட விருப்பமும்கூட. நன்றி.

    ReplyDelete
  10. முதல் வருகைக்கு நன்றி அருள்.

    ReplyDelete
  11. நன்றி இராஜஇராஜேஸ்வரி.

    ReplyDelete
  12. உங்கள் விருப்பம்தான் என் விருப்பம்தான் மோகன்ஜி. நிச்சயம் நடக்கும் என நம்பிக்கையோடு இருப்போம்.

    ReplyDelete
  13. நானும் கணத்துதான் போயிருக்கிறேன்.

    ReplyDelete