Wednesday, January 25, 2012

வாசிப்பும் வாசமும்



                       வாசிப்பு என்பது இன்பம். சிலவற்றை வாசிக்கும்போது அது பேரின்பமாக இதயத்தில் தங்கி வாழ்கிறது. தமிழ் இலக்கியப் பரப்பு பரந்து பட்டது. அதன் விரிந்த பரப்பில் வாசிக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு உணர்வு. ஒவ்வொரு இன்பம்.

                    தக்கை இராமாயணம் என்று ஒன்று அதில் குரு வணக்கமாக ஒரு பாடல். சாதாரண சொற்கள். எளிமையான பொருள் புலப்பாடு. மனதில் நிற்கும் அது.

                       கணபதியும் என்குருவும்
                            கனவிலேயும் நான் மறவேன்
                       சொல்லிவைத்த வாத்தியாரைச்
                            சொப்பனத்தும் நான் மறவேன்
                        நான் ஒரு நாள் மறந்தாலும்
                             நாவொரு நாள் மறப்பதில்லை
                        நெஞ்சமொருநாள் மறந்தாலும்
                             நினைவொருநாள் மறப்பதில்லை..

                  நான் மறந்தாலும் நா(நாக்கு)  மறப்பதில்லை..நெஞ்சம் மறந்தாலும் நினைவு மறப்பதில்லை.. பொருள் விளக்கமின்றி அனுபவிக்கலாம்.

                    அடுத்து குணங்குடி மஸதான் சாகிபவர்கள் பாடல்கள். கீர்த்தனை, தோத்திரப்பா, கண்ணிகள், நான்மணிமாலை எனும் பலவகை பா வகைகளில் அசத்தியவர் அவர். இவரின் பராபரக்கண்ணி படிக்கப்படிக்கச் சுவைகூட்டுபவை. எளிதாகப் படிப்பதற்காக நான் சொல்பிரித்திருக்கிறேன்.

                   வேத மறைபொருளை வேதாந்த உட்கருவை
                    ஓதி உனை அறிந்தார் உண்டோ பராபரமே....

                    தேடக் கிடையாத திரவியமே தென்கடலே
                    ஈடு உனக்கும் உண்டோ இறையே பராபரமே,,,,

                    சோற்றுப் பொதியைச் சுமந்தே திரிந்து அலைந்தே
                    ஆற்றாமல் நின்று களைத்து அழுதேன் பராபரமே,,,

                    எத்தனை நாள் குற்றம் எதிர்த்து அடிமை செய்தாலும்
                    அத்தனையும் நீ பொறுப்பது அழகே பராபரமே,,,,,,

                     காயாமல் காய்த்துக் கனிநது சொரிவதற்கு
                     மாயமாய்ப் பூத்த மலரே பராபரமே,,,

                     மாளா மயக்கறுத்து மனக் கறையைத் தான் தழுவு
                     ஆளாக்கிக் கொள்வாய் என்னையே பராபரமே,,,


இப்படிப் பல கண்ணிகளில் வாழ்வின் மேன்மையை இறைவனிடம் வேண்டி எளிமையாகப் பாடிப்போகிறார்.

                  நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பத்தாம் பத்தாக வருவது (ஐந்தாம் திருவாய்மொழி) பாடல்கள் நாராயணன் புகழ் பாடினாலும் அவை நாராயணனைக் குறித்த ஹைக்கூ...கவிதைகள்... அத்தனையும் குறும்பா வடிவம். ஆனாலும் அவ்ற்றின் சொற்களும் உண்ர்த்தும் பொருளும் மிகமிக வலிமையானவை. சான்றுக்கு சில பார்க்கலாம்.

                      கண்ணன் கழல்இணை
                     நண்ணும் மனமுடையிர்
                      எண்ணும் திருநாமம்
                      திண்ணம் நாராயணமோ,,,

                      தானே உலகு எல்லாம்
                      தானே படைத்து இடத்து
                      தானே உண்டு உமிழ்ந்து
                       தானே ஆள்வானே,,,,,

                       மேயான் வேங்கடம்
                       காயா மலர்வண்ணன்
                       பேயார் முலைஉண்ட
                       வாயர்ன் மாதவனே

எத்தனை அழகும் ஆழமும் ரசனையும் சுவையுமானவை இவை,  சுவைக்கலாம். இன்னொரு வாய்ப்பில் வாசித்து நம்மை வாசம் பண்ண வைக்கும் பாடல்களைப் பகிர்ந்துகொள்வேன்.

6 comments:

  1. இதுவரை அறியாத அருமையான கவிதைகளை
    அழகாக அறிமுகம் செய்து எங்களையும்
    மணத்தை உணரச் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர்ந்து தரலாமே
    நாங்கள் அதைத் தேடிப் படிக்க தங்கள் அறிமுகம்
    வழிகாட்டியாக இருக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. கவிதைக்கு எளிமை அழகு என்று உணர்த்திப் போவதல்லாவா இவை. வாசிப்பின் சுவை பகிரும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  3. குரு வணக்கம் நன்றாக இருக்கிறது. மற்றவைகள் எனக்கு புரிய கோனார் நோட்ஸ் தேவை..ஹீ...ஹீ

    ReplyDelete
  4. இனிமையான பாடல்கள்... புரிந்து கொள்வது இலகுவானால் எவ்வளவு அழகு.....

    தொடர்ந்து பகிருங்களேன்....

    ReplyDelete
  5. தமிழமுதம் பரிமாறுகிறாய்.
    நன்றி ஹரணி.

    ReplyDelete
  6. Just back after two days of hectic travel. I really thank you for these reproductions as otherwise I might never have had the opportunity to enjoy these. Thank you so much sir.

    ReplyDelete