ஒன்று
வேலையற்ற முந்தைய
வரலாற்றின் பக்கங்களில்
தேநீருக்குத்தான் இடம்...
ஒவ்வொரு நண்பனுக்காகக்
காத்திருக்கும ஒவ்வொரு
தருணத்திலும்
ஒவ்வொரு தேநீர்...
ஒரு நாளின் தனிமையைத் தணித்தது
காசில்லாத வறுமையை அணைத்தது
வேலை கிடைத்துவிடும்
நம்பிக்கையை சூடேற்றி வைத்தது
யாருமற்ற தருணங்களில்
தேநீரோடு உதடுகள் பேசியதை
உள்வாங்கி இதயம் பேசியவை ஏராளம்...
வாழ்வை வெல்வது குறித்து
தேநீரோடுதான் பேசினோம்...
ஒரு நாளின் முபபது தேநீர் குடித்து
முப்பது ஞானம் பகிர்ந்தோம்....
இப்போது தேநீர் குடிக்கும்போதெல்லாம்
அந்த வரலாற்றின் சூட்டை
உதடுகள் இதயத்திடம் சொல்லிக்
கொண்டுதான் நாளை கழிக்கிறது...
00000
000
0
இரண்டு
தேநீர்க் குடித்து பழகிய நாளில்
அப்போதெல்லாம் 25 காசுதான் தேநீர்
அதுவுமில்லாமல் இருந்த நாளில்தான்
நண்பன் அழைத்தான் தேநீர்குடிக்க
குடித்ததும் சொன்னான்
யாருக்காவது தினமும் டீ வாஙகிக்குடித்து
தொலைக்கவேண்டியுள்ளது
என்ற நண்பனின் அவமானத்தை
இன்றுவரை சுமந்திருக்கிறேன்
தேநீர் குடிக்கும் தருணங்கள்தோறும்...
000000
000
மூன்று
நாயர் கடையில்
அப்பம் அல்லது மெதுவடை
(சிறுவெங்காயம் மிதக்கும் மெதுவடை)
அப்புறம் தேநீர்..
அந்தச் சுவை இன்றும்
நினைத்தாலே இனிக்கிறது
பேருந்து செல்லும் சாலையோரம்
கடை வைத்திருந்த நாயர்
இந்த பொழப்பு போதும் பிழைக்கமுடியவில்லை
என்று கேரளத்திற்குத் திரும்பிபோன
பிறகும்கூட...
000000
000
நான்கு...
ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு தேநீர் ரகம்
எப்போதும் கூட்டம் முண்டும் கடையில்தான்
அருந்தவேண்டும்.. அவன்தான் துர்ளை மாற்றுவான்,,
ராஜாங்கத்துக் கடையில்
ஆள் பார்த்து துர்ள் மாற்றுவார்
சர்க்கரை துர்க்கலாக இருக்கும்..
கூடுதலாக இலங்கை வானொலி....
சாந்தி டீ சென்டரில்
டேப்ரிக்கார்டர் உண்டு அல்லது
சின்ன ஆம்ப்ளிபயர்
வைரமுத்து பாடல்கள் நேயர் விருப்பமாய்
கூடவே 50 கிராம் பக்கோடா அல்லது வறுத்த
பொட்டுக்கடலை
சாப்பிடவேண்டும்,,
டிகாசன் அதிகமாக இருக்கும்,, கொஞ்சம் கசப்பும்,,
சமயங்களில் வெள்ளையாக பால் டீ,,,
திருவள்ளுவர் பேருந்துநிலையத்தில்
கண்ணாடிக்குவளையை வெந்நீரில் கழுவி
கொஞ்சமாக தேநீர்,,,நாக்கு சுவைக்கலையும் ர்,,,
ரயிலடி அருகே மசால் டீ கிடைக்கும்
வெங்காய பஜ்ஜி அல்லது மசால் வடையுடன்,,
அம்மா போட்டால் 100 பாலில்
பத்துபேருக்கு கலர் வெந்நீர் தேநீர் ஆனால்
அதில அம்மாவின் அதட்டலும் கூடவே பாசமும்,,,
வகைக்கொன்றாய் குடித்தாலும்
வழியற்றுத் திரிந்த நாளில் அதுதான்
வாழவழிகாட்டும் குலதெய்வம்போல...
000000
0000
ஆயிரம் பேச்சுக்களிடையே
போஸ்டல் ஆர்டருக்குக் கிடைக்கும்
காசில் போஸ்டர் ஆர்டர் போக
மிச்சமுள்ளதைக் கொடுத்து மிச்சம்
கொடுக்கவேண்டியதைக் கடனாக
அறிவித்துக் குடித்த தேநீர்
வாழச் சொன்னதும் பசுமரத்தாணியாய்...
00000
000
தேநீர் ஒவ்வொரு கோப்பையும்
ஒவ்வொரு வேலையைச் செய்யும்...
தண்டமாய் சுத்துறே உருப்படப்போறதில்லை
என்று வசவு வாங்கி சாப்பிடாமல் கோபித்திருக்கும்
பல பேருக்கு அதுதான் பலவேளைகளில் பசியடக்கும்
மந்திர நீர்...
வங்கி வாசலில் மேஸ்திரிக்காய் காத்திருக்கும்
பெண் சித்தாள்களின் வேலையற்ற நாள்களில்
சுருக்குப்பையில் உயிர்ப்பிக்கும் நாலணாக்கள்
அன்றைய கூலியாய் அவதாரமெடுத்து தணிக்கும்,,,
அது என்னமோ டிபன் சாப்பிட்டவுடன்
டீ குடிச்சாதான் நிம்மதியென்று
குடித்து வைக்கும் கண்ணாடிக் குவளையில்
பாதிக்குமேலிருக்கும் தேநீர் பலரையும்
பரிதவிக்க வைக்கும் காட்சியுமுண்டு
கடைத்தெரு டீக்கடைகளில்,,,
சிமெண்ட் கலவையிலும்
செங்கல் சுமப்பிலும்
வேர்வை வழிய வழிய
எப்ப டீயும் பலகாரமும் வரும்
என்று காத்திருந்து வரும் தேநீர்
தேவாமிர்தமாய் சாகா வரம்தரும்
இரவு உலைகொதித்து வயிறடங்கும்வரை...
அசிங்கப்படுகையில்
அவமானப்படுகையில்
ஏக்கமுறுகையில்
தோற்றுப்போய் தவிக்கையில்
எமனுக்கு யாரையேனும்
சொந்தத்தைத் துர்க்கிக்கொடுக்கையில்
உயிருக்குப் போராடும் உறவுக்காகக்
காத்திருக்கும் மருத்துவமனை மரத்தடிகளில்
சாலையில் சிதைந்து போஸ்ட்மார்ட்டத்திற்காக
காத்திருக்கும் கொடுமைகளில்
தேநீர்தான் எல்லாவற்றையும் ஏற்று
எல்லாவற்றையும் ஆறுதல்படுத்தும்
அமைதிப்படுத்தும் தான் கரைந்துபோய்....
0000
00
ஐந்து
சூடும் சுவையுமாய்
கலப்பும் கசப்புமாய்
இருக்கிறது தேநீர் எப்போதும்
வாழ்க்கையும
0000
000
ஆறு
அப்பாவுக்கு கேட்காமலேயே
தேநீர் கிடைக்கும்...
அம்மாவுக்கு நினைத்தபோதெல்லாம்
பாலில்லாத தேநீர்...
அக்காவுக்கு ஒதுங்கிய நாளில்
பால் டீ
கொல்லையில் பாட்டிக்கு
டிகாசன் டீ
அவரவர்க்கு விருப்பப்படி
டீ கிடைக்கும்
எப்போதும் கிடைப்பதில்லை
தேநீர் வேலைதேடுபவனுக்கு
தேநீரின் சூடு தவிர,,,
00000
000
ஏழு
அப்போது
ஒரே தேநீர்
ஒரே வாழ்க்கை
இப்போது
இஞ்சி டீ
ஏலக்காய் டீ
லெமன் டீ
பிளாக் டீ
மூலிகை டீ
பூஸ்ட் டீ
மசால் டீ
வகைவகையா தேநீர்
வகைவகையா வாழ்க்கை
தேநீர்க்கவிதைகள் தொடரும்,,,,
படித்து முடித்துவிட்டேன்...ஆனால் கருத்து எழுதும் முன் கட்டாயம் ஒரு தேநீர் வேண்டும்...ஹ்ம்ம்..
ReplyDelete:))
நண்பர் வாங்கி தந்து அலுத்துக்கொள்ளும் இடம் யதார்த்தம்..
ReplyDeleteஇன்னும் தொடருமா?
பல எடத்துல அக்கௌன்ட் இருக்கும் போல ஐயா?
ஹரணி
ReplyDeleteஉன் தேநீர் தடத்தில் நடந்தேன்.
80 களுக்குப் போனேன்.
பழைய ஞாபகங்கள்.
லதாகடை,சாந்தி,ராஜாங்கம்...
அப்புறம் நம் நண்பர்கள்.
சுதாகரும்,ராஜேந்திரனும்...
தாங்கள் வழங்கிய தேநீரில் பால், சர்க்கரை டீத்துள் மட்டுமல்ல, மேற்புறத்தில் ஆடையாய் பழைய நினைவுகளும் மிதக்கின்றன.
ReplyDeleteநன்றி மயிலன். தாங்கள் குறிப்பிட்டது போல தேநீருக்கும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் தொடர்புண்டு. பிறிதொரு சமயத்தில் இன்னும் எழுதுகிறேன். இந்தத் தேநீரில் கொஞ்சம் ஆறட்டும். நன்றிகள்.
ReplyDeleteதேநீரிலேயே, இவ்வளவு சுவைகளா, நான் கூறுவது வாழ்வின் சுவைகளை.அவலங்கள் ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், இழப்புகள் ஏன் அத்தனை சுவைகளையும் நெஞ்சில் சுமந்து ஒவ்வொரு முறையும் தேநீர் அருந்தும்போது , அசைபோடுவது, மிகவும் அழகாக வந்திருக்கிறது ஐயா. பாராட்டுக்கள்,
ReplyDeleteஅன்புள்ள மதுமிதா...
ReplyDeleteஉனது கருத்து பழைய தேநீரின் பலத்தைத் தருகிறது. நண்பர்கள் குறித்து எழுதுகிற சூழலில் நீ இன்னும் சுவையாக எழுதுவாய் என்பதால்தான் விட்டேன். சுதாகரும் ராஜேந்திரம் நம்மோடு இருந்து பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை. கரந்தையில்,,,பழைய பேருந்து நிலையத்தில்,,,ரயிலடியில்,,,அப்புறம் நான் பணிசெய்த தாலுக்கா அலுவலக நண்பர்கள்,,,மாவட்ட ஆட்சியர் அலுவலக கேன்டீன்,,,குணாவுடன் சொசைட்டியில்,,,தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்,,தேநீரின் ஆட்சி தொடர்கிறது இப்போது தொடர்ந்து சிதம்பரத்திலும் அப்புறம் பயணிக்கையில் தஞ்சை தொடங்கி நாகர்கோயில் வரைக்கும். நன்றிகள். எழுது.
நன்றி ஜிஎம்பி ஐயா. தமிழ்நாடெங்கும் பல்வகை சுவையுடன் தேநீரைக் குடித்து மகிழ்கிறேன். அவை பற்றியும் எழுதவேண்டும். எழுதுவேன். நன்றிகள் ஐயா.
ReplyDeleteஅன்புள்ள ஜெயக்குமார்.
ReplyDeleteநன்றிகள். தேநீர் ஒரு சூடான வரலாறு. இதமான வரலாறு. இன்னும் எழுதுவேன். இன்றைக்கும் கோனார் கடையில் தாள் கோப்பையில் தேநீர் அருந்தும் தருணங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடுகிறது. இன்னும எழுதுவேன்.
தேநீரை பற்றி ஃபுல் மீல்ஸ்... இவ்வளவு சுவையான தேநீரை இப்பொழுதுதான் அருந்துகிறேன் ஐயா... அடுத்த கோப்பைக்காக காத்திருக்கிறேன்...
ReplyDelete